தொடாமல் தொடரும் - 2

தொடாமல் தொடரும் - 2

சென்ற அத்தியாயத்தில்…

குன்னூர். லேசான மழை. ஸ்வெட்டர் அணிந்த மனிதர்கள். மழைக்காக ஒதுங்கிய அஞ்சலி. அவளுடன் டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் சத்யாவிடம் இரண்டாம் திருமணம் பற்றிப் பேசச் சொல்லும் சத்யாவின் அம்மா. அலுவலகம் வரும் அஞ்சலிக்காகக் காத்திருக்கும் பெண்மணி அஞ்சலியின் மகன் சிறுவன் பரணி, தன் மகனை அடித்துக் காயப்படுத்தியதாகக் கோபமாகத் திட்ட… பரணி மீது ஆத்திரத்துடன் அஞ்சலி.

இனி...

அந்த வீடு தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் இருந்த ஒரே மாதிரியான இரட்டை வீடுகளில் ஒன்று. இரண்டு வீடுகளுக்கும் நடுவில் ஒரே சுவர். ஒரு வீட்டின் முன்பு கண்ணாடி பிடித்துப் பார்ப்பதுபோல வீடு/டுவீ என்கிற ஸ்டைலில் இருந்தன. தனித்தனியாக இரண்டு புறமும் புறப்பட்ட மாடிப்படிகளும் மேலே சென்று ஒரே நீளமான மொட்டை மாடியில் இணைந்தன.

மொட்டை மாடியின் நான்கு புறக் கைப்பிடிச் சுவர்களின் மீதும் பரேடில் நிற்கும் ராணுவ வீரர்களைப் போல வரிசையாகத் தொட்டிச் செடிகள். அவற்றில் வயலெட்டில் எத்தனை ஷேடுகள் உண்டோ அத்தனையும் பூக்கும் பெட்டுனியா, தேன்கூடு போன்ற தோற்றத்தில் செக்கச் சிவப்பில் டாஹில்யா மற்றும் ஆஸ்ட்டெர், பெகோனியா என்று வகை வகையாகப் பூத்துக் குலுங்கும் பூக்கள்.

வீடுகளைச் சுற்றிலும் பசேலென்று கிராப் வெட்டப்பட்ட புல்வெளி. மண்பாதை எல்லைகளில் இடுப்புயரத்திற்குச் செடிகள். அவற்றில் மாடு மாதிரி, தும்பிக்கை தூக்கிய யானை மாதிரி, மிக்கி மவுஸ் மாதிரி வடிவமைத்திருப்பதும், பல வகைகளில் பூச்செடிகளை வளர்ப்பதும் ஷார்ட்ஸ், டி-ஷர்ட், பீக் வைத்த தொப்பியுடன், தன் பைக்கின் மீது ஹோஸ் பைப் மூலம் பாயும் தண்ணீரை விரலால் தடுத்துப் பீய்ச்சும் விக்டர் ரொஸாரியோ.

அரசாங்கத்தின் காபி போர்டில் தரக் கட்டுப்பாடு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் முன்பு வாங்கிய இந்த இடத்தில் ரசனையாக அவரே பிளான் வரைந்து இந்த வீடுகளைக் கட்டினார்.

அஸ்திவாரம், நிலை, கான்க்ரீட், பூச்சு, பிளம்பிங், எலெக்ட்ரிகல், பெயின்ட்டிங் என்று ஒவ்வொரு வேலையிலும் இன்ஜினீயர்களுக்கே தோன்றாத விஷயங்களை எடுத்துச்சொல்லி கட்டினார். அத்தனை ஸ்டேஜ்களிலும் புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் வைத்திருக்கிறார்.
ஓய்வுபெற்றோமா, வீடு கட்டி முடித்தோமா, ஒரு ஈஸி சேர் வாங்கிப் போட்டு நியூஸ் பேப்பர், டிவி தொடர், ஃபேஸ்புக் என்று உட்கார்ந்தோமா என்றில்லாமல் தோட்ட வேலைகளில் இருப்பார். காய்கறித் தோட்டம் போட்டு தனக்கு மிஞ்சியதைச் சுற்றிலும் உள்ள பல குடும்பங்களுக்கும் இலவசமாகவே கொடுப்பார்.

விக்டர் ரொஸாரியோ பைக்கைக் கழுவுவதையே பார்த்தபடி முழங்கால்களைக் கட்டி, இரண்டு கைகளையும் கன்னங்களில் தாங்கியபடி, புல்வெளியில் இருக்கும் கிரானைட் போட்ட பெஞ்சில் அமர்ந்திருந்தான் பரணி.

அவனுடைய பள்ளி வெள்ளை யூனிஃபார்மும், கறுப்பு ஷூக்களும் டிடர்ஜென்ட் விளம்பரத்தில் சலவைப் பவுடர் போட்டுத் துவைக்கும் முன்பாக இருக்கும் துணிகள் போல சேறும் சகதியுமாக இருந்தன.

விக்டருக்கும் பரணிக்கும் இரண்டு பீங்கான் கோப்பைகளில் ஆவிபறக்கும் டீயுடன் வீட்டுக்குள்ளிருந்து வந்த நான்சி, பரணியின் தலையைக் கலைத்து, “ஏண்டா ட்ரெஸ்லாம் இப்படி இருக்கு?” என்றார்.

அவர்கள் பக்கம் திரும்பாமல், “சார் பதில் சொல்லாம விறைப்பா இருக்காரா?” என்றார் விக்டர்.
“ஆமாம். என்னடா பிரச்சினை? விழுந்துட்டியா?”

