தொடாமல் தொடரும் 8

தொடாமல் தொடரும் 8

பட்டுக்கோட்டை பிரபாகர்
pkpchennai@yahoo.co.in

“உனக்குச் சங்கடமா இருந்தா நான் சொல்லட்டுமா?” என்ற சத்யாவை அமைதியாகப் பார்த்தாள் அஞ்சலி.
மறுப்பாகத் தலையைக் குறுக்கில் அசைத்தாள்.
சத்யாவுக்கு எரிச்சலில் முகம் கடுகடுத்தது.
“அவன் வயசுக்குக் கேள்வி கேக்கத்தான் செய்வான். இந்தக் க்யூரியாசிடி இல்லைன்னாதான் கோளாறு.”
“நான் என்ன செய்யணும்னு சொல்றே?”
“பொறுமையா உக்காந்து அவன் கேக்கற எல்லா கேள்விக்கும் ஒரே ஒரு தடவை பதில் சொல்லிடு. அதுக்கப்புறம் கேள்விகள் இருக்காது. வருத்தம் மட்டும்தான் இருக்கும். அது கொஞ்ச நாள் போனா சரியாயிடும்.”
“எனக்கு சரியாப் படல சத்யா.”
“பின்ன எதுக்குப் பாதி சொன்னே?”
“அது… அவன் பண்ண சேட்டையினால ஒரு டென்ஷன்ல சட்டுன்னு வெடிச்சு சொல்லித் தொலைச்சுட்டேன்.”
“எப்படியோ சொல்லிட்டேல்ல…மிச்சத்தயும் சொல்லிட்டா என்ன?”
“எனக்கு இதைப் பத்தி அவன்ட்ட பேச இஷ்டமில்ல சத்யா.”
“அஞ்சலி… முட்டாளா நீ? அந்தப் பிஞ்சு மனசைப் போட்டு ரணப்படுத்திட்டிருக்கே.”
“போதும் சத்யா! சில விஷயத்துல நீ பிடிவாதமா இல்லையா? உங்கம்மா மனசை ரணப்படுத்தலை? அடுத்தவங்க பிரச்சினைக்குத் தீர்வு சொல்றது ரொம்ப ஈஸி சத்யா” என்று சற்றே குரலை உயர்த்தி அஞ்சலி சொன்னதும்…
எதுவும் பேசாமல் விருட்டென்று பால்கனியிலிருந்து அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் நாற்காலியில் அமர்ந்து சிஸ்டத்தை உயிர்ப்பித்துக்கொண்டான் சத்யா.
அஞ்சலிக்குத் தலை லேசாக வலித்தது.
இதே வார்த்தைகளை இதே மாதிரியான கோபத்துடன் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் ரகுவிடம் பேசியது சட்டென்று நினைவுக்கு வந்தது.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகு, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தன் ஃபிளாட்டுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கார் பார்க்கிங் பகுதிக்கு வந்து பைக்கை நிறுத்தினான்.
அடுத்தடுத்த பார்க்கிங் பகுதிகளில் வரிசையாக விதவிதமான கார்கள் நிற்க, இவனுடையதில் மட்டும் ஒரு பைக் நிற்பதே ஒரு வகையில் இவனை மவுனமாகக் கேலி செய்வது போலிருந்தது.
அந்த ஃபிளாட்டின் ஹவுஸ் ஓனர், கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கார் பார்க்கிங் பகுதிக்கும் சேர்த்துதான் வாடகை என்றபோது, வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான்.
ஆனால், பைக்கை மட்டும் நிறுத்தியதில் பிரச்சினைகள் வந்தன.
இன்னொரு ஃபிளாட் ஆசாமி வந்து, “சார்… எங்கிட்ட ரெண்டு கார் இருக்கு. ஒரு காரை உங்க இடத்துல நிறுத்திக்கிறேனே…” என்றார்.
“பைக் இருக்கு சார்.”
“அதை ஒரு ஓரமா நிறுத்திக்கலாமே சார்… ஒரு அமவுன்ட் வேணாலும் தர்றேன்.”
அந்தக் கேள்வியே ரகுவைச் சங்கடப்படுத்தியது. அவர் அப்படிக் கேட்டபோது அவனுடன் அஞ்சலியும் இருந்தாள்.
