தொடாமல் தொடரும்... 6

தொடாமல் தொடரும்... 6

பட்டுக்கோட்டை பிரபாகர்
pkpchennai@yahoo.co.in

“நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம்” என்றவள் பரணியை இழுத்து அணைத்துக்கொண்டு வாய்விட்டு அழத் தொடங்கினாள்.
அம்மா அப்படி வெடித்து அழுவதை இதுவரை பார்த்திராத பரணிக்கு, தான் கேட்ட கேள்விதான் அம்மாவைக் கஷ்டப்படுத்திவிட்டது என்பது மட்டும்தான் முதலில் புரிந்தது.
“அம்மா… அழுவாதம்மா. இனிமே நான் எதுவும் கேக்கலம்மா. யார்கிட்டயும் வம்பு பண்ணாம இருக்கேன்மா. அழுவாதம்மா'' என்று அம்மாவின் அணைப்பை மேலும் இறுக்கிக்கொண்டான்.
சில நிமிடங்களில் தன்னிலைக்கு வந்து கண்களைத் துடைத்துக்கொண்ட அஞ்சலி, “சரி…சாப்புடு'' என்றாள்.
இட்லி சாப்பிடத் தொடங்கிய பரணி, “நீ?'' என்றான்.
“நீ முதல்ல சாப்புடு. பரணி… இனிமே உனக்கு என்ன கோபம்னாலும் அதை நம்ம வீட்டுக்குள்ளயே காட்டு. ஏதாச்சும் கேக்கணும்னா எங்கிட்ட நேரா கேளு. ரொஸாரியோ தாத்தாவும், நான்சி பாட்டியும் உன்ன மொரட்டுப் பையன்னு நினைப்பாங்கல்ல?''
“சரிம்மா. ஒரு தடவை என் ஃப்ரெண்டு தனபாலோட சண்ட போட்டேன். நாங்க பேசாம இருந்தோம். அப்ப எங்க ரெண்டு பேரையும் கூப்புட்டு நீ என்ன சொன்னே ஞாபகம் இருக்கா?''
“என்ன சொன்னேன்? சண்ட போடக் கூடாதுன்னு சொல்லிருப்பேன். அதான?''
“இன்னொன்னும் சொன்னே. அப்படியே சண்ட போட்டாலும் உடனே அதை மறந்துடணும்… நேத்து போட்ட சண்டயை மனசுல வச்சிக்கிட்டுப் பேசாம இருக்கக் கூடாதுன்னு சொன்னே. ரெண்டு பேரையும் ஸாரி சொல்ல வெச்சே. ஷேக் ஹேண்ட்ஸ் குடுத்துக்கச் சொன்னே. அப்புறம் நாங்க மறுபடி ஃப்ரெண்ட்ஸாயிட்டோம்.”
“ஆமாம். அதுக்கென்ன?”
“அதே மாதிரி உனக்கும் அப்பாவுக்கும் சண்டன்னா அதை உடனே மறந்துட்டு ஷேக் ஹேண்ட்ஸ் குடுத்திருக்கலாம்ல?''
மென்மையாக பரணி கேட்ட அந்தக் கேள்வி அஞ்சலிக்குக் கன்னத்தில் பொளேரென்று அறைந்தது போலிருந்தது.
குழந்தைகளுக்குச் சொல்லும் எல்லா அறிவுரைகளையும், அற போதனைகளையும், பெரியவர்களும் அப்படியே கடைப்பிடித்தால் எந்தக் குடும்பத்திலும் பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லையே…
நம்மால் கடைப்பிடிக்க முடியாத விஷயங்களை அடுத்தவர்களுக்கு மட்டும் அறிவுரையாகச் சொல்வது பொய் நியாயமல்லவா?
“பரணி… உங்க வயசுல வர்ற பிரச்சினை வேறப்பா. எங்க வயசுல வர்ற பிரச்சினைகள் வேறப்பா. இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது. உனக்கு அம்மா, அப்பா ரெண்டுமே நான் மட்டும்தான். அதை மட்டும் புரிஞ்சிக்கிட்டாப் போதும்.”