பதில் சொல்லாமல் இரண்டு கைகளாலும் டீ கோப்பையைப் பிடித்து ஊதி ஊதிக் குடித்தான் பரணி.
“ஸ்கூல்ல சார் என்னமோ செமத்தியா குறும்பு பண்ணிட்டு வந்திருக்காரு. கேட்டுப் பார்த்துட்டேன். பேச மாட்டேங்கறாரு” என்ற விக்டர் பிஸ்கெட் எடுத்துக் கடித்தார்.

அங்கிருந்து பார்த்தால் கீழே தெரியும் வளைவுப் பாதையில், இந்த வீட்டை நோக்கி ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த அஞ்சலியைப் பார்த்த நான்சி, “அவங்கம்மா வந்தாச்சி. அவ கேட்டா… சொல்வான்'' என்றார்.

அஞ்சலி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ரொஸாரியோவின் வீட்டுக்கு அடுத்த தன் வீட்டின் வாசலை நோக்கி நடந்தபடி கடுகடுவென்ற முகத்துடன், “பரணி! வாடா!” என்ற அதட்ட, அவள் குரலில் இருந்த உஷ்ணத்தை உணர்ந்த பரணி ‘வர மாட்டேன்' என்பதற்குத் தலையாட்டினான்.
“கூப்புடறேன்ல” என்றவள் வேகமாக வந்து, வந்த வேகத்தில் அவனைப் பொளேரென்று அறைய…கையிலிருந்த டீ கோப்பை சிதற கீழே சாய்ந்தான்.

பதறிப்போய் ரொஸாரியோவும் நான்சியும் ஓடி வருவதற்குள் அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கி முதுகில் இரண்டு வைக்க…பரணி வலி தாங்காமல் அழுதபடி நான்சியிடம் ஒடி அவர் பின்னால் ஒளிந்து கொள்ள… அப்போதும் ஆவேசம் தணியாமல் அஞ்சலி அவனை அடிக்க வர… நான்சி அவளை வலுவாகத் தடுத்து நிறுத்தினார்.

“ஏய்! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிடுச்சி? குழந்தையைப் போட்டு இப்படி அடிக்கிறே?”

“யார் குழந்தை? இவனா? ஆன்ட்டி... விடுங்க அவனை! இவனால தினம் எனக்கு ரோதனைதான்.”

“அஞ்சலி!” என்று அதட்டிய ரொஸாரியோ, “என்ன ஆச்சு இப்போ? பரணி கொஞ்சம் சுட்டி. ஆனா நல்ல பையன்.”
“அங்கிள்! உங்களுக்குத் தெரியாது. எல்லார்ட்டயும் பாட்டு வாங்க வேண்டிருக்கு. கூசிக்குறுக வேண்டிருக்கு. ஏண்டா இவனைப் பெத்தோம்னு இருக்கு…”
“அட… அப்படி என்ன செஞ்சிட்டான் இவன்?”

“கூடப் படிக்கிற ஒரு பையனைப் போட்டு அந்த அடி அடிச்சிருக்கான். அவனுக்கு மண்டை பொளந்து ரத்தம் கொட்டியிருக்கு. பையனோட அம்மா ஆபீஸுக்கு வந்து நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேக்குது. எல்லாரும் வேடிக்கை பார்க்கறாங்க. அப்படியே செத்துடலாமான்னு இருந்துச்சு.''

“இரு… இரு… அந்தம்மா சொன்னதை வெச்சிக்கிட்டு… முதல்ல கேப்போம். ஏண்டா… நீ அவன் மண்டையை உடைச்சியா?”
நான்சிக்குப் பின்னாலிருந்து மெதுவாக எட்டிப்பார்த்த பரணி அரைக் கண்களால் பார்த்து, “ஆமாம். அடிச்சேன். அவன் விழுந்த இடத்துல கருங்கல்லு இருந்திச்சி. அதுல மண்டை பட்டு காயமாய்டுச்சு. அது எனக்கெப்படி தெரியும்? அவனும்தான் என்னை அடிச்சான். அதைக் கேக்க மாட்டீங்களா?”

“என்ன பேச்சுப் பேசறான் பார்த்தீங்களா? பேசாதடா பொறுக்கி நாயே! இருடா… இன்னிக்கு உனக்குக் கம்பியைக் காய்ச்சி சூடு வெச்சாதான் சரியா வரும். வீட்டுக்குத்தான வரணும்? வா…வா…”

கறுவியபடியே வேகமாகச் சென்ற அஞ்சலி, தன் வீட்டைத் திறந்து டமாரென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
பரணியைத் தன் அருகில் அழைத்த ரொஸாரியோ, “பரணி… அம்மா பார்த்தியா எவ்வளவு கஷ்டப்படறாங்க உன்னால… எதுக்குடா அடிச்சே அவனை?” என்றார்.

பரணி பேசாமல் அமைதியாகக் கைகளைக் கட்டியபடி நின்றான்.

“சரி சரி… நீ எதுவும் சொல்ல வேணாம். நான்சி…உள்ள கூட்டிட்டுப் போ. குளிப்பாட்டி விடு. சாப்புடக் குடு. இவனை இப்ப அனுப்பிடாதே. அஞ்சலியோட கோபம் அரை மணி நேரம்கூட தாங்காது. அவளா வந்து கூட்டிக்கிட்டுப் போவா. அதுவரைக்கும் நம்ம வீட்லயே இருக்கட்டும்.”

“எதுக்கு அடிச்சேன்னு சொல்லட்டுமா தாத்தா?”

“சொல்லு…”

“உன் அப்பா அமெரிக்கால இருக்காருன்னு உன் அம்மா பொய் சொல்லிட்டிருக்கா, உங்கப்பா செத்துட்டாருன்னு சொன்னா கோபம் வராதா? அதான் அடிச்சேன்” என்றான் பரணி.
(தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in