வனமே உன்னை வணங்குகிறேன்..! 10 - பிச்சாவரம் எனும் இயற்கை வரம்

வனமே உன்னை வணங்குகிறேன்..! 10 - பிச்சாவரம் எனும் இயற்கை வரம்

கடந்த அத்தியாயத்தின் முடிவில், அருகிவரும் அலையாத்திக் காடுகள் பற்றிய வருத்தத்தைப் பதிவுசெய்திருந்தோம். அதற்குக் காரணம், அண்மையில் வெளியாகியுள்ள இந்தியக் காடுகள் பற்றிய அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் சில புள்ளிவிவரங்கள்.
இந்த அறிக்கையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 4 சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது. இதனால், கடந்த 2017-ல், 49 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த அலையாத்திக் காடுகள் தற்போது 45 சதுர கிலோமீட்டராக சுருங்கியுள்ளன. வெறும் 4 சதுர கிலோமீட்டர்தானே குறைந்திருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது என எச்சரிக்கின்றனர் 

சூழலியல் ஆர்வலர்கள்.

சூழல் இணக்கச் சுற்றுலா மையங்கள் குறித்த விழிப்புணர்வை இத்தொடர் மூலம் வலியுறுத்தி வருவதின் முக்கிய இலக்கே வனங்
களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற படிப்பினையை மக்கள்இயற்கை அன்னையை நேரில் தரிசித்த பின்னர் தாமாக அறிந்துகொள்ளச்செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வலியுறுத்தலோடு இந்த வாரம் பிச்சாவரம் அலையாத்திக் காட்டை நோக்கிப் பயணப்படுவோம்.

பரந்து விரிந்த காடு

கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே உள்ளது பிச்சாவரம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் சிதம்பரத்திலிருந்து 16 கிலோமீட்டர் பயணப்பட்டால் பிச்சாவரத்தை அடைந்துவிடலாம். தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி என எட்டு மாவட்டங்களில் அலையாத்திக் காடுகள் இருந்தாலும் பிச்சாவரம் தனிச் சிறப்பானதாக இருக்கக் காரணம், இந்த அலையாத்திக் காடு 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து செழித்து நிற்பதே.
அலையாத்திக் காடுகள் குறித்து, குறிப்பாக பிச்சாவரம் பற்றி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி டாக்டர் செல்வத்திடம் பேசினோம். பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளை அருகிலிருந்து தொடர்ச்சியாகக் கண்காணித்த அனுபவமும் கொண்டவர் என்ற முறையில் அங்கே சூழல் இணக்கச் சுற்றுலாவை எப்படி நடத்தலாம் என்ற யோசனையையும் முன்வைக்கிறார் டாக்டர் செல்வம்.

பிச்சாவரம் அன்றும் இன்றும்

“1983-ல் நான் திருவாரூரில் ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருந்தேன். அப்போது ஆய்வு நிமித்தமாக அடிக்கடி முத்துப்பேட்டை,பிச்சாவரம் என்று பயணப்படுவது உண்டு. அப்போதெல்லாம் சரியாக ஜூன் 12-ல், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஜூன் தொடங்கி டிசம்பர் வரை 8 மாதங்களுக்குக் கால்வாய்கள் வழியாக அலையாத்திக் காடுகளுக்கு நன்னீர் வந்து சேரும். அலையாத்திக் காடுகளின் உப்புத்தன்மை லிட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இருக்கும். இது அலையாத்திக் காடுகளைச் செழிப்பாக வைத்திருக்கும்.

ஆனால், இப்போது வருடத்தில் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் மட்டுமே நன்னீர் கலப்பு நடக்கிறது. அலையாத்திக் காடுகளின் பரப்பளவு குறைவதற்கு இதுவும் ஒரு காரணம். இது தவிர 2018 கஜா புயலால் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கஜாவுக்குப் பின்னர் முத்துப்பேட்டையில் அலையாத்திக் காடுகளின் மீட்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 2019 வன ஆய்வறிக்கைக்கு, கஜாவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முத்துப்பேட்டையின் செயற்கைக்கோள் புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதன் அடிப்படையில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவுகுறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்
கலாம்” என்றார் டாக்டர் செல்வம்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசிய டாக்டர் செல்வம், “பொதுவாக அலையாத்திக் காடுகள் செழிப்புடன் இருப்பதை நீரில் உள்ள உப்பின் அளவே நிர்ணயிக்கிறது. எனவே, உப்பின் தன்மையைச் சீராக வைத்திருக்க நன்னீர் சரிவிகிதத்தில் கலப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மற்றபடி அறிவியல் தொழில்நுட்பம் மூலம் அலையாத்திக் காடுகளை மீட்பது என்பதெல்லாம் தற்காலிகத் தீர்வாகவே இருக்கும்.

