முதுமை எனும் பூங்காற்று 3: சேமிப்பு எனும் பெரும் செல்வம்

முதுமை எனும் பூங்காற்று 3: சேமிப்பு எனும் பெரும் செல்வம்

சென்ற தலைமுறையினர் நமக்குக் கற்றுத்தரும் முக்கியப் பாடம் - சேமிப்பு. வரவு ஒரு ரூபாயாக இருந்தால், அதில் பத்து பைசாவையாவது சேமிக்க வேண்டும் என்றும் வருவாயில் முதல் செலவு சேமிப்பு என்று சொல்லித் தருபவர்கள் பெரியவர்கள். அவர்களுடைய சேமிப்புத் திறனைப் பார்த்து இன்றைக்கு ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அந்தச் சேமிப்பை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அதற்குப் பின்னால் இருக்கும் அவர்களுடைய கடும் உழைப்பு, தியாகம், சிக்கனம் எதையும் நம்மில் பலர் உணரத் தவறிவிடுகிறோம்.

சேமிப்பின் தாத்பரியம்

இன்றைய தலைமுறையினர் பலர் அனுபவித்துவரும் வசதியான வாழ்க்கைக்கு, அவர்களின் பெற்றோரின் சேமிப்புப் பழக்கமே அஸ்திவாரம் எனலாம். ’வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி…’ என்று சொல்வார்களே, அப்படி ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, அன்றாடம் சேமித்துத் தங்கள் வாரிசுகளுக்குச் சொத்து சேர்த்தவர்கள் பலர். தேவையான நேரங்களில் தங்கள் வருங்கால வைப்பு நிதி உதவி பணத்தை எடுத்து வீடு, திருமணம் என அனைத்தையும் செய்தனர். ஆனால், தங்களுக்கு என்று ஒருபோதும் செலவுசெய்ய மாட்டார்கள். ஆனால், நாம்?

தேவையோ இல்லையோ வெளியில் சென்றால், ஹோட்டலில் உணவருந்த வேண்டும் என்றே நாம் எண்ணுகிறோம். ஆனால், நம் பெற்றோர் அப்படியெல்லாம் அநாவசியச் செலவுசெய்ய மாட்டார்கள்.  “பணத்தை வீணடிக்கக் கூடாது” என்பார்கள். அதனால்தான் அவர்கள் பணி ஓய்வு பெறும்போது ஓரளவு பணம் சேர்க்க முடிந்தது.

ஏமாற்றும் மனிதர்கள்

வாழ்நாள் முழுவதும் பிள்ளைகள், உறவினர்களுக்காகச் செலவுசெய்யத் தயங்காத பெரியவர்கள், தங்கள் ஓய்வுக்குப் பிறகும் சுரண்டலுக்குள்ளாவதுதான் சோகம். ஓய்வின்போது அவர்களுக்குக் கிடைக்கும் தொகைக்காக, உறவுக் கூட்டங்களும், சில சமயம் பெற்ற பிள்ளைகளுமே எதிர்பார்த்துக் காத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

வெள்ளந்தி மனிதர்களால் நிறைந்த முந்தைய தலைமுறையினருக்குப் பிறருக்குக் கொடுத்துத்தான் பழக்கம்.

ஓய்வு காலத்தில் கிடைக்கும் பணத்திலிருந்து ஒரு தொகையைக் கடனாகக் கேட்பவர்களுக்கு, ‘நிச்சயம் திரும்பத் தருவார்கள்’ என நம்பிக் கொடுத்துவிட்டு ஏமாந்தவர்கள் ஏராளம். பெரியவர்களே முன்வந்து தன் பிள்ளைகளுக்கு வாரிக் கொடுத்துவிட்டு பின்னர் கையேந்தி அவர்களிடம் இருக்கும் நிலை இன்னும் பரிதாபம். எனவே, பெரியவர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எப்படிப் பயன்படுத்துவது என சரியான திட்டமிடுதலைச் செய்ய வேண்டியது அவசியம்.

சேமித்துவைத்திருக்கும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றைக் கவனமாகக் கையாளவில்லை எனில், உறவுகள் மட்டுமல்ல, பெற்ற பிள்ளைகளே நம்மைக் கைகழுவிவிடுவார்கள். அதனால், வைப்பு நிதியைச் செலவுசெய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அரசுத் துறையிலும் பொதுத் துறையிலும் வேலை செய்பவர்கள் ஓய்வூதியம், வைப்பு நிதி, பணிக்கொடை இத்யாதிகளைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே, அவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை.

திட்டமிடுதல் அவசியம்

சில மாதங்களுக்கு முன்னர்,  “ஓய்வுபெறும்போது கிடைத்த பணத்தை என்ன செய்யலாம்?” என்று யோசனை கேட்டு என்னிடம் ஒருவர் வந்தார். நான் ஒன்றிரண்டு வழிமுறைகளைச் சொன்னேன். மகிழ்வோடு சென்றவர், சில நாட்களுக்கு முன்னர் மிகுந்த சோகத்தோடு வந்தார். நான் சொன்ன வழிமுறையை அவரது மனைவியும் பிள்ளைகளும் ஏற்றுக்கொள்ள வில்லை என்பது அவரது பேச்சிலிருந்து தெரியவந்தது.  “பிள்ளைகள்தானே நம்மைக் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்ளப்போகிறார்கள். அவர்களுக்கு எப்போது கொடுத்தாலும் நாம்தானே கொடுக்க வேண்டும்” என்று மனைவி வற்புறுத்தியிருக்கிறார். பிள்ளைகளோ,  “எங்களுடைய தேவைக்கு உடனடியாகப் பணம் தேவை. இப்போது நீங்கள் தரவில்லை என்றால் என்ன பயன்?” என்று சென்டிமென்ட் அஸ்திரத்தை வீசியிருக்கிறார்கள்.

