தொடாமல் தொடரும் - 3

தொடாமல் தொடரும் - 3

பைக்கில் நிதானமான வேகத்தில் வந்துகொண்டிருந்த சத்யா அயர்ன் செய்த கோடுகள் தெரியும் முழுக்கை சட்டையை இன் செய்து பெல்ட் போட்டிருந்தான். ஹெல்மெட் அணிந்திருந்தான். எதிர்க் காற்று அவன் சட்டையின் காலர்களைப் பறவையின் இறக்கைகளைப் போல துடிக்கவைத்தன.

அந்த மலைப் பாதையில் ஒரு புறம் இரண்டடி உயரத்திற்கு மட்டுமே கட்டப்பட்டிருந்த எல்லைச் சுவர் கொண்ட பள்ளத்தாக்கும், மற்றொரு புறம் நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களும் அவனுக்குத் துணையாக வந்துகொண்டிருந்தன.
சூரியனை அனுமதிக்காத சாம்பல் நிற மேகங்கள் இணைந்து கைகோத்தி ருந்தன. தூரத்து மலைச் சிகரங்களின் மீது பனிப் புகை சினிமாவில் வரும் பேய்க் காட்சி போல அமானுஷ்யமாக உலாவியது.ஆங்காங்கே டூரிஸ்ட் வேன்களும், பஸ்களும் ஓரங்கட்டி நின்று பலர் செல்ஃபி எடுத்தார்கள். சிலர் குளிருக்கு இதமாக இஞ்சி டீ குடித்தார்கள். பாதையோரப் பழ வியாபாரிகளுக்குக் குச்சி தட்டி குரங்குகளை விரட்டுவதே வேலையாக இருந்தது. குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் இளநீர் குடித்துப் போட்ட தேங்காய்கள் கிடந்தன.
ஒரு பேக்கரியைக் கடக்கும்போது அம்மா வர்க்கி வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வர நிறுத்தி இறங்கினான் சத்யா.
முதலாளி நெற்றியில் சந்தனம் வைத்திருந்தார். ஒரு கட்டு ஊதுபத்தியை அய்யப்பன் படத்திற்கு முன்பாக புகையவிட்டிருந்தார்.வர்க்கியை பிரவுன் காகிதப் பையில் போட்டுவிட்டு, “வெஜ் பஃப்ஸ் சூடா இருக்கு சத்யா… தரட்டுமா?'' என்றார்.
“ரெண்டு குடுங்கண்ணே” என்று பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்து அருகில் கிடந்த மாலை நாளிதழை மேய்ந்தான்.
லேசான தூறலுக்காகக் குடையுடன் நடந்துவந்த அஞ்சலி, பேக்கரிக்கு வந்து குடையை மடக்கியதும்தான் அவனைப் பார்த்தாள்.
“இன்னும் வீட்டுக்குப் போலையா சத்யா?'' என்றாள்.
“வர்க்கி வாங்கலாம்னு இறங்குனேன். எங்க பரணி?”
“அவனுக்குதான் கேக் வாங்க வந்தேன்”
“திட்னியா அவனை?''
“அடிச்சிட்டேன்”
“ஏன்ப்பா? சின்னப் பையன்தான? புரிஞ்சா பண்றான்? சும்மா அதட்றதோட நிறுத்திருக்கக் கூடாதா?''
“தினம் தினம் வம்பு வளர்த்துட்டு வந்தா டென்ஷனாகாதா? நீயும்தான இருந்த? அந்தம்மா நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி எப்படில்லாம் கேட்டுச்சி. புஷ்பா இல்ல…அவ பேசாம பரணிய ஹாஸ்டல்ல சேர்த்துடேன்னு எனக்கு யோசனை சொல்றா.''
“யாரோ என்னமோ சொல்லிட்டுப் போறாங்க. உனக்குன்னு இருக்கற ஒரே துணையும் அவன்தான். சொந்தமும் அவன்தான். அன்பா இதமா சொல்லித்தான் சரி செய்யணும் அஞ்சலி. ஏதோ காரணம் சொன்னாலும் குழந்தைங்களை அடிக்கிறது கேவலமான விஷயம். நம்ம ஈகோவை இறக்கிவைக்கிற வடிகாலா நினைச்சுக்கறோம். கண்ணு முன்னாடி லஞ்சம் வாங்கற போலீஸ்காரனை அடிச்சிருக்கியா? முடியுமா? செல்லுபடியாகற இடத்துல மட்டும் கோபத்தைக் காட்றது நிச்சயமா பலம் இல்ல…நம்ம பலவீனம்.''
அடுத்த ஸ்டூலில் அமர்ந்திருந்த அஞ்சலியின் தலை தானாகக் குனிய… அவள் இமைகளில் ஒன்றுதிரண்ட கண்ணீர் முத்தாகி சொட்டியது.
கேக் வாங்கிக்கொண்டு எழுந்த அவளுடன் நடந்த சத்யா, “ஸாரி… உன்னைக் குத்திக் காட்டணும்னு சொல்லலைப்பா. சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஏதோ ஒரு உரிமைல…” என்றான்.
“சீச்சீ… உம்மேல எனக்கென்ன கோபம்? உனக்கில்லாத உரிமையா சத்யா? எனக்கு என் மேலதான் கோபம். குற்ற உணர்ச்சி.''
“சரி…எதுக்காக அந்தப் பையனை அப்படி அடிச்சானாம்?''
