தொடாமல் தொடரும் - 20

தொடாமல் தொடரும் - 20

ஒலித்த போனைப் பார்த்த ரகு, “ஹாஸ்பிட்டல்லேர்ந்துடா. எதுக்குக் கூப்புடறாங்கன்னு தெரியலையே” என்றபடி ஆன் செய்தான்.
“மிஸ்டர் ரகு?”
“யெஸ்.”
“உங்க பேஷன்ட் பவித்ராவை நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாரு. பில் அமவுன்ட் தர்ட்டி செவன் தவுஸண்ட். டென் தவுஸண்ட் கட்டிருக்கிங்க. பேலன்ஸ் அமவுன்ட்டும் கேஷாவே கட்டிடுங்க சார்.”
“சரி” என்று கட் செய்தான்.
“என்னாச்சி?” என்றான் மதன்.
ரகு விபரம் சொன்னதும், “பணம் இருக்குல்ல?”
“இருக்கு. நான் பார்த்துக்கறேன்” என்ற ரகு பெருமூச்சு விட்டான்.
“வேலில போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள விட்டதா ஒரு கதை சொல்வாங்களே, அது ஞாபகத்துக்கு வருது.”
“சும்மா இர்றா… நானே டென்ஷன்ல இருக்கேன்''
“ஓக்கே. நாளைக்கு உண்மை தெரிஞ்சி திருமதியார் உதைக்கிறப்போ என் வீட்டுக்குத்தான் வருவே தம்பி” என்று சிரித்தான் மதன்.


பரணியின் பள்ளிச் சீருடையை அயர்ன் செய்துகொண்டிருந்த அஞ்சலியிடம் பென்சிலும், ஷார்ப்னரும் எடுத்துக் கொண்டுவந்து நீட்டினான் பரணி.
“இது மட்டமான பென்சில்… உடைஞ்சி உடைஞ்சி போகுது.”
“ரொம்ப அழுத்தாம சீவணும். நான் சீவித்தர்றேன். நீ போய் டைம் டேபிள் பார்த்து புக்ஸ் எடுத்து வையி.”
பரணி எடுத்து வைத்தபடி, “நேத்து தாத்தா வீட்ல கமல் படம் பாத்தோம்மா” என்றான்.
“அப்டியா? என்ன படம்?”
“இந்தியன்…கரெக்ட்டும்மா. லஞ்சம் வாங்கறவங்களை எல்லாம் அப்படித்தான் குத்தணும்.”
“டேய்! அது சினிமா. நிஜத்துல அப்படி குத்த முடியாது. குத்தறதா இருந்தா நாட்ல பாதி ஜனத்தொகை குறைஞ்சிடும். லஞ்சம் குடுக்கறாங்க பாரு… அதுலயும் ரெண்டு பேரை இந்தியன் தாத்தா குத்திருக்கலாம்.”
“குடுத்தாலும்… ‘இது தப்பு.. எனக்கு வேணாம்'னு சொல்ல வேண்டியதுதான? எதுக்கு வாங்கறாங்க?”
“வாங்கப் பழக்கினதே குடுக்கறவங்க
தான்டா. கோயில் வாசல்ல காசு வாங்கிட்டு ஆசிர்
வாதம் பண்ணுதே யானை… அதைப் பாகன்தான அப்படிப் பழக்கறான்… ஜோசியக்காரன் பழக்கறதாலதான் நெல்லு வாங்
கிட்டு கிளி சீட்டு எடுத்துக்குடுக்குது. அந்த மாதிரிதான்… இப்போ தேர்
தல்ல ஜனங்க ஓட்டுப் போடறதுக்கும் காசு கொடுத்துப் பழக்கி வெச்சிட்டாங்க.''
“அந்தப் படத்துல ஒரு எடத்துல இந்தியன் தாத்தா சொல்றது ரொம்ப நல்லா இருந்திச்சிம்மா…”
“எதுடா?”
“என் பையனுக்கு முத்தம் கொடுக்கறப்ப குத்துமேன்னு மீசையையே எடுத்தவன் நான்னு சொல்றாரும்மா.”
“ஆமாம். நல்ல வசனம் அது.”
“டாடி எனக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சிருக்காராம்மா?”
சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்னடா கேள்வி இது? பெத்த புள்ளைய அப்பா கொஞ்சாம இருப்பாங்களா? சண்டே வீட்ல இருக்கறப்ப உன்னோடவேதான் அவரும் குழந்தை மாதிரி விளையாடுவாரு.”
“டாடிக்கு மீசை இருக்காம்மா?”
“ம். இந்தா… பென்சில். சீவிட்டேன். டைமாச்சி. வந்து யூனிஃபார்ம் போட்டுக்கோ.”
அமைதியாக யூனிஃபார்ம் போட்டுக்கொண்டான் பரணி. ஸ்கூல் பேகைத் தோளில் மாட்டிக்கொண்டான்.
மதிய உணவு பாக்ஸையும், தண்ணீர் பாட்டிலையும் தனிக் கூடையில் வைத்து எடுத்துவந்த அஞ்சலி, வீட்டைப் பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள்.
“ஸ்கூல்ல டூர் போறாங்களாமே…எங்கிட்ட ஏன் சொல்லலை?” என்றாள் வண்டியை ஓட்டியபடி.
“நீதான் அனுப்ப மாட்டியே.”
“எத்தனை நாளு?”
“மூணு நாளு. கோயமுத்தூரு, பொள்ளாச்சி, டாப் ஸ்லிப்.”
“உனக்குப் போகணும்னு ஆசையா இருக்கா?”
“உன்னைத் தனியா அனுப்பவே மாட்டேன்னு சொல்வியே?”
“அப்படிதான் சொல்லிருக்கேன். நீ சொல்லு. உனக்கு ஃப்ரெண்ட்ஸ்கூட போகணும்னு ஆசையா இருக்கா இல்லையா?”
“ரொம்ப ஆசையாதான் இருக்கு.”
“சரி… போய்ட்டு வா.”
“நிஜமாதான் சொல்றியா?”
“நிஜமாதான் சொல்றேன்.”
“லவ் யூம்மா.”
“இன்னிக்கு டீச்சர்ட்ட பேர் குடுத்துடு. நாளைக்கு நான் பணம் கட்டிடறேன்.”
உற்சாகமான பரணி, அஞ்சலியை அப்படியே கட்டிக்கொண்டு அவள் கழுத்தில் முத்தமிட்டான்.


