தொடாமல் தொடரும் - 10

தொடாமல் தொடரும் - 10

வீட்டின் வெளியில் சரிவான புல்வெளியில் ரொஸாரியோவும் நான்சியும் கேரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கேரம் போர்டை வைத்திருந்த அகலமான ஸ்டூலின் இரண்டு கால்களில் மட்டும் அவரே சின்ன மரக்கட்டைகளைச் சாய்வாக வெட்டி ஆணியடித்து வைத்திருந்தார்.

அந்த ஸ்டூலை சமமான தரையில் பயன்படுத்த முடியாது.

அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த ஸ்டீல் நாற்காலிகளின் கால்கள் மணலில் சில இஞ்சுகள் புதைந்துவிடுவதால் அதில் பிரச்சினை இருக்காது.

பெட் கட்டிக்கொண்டு விளையாடுவார்கள். தோற்பவர்கள் மறுநாள் வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டும், தண்ணீர் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும் என்று வீட்டு வேலைகள் தொடர்பாகவே சவால்களை அமைத்துக்கொள்வார்கள்.
பள்ளியிலிருந்து பரணியைப் பிக்கப் செய்துகொண்டு ஸ்கூட்டரில் வந்து நிறுத்திய அஞ்சலி, “என்ன அங்கிள்… இன்னிக்கு என்ன பெட்டு?” என்றாள்.

“தோக்கறவங்க பேங்குல பணம் எடுத்துட்டு வரணும்.”

“இதெல்லாம் சும்மா. ஆன்ட்டிய நீங்க தனியா அனுப்பிச்சிடுவிங்களா என்ன? நீங்களும் துணைக்குப் போய்டுவிங்க…”
“கரெக்ட்டுதான். ஆனா, விளையாடறப்ப ஒரு சுவாரசியம் வேணாமா? நீங்க ரெண்டு பேரும் வாங்களேன். விளையாடலாம்.”
“நான் கொஞ்சம் லேட்டா வர்றேன். இவனை ட்ரெஸ் மாத்திட்டு அனுப்பறேன்” என்ற அஞ்சலி தன் வீட்டின் பூட்டைத் திறந்தாள்.
அங்கு செடிகளில் தாவிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சியைப் பிடிக்க ஆர்வத்துடன் ஓடினான் பரணி.
“அம்மா… இதப் பாரேன். பர்ப்பிள் கலர்ல பட்டர்ஃபிளை… ரொம்ப அழகா இருக்குல்ல”
“எங்க… பிடி பாக்கலாம்” என்றாள் வாசலில் நின்றபடி.

“என்ன பெட்டு?” என்றான்.

“தாத்தா உன்னக் கெடுத்து வெச்சிட்டாரு. சரி… என்ன பெட்டு? நீயே சொல்லுடா குட்டி.”
“பிடிச்சிட்டா, நான் சொல்றதை நீ செய்யணும்.”

“என்ன அது?”

“அது இப்ப சொல்ல மாட்டேன். பிடிக்க முடியலன்னா நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன்.”
“ஓக்கேடா.”

பூவின் மீது அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சியை நோக்கி அவன் ஓசையில்லாமல் நடப்பதைப் பார்த்தாள் அஞ்சலி.
ரொஸாரியோ, நான்சி தம்பதியும் விளையாட்டை நிறுத்திவிட்டு அவன் பிடிப்பானா என்று சுவாரசியமாகப் பார்த்தார்கள்.
பிடிப்பதற்கு ஏற்றபடி இரண்டு விரல்களைத் தயாராக வைத்துக்கொண்டு மெதுவாக அந்தப் பட்டாம்பூச்சியை அணுகினான் பரணி. சட்டென்று அதன் இறக்கையைப் பிடிக்க… மில்லிசெகண்டில் அது நழுவிப் பறந்து வேறு பூவில் அமர்ந்தது.
“நீ தோத்துட்டே” என்று சிரித்தாள் அஞ்சலி.

“இரும்மா” என்றவன் இன்னும் முனைப்புடன் பார்வையைக் கூர்மையாக்கிக்கொண்டு இந்த முறை பிடித்துவிட்டான்.
“எத்தனை அட்டெம்ப்ட்ல பிடிக்கணும்னு நீ சொல்லலையே. ஸோ… நான் ஜெயிச்சுட்டேன்” என்று குதித்தான்.
“சரி…நீ ஜெயிச்சுட்டே. நான் என்ன செய்யணும்? நீல் டவுன் போடணுமா?”