வேறுவழியின்றி பெரும் தொகையைக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அந்த மனிதர். இப்போது, சிக்கனமாகச் செலவுசெய்துவருவதாக அவர் கூறியதைக் கேட்க வருத்தமாக இருந்தது.
இப்படிப்பட்ட சூழலைத் தவிர்க்க ஒரு நல்ல யோசனை உண்டு. தனித்தனியாக வைப்புநிதி போட்டு, அதன் மூலம் வட்டி கிடைக்குமாறு செய்யலாம். அதன் மூலம், நமக்குப் பின்னர் அசல் தொகை பிள்ளைகளுக்குச் சேருமாறு செய்யலாம். யாருக்கும் பிரச்சினை வராது!

பெற்றோரும் பிள்ளைகளும்

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அப்பா சம்பாதித்த காசை அளவில்லாமல் செலவுசெய்திருக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தை நம் அப்பா அப்படி தாராளமாகச் செலவுசெய்ய அனுமதிக்கிறோமா? உண்மையில், பிள்ளைகளுக்குப் பெற்றோரின் பணத்தைச் செலவுசெய்வதில் இருக்கும் சுதந்திரம், பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் பணத்தைச் செலவுசெய்வதில் இருப்பதில்லை.

சம்பாதித்த காலத்தில் பிள்ளைகளின் படிப்பிற்கும் திருமணத்திற்கும் மொத்தப் பணத்தையும் செலவுசெய்துவிட்டு ஓய்வு காலத்தில் பிள்ளைகளின் கையை எதிர்பார்ப்பது எத்தனை கொடூரம்? தங்களுடைய பெற்றோர்கள் நமக்காகவே வாழ்நாளையும், வாழ்நாளில் கிடைத்த பணத்தையும் செலவுசெய்தார்கள் என்பதைப் பிள்ளைகள் உணர வேண்டாமா?
ஓரளவு பணம் சேமித்தவர்களே, அந்திமக் காலத்தில் அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், சேமிக்க முடியாத நிலையில் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசம். அப்படிப்பட்டவர்களின் பிள்ளைகள் என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்: தங்களின் எதிர்காலத்துக்காகக்கூட சேமிக்காமல் பிள்ளைகளின் நலனே பெரிது என்று வாழ்ந்த உங்கள் பெற்றோரை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். அதைவிட பாவம் எதுவும் இல்லை!

கிராமத்துப் பெரியவர்களின் நிலை

வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிர் காலத்தில் பணப் பாதுகாப்புகள் உண்டு. ஆனால், கூலி வேலை செய்பவர்களும், விவசாயம் செய்பவர்களும் வயோதிக காலத்தில் என்ன செய்ய முடியும்? அதனால்தான், பிறரை அதிகம் சார்ந்திருக்காமல் முதுமைக் காலத்திலும் தொடர்ந்து உழைத்து வருபவர்களைக் கிராமப்புறங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. குறிப்பாக, கிராமங்களில் அனைத்துச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் அதிகம் பணம் தேவைப்படும். உறவுகளுக்கு மத்தியில் மரியாதை, செய்த மரியாதைக்கு பதில் மரியாதை எனக் காலத்திற்கும் கடன்பட்டு நிற்பவர்கள் பலர்.

கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்துபவர்கள் அன்றாடச் செலவுக்கு அல்லாடும்போது எப்படிப் பணம் சேர்த்து வயோதிகப் பருவத்தைக் கடந்துசெல்வது? நிலம் வைத்திருப்பவர்கள் அது கட்டாந்தரையாக இருந்தாலும் கடைசிவரை கையைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் விவசாயம் செய்யலாம். ஆனால், பட்டாவை இறுதிவரை தங்களிடமே வைத்திருப்பதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு.

கூலிக்கு வேலை செய்பவர்களானாலும் வேலை செய்யும் வயதைக் கடந்தாலும் வாழ்க்கை இருக்கும் வரை வாழ்ந்துதானே ஆக வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, இளம் தலைமுறையினர் உதவ பல வழிமுறைகள் உண்டு.

அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி விவசாயிகளுக்கு உரிய பணமோ, அரசின் மாதாந்திர ஓய்வூதியமோ, விதவைகள் ஓய்வூதியமோ கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் பொருட்கள், உடல்நலக் குறைவுக்கு காப்பீட்டுத் திட்டம் என ஓரளவு நல்லபடியாக முதுமையைக் கடக்க உதவி செய்யலாம். நம்மால் முடியவில்லை என்றால் யாரால் முடியும்?

(காற்று வீசும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in