“காரணம் தெரிஞ்சதும் அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாய்டுச்சி சத்யா. அவங்கப்பா அமெரிக்கால இல்ல…செத்துப் போய்ட்டார்னும், நான் சும்மா பொய் சொல்லிட்டிருக்கேன்னும் அந்தப் பையன் சொன்னானாம்.”
“என்ன அஞ்சலி… இது? இதுக்கு அடிக்காம வேற எதுக்கு அடிப்பான் உன் பையன்? காரணம் கேக்காமயே அடிச்சிட்டியா?''
அஞ்சலி சத்யாவின் பைக்கில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
“அஞ்சலி… ஆர் யூ நாட் மெச்சூர்ட்?”
“நானா? மெச்சூர்டா? நீ வேற. அடிச்சது தப்பு, ஸாரிடான்னு பத்து தடவை சொல்லிட்டேன். எங்கூட பேச மாட்டேங்கறான் சத்யா. ரொஸாரியோ சார் வீட்ல உக்காந்துக்கிட்டு வர மாட்டேங்கறான்.”
“நாளைக்கு ஸண்டேதான? நான் வேணா பரணிய என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு நாள் வெச்சிக்கட்டுமா?”
“இல்ல சத்யா… நானே அவனை சமாதானப்படுத்திடுவேன். கொஞ்சம் டைம் ஆகும். என் ரத்தம்தான… என் ரோஷத்துல பாதியாவது இருக்காதா?''
“உக்காரு. உன்னை வீட்ல விட்டுட்டுப் போறேன்.”
“இல்ல சத்யா… நீ போ. அம்மா தேடுவாங்க. பஃப்ஸ் சூடா சாப்ட்டாதான் நல்லாருக்கும்.”
“ஓவன் இருக்கு. சூடு பண்ணிக்கலாம். அத விடு. ஒன்ணு கேக்கட்டுமா அஞ்சலி?”
“என்ன?”
“இன்னும் எத்தனை நாளைக்கு பரணிட்ட மறைக்கப்போற?”
“வேற என்ன செய்றது?”
“நிதானமா எடுத்துச் சொல்லிடேன்.”
“இல்ல சத்யா. புரிஞ்சிக்கிற வயசில்ல. உடைஞ்சி போயிடுவான். அதைவிட அவன் என்னை வெறுத்துடக் கூடாது பாரு…இப்ப ஒரு கேள்வி மட்டும்தான் அவன் மனசுல இருக்கு. அப்பறம் நூறு கேள்வி வந்துடும். கொஞ்சம் போகட்டும். உங்கம்மா ஒரு விஷயம் உங்கிட்டப் பேசச் சொன்னங்க. மறந்தே போய்ட்டேன்.''
“அவங்களுக்கு வேற வேலை இல்ல.”
“விஷயம் என்னன்னே தெரிஞ்சுக்காம பேசினா எப்படி?”
“எல்லாம் தெரியும். பால் போடறவன் லேர்ந்து பூக்காரி, காய்கறிக் கடைக்காரன் எல்லார்ட்டயும் பஞ்சாயத்து போயிடுச்சி. இப்ப உங்கிட்ட வந்திருக்கு.”
“அவங்க சொல்றதுல நியாயம் இல்லையா சத்யா?”
“அவங்க பக்க நியாயம் மட்டுமே இருக்கு. இதுல என் பக்க நியாயம்னு ஒண்ணு இருக்குல்ல. அதைப் புரிஞ்சுக்காம பேசாத.”
“என்ன புரிஞ்சுக்கணும்? அது நடந்து நாலு வருஷமாச்சு. இன்னும் அந்த சோகம் அப்படியே அதே அழுத்தத்தோட உன் மனசுல இருக்குன்னு பொய் சொல்லாத. அந்த சோகத்தோட வடுதான் மிச்சமிருக்கும். அப்பப்ப நினைக்கிறப்ப வலிக்கத்தான் செய்யும். ஆனா உனக்கு வயசு இருக்கு.”
“மனசும் இருக்கு அஞ்சலி. ராகவி செத்துட்டது நிஜம். ஆனா அதை நான் இன்னும் உணரலை. அவ என் மனசுக்குள்ள அப்படியே இருக்கா. அவ்வளவு நேசிச்சேன். சில விஷயங்களைத் துல்லியமா புரியவைக்க முடியாது. என்னால முடியாது அஞ்சலி. இந்த விஷயத்தைப் பத்தி இனிமே பேச வேண்டாம். நான் வர்றேன்.''
சட்டென்று ஹெல்மெட் அணிந்து, பைக்கை ஸ்டார்ட் செய்து சத்யா புறப்பட்டுச் செல்ல… அஞ்சலி குடை விரித்துக்கொண்டு மேட்டில் இருக்கும் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

***
நான்சி கொடுத்த ஜாம் தடவிய பிரெட் ஸ்லைஸைக் கடித்தபடி டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த பரணி, ரொஸாரியோ ஒரு வெண்கலச் சிலையை மஞ்சள் துணி வைத்துத் துடைப்பதைப் பார்த்தான்.
அவர் அருகில் வந்தான்.
“தாத்தா… நீங்க பொய் சொல்ல மாட்டிங்கதான?”
“சொல்ல மாட்டேன்'' என்றார் ரொஸாரியோ.
“நீங்களே சொல்லுங்க. எங்கப்பா செத்துப்போய்ட்டாரா?”
ரொஸாரியோ சங்கடமாக நான்சியைப் பார்த்தார்.

(தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in