முதுமை எனும் பூஙகாற்று 2: பிள்ளை வரம் எனும் பேறு

முதுமை எனும் பூஙகாற்று 2: பிள்ளை வரம் எனும் பேறு

மனிதர்கள் தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தரும் விஷயமாகப் பார்ப்பது பிள்ளைச் செல்வத்தைத்தான். வாழ்வை முழுமையடையச் செய்வதாகவே அதைப் பலரும் கருதுகிறார்கள். வழிவழியாகத் தலைமுறை தழைக்கும் எனும் நம்பிக்கையை எல்லா மனிதர்களுக்கும் கொடுப்பது அதுதான்.

பிள்ளைச் செல்வம்தான் மிகச் சிறந்த செல்வம் என்று, சென்ற தலைமுறைத் தாத்தா, பாட்டிகள் பேசிக் கேட்டிருப்போம். முன்பெல்லாம் ஒரு வீட்டில் 8 முதல் பத்து பிள்ளைகள் இருப்பார்கள். முதுமையில் ஒரு பிள்ளை கவனிக்கவில்லை என்றால் இன்னொரு பிள்ளை கவனிப்பான் எனப் பெற்றோர்கள் நம்பினர். ‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ எனப் பிள்ளை பெறும் நிகழ்வைக் கடவுளின் வரமாகவே கருதிய தலைமுறை அது.

திருமண உறவில் தளர்வுகள்

முந்தைய தலைமுறையினர் பிள்ளைப் பேறுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்க, திருமண உறவில் சில தளர்வுகளையும் கடைப்பிடித்தார்கள். பிள்ளைப் பேறு இல்லை என்றால், மனைவியின் தங்கையை மணந்துகொள்வது அல்லது தவிர்க்க முடியாத தருணங்களில் வெளியிலிருந்து திருமணம் செய்வது எனும் வழக்கம் பலரிடம் இருந்தது. எல்லோரும் அப்படித்தான் என்று பொதுமைப்படுத்த முடியாது என்றாலும், அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கையில் இதுவும் ஒரு அம்சமாக இருந்ததை மறுக்க முடியாது.

முன்பெல்லாம் பிள்ளைப்பேறு இல்லாத ஆண்கள், தங்கள் அந்திமக் காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள நம்பகமானவர்கள் வேண்டும் என்ற எண்ணத்திலேயே சொந்தத்துக்குள் இப்படியான திருமணங்களைச் செய்துகொள்வார்கள். முதல் மனைவியின் அந்திமக்காலத்தில் அவருக்குக் கைகொடுக்க, இந்தப் புதிய பந்தம் உதவும் என்று கருதுவார்கள். முறையான சட்டங்கள் இல்லாத காலத்தில் இந்த வழக்கம் இருந்தது என்றாலும், திருமணச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இது கணிசமாகக் குறைந்துவிட்டது. குறிப்பாக, பெண் என்பவள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல எனும் விழிப்புணர்வு உருவான பிறகு இதுபோன்ற வழக்கங்கள் வழக்கொழிந்துபோயின.

பிள்ளை இல்லாதவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதும் காலங்காலமாக நடந்துவருகிறது. சில குறிப்பிட்ட சமூகங்களில் உறவின் முறையில் உள்ள பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பார்கள். அவர்கள் வெளியில் உள்ள குடும்பங்களிலிருந்து பிள்ளைகளைத் தத்தெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். குடும்ப கவுரவம், பழக்கவழக்கம், சொத்து ஆகிய அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கெல்லாம் காரணம்.

மகப்பேறின்மையின் வலி

மகப்பேறின்மை காரணமாக உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலர் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாதவை. பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை ஒருபுறம், ஏதேனும் பரிகாரம் செய்தாலாவது பிள்ளைச் செல்வம் கிட்டாதா எனும் வேண்டுதல் மறுபுறம் என்று மருகிக்கொண்டே இருப்பார்கள். 40 வயதைக் கடந்த பின்னரும் நமக்கு இனி பிள்ளை பிறக்க வாய்ப்பில்லை என உணரும்போது பலர் விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மேலை நாடுகளைப் போல் அல்லாமல் இங்கு குடும்பம், பந்தம், உறவு, பாசம் என்று ஒரு கட்டமைப்பில் நாம் வாழ்கிறோம். இளம் வயதில் தங்கள் வாழ்வைப் பிள்ளைகளுக்காகவே செலவிடும் பெற்றோர்கள்; வயோதிகக் காலத்தில் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் பிள்ளைகள் என்று நம் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தைச் செல்வம் இல்லை என்று முடிவாகிவிட்டால், வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என்று பலரும் அஞ்சத் தொடங்கிவிடுகிறார்கள். இறுதிக் காலத்தில் தங்களைக் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணமே அவர்களுக்குப் பதற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது.

சமூகத்தின் பார்வை

மூடப் பழக்கவழக்கங்கள் புரையோடிய சமுதாயத்தில் பிள்ளைப் பேறு இல்லை அல்லது அந்த வாய்ப்பு தள்ளிப்போகிறது எனும் நிலையில் இருப்பவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். இதனால், பொது வாழ்விலிருந்து தங்களைத் தாங்களே ஒதுக்கிக்கொள்கிறார்கள். மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா, வளைகாப்பு என அனைத்து வைபவங்களிலிருந்து விலகியே நிற்கிறார்கள்.

