முதுமை எனும் பூங்காற்று 4: குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு?

முதுமை எனும் பூங்காற்று 4: குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு?

இன்றைய சூழலில், குழந்தை வளர்ப்புஎன்பது மிகப் பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மூத்தோரின் உதவியை எதிர்பார்க்கிறார்கள் இளம் வயது பெற்றோர்கள். சூழல் காரணமாகப் பேரக் குழந்தைகளைப் பேணிக் காக்கும் பொறுப்பில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிக்கிறார்கள் பெரியவர்கள். இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மனஸ்தாபங்கள் ஒருகட்டத்தில் பெரிதாக வெடிக்கின்றன. பிரச்சினை என்ன? தீர்வுகள் என்ன? பார்ப்போம்.

கூட்டுக்குடும்பங்கள் பரவலாக இருந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது இன்றைக்கு இருப்பதுபோல், சிக்கல் நிறைந்ததாக இருக்கவில்லை. கணவன், மனைவி என்று இருவருமே வேலைக்குச் சென்றுவிட்டாலும், குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொந்தக்காரர்கள் இருந்தார்கள். குறிப்பாக, குழந்தையின் தாத்தா - பாட்டி இருவரும் அதீத கவனம் செலுத்துவார்கள். பேறுகாலத்தின்போது பிறந்த வீட்டுக்குச் செல்லும் பெண், அங்கு தன் தாயின் வழிகாட்டுதலையும் அரவணைப்பையும் பெறுவாள். பிரசவத்துக்குப் பின்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது தனது தாய்வீட்டில் தங்கியிருந்து குழந்தையைப் பேண அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும். புகுந்தவீட்டுக்குத் திரும்பிய பின்னர், கணவரின் அப்பா, அம்மா இருவரும் குழந்தை வளர்ப்பில் துணை நிற்பார்கள்.

புதிய தலைமுறையின் பிரச்சினைகள்

இன்றைக்குக் குடும்ப அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிள்ளைகள் படித்து பெருநகரங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று வேலைநிமித்தம் இடம்பெயர்ந்துவிட்டனர். பெரும்பாலான பெற்றோர்கள் சொந்த ஊரைவிட்டு நகர முடியாத சூழலில் இருக்கிறார்கள். இதனால், பிள்ளைகள் தங்களுக்குக் குழந்தை பிறக்கும்போது பெற்றோரின் துணையை, வழிகாட்டுதலைப் பெறும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

குழந்தைகள் தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் அன்பில் பாதுகாப்பில் சந்தோஷமாக வளர்வார்கள் என்பது உலகமறிந்த உண்மை. ஒருகாலத்தில் பிள்ளைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் உழைப்பு உழைப்பு என்று ஓடிக்கொண்டிருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளிடம்கூட செலுத்த முடியாத அன்பைப் பேரன் பேத்திகளிடம் காட்டுகிறார்கள். ஆனால், தாத்தா - பாட்டிகளின் அன்பைப் பெறும் பாக்கியம் எல்லா குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை!

`குழந்தை வளர்ப்பில் சிரமத்தை எதிர்கொள்வானே நம் பிள்ளை… நம்மை விட்டால் அவனுக்கு உதவ யார் இருக்கிறார்கள்?’ எனும் அக்கறையுடன் பிள்ளைகள் வசிக்கும் வீட்டுக்குச் சென்று தங்கிவிடும் பெற்றோர்கள் உண்டு. உள்ளூராக இருக்கட்டும், வெளிநாடாக இருக்கட்டும் தங்கள் உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் சென்று பேரப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பல மூத்தோரைப் பார்க்கிறோம்.

சூழல் காரணமாக, “வீட்டை அப்படியே போட்டுவிட்டு வர முடியாது. அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லும் பெரியவர்களும் உண்டு.

அப்படித் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க, பெரியவர்களின் துணை கிட்டாத இளம் பெற்றோர்கள் படும் சிரமம் சொல்லி மாளாது. கணவன் – மனைவி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில், வீட்டிலேயே ஒரு தாதியை வைத்துப் பிள்ளையை பார்க்க ஏற்பாடுசெய்வதா அல்லது பராமரிப்பு இல்லத்தில் விடுவதா என்ற குழப்பம் அவர்களுக்கு இருக்கும். பராமரிப்பதற்காகக் குழந்தைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பெற்றோர், நிம்மதியாக இருக்கவும் முடிவதில்லை. அக்கறையுடன் செயல்படும் தாதிகள், பராமரிப்பு இல்லங்கள் நிறைய இருந்தாலும் அவ்வப்போது குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

இப்படியான சூழலில், குழந்தை வளர்ப்பில் துணை நிற்காத மூத்தோர் மீது பலரும் அதிருப்தி கொள்கிறார்கள். இது பலவிதமான சங்கடங்களுக்கு வித்திடுகிறது.

