வனமே உன்னை வணங்குகிறேன்..! 15 - சிறுத்தைகளைக் காப்பது அவசியம்

வனமே உன்னை வணங்குகிறேன்..! 15 - சிறுத்தைகளைக் காப்பது அவசியம்

‘இந்தியாவில் கடந்த 200 ஆண்டுகளில், சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது. இதனால், புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க திட்டம் கொண்டுவர வேண்டும்.' - பெங்களூருவில் உள்ள வன உயிரின கல்வி மையமான சி.டபிள்யூ.எஸ் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின கல்வி நிறுவனமான டபிள்யூ.ஐ.ஐ ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவு இப்படி திடுக்கிட வைக்கிறது.

சிறுத்தைகளின் நிலை குறித்து சற்றே கவலை தரும் இந்தப் புள்ளிவிவரத்தோடு, இந்த வாரம் சிறுத்தைகள் அதிகம் நிறைந்த பந்திப்பூர் வனப்பகுதிக்குச் சென்றுவருவோம்.

ஆம், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த்  ‘மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சிக்காக டிஸ்கவரி சேனலின் தொகுப்பாளர் பேர் க்ரில்ஸுடன் சென்றுவந்த அதே வனம்தான்.

பந்திப்பூர் செல்வது எப்படி?

பந்திப்பூர் தேசியப் பூங்கா கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட்டை தாலுகாவில் உள்ளது. இது நீலகிரி உயிர்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. இது தனது எல்லையை நாகர்ஹோளே தேசியப் பூங்கா, வயநாடு தேசியப் பூங்கா மற்றும் முதுமலை தேசியப் பூங்கா ஆகிய மூன்று தேசியப் பூங்காக்களுடன் பகிர்ந்துகொள்கிறது. அதனால் நீங்கள் நீலகிரியிலிருந்தும் செல்லலாம்; மைசூருவில் இருந்தும் செல்லலாம்.

இந்தியாவில் மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில்தான் அதிக அளவில் புலிகள் இருக்கின்றன. எனவே, நீங்கள் புலிகளைக் காண விரும்பினால் பந்திப்பூர் சிறப்பான தேர்வு. புலிகள் தவிர்த்து ஆசிய யானைகள், சாம்பார் மான், சோம்பல் கரடி… இப்படி இன்னும் பல விலங்குகளையும் பறவைகளையும் காணலாம். பந்திப்பூரில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருக்கின்றன என்பது முக்கியமான விஷயம்.

அக்டோபர் முதல் மார்ச் வரை பந்திப்பூர் செல்வதற்கு உகந்த காலகட்டம். குடும்பத்துடன் சென்றால் தங்குவதற்கு பட்ஜெட் குடில்கள் தொடங்கி, சொகுசு அறைகள் வரை கிடைக்கின்றன.

சிறுத்தைகள் சில குறிப்புகள்

பந்திப்பூர் தேசியப் பூங்காவுக்குச் சென்றுவந்த கானுயிர் ஆர்வலர் ஸ்ரீகுமார் தனது பயண அனுபவங்களையும் சிறுத்தைகள் பற்றிய குறிப்புகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“சிறுத்தைகள்  ‘ஃபைவ் பிக் கேட்ஸ்' (Five Big Cats) எனப்படும் பூனைக் குடும்பத்தில் அடங்கும். புலி, சிங்கம், சிறுத்தை, சிவங்கி, ஜாகுவார் ஆகிய ஐந்தில் ஜாகுவார்கள் தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் மட்டுமே உள்ளன. சிவங்கிப் புலி அல்லது இந்தியச் சிவங்கி எனும் விலங்கு இப்போது அழிந்துவிட்டது.

இந்தியாவில் தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைகள், தக்காண பீடபூமி, இமயமலை எனப் பல இடங்களில் சிறுத்தைகள் காணப்படுகின்றன. பொதுவாகவே சிறுத்தைகள் தங்களை எந்த ஒரு சூழலிலும் பொருத்தி வாழக்கூடியவை. அதனால்தான் அவை பசுமை மாறாக் காடுகளிலும் இருக்கின்றன. தக்காண பீடபூமியிலும், இமயமலையிலும் இருக்கின்றன. இமயமலைக் காடுகளில் வசிக்கும் சிறுத்தைகள், மற்ற வனங்களில் இருக்கும் சிறுத்தைகளைவிட இரவு நேரங்களில் பார்வைத்திறன் அதிகம் கொண்டிருக்கும். அதனால், அவை இரவு வேட்டைக்குச் செல்வது அதிகம்.