இதில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணுக்கு ‘மலடி’ பட்டம் தந்து அவர்களை ஒதுக்கிவிடுகிறது இந்தச் சமூகம். அதேசமயம், முற்போக்கான இன்றைய காலகட்டத்தில், இதை யதார்த்தமான விஷயமாக எடுத்துக்கொண்டு அவர்களை அரவணைத்துக்கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள். பிள்ளைப் பேறின்மை எனும் காரணத்துக்காகத் தங்களை அவமதிப்பவர்களை எதிர்கொள்ளும் சமூகப் பிரக்ஞையை இன்றைய பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
பாதுகாப்பற்ற மனநிலை

முதுமை என்பது ஞாபகங்களின் குப்பைக் கூடையும்கூட. இதுபோன்ற அவமானங்கள் பிள்ளைப் பேறு இல்லாதவர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறி ஒருவித இறுக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகின்றன. இதனால், சுற்றியிருப்பவர்கள் மீது அவர்களுக்கு ஒருவிதவெறுப்பு ஏற்படுகிறது. முதுமை நெருங்க நெருங்க, தங்களுடன் உள்ளன்போடு உண்மையாகப் பேசுபவர்
களையும் அவர்கள் நம்ப மறுப்பார்கள். தங்களிடம் இருக்கும் பணத்திற்காகவோ, வேறு ஆதாயத்திற்காகவோ நடிக்கிறார்கள் என்றே கருதுவார்கள்.

ஒரு வீட்டில் சகோதர, சகோதரிகளுக்கிடையே சொத்து பிரிக்கப்படும்போது, வாரிசு இல்லாதவர்களுக்குக்குறைவான முக்கியத்துவம் தரப்படுவதைப் பார்க்கிறோம். “அவர்களுக்குத்தான் பிள்ளை இல்லையே? சொத்து எதற்கு?” என்று பிறர் எளிதாகச் சொல்லி
விடுகிறார்கள். ஆனால், ‘முதுமையில் தங்களிடம் இருக்கும் பணத்திற்காகவாவது தங்களை யாரேனும் கவனித்துக் கொள்வார்களே’ என்று பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நினைப்பதில் உள்ள நியாயத்தைப் பலரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

வழிகள் நிறைய உண்டு

பிள்ளைப் பேறு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் யாரும் மனம் தளர வேண்டியதில்லை. எத்தனையோ குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களைத் தத்தெடுத்து வளர்க்கலாம். தத்தெடுப்பது தொடர்பான சட்டங்களில் இதற்கான வழிமுறைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. தத்தெடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நிபந்தனைகள் என்று பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்தக் காலத்தில், பெற்ற பிள்ளைகளே இறுதியில் கவனிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத சூழலில், தத்துப் பிள்ளைகளிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மாறாக, நம் வாழ்க்கை முழுமை அடைவதற்காக, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வதற்காக மனமுவந்து தத்தெடுப்புக்கு முன்வரலாம்.

தத்தெடுக்க விருப்பமில்லையா, வருத்தப்பட வேண்டாம். வளர்ப்புப் பிராணிகள், பிரதிபலன் பாராத நண்பர்கள், சமுதாய மேம்பாட்டுக் குழுக்கள் என நம்முடைய விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் உடல் தகுதிக்கும் ஏற்றாற்போல ஏதாவது ஒரு விஷயத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவர முடியும்.
அதுவும் இல்லையா? இருக்கவே இருக்கின்றன முதியோர் இல்லங்கள். அர்ப்பணிப்புடன் இயங்கும் பல முதியோர் இல்லங்கள் இங்கு உண்டு. அவற்றில் சேர்ந்துகொள்ளலாம். பல புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். நம்மைக் கவனிக்க யாருமே இல்லாத
பட்சத்தில் முதியோர் இல்லங்களில் நம்மை ஒப்புக்கொடுத்துவிடலாம். தங்கள் சொத்துகள் தொடர்பாகத் தெளிவாக உயில் எழுதி வைப்பதன் மூலம், பிற்காலத்தில் வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். நம்பகமான உறவினர்களிடமோ, அமைப்புகளிடமோ ஒரு தொகையைத் தந்து நமது இறுதிக் காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

மனமாற்றம் அவசியம்

சாலை விபத்துகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தனி மரமான ஒரு தாய், தன் சொத்துகளை ஒரு முதியோர் இல்லத்திற்கு எழுதிவைத்துவிட்டு, தனது இறுதிக்காலத்தை அங்கேயே கழிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆக, எந்த மாதிரியான பிரச்சினைக்கும் தீர்வுகள் உண்டு.

பிள்ளை உள்ளவர்கள்கூட இந்த உலகில் ஆதரவற்றவர்களாக வாழும் அவலத்தைப் பார்க்கிறோம். மறுபுறம், பிள்ளை இல்லாதவர்களும் மற்றவர்களின் ஆதரவோடு இறுதிக் காலத்தை இனிமையாகக் கழிப்பதையும் பார்க்கிறோம்.
எனவே, பிள்ளை இல்லை என்று வருந்த வேண்டாம். சுற்றத்தாரை அனுசரித்து, உறவுகள், நண்பர்கள் தரும் நம்பிக்கையோடு இறுதிக் காலத்தை இன்பமாகக் கழிக்கலாம்!

(காற்று வீசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in