பரஸ்பரப் புரிதல் அவசியம்

பேரக் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதற்காக, பிள்ளைகள் வசிக்கும் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரியவர்கள், அங்கிருக்கும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வது உண்டு. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்த பல பெரியவர்கள், மொழி தெரியாத பிரதேசத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். ஊரிலிருந்து அவர்களை வரவழைத்த பிள்ளைகள், அதுபோன்ற தருணங்களில் அவர்களின் சிரமங்களைக் களைய முன்வர வேண்டும்.
இன்றைய தாத்தா - பாட்டிகளில் பலருக்கு டிவி சீரியல்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பல தாத்தாக்கள் வீடு பராமரிப்பு, செடிகள் வளர்த்தல், இயற்கை விவசாயம் என்று பல்வேறு விஷயங்களை யூ-டியூபில் பார்த்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில், ‘குழந்தையைப் பராமரிக்க வந்துவிட்டு, இப்படிப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நேரம் கடத்துகிறார்களே’ என்று மூத்தோர் மீது பிள்ளைகள் அதிருப்திகொள்வதும் பரவலாக நடக்கிறது.

ஆனால், பெரியவர்களுக்கும் பொழுதுபோக்குக்கும், மன ஆறுதலுக்கும் வடிகால்கள் தேவைப்படுகின்றன. இதைப் பிள்ளைகள் புரிந்துகொண்டால் இதுபோன்ற மனஸ்தாபங்கள் வராது. அதேபோல், மூத்தோரும் இவ்விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்தால் மனஸ்தாபங்களுக்கு இடமே இருக்காது. இவ்விஷயத்தில் இரு தரப்பிலும் புரிதல்கள் அவசியம்.

பிள்ளைகளின் பொறுப்பு

பெரியவர்கள் பேரப் பிள்ளைகளை வளர்க்கும்போது அவர்களுக்கு நிறைய சலுகைகள் தருவார்கள். இதனை மருமகளோ மருமகனோ சில சமயம் ஏற்றுக்கொள்வதில்லை. ‘இப்படிச் செல்லம் கொடுத்து பிள்ளைகளைக் கெடுத்து விடாதீர்கள்’ என்று குற்றம்சாட்டி சண்டை வருவதும் உண்டு. ஆனால், பாசம் காட்டுவதால் குழந்தைகள் கெட்டுவிடுவதில்லை என்பதைப் பெரியவர்கள்தான் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

இதுபோன்ற சமயங்களில், ‘உன் பிள்ளையை நீயே பார்த்துக்கொள்’ என விட்டு விலகிச்செல்லும் பெரியவர்களும் உண்டு. நமது பிள்ளையை வளர்க்க வேண்டுமானால் நாம்தான் அனுசரித்துப்போக வேண்டும். பொறுமையாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

தாத்தா - பாட்டிகள் பேரப் பிள்ளைகளின் பொக்கிஷங்கள். பிள்ளைகள் கையில் செல்போனைத் தந்து கவனத்தைச் சிதறச் செய்வதைவிட, தாத்தா - பாட்டிகளின் அரவணைப்பில் வளரச்செய்வதுதான் சாலச் சிறந்தது. தாத்தா - பாட்டிகள், ஆயிரம் கதைகள் சொல்லி பேரக் குழந்தைகளின் கனவுகளைத் தூண்டலாம். தங்களைப் போல நல்ல மனிதர்களாக உருவாக்கலாம்.

மனம் விட்டுப் பேசுங்கள்

கிராமங்களில் இன்றும் பல இடங்களில் உறவினர்கள் சூழத்தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன. அத்தை, சித்தி, பெரியம்மா என உறவுகளுடன் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் இங்கு தாத்தா - பாட்டிகள் அருகிலேயே அல்லது ஒரே வீட்டிலேயே இருப்பதால் பெருமளவு கஷ்டம் ஏற்படுவதில்லை. கிராமங்களில் வயல் வேலைக்குச் செல்பவர்கள், 100 நாள் வேலைக்குச் செல்பவர்கள் தாங்கள் வேலைபார்க்கும் இடங்களுக்கே தங்கள் குழந்தைகளை எடுத்துச்செல்வதுண்டு. அதில் அவர்கள் சிரமங்களையும் அனுபவிக்கிறார்கள் என்றாலும், தங்கள் கண்காணிப்பின்கீழ் குழந்தைகளை வைத்துக்கொள்ள முடிகிறது.
மொத்தத்தில், எல்லா மட்டங்களிலும் இப்படிப்பட்ட சூழல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில், பிள்ளைகளின் சிரமங்களைப் புரிந்துகொள்ள பெற்றோர் முன்வர வேண்டும். பெற்றோரின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்ய பிள்ளைகள் முன்வர வேண்டும்.

இரு தரப்பிலும் மனம் விட்டுப் பேசினால், புதிய தலைமுறையின் பால்ய காலத்தை வசந்த காலமாக வடிவமைத்துவிட முடியும். பேசுங்கள்… மனம் விட்டுப் பேசுங்கள்!

(காற்று வீசும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in