புலியின் அச்சுறுத்தல்

புலிகளுடன் ஒப்பிடும்போது சிறுத்தை அளவில் மிகவும் சிறியது. அதன் உடல்வாகு மரத்தில் எளிதில் ஏற உதவுகிறது. தனது இரையைக்கூட மரத்தில் வைத்தே உண்ணும். இதற்கு முக்கியக் காரணம், புலிகளின் அச்சுறுத்தல்தான். சிறுத்தைகள் இயல்பாகவே புலிகளைக் கண்டு அஞ்சும். புலிகளுடனேயே வாழ்விடத்தையும் இரையையும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் அவற்றிடமிருந்து தற்காத்துக்கொள்ள எப்போதும் மரத்தில் ஏறி அமர்ந்துகொள்ளும். இரையைக் கீழே வைத்து உண்டால் சில நேரங்களில் புலியால் விரட்டப்பட்டு இரையைப் பறிகொடுக்கும் அபாயம் இருக்கிறது. புலியைப் போல் இரையை விரட்டி வேட்டையாடாமல், சிறுத்தைகள் பின்னால் இருந்து பதுங்கி வேட்டையாடும். பதுங்கியிருக்கும் சிறுத்தையை அடையாளம் காண்பது அவ்வளவு சுலபமல்ல.
நாங்கள் பந்திப்பூர் சென்றிருந்தபோது எங்களுடன் வந்த வழிகாட்டி, ‘அதோ, அந்த மரக்கிளையில் சிறுத்தை படுத்திருக்கிறது பாருங்கள்’ என்றார். எங்களால் அதை அடையாளம் காணவே இயலவில்லை. அது திடீரென தனது வாலைக் கீழே இறக்கியது. அப்போதுதான் அந்தக் கிளையில் சிறுத்தை படுத்திருப்பதையே எங்களால் காண முடிந்தது. இன்னொரு மரத்தில், வேறொரு சிறுத்தை நன்றாக இரையெடுத்துவிட்டு 4 கால்களையும் வாலையும் கீழே தொங்கவிட்டவாறு தூங்கிக்கொண்டிருந்தது. கால்களை மட்டும் தொங்கவிடாவிட்டால் அதையும் நாங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டோம்" என்றார் ஸ்ரீகுமார்.

மனித - விலங்கு மோதலினால் பாதிப்பு

சிறுத்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய மனித - விலங்குகள் இடையேயான மோதல்தான் மிக முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவதால் எல்லைப் பிரச்சினையில் சிறுத்தைகள் பஃபர் ஜோன் (Buffer zone) எனப்படும் இடைக் காட்டுப் பகுதிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
பஃபர் ஜோனில் அவற்றிற்கான இரை குறைவாக இருப்பதாலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பாலும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு மும்பை ஆர்.ஏ.மில்ஸ் காலனி பகுதியை உதாரணமாகச் சொல்லலாம். இது சஞ்சய் காந்தி பூங்காவிற்கு மிக அருகில் உள்ளது. மும்பை மாநகர வளர்ச்சியின் விளைவாக சஞ்சய் காந்தி பூங்கா ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானது. இதன் தொடர்ச்சியாக இன்று ஆர்.ஏ.மில்ஸ் பகுதி, சிறுத்தை – மனிதர் மோதல் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது.

சிறுத்தைகள் அளவில் சிறியவை என்பதால் அவை பெரிய விலங்குகளை வேட்டையாடுவதில்லை. பஃபர் ஜோனில் காடுகள் அழிக்கப்படுவதால் சிறுத்தைகளுக்கான வேட்டை வாய்ப்பும் குறைந்துவிடுகிறது. அதனால், கன்றுக்குட்டிகள், ஆடுகள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் போன்றவற்றை அவை வேட்டையாடுகின்றன. மிகவும் அரிதாகக் குழந்தைகளையும் வேட்டையாடிவிடுகின்றன. இதனால் விஷம் வைத்தும், சுருக்கு வைத்தும், மின்வேலி அமைத்தும் சிறுத்தைகளை மக்கள் கொன்றுவிடுகிறார்கள்.

பிரத்யேகத் திட்டம் அவசியம்

பஃபர் ஜோன் பகுதிகளில் வாழும் மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டால் அங்கு இயல்பாகவே இரை விலங்குகள் பெருகும். அப்போது மனித - விலங்கு மோதல் குறைய வாய்ப்புள்ளது. இது சிறுத்தைகளை மட்டுமல்ல யானைகளையும் பாதுகாக்க உதவும். புலிகள், சிறுத்தைகள் போன்ற வேட்டை விலங்குகள் இல்லாத இடங்களிலும்கூட யானைகள் வசிக்கின்றன.
இந்நிலையில், வனமும் அதை ஒட்டி தேயிலைத் தோட்டங்களும் உள்ள வால்பாறை, கபினி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் வசிக்கும் சிறுத்தைகளைப் பாதுகாக்க பிரத்யேகத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே கானுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

அடுத்த வாரம் இன்னுமொரு சுவாரசியமான வனப் பகுதியைச் சுற்றிப்பார்ப்போம்.

படங்கள் உதவி: ந.செந்தில் குமரன்

(பயணம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in