கனா பேச்சு 4- இயல்பற்ற மனிதனின் வாழ்க்கை

கனா பேச்சு 4- இயல்பற்ற மனிதனின் வாழ்க்கை

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

“நல்லாருக்கியா... எப்ப வந்தே... காலையில வந்தியா?’’ ஊருக்குப் போகும்போதெல்லாம் பார்க்கும் முதல் பார்வையில் இப்படி விசாரிக்கும் முரளிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 40 வயது . ஊரில் உள்ள கோடீஸ்வரப் பணக்காரக் குடும்பத்தில் ஒருவன். 6 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தகப்பன். எட்டாம் வகுப்பு படிக்கும் மூத்தவன்தான் ஒருமுறை, “அவர் காணாமப்போனா அப்படியே தொலஞ்சி போகட்டும். நீ எதுக்கு தேவையில்லாம அழுதுட்டு இருக்கே... வீட்டுக்குள்ள வா...’’ என்றான் தன்னைப் பெற்ற அம்மாவிடம். முரளி முதன் முறையாய் காணாமல் போயிருந்த நாட்களின் ஓர் இரவில் நடந்தது அது.

கறுப்பாய் இருந்தாலும் களையான முக அமைப்பு கொண்டவன் முரளி. வெள்ளந்தி சிரிப்பில் சின்னத்தம்பி படத்து பிரபுவை ஞாபகப்படுத்துபவன். ஒன்பதாம் வகுப்பு ஃபெயில், பரம்பரை பரம்பரையாய் பார்த்துவந்த வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் தொழிலில் வசூல் பண்ணத் திராணியில்லாதவன் என்று உறவினர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட முரளியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் குறித்து அறிந்துகொள்ள எவருக்கும் இங்கே ஆர்வமற்றுப் போயிற்று. வளர்ந்தான் வீட்டுக்கு பாரமாகவே. பணக்காரர்களுக்கே உரிய போலி அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ளும் விதமாக உறவிலே மிகச் சுமாரான வசதிகொண்ட பெண்ணை முரளிக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். பெண் வசதியில் மட்டும் குறைச்சலில்லை. அழகிலும். திருமணமான ஒரே மாதத்தில் புகுந்த வீட்டு ருசியில் திமுதிமுவென சதை விழுந்து முரளிக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றுப் போனார்.

சொத்து பிரிக்கும் நிகழ்வில் முரளியின் கைக்கு ஒரு பழைய ஹோட்டல் வந்தது. நல்ல லாபம் தந்த ஹோட்டலைத் திறம்படவே நடத்தி வந்தான் முரளி. எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த வாழ்வெனும் வட்டத்தில் முதல் சிடுக்கு விழுந்தது யார் விலக்கினாலும் தன்னை அரவணைத்துக்கொண்ட தகப்பனின் சாவில். முதல் நாள் வரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தன் தகப்பன் ஒரு நாளில் இல்லாமல் போனது முரளிக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அடுத்து முரளியின் தம்பியின் தற்கொலை. வீட்டு ஓட்டினைப் பிரித்து உள்ளிறங்கி நைலான் கயிற்றில் முடிச்சிட்டுத் தொங்கிக்கொண்டிருந்த தம்பியின் உடலை தரைக்குக் கடத்தியவன் முரளிதான்.
பின்பான நாட்களில் வீட்டுக்கு அதிகம் வராமல் ஹோட்டலிலேயே தங்கத் தொடங்கினான் முரளி. அவனுக்கும் அவன் மனைவிக்கும் பெரும் இடைவெளி விழலாயிற்று. அபூர்வமாய் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருநாள் இருவருக்குமான தகராறில் பாதி சாப்பாட்டில் கை கழுவி வெளியேறிய முரளியின் இடுப்பிலிருந்து கைலி நழுவி கீழே விழ, கையில் சோற்றுப் பருக்கையுடன் ஜட்டி மட்டும் அணிந்து வெற்று மார்புடன் நடந்துபோன முரளியை அருவருப்புடன் பார்த்தது வீதி. “தனியா ஹோட்டல்ல தங்குறான்ல... கஞ்சா கிஞ்சான்னு எறங்கிருப்பான். அதான் இப்படி நெல தடுமாறி திரியுறான்” வழக்கம் போல் ஊர் விதம்விதமாய் பேசத் தொடங்கிற்று. “முன்ன மாதிரி இல்ல... அவன்கிட்ட அதிகம் வச்சிக்காத. அவன் ஹோட்டலுக்குப் போறத நிறுத்துறது நல்லது” முரளியின் காசில் கொண்டாட்டம் நடத்தியவர்கள் முரளிக்குப் பைத்தியப் பட்டம் கட்டி விலகினார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in