தொட்டால் தொடரும் 14

தொட்டால் தொடரும் 14

பட்டுக்கோட்டை பிரபாகர்
pkpchennai@yahoo.co.in

அஞ்சலி கண்கள் விரிய, முகம் பூரிக்க உற்சாகப்படுவாள் என்று எதிர்பார்த்தால்… மாறாக, “என்ன விளையாட்டு இது? எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டியா? மொதல்ல போய் இதைத் திருப்பிக்குடுக்க முடியுமான்னு பாரு” என்றவளைப் புரியாமல் பார்த்தான் ரகு.
“என்னாச்சி? கலர் பிடிக்கலையா?” என்றான் எரிச்சலுடன்.
“அதில்ல…”
“வேற என்ன? ஒரு வண்டி வாங்கணும்னு எத்தனை தடவை நீயே கேட்ருக்கே…”
“வாங்கப் போறேன்னு எங்கிட்ட சொல்ல மாட்டியா ரகு?” 
“ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சது தப்பா? எல்லாத்துக்கும் முறுக்கிக்கிட்டா என்னடி அர்த்தம்? உங்கிட்ட சொல்லாம நான் எதுவுமே செய்யக் கூடாதா?”
ரகுவின் குரல் உயர… தூரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் திரும்பிப் பார்த்தான்.
“வீட்டுக்குப் போய்ப் பேசலாம் ரகு” என்று லிஃப்ட்டை நோக்கி நடந்தவள் பின்னால் உச்சமான ஆத்திரத்துடன் நடந்தான் ரகு.
ஃப்ளாட்டுக்குள் வந்ததும் உறங்கிப்போயிருந்த பரணியைப் படுக்கையில் கிடத்தி இரண்டு பக்கமும் தலையணைகள் வைத்துவிட்டு அவனிடம் வந்தாள் அஞ்சலி.
“என்ன? இப்ப சொல்லு அஞ்சலி! உன்னையும் ஷோ ரூமுக்குக் கூட்டிட்டுப்போய் நான் வாங்கிருக்கணுமா?”
“அப்படிச் சொல்லல… இந்த சர்ப்ரைஸ் எனக்குப் பிடிச்சிருக்கு. இது உன் லவ்வைக் காட்டுது ரகு. ஆனா…என்னால இதை ரசிக்க முடியாம ஒரு சூழ்நிலையாயிடுச்சி.”
“என்னதான் உன் பிரச்சினை? சொல்லித்தொலையேன்!''
சில விநாடிகள் அமைதியாக இருந்த அஞ்சலி மெதுவாக விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். தயங்கிச் சொன்னாள்.
“கோபப்படாத… திட்டாத. பொறுமையாக் கேளு ரகு. இன்னிக்குதான் நான் ஒரு வண்டி வாங்கினேன். இதே பிராண்ட்தான். கலர்தான் வேற. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போடச் சொல்லிருக்கேன்.நம்பர் பதிவு பண்ணி நாளைக்கு டெலிவரி தர்றாங்க.”
“என்ன அஞ்சலி சொல்றே? நிஜமாதான் சொல்றியா?”
“நானும் பல தடவை கேட்டேன். நீ வாங்கித் தர்றதா இல்ல. என் ஃப்ரெண்டு ரெஜினா ஒரு வண்டி வாங்கப்போறேன்னு சொன்னா. அவளோட நானும் ஷோரூம் போயிருந்தேன். அஞ்சாயிரம் கட்டினாப் போதும்னு நல்ல ஸ்கீம் சொன்னாங்க.”
“ஓகோ! மிச்சம் யார் கட்றதாம்?”
“கம்பெனில பேசிட்டேன். கம்பெனி கட்டும். முப்பத்தாறு தவணை!”
“உன் சம்பளத்துலதானே பிடிக்கப்போகுது கம்பெனி?”
“ஆமா.”
“அப்ப கடன் உன் கம்பெனி வாங்கல. நீதான் வாங்கிருக்கே. அப்படித்தான?”
“சரி… அதனால என்ன இப்ப?”
“எனக்குக் கடன் வாங்கறது பிடிக்காதுன்னு உனக்கு நல்லாத் தெரியும்ல?”
“உனக்குதானே பிடிக்காது? உன்னை நான் எந்த பேப்பர்லயும் கையெழுத்துப் போடச் சொல்லலையே? நான்தானே வாங்கிருக்கேன். நான்தானே கட்டப்போறேன்?”
“ஓ… நீ வேற… நான் வேற… அப்டித்தானே?”
“அர்த்தமில்லாம பேசாத ரகு. சும்மா வாதம் பண்ணாத. கடன் வாங்கக் கூடாதுன்றது உன் பாலிசின்னா… கடன் வாங்குனா தப்பில்லைன்றது என் பாலிசி.”
