மஹா பெரியவா 32: அருளே ஆனந்தம்

மஹா பெரியவா 32: அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

கிராமத்து மக்களிடம் காணப்பட்ட ஒற்றுமையால் அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு செய்த பணிகள், எந்த அளவுக்கு ஊர் முன்னேற்றத்துக்குப் பயன்பட்டது என்பது பற்றி மகா பெரியவா சொன்னதைப் பார்த்தோம்.

கிராமத்தில் வசிக்கின்றவர்களிடம் ஒற்றுமையும், அந்நியோன்னியமும் இருந்து விட்டால், அவர்களால் சாதிக்க முடியாத விஷயங்கள் இல்லை. தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ, அவை அனைத்தையும் அவர்கள் இணைந்தே தங்கள் ஒன்றுபட்ட உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

மக்களின் ஒற்றுமையால் அவர்கள் வசித்து வந்த கிராமங்கள் எந்த அளவுக்குப் பலனடைந்தன என்பது பற்றி மகா பெரியவா மேலும் சொல்வதைக் கேட்போம்:

‘‘குளம் வெட்டுகிற வேலைக்காக ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறவர்கள் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லை. இது ஒரு கிராமத்தை விட்டு அடுத்த கிராமத்துக்கும் போனது.

ஒரு தாலுகாவில் இருக்கிற நாலு கிராம ஜனங்கள் ஒன்று சேர்வார்கள். இவர்கள் அனைவரும் பேசி ஒரு தீர்மானத்துக்கு வருவார்கள்.
அதாவது, வருஷம் ஒரு கிராமத்தில் நாலு ஊர்வாசிகளும் சேர்ந்து குளம் வெட்ட வேண்டும்; அதோடு அங்கே இருந்து வருகிற குளத்தையும் தூர் வார வேண்டும்.

அடுத்த வருஷம் இவர்கள் அதே நாளில் இன்னொரு கிராமத்தில் குளம் வெட்ட வேண்டும்; அங்குள்ள குளத்தைத் தூர் வார வேண்டும். அதற்கடுத்த வருஷம் மூன்றாவது கிராமத்தில் இதே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கும் அடுத்த வருஷத்தில் நாலாவது கிராமத்தில் பண்ண வேண்டும் என்று ஒரு தீர்மானமும் வைத்து வேலை நடந்தது. நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமையால் நான்கு கிராமங்களுக்கும் நல்லது நடந்தது.

இப்படிப்பட்ட காரியங்களால் ஜனங்களுக்குள்ளே ஒற்றுமை உண்டானது. ஒரு கிராமத்தில் நடக்க வேண்டிய காரியத்துக்கு மற்ற கிராமத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தது. அப்படி ஏற்படுகிற அந்த ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தற்காலிகமாய் இருந்து பிசுபிசுத்து விடாமல், நாலு வருஷமாவது உயிரோடு நீடித்து வந்தது.

தஞ்சாவூர் ஜில்லாவில் பல ஊர்களில் நாலைந்து மாச காலத்துக்குத் தொடர்ந்து ஜலம் இருக்காது. அதனால், குளம் வெட்டுகிற பணிக்கு நிறைய அவசியமும் தேவையும் உண்டு.

ஜனங்களுக்கு என்று மட்டும் இல்லாமல் ஆடு மாடுகளுக்காகவும் ஊருக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் குளம் வெட்ட வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு ஆனது.

கால்நடைகள் மேய்கிற இடத்தில் அதற்குத் தேவையான தண்ணீர் தாராளமாகக் கிடைத்து விட்டால், வசதியாக இருக்கும். அதன்படி மேய்ச்சல் பூமியிலேயே குளம் வெட்டுகிற பணியும் நடந்து வந்தது. கொளுத்துகிற வெயிலில் தாகத்தினால் கஷ்டப்படுகிற வாயில்லா ஜீவன்களுக்கு யார் தண்ணீர் தருவது? மனிதர்களைப் போல் ஒரு வீட்டு வாசலில் நின்று, ‘எனக்குத் தண்ணீர் வேண்டும்’ என்று வாயைத் திறந்து கேட்க முடியுமா? அந்த ஜீவன்களுக்கு தண்ணீர் கைங்கர்யம் செய்வது உத்தமமான தர்மம். அதை நாம்தான் செய்ய வேண்டும்.

கும்பகோணம் பக்கத்தில் கோனேரிராஜபுரம்னு ஒரு ஊர். அங்கே ஒரு பிராமணக் குடும்பம். அவர்கள் எங்கே குளம் வெட்டினாலும் அதற்குத் தேவையான பணத்தில் பாதிப் பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

பணம் கொடுப்பதற்கு முன் ஒரே ஒரு கண்டிஷன் போடுவார்கள்... பொதுவாக, குளம் என்றால் நான்கு பக்கமும் படிகள் கட்டுவது வழக்கம். இந்தக் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள் தெரியுமா? குளத்துக்கு ஒரு பக்கம் படித்துறை கட்டாமல், நிலத்தையே ஜல மட்டம் வரை சரித்து விட வேண்டும் என்பார்கள். ஏனென்றால், மனிதர்களைப் போல் படிகளில் சவுகர்யமாக இறங்கி வந்து நின்று ஜலம் குடிக்க ஆடு, மாடுகள் போன்ற ஜீவன்களுக்குத் தெரியாது.