“அப்பறமா சொல்றேன். தாத்தா… உள்ள போயிடாதிங்க. நான் ட்ரெஸ் மாத்திக்கிட்டு இப்ப வந்துடறேன்” என்றபடி அம்மாவைத் தொடர்ந்தான் பரணி.

சைக்கிள் மணியோசை கேட்டுத் திரும்பினால் கொரியர் பையன் ஒரு பெரிய பார்சலை ரொஸாரியோவிடம் நீட்டினான்.
அவனிடமே பேனா வாங்கி கையெழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு, “உன் புள்ளைதான் அனுப்பிருக்கான்” என்றார்.
“நமக்கு வேற யாரு பார்சல் அனுப்பறாங்க? பரணிக்கு பர்த்டே வருதுல்ல… ஸ்டோரி புக்ஸ் அனுப்பச் சொல்லிருந்தேன். அனுப்பிருப்பான்” என்றார் நான்சி.

ரொஸாரியோ பார்சலின் பாலிதீன் தோலைப் பிய்த்தெடுத்து… ஓரத்தில் கிழித்து வெளியே எடுக்க… அது ஒரு அழகான ஸ்வெட்டர். கூடவே ஒரு க்ரீட்டிங் கார்டும் இருந்தது.

அதை விரித்துப் பார்த்தார். அதில், ’Happy fathers day! I love you dear Dad’ என்று அச்சில் இருந்தது. கீழே பிங்க் நிற பேனாவால் அகஸ்டின் கையெழுத்திட்டிருந்தான்.

ஒரு விநாடி நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிய ரொஸாரியோ, “என் புள்ளை ஃபாதர்ஸ் டேக்கு அனுப்பிருக்காண்டி” என்றார் குரலடைக்க.

“ஒரே நிமிஷத்துல என் புள்ளை உங்க புள்ளை ஆயிட்டானா? போன் பண்ணிப் பேசுங்க.”
“இப்ப ஆபீஸ்ல இருப்பான். இதைப் போட்டுக்கிட்டு ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ்-அப்ல அனுப்பறேன். அப்ப இன்னும் சந்தோஷப்படுவான்ல…”

ரொஸாரியோ, தான் போட்டிருந்த ஸ்வெட்டரை உடனே கழற்றிவிட்டு இந்த ஸ்வெட்டரை அணியத் தொடங்கியபோது ஓட்டமாக வந்தான் பரணி.

“ஐ… என்ன தாத்தா புது ஸ்வெட்டரா?”

“ஆமாடா கண்ணு. ஆஸ்திரேலியாலேர்ந்து என் பையன் அனுப்பிருக்கான். என்னை போட்டோ எடுக்கறியா?”
பரணி உடனே தன்னைப் பெரிய புகைப்படக் கலைஞனாகப் பாவித்துக்கொண்டு அவரின் மொபைலை வாங்கி, “இப்படி நிக்காதிங்க. நிழல் விழுது. இந்தப் பக்கம் வாங்க…அய்யே.. கையக் கட்டாதிங்க தாத்தா… ஸ்கூல் ப்ரேயரா நடக்குது? கேஷுவலா கையைத் தொங்க விடுங்க. ஸ்டைலா சிரிங்க” என்று படுத்தியெடுத்து நான்கைந்து கிளிக் செய்தான்.
அதில் ஒன்றை நான்சி தேர்வு செய்ய, அதை உடனே வாட்ஸ்-அப்பில் அனுப்பிய ரொஸாரியோ, ‘ஹேப்பி' என்றும் டைப் செய்து அனுப்பினார்.

அட்டையை எடுத்துப் பார்த்த பரணி, “சில்ரன்ஸ் டே தெரியும். நேரு அங்கிள் பர்த்டே. ஃபாதர்ஸ் டேன்னா அது யாரோட பர்த்டே தாத்தா?” என்றான்.