ரகு, “எவ்வளவு குடுப்பீங்க?” என்று கேட்பதற்கு முன்பே அஞ்சலி, “நாங்க சீக்கிரம் கார் வாங்கப் போறோம். ஸாரி” என்றாள்.
“அதுவரைக்கும் வெச்சிக்கிறேனே…”
“ஸாரின்னு சொன்னா புரியாதா சார் உங்களுக்கு?”
அன்றோடு அந்த ஆசாமி லிஃப்ட்டிலோ, ப்ளே ஏரியாவிலோ எங்கு பார்த்தாலும், அதுவரை புன்னகைத்துக்கொண்டிருந்தவர், வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
பில்டிங் வாட்ச்மேன் சிவா வந்து, “சார்…எடம் சும்மாதான இருக்கு... அயர்ன் வண்டி போட்டுக்கலாமான்னு முத்துசாமி கேக்கறான் சார்” என்றான்.
“அதெல்லாம் எந்த வண்டியும் போடக் கூடாது” என்று கடுப்படித்து அவனை அஞ்சலி துரத்தியதிலிருந்து சிவா இவர்கள் எதிரிலேயே வருவதில்லை.
ரகு, அலுவலக பிரீஃப்கேசுடன் லிஃப்ட்டில் பயணித்துத் தன் ஃபிளாட்டின் கதவை சாவி போட்டுத் திறந்து உள்ளே வர… ஹால் ஸோபாவில் உறங்கிக்கொண்டிருந்த அஞ்சலி திடுக்கிட்டு எழுந்தாள்.
“பெல் அடிச்சிட்டு திறக்கக் கூடாதா? தூக்கிவாரிப் போட்ருச்சி.”
“நீ வீட்ல இருப்பேன்னு எனக்கென்ன தெரியும்? ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?”
“தலைவலி.”
ஷீ, சாக்ஸைக் கழற்றி ஷூ ராக்கில் வைத்துவிட்டு டையைத் தளர்த்தியபடி ரெஃப்ரிஜிரேட்டரில் எதையோ தேடினான்.
“தண்ணி பாட்டில் வைக்கலையா?”
“மறந்துட்டேன். ஏன் தலைவலின்னு கேக்க மாட்டியா?”
“கேட்டாதான் சொல்வியா?”
“என்னை மணலி பிராஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுவாங்க போலிருக்கு. அவ்ளோ தூரம் தினம் போய்ட்டு வர்றதுன்னா வாழ்க்கையே வெறுத்துடும். நியூஸ் கேட்டதுமே மூட் அவுட்.”
படுக்கையறையில் லுங்கிக்கு மாறியபடி சொன்னான், “எதுக்கு மூட் அவுட்? சிம்பிள் சொல்யூஷன் இருக்கே...”
“வேலைய விட்ருன்னு சொல்வே. அதான? வேறேன்ன சொல்லப் போறே?”
“புத்திசாலி அப்படித்தான் முடிவெடுப்பா!”
“ஒரு நாளைக்கு நூத்தி எட்டு தடவை என்னை முட்டாள்னு சொல்லியாகணும் உனக்கு...”
“இதென்ன பெரிய கலெக்டர் வேலையா? இல்ல… லட்சம் லட்சமா அள்ளிக் குடுக்கறானா? நீ கன்சீவ் ஆனப்பவே ரிசைன் பண்ணச் சொன்னேன். லாங் லீவ் மட்டும் போட்டே. பரணி பொறந்து நாலே மாசத்துல மறுபடி ஆபீசுக்குப் போயே தீருவேன்னு ஓடினே. அப்படி என்ன பிடிவாதம்?”
“லோன் போட்டு கார் வாங்கலாம்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். ஹவுசிங் லோன் சுலபமா கிடைக்குது… சொந்தமா ஃபிளாட் வாங்கலாம்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். கேட்ருக்கியா நீ?”
“எனக்கு லோன் வாங்கறது பிடிக்காதுன்னு உனக்கு நல்லாத் தெரியும். அது என் பாலிசி!”
“உனக்குப் பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் இந்தியா இதுவரைக்கும் வாங்குன கடன்லயும், இனிமே வாங்கப் போற கடன்லயும் உனக்கும் பங்கு இருக்கு ரகு. லோன் விஷயத்துல நீ பிடிவாதமா இல்லையா? அடுத்தவங்க பிரச்சினைக்குத் தீர்வு சொல்றது ரொம்ப ஈஸி!”