ரகு க்ரீச்சிலிருந்து பரணியைத் தூக்கிவந்ததும் பவுடர் கரைத்து பால் கொடுத்து தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி மெதுவாக நடந்தான். வாட்சில் நேரம் பார்த்தான்.
லேசாகக் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழையில் கொக்கி மாட்டாத ஜன்னல் படீரென்று அடித்துக்கொள்ள…சென்று இழுத்து மாட்டினான்.
மீண்டும் போனில் அஞ்சலியை முயன்றான்.
“ஹலோ'' என்றாள் அஞ்சலி.
“மணி பத்தாச்சி. எங்க இருக்கே நீ? ஆபீஸ்லேர்ந்து புறப்பட்டு ரெண்டு மணி நேரமாச்சின்றாங்க. அரை மணி நேரமா ட்ரை பண்ணிட்டே இருக்கேன். பிக்கப் பண்ணவே இல்ல.”
“கொஞ்சம் என்னைப் பேச விட்டாத்தானே சொல்ல முடியும் ரகு? மழைப்பா. வழில வண்டி வேற பஞ்சராயிடுச்சி. பக்கத்துல மெக்கானிக் ஷாப் எதுவும் இல்ல. ஒரு தெரிஞ்ச கடை வரைக்கும் தள்ளிட்டு வந்து விட்டுட்டு ஆட்டோவுக்காக நிக்கிறேன்.”
“எங்க இருக்கேன்னு சொல்லு. நான் வேணும்னா மதன்ட்ட சொல்லி கார் எடுத்துட்டு வந்து பிக்கப் பண்ணச்சொல்றேன்.”
“அதெல்லாம் வேணாம். மழை நிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆட்டோ கிடைச்சிடும். வந்துடுவேன். பரணி அழுதானா?”
“ஆமாம். பால் குடுத்துட்டேன். தூங்கப்போறான்.”
“டயபர் மாத்தினியா?”
“இல்லை. அவங்க மாத்திருப்பாங்கதான?”
“எப்ப மாத்தினாங்களோ… செக் பண்ணி மாத்திடேன்.”
“சரி” என்று வைத்துவிட்டு குழந்தையைப் படுக்கவைத்து கொஞ்சமாக டயப்பரை விலக்கி செக் செய்தான் ரகு.
பரணி டாய்லெட் போயிருந்தான்.
துடைப்பதற்கு வெட் டிஷ்யூஸ், புது டயப்பர் எல்லாம் எடுத்துவந்து அருகில் வைத்துக்கொண்டு பொறுமையாக டயப்பரை நீக்கி ஓரமாக வைத்து, துடைத்துவிட்டு புது டயபரை மாற்றினான்.
தூங்கிப்போயிருந்த பரணியைப் படுக்கையில் கிடத்திவிட்டு வாஷ் பேசின் சென்று லிக்விட் சோப் போட்டுக் கை கழுவினான்.
கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு மீண்டும் அஞ்சலிக்கு போன் செய்ய… அவள் எடுக்கவில்லை.
அதன் பிறகு அரை மணி நேரத்தில் நான்கு முறை முயன்றும் எடுக்காததில் பீதி கவ்விக்கொள்ள… என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கத் தொடங்கினான்.
எங்கே இருக்கிறாள் என்று இடத்தையும் சொல்லவில்லை. நண்பனை அனுப்புகிறேன் என்ற யோசனையையும் ஏற்கவில்லை. என் பேச்சை எதைத்தான் கேட்கிறாள்!
அழைப்பு மணி ஒலிக்க… போய்க் கதவைத் திறந்த ரகு நனைந்த நிலையில் நின்றிருந்த அஞ்சலியைப் பார்த்த மாத்திரத்தில் கத்தத் தொடங்கினான்.
“நீ என்னதான் நினைச்சிட்டிருக்க? போன் செஞ்சா எடுக்க மாட்டியா?” மேற்கொண்டு கத்தப் போனவன் சற்றுத் தள்ளி நின்றிருந்த கோட் அணிந்த இளைஞனைப் பார்த்து அமைதியானான்.
“அஞ்சலி… நான் இன்னொரு நாள் வர்றேன். சீ யூ” என்று சங்கடமாகச் சொல்லி நகரப்போன அவனை நிறுத்தும்விதமாக அவசரமாக, “நோ…நோ. ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கிங்க. உள்ள வாங்க ப்ளீஸ்…” என்றவள் ரகுவை முறைத்தபடி, “எங்க எம்.டி. ராம்மனோகர். அவர் கார்லதான் வந்தேன். போன்ல சார்ஜ் இல்ல.”
அசடு வழிந்த ரகு, “தேங்க் யூ சார். வெல்கம். உள்ள வாங்க” என்று வழிசலாகச் சொல்லி வழிவிட… ராம் மனோகர் அவனைக் கடந்து உள்ளே வந்தபோது மது வாடை அடித்தது.

(தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in