“அப்பாவுக்கு உன் மேலதான கோபம்? நான் என்ன தப்பு செஞ்சேன்? என் மேல என்ன கோபம்? ஏன் எங்கூட பேசல? அவரு பேட் டாடியாம்மா?''
“இல்லடா!''
“அப்ப நீ பேட் மம்மியா?''
“டேய்! யாரும் முழுக்க பேடோ குட்டோ இல்லடா. ஒரு சூழ்நிலையில எடுக்கற சில முடிவுகள் ஒருவிதமா அடையாளப்படுத்தும். அவங்கவங்க கோணத்துல பார்த்தாதான் அது புரியும்.”
“எனக்குப் புரியவே இல்ல…போ!''
“இன்னும் கொஞ்சம் வயசானா புரியும். இப்ப ரொம்ப யோசிச்சி மண்டயப் போட்டுக் குழப்பிக்காத…”
அவன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துச்சென்று சமையல் மேடையோரம் இருந்த சிங்கில் போட்டுவிட்டு, வேறு தட்டில் ஹாட் பேக்கிலிருந்து தனக்கு இட்லிகளை எடுத்துக்கொண்டு டைனிங் மேஜையில் அமர்ந்தாள் அஞ்சலி.
பரஸ்பரம் ‘ஸாரி’ சொல்லி ஷேக் ஹேண்ட்ஸ் கொடுத்துக்கொள்வது ஒரு சாதாரண செயல்தான் குழந்தைகளுக்கு. பெரியவர்களுக்கு அப்படியா?
சினிமா தியேட்டரில் காலை மிதித்துவிட்டுச் சொல்கிற அளவுக்கு சம்பிரதாயமான ‘ஸாரி’ இல்லையே… எந்தப் பிரச்சினையை மறந்துவிட்டு ஒருவரை மீண்டும் ஏற்கிறோம் என்பதைப் பொறுத்துதானே அந்த ‘ஸாரி’க்கு இதயமும் மூளையும் தயாராக முடியும்?
இதில் இதயம்கூட ரொம்ப சீக்கிரத்தில் தயாராகி விடும். ஆனால், நிகழ்வுகளின் நினைவுகளை அப்படியே பொத்திப்பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கும் மூளை அத்தனை சுலபமாக ஒப்புக்கொண்டுவிடுகிறதா என்ன?
தவிரவும் இதயமும், மூளையும் கை கோத்து ‘ஸாரி’ சொல்லத் தயாராகும் ஒரு இளகிய மனநிலை இரண்டு பக்கமும் அவசியப்படுகிறதே…
“அம்மா'' என்றழைத்த பரணியைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் கையில் ஸ்டாம்ப்ஸ் கலெக்ஷன் நோட்டைப் பிடித்திருந்தான்.
“டாடி வர்றப்ப இதெல்லாம் காட்டணும்னு வெச்சிருந்
தேன். வரவே மாட்டாராம்மா? காட்டவே முடியாதாம்மா?'' என்ற அவனின் ஏக்கம் தோய்ந்த கேள்விக்குப் பதில் இல்லாமல் கண்கள் கசிய அவனையே பார்த்தாள்.
“பரணி… உனக்கு ஒண்ணு தெரியணும். உங்கப்பா உன்னைப் பார்க்க வரல, உங்கூட போன்லகூட பேசலன்றத வெச்சி அவர் உன் மேல வெறுப்பா இருக்கார்னு நினைச்சிடாத. நான் இங்க இருக்கேன்னு அவருக்குத் தெரியாது.''
“சென்னையில அவர் எங்க இருக்காரு?''
“அவர் ஒரு இன்ஜினீயர். அதாவது பில்டிங் கட்டுவாங்
கல்ல… அந்தக் கம்பெனில வேலை பார்த்தார். இப்ப சென்னையிலதான் இருக்காரான்னு எனக்குத் தெரியாது. அவர் மேல வெறுப்பு எதுவும் மனசுல வெச்சிக்காத.”