அதேபோல், ஒரு சொட்டு ஆற்று நீர்கூட கடலில் கலந்து வீணாக விடமாட்டோம் என்ற முழக்கம் அறியாமை யின் வெளிப்பாடு என்றுதான் நான் சொல்வேன். கடலில் குறிப்பிட்ட அளவேனும் நன்னீர் கலக்காவிட்டால் அலையாத்திக் காடுகள் மட்டுமல்ல... கடல் வளமும் பாதிக்கப்படும். முகத்துவாரங்களிலும், அலையாத்திக் காடுகளிலும்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அத்தகைய இடங்களை அழிவுக்குள்ளாக்கினால் கடல் வளம் அழிந்துவிடும்.

உலகில் எங்கெல்லாம் அலையாத்திக் காடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் கடலோர சூழலியலுக்கான நன்னீர் தேவை குறித்த ஆய்வை மேற்கொள்கின்றனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் சரியான அளவு நன்னீர் கலப்பதை உறுதிசெய்கின்றனர். எனவே, தமிழ்நாட்டின் அலையாத்திக் காடுகளைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆற்றுநீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கூடாது.
விவசாயம், பல்லுயிர்ப் பாதுகாப்பு, கடல்வள மேம்பாடு ஆகியனவற்றைத் தனித்தனித் துறையாகப்பார்க்காமல் இவற்றில் ஒன்றின் வளர்ச்சி நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்ற விஷயங்களுக்கும் உதவுவதாக அமைய வேண்டும். இதைத்தான் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ள முயன்று வருகிறோம்" என்றார்.

சூழல் இணக்கச் சுற்றுலாவை எப்படி செயல்படுத்தலாம்?

அலையாத்திக் காடுகள் அருகிவரும் சூழலில் அங்கு சூழல் இணக்கச் சுற்றுலா சரிவருமா என்ற கேள்விக்கு, “அலையாத்திக் காடுகள் மட்டுமல்ல எந்த வகைக் கானகமாக இருந்தாலும் அது மனித அழுத்தத்தைத் தாங்கும் அளவு என்று ஒன்றிருக்கிறது. அதற்கேற்பவே நாம், சுற்றுலாவைத் திட்டமிட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்துக்கு ஆண்டுக்கு 30,000 பேர் வருவதே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் வருகின்றனர். இதனால், அலையாத்திக் காடுகளின் தன்மை பாதிக்கப்படும். இயந்திரப் படகுகளை அடிக்கடி இயக்கும்போது அடியில் இருக்கும் மணல் படுகை கலங்கடிக்கப்படும். இதனால் அதில் வாழும் நுண்ணுயிர்கள் அழியும். தொடர்ச்சியாக அங்கிருக்கும் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். ஓராண்டுக்கு இவ்வளவு பேர் மட்டுமே என்பதை வரையறுத்து அனுமதிக்கலாம்” என்று யோசனை கூறினார் செல்வம்.

பிச்சாவரத்தின் சிறப்பு

பிச்சாவரத்தில் இருப்பது டெல்டாவை ஒட்டிய அலையாத்திக் காடு. இதன் சிறப்பு படகுச் சவாரிதான். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக் குழாமைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திவருகிறது. போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் இப்பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளைக் காணலாம். பிச்சாவரத்தின் ஒட்டுமொத்த எழிலையும் காண உயர் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் நடத்தும் உணவகங்களில் சுவையான கடல் உணவுகள் கிடைக்கின்றன. ஒருநாள் குடும்பத்துடன் உலாவர பிச்சாவரம் சிறப்பான சூழல் இணக்கச் சுற்றுலா மையம்.

அலையாத்திக் காடுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான இயற்கை அரண், கடல் வளத்தைப் பெருக்கக்கூடிய தளம் என்ற முக்கியமான புரிதல்களோடு, அழுத்தம் தராமல் அதனை ரசிப்போம்.

அடுத்து வரும் அத்தியாயங்களில் தேசம் முழுவதும் உள்ள சில முக்கியமான புலிகள் சரணாலயங்களைச் சுற்றிவருவதோடு புலிகள் பற்றிய சுவாரசியக் கதைகளையும் பேசுவோம்.

(பயணம் தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in