“நான் ஏன் கடன் வேணாம்னு அடிச்சிக்கிறேன்னு உனக்கு இதுவரைக்கும் காரணம் சொன்னதில்ல. இப்ப சொல்றேன்… என் சித்தப்பா பையன் மகேந்திரன்னு ஒருத்தன் தூக்குல தொங்கி தற்கொலை செஞ்சிக்கிட்டான்னு சொல்லிருக்கேன்ல…”
“ஆமா… ஏதோ லவ் ஃபெயிலியர்னு சொன்னே…”
“அது பொய்! அவனுக்குச் சம்மந்தமே இல்லாத, கொஞ்சம்கூட அனுபவமே இல்லாத ஒரு தொழிலை ஆரம்பிச்சான். நடத்த முடியாம திணறினான். ஊர் பூரா கடன் வாங்கினான். தொடர்ந்து தொழில்ல நஷ்டம். கடன் குடுத்தவங்க நெருக்குனாங்க. இவன் கிட்ட திருப்பிக்குடுக்க பணமும்
இல்ல… வேற சொத்தும் இல்ல. இவன் மேல கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தாங்க. பேப்பர்ல இவன் போட்டோ போட்டு மோசடி ஆசாமின்னு வந்துச்சி. முதல் நாள் மட்டும் விசாரணைக்குக் கோர்ட்டுக்குப் போனான். அன்னிக்கு நைட்டு ஒரு லெட்டர் எழுதிவெச்சிட்டு தூக்குல தொங்கிட்டான். பொண்டாட்டியும் ரெண்டு சின்னக் குழந்தைங்களும் நடுத்தெருவுல நின்னாங்க. ஊரை விட்டே போய்ட்டாங்க.”
மேஜை மீதிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்து டம்ளருக்கு ஊற்றாமல் அப்படியே ஜக்கை உயர்த்திக் கவிழ்த்து தண்ணீர் குடித்தான் ரகு.
“இப்பப் புரியுதா? நெருப்பு சுடும்னு நாமே சுட்டுக்கிட்டு தெரிஞ்சுக்கணுமா? அடுத்தவங்க அனுபவத்துலேர்ந்து பாடம் கத்துக்கறதுதான் நிஜமான புத்திசாலித்தனம் அஞ்சலி.”
“நெருப்பு சுடும்னு எல்லாருக்கும் தெரியும் ரகு… அதுக்காக நெருப்பை உருவாக்கற தீப்பெட்டிய வீட்லயே வெச்சிக்கக் கூடாதுன்னு சொல்வியா? நெருப்பை வெச்சி சமையல் செய்யாம இருப்பியா? விளக்கேத்தாம இருப்பியா? நெருப்பை எப்படி கவனமா ஹேண்டில் செய்யணும்னுதானே பாக்கணும்?”
“இவ்வளவு தூரம் சொல்றேன். ஏன் இப்படி விதண்டா வாதம் பண்றே?”
“இதை வாதம்னு நினையேன். ஏன் பிடிவாதமா இதை விதண்டாவாதம்னு நினைக்கிறே? பேங்க் லோன் போட்டு தொழில் ஆரம்பிச்சி ஒழுங்கா திருப்பிச் செலுத்தி ஜெயிச்சவங்களோட உதாரணம்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா? உன் சித்தப்பா பையன் ஒரு கோழை! அவனைப் போய் உதாரணப் புருஷனா எடுத்துக்கிட்டு மனசுல இப்படி ஒரு பாலிசி வெச்சிக்கிட்ட பாரு…உன்னை நினைச்சா எனக்கு சிரிப்புதான் வருது.”
“ஏண்டி… ஒரு உயிரு போயிருக்கு. ஒரு குடும்பமே காணாமப் போயிடுச்சின்றேன். உனக்கு நான் அனுபவத்துலேர்ந்து பேசறது அலட்சியமா இருக்கா? பட்டுதான் தெரிஞ்சுக்குவியா?''
“அய்யோ! போதும் ரகு! போரடிக்காத! உன் லெக்சரை நிப்பாட்டுப்பா ப்ளீஸ்… நான் வண்டியை லோன் ஸ்கீம்ல எடுத்தாச்சு. நீயும் வாங்கிட்டு வந்து நிறுத்திருக்கே. இப்ப என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு… செய்றேன்.”
“நான் வாங்கிருக்கறது ஃபுல் கேஷ் பேமென்ட்ல. நீ வாங்கிருக்கறது லோன்ல! அதுக்கு வட்டியும் சேர்த்துக் கட்டணும். அந்த வண்டிய கேன்சல் பண்ணிடு. அதான் புத்திசாலித்தனம்.”
அமைதியாக இருந்தாள் அஞ்சலி.
“என்ன? நான் சொல்றது புரியுதா இல்லியா?”
“கத்தாத! கேட்டுப்பாக்கறேன்” என்றாள் அஞ்சலி.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.