“இது அப்படி இல்ல… எல்லா அப்பாக்களையும் கொண்டாடற நாள். நியாயமா அம்மாவையும், அப்பாவையும் எல்லா நாளும்தான் கொண்டாடணும். இப்பதான் எதுக்கும் நேரமில்லாமப் போய்டுச்சில்ல… வருஷத்துல ஒரு நாளாச்சும் கொண்டாடலாம்னு முடிவு பண்ணி ஃபாதருக்கு ஒரு நாள், மதருக்கு ஒரு நாள் மட்டும் ஒதுக்கி உலகம் பூரா கொண்டாடுது.”
“இது எப்போ?”

“இன்னும் நாலு நாள் இருக்கு.”

“அப்ப நானும் எங்கப்பாவுக்கு எதாச்சும் அனுப்பலாம்ல?”

“உங்கப்பா…” என்று இழுத்தாள் நான்சி.

“அம்மா சொல்லிட்டாங்க. சென்னைலதான் இருக்காரு. பில்டிங் கட்ற இன்ஜினீயரு.”
“சரி… விளையாடுவமா?” என்று ரொஸாரியோ கேரம் காய்களை நடுவில் அடுக்கத் தொடங்கினார்.
“நான் விளையாட வரல…” என்று வீட்டுக்கு ஓடினான் பரணி.

சமையலறையில் வாழைக்காயை சீவி கடலை மாவில் தோய்த்து அஞ்சலி பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தாள்.
“என்னம்மா பண்றே?” என்ற பரணி, ஒரு கார்ட்போர்டு, கத்தரிக்கோல், கலர் பென்சில்களுடன் தரையில் அமர்ந்தான்.
“பஜ்ஜி கேட்டில்ல?”

“ஐ… பஜ்ஜி! குடு… குடு.”

“மொதல்ல தாத்தா, பாட்டிக்குக் குடுத்துட்டு வந்துடு. இந்தா” என்று தட்டுடன் வந்த அஞ்சலி அவன் அட்டையைக் கட் செய்வதைப் பார்த்து, “என்னடா செய்றே? ப்ராஜெக்ட் எதுவும் குடுத்திருக்காங்களா?” என்றாள்.

“இல்ல. க்ரீட்டிங் கார்டு பண்றேன்.”
“எதுக்கு?”
“ஃபாதர்ஸ் டே வருதுல்ல… டாடிக்கு அனுப்பப் போறேன்” என்றவன், அவள் கையில் இருந்த பஜ்ஜிகள் கொண்ட தட்டை வாங்கிக்கொண்டு வெளியே சென்றான்.

அஞ்சலியின் முகம் மாறிப்போனது.

திரும்பி வந்ததும் அவனுக்கு பஜ்ஜிகளைக் கொடுத்தாள்.

“பரணி…அதெல்லாம் நீ அனுப்ப வேணாம்” என்றாள்.

“ஏம்மா?”

“அவருக்குப் பிடிக்காது” என்றாள்.

“போம்மா… ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பே. அவருக்குப் பிடிக்கும். ஒரு கிஃப்ட் வாங்கணும். அதோட சேர்த்துவெச்சி இந்தக் கார்டை அனுப்பணும்.”

“ஏண்டா… அதான் சொல்றேன்ல? இந்த வேலையெல்லாம் வேணாம். பஜ்ஜி சாப்புடு மொதல்ல.”

“உனக்குப் புரியலம்மா. நான் இப்படி கிஃப்ட் அனுப்பிச்சா டாடிக்கு உன் மேல இருக்கற கோபம்லாம் சரியாப் போயிடும். உடனே இங்க வந்துடுவாரு பாரேன்… உன்னையும், என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு.”

“அதிகப்பிரசங்கி மாதிரி பேசினே அறை வாங்குவே! எல்லாம் முடிஞ்சிப் போச்சுன்னு சொன்னேன்ல? அவரு வந்து கூட்டிட்டுப் போகணும்னு நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கனா?”

“என்ன ஏம்மா திட்றே? உனக்கும் அப்பாக்கும்தான சண்டை? நானா சண்டை போட்டேன்? அவருக்கு எம்மேல ஒண்ணும் கோபம் இல்லதான? நல்ல டாடின்னு நீதான சொன்னே?”

“ஒரு பேச்சுக்குக் கேக்கறேன். அவரு வந்து கூப்ட்டா என்ன விட்டுட்டு அவரோட போயிடுவியாடா நீ?” என்று பதற்றமாகக் கேட்ட அஞ்சலி, அவன் பதிலுக்குக் காத்திருந்தாள்.

(தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in