“ஓகோ! இந்த நிமிஷம் வரைக்கும் உன்னை என் பொண்டாட்டியாதான் நான் நினைச்சிட்டிருக்கேன். எப்பயிலேர்ந்து நீ அடுத்தவங்க ஆனே அஞ்சலி?”
“ஏதோ வாய் தவறி வந்துடிச்சி. விடு. இதைப் பெருசாக்காத.”
“அப்ப… எப்பவும் நான்தான் எதையும் பெருசு பண்றேன். இல்ல? போ… போய் பரணியக் கூட்டிட்டு வா.”
ரகு ரிமோட் எடுத்து டிவி போட்டான்.
“தலைவலின்னு சொல்றேன்ல? நீ கூட்டிட்டு வர மாட்டியா?”
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. தெளிவா சொல்லல நீ.  தலைவலின்னு சீக்கிரம் வந்துட்டதா சொன்னே. இப்பவும் தலைவலிக்குதுன்னு எனக்கெப்படி தெரியும்?”
“வக்கீல் மாதிரி பேசு!”
“சரி… நான் ட்ரெஸ் மாத்தினப்ப பாத்துட்டுதான இருந்தே? சொல்லியிருந்தா ட்ரெஸ் மாத்தியிருக்க மாட்டேன்ல?”
“தோணல. ஏன் மறுபடி போட முடியாதா?”
“இங்க பாரு… எனக்கும் ஆபீஸ் இருக்கு. அங்கயும் நூறு பிரச்சினை இருக்கு. அதெல்லாம் சொல்லிட்டா இருக்கேன்?”
“சொல்ல வேணாம்னு யார் சொன்னது?”
“என்னிக்குக் கேட்ருக்கே? எப்பப் பாரு உன் ஆபீஸ்… உன் பிரச்சினைன்னு மட்டும்தான் பேசுவே! நானா உன்னை வேலைக்குப் போகச் சொன்னேன்?”
“ரெண்டு பேரும் சம்பாரிச்சாலுமே இன்னிக்கு டெஃபிசிட் பட்ஜெட்தான் போட வேண்டிருக்கு. நிலமை புரியாம பேசிக்கிட்டு…ரெண்டு வருஷத்துல பரணிய ஸ்கூல்ல சேக்கணும். ப்ரீகேஜி சீட்டுக்குக் கூட ஃபீஸ் எவ்வளவுன்னு விசாரிச்சிப் பாரு…”
“அதெல்லாம் பெரிய பெரிய ஸ்கூல்லதான். நான்லாம் அரசுப் பள்ளிலதான் படிச்சேன்.”
“அதுக்காக? அவன கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேப்பியா?”
“அப்துல் கலாம் எங்க படிச்சார் தெரியுமா?”
“கேட்டாச்சுப்பா… இதே உதாரணத்தைப் பத்து தடவை கேட்டாச்சு. அப்துல் கலாம் காலத்துல கவர்மென்ட் ஸ்கூல்ஸ் மட்டும்தான் இருந்திச்சி. அதோட ஸ்டாண்டர்டும் சூப்பரா இருந்திச்சி. இன்னிக்கு அப்படித்தான் இருக்கா?”
“இதப் பத்தி பல தடவை பேசிட்டோம். விட்ரு… உன்னோட ஆர்க்யூ பண்றதுக்கு எனக்கு இப்ப மூடு இல்ல…”
டிவியை அணைத்துவிட்டு ரிமோட்டை டொப்பென்று சோபாவில் விசிறிவிட்டு ரகு எழுந்து படுக்கையறை சென்று ஹேங்கரிலிருந்து பேன்ட்டை எடுத்து அணியத் தொடங்க.. அஞ்சலி செருப்பணிந்தபடி வாசலருகிலிருந்து, “நானே போறேன்…நீ டிவி பாரு.”
“ஏண்டி இப்படிப் படுத்தறே? நான்தான் புறப்ட்டேன்ல?”
“பரவால்ல… அப்படி ஒண்ணும் அலுத்துக்கிட்டுப் போக வேண்டியதில்ல.”
அஞ்சலி கதவை டொப்பென்று சத்தமாகச் சாத்திவிட்டுப் போக…இப்போது ரகுவுக்குத் தலை வலித்தது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in