‘இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று தள்ளிப்போட்டு வந்த கசக்கும் உண்மையைச் சொல்லிவிட்டேன். குழந்தை பாவம் இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறானோ’ என்று பதைப்பு ஏற்பட்டது அஞ்சலிக்கு.
***
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பி.டி மாஸ்டர் விசில் ஊதியதும் ஓட்டப் பந்தயத்தில் தயாராக நின்றிருந்த பரணி, மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஒடத் தொடங்கினான்.
எட்டுப் பேர் ஓடியதில், 200 மீட்டர் ஓட்டத்தில் அவனால் ஏழாவதாகத்தான் வர முடிந்தது.
மூச்சு வாங்க முழங்கால்களைக் கட்டிக்கொண்டு மைதானத்தின் ஒரத்திலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்த அவனிடம் வந்தார் பி.டி மாஸ்டர் சகாதேவன்.
தோளில் போட்டிருந்த டர்க்கி டவலை எடுத்து அவன் முகத்திலும், தோள்களிலும் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்து… தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் புகட்டினார்.
“என்னடா கண்ணா… எப்பவும் ஃபர்ஸ்ட் வருவி
யேடா… உன்ன டிஸ்ட்ரிக்ட் லெவலுக்கு அனுப்பணும்னு கணக்குப் போட்டு வெச்சிருக்கேன். என்னாச்சி? சரியா சாப்ட்டியா இல்லையா கண்ணா?”
“ராத்திரி சரியாவே தூங்கல சார்.”
“அதான் பாத்தேன்… கெட்ட கனவு வந்திச்சா கண்ணா?''
“தூங்குனாதான கனவு வரும்?''
“ஏன் தூங்கல?''
அதற்குள் பியூன் வந்து ஹெச்.எம் அழைப்பதாகச் சொல்ல, பி.டி மாஸ்டர் புறப்பட்டுச் செல்ல… தனபால் வந்து அவனருகில் உட்கார்ந்தான்.
“தனா… எங்கப்பா அமெரிக்கால இல்ல. சென்னைலதான் இருக்கார்டா. இன்ஜினீயர்டா. கட்டிடம்லாம் கட்டுவாங்கல்ல… அந்த இன்ஜினீயர்.”
“ஓ… சென்னையில இருக்கார்னா அப்பறம் ஏன் பேரன்ட்ஸ் டே, ஆனுவல் டே எதுக்கும் வர மாட்டேங்கறார்?''
“எங்கம்மாவும், அவருக்கும் சண்ட. பிரிஞ்சிட்டாங்
களாம். அதனால வரமாட்டாராம்.”
“ஓ… டைவர்ஸ் ஆயிடுச்சா?''
“அதெல்லாம் தெரியாது. பிரிஞ்சிட்டாங்க.''
“சரி…உன்னப் பாக்க வரலாம்ல?''
“நாங்க இங்க இருக்கறதும் அவருக்குத் தெரியாதாம்.''
“கோர்ட்டுல அப்படிச் சொல்லிருப்பாங்க''
“என்னன்னு?''
“பிரிஞ்சப்போ… நீ உன் அம்மாவோடதான் இருக்கணும்னு சொல்லிருப்பாங்க.''
“ஓகோ…”
“ஆனாக்கூட உங்கப்பா அப்பப்ப வந்து உன்னப் பாக்கலாம்னு சொல்லிருப்பாங்க.”
“இதெல்லாம் உனக்கெப்படிடா தெரியுது?''
“சிங்கப்பூர்ல என் சித்தியும் சித்தப்பாவும்கூட இப்படித்தான் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. எதுக்கு டைவர்ஸ் ஆயிருக்கும்னும் எனக்குத் தெரியும். சொன்னா நீ திட்டுவே.”
“திட்டல. சொல்லுடா. எதுக்கு சண்ட போட்ருப்பாங்க?''
“உங்கம்மா சொல்லலையா?''
“உனக்கு இப்பப் புரியாதுன்னுட்டாங்க''
“உங்கப்பா வப்பாட்டி வெச்சிருப்பாரு. அதனாலதான் சண்ட போட்ருப்பாங்க.''
“வப்பாட்டின்னா?” என்றான் பரணி.
(தொடரும்...)

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in