குளங்களில் எல்லா நாட்களிலும் தண்ணீர் இருக்க வேண்டும். வற்றவே கூடாது. ஒருவேளை நீர்மட்டம் குறையும்போதும், சேறும் சகதியும் அதிகமாகும்போதும் தூர் வாருவது என்று சொல்கிற வேலை இப்போது நடக்கிறது.

இந்தத் தூர் வாருகிற பணியே தேவை இல்லை என்று இதற்கும் சாஸ்திரத்தில் அப்போதே ஒரு வழி சொல்லி இருக்கிறார்கள். அதாவது, குளத்தில் குளிக்கப் போகிற ஒவ்வொருவனும் குளத்தில் இருந்து நாலு கைப்பிடி மண் அள்ளி வெளியே போட்டு விட்டுக் குளிக்க வேண்டும் என்று சூட்சுமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்கிறார் லோக தர்மத்தின் காவலரான மகா பெரியவா.  
யோசித்துப் பாருங்கள்... குளங்களை ஒவ்வொருவரும் இதுபோல் பாதுகாத்து வந்தால் எந்த ஒரு காலத்திலும் குளத்தைத் தூர் வாருகிற நிலைமை ஏற்படாது.

அவ்வப்போது ஒவ்வொருவரும் நாலு கைப்பிடி மண் எடுத்துப் போட்டால் குளத் தின் ஆழமும் அதிகமாகும்; நீரும் அதிகம் சுரக்கும். ஜலக் கஷ்டம் வரவே வராது.

இதைத்தான் இன்றைக்கு வேறு விதமாகச் சொல்கிறோம்.. ‘வீட்டில் சேர்கிற குப்பையை அவரவர்கள் சேகரித்து வெளியே ரோட்டில் கொட்டாமல், குப்பை வண்டி வருகிறபோது அதில் சேர்த்து விட்டால், ரோட்டில் குப்பையே இருக்காது. நன்றாக இருக்கும்’ என்று!
மகா பெரியவா என்றைக்கோ சொன்ன உபதேசங்கள் அனைத்தும், இன்றும் பலன் தரக் கூடியவை.

இவை எல்லாம் காலத்தைக் கருத்தில் கொண்டு சொன்னவை மட்டுமல்ல. மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டவை.

சாஸ்திரங்களில் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிற இந்தக் குளம் வெட்டுகிற,  தூர் வாருகிற தர்மத்தை மறந்ததால்
தான் இன்றைக்கு ஜலக் கஷ்டம் என்று ஓயாமல் அவஸ்தைப்படுகிறோம். குளம், ஏரிகளைத் தூர் வாராவிட்டால் தண்ணீருக்குக் கஷ்டம் என்பதை மகான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் திருவாய் மலர்ந்திருக்கிறார். கிராமங்களிலும் நகரங்களிலும் தண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக் கொண்டு அலைகிறதைப் பார்க்கின்றபோது, இனியாவது மகான் சொன்ன வார்த்தைகள் நம் நினைவுக்கு வர வேண்டும்.

குளம் மட்டும் ஊர்க்காரர்கள் அந்த நாளில் வெட்டவில்லை. சாலையும் போட்டார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? மகா பெரியவாளே சொல்கிறார், கேளுங்கள்:

‘‘பட்டுக்கோட்டையில் ஒரு அதிசயம் நடந்தது. பட்டுக்கோட்டை தாலுகா தவிர ஜில்லா முழுக்க இப்படி நிறைய குளம் வெட்டினோம். ஆனால், பட்டுக்கோட்டையில் குளம் வெட்டவில்லை.

என்ன காரணம் தெரியுமா?

பட்டுக்கோட்டையில் ஒவ்வொரு வீடுமே ஒரு காடு போல் மிகுந்த பரப்பளவுடன் இருக்கும். இடுப்பளவு வெட்டினாலே ஜலமும் வந்து விடும். ஒரு பண்ணையார் வீடு என்றால், பண்ணையில் வேலை செய்பவர்கள் வீடு உட்பட எல்லாமே அந்த வேலிக்குள் இருக்கும். இதனால், அங்கே ஜலக் கஷ்டம் என்பது பண்ணையாருக்கும் கிடையாது. பண்ணையில் வேலை செய்பவனுக்கும் கிடையாது. தவிர, ஊர் முழுக்கவே ஜலம் தாராளம்.

இதனால் பட்டுக்கோட்டையில் மட்டும் குளம் வெட்டுகிற திருப்பணி செய்யாமல், அங்கே வித்தியாசமாக ரோடு போடுகிற வேலை நடந்தது. எப்படிக் குளம் வெட்டுவதற்கு கிராமத்தவர்கள் முழுக்கத் திரள்வார்களோ, அதுபோல் அந்த ஊரில் எல்லோரும் சேர்ந்து ரோடு போட்டார்கள்.

குளம் வெட்டுகிற பணி என்பது ரொம்பவும் உத்தமமானது. அந்தக் காலத்தில் இத்தகைய பணிகள் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ‘அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?’ என்று கேட்கிற வழக்கம் இருந்து வந்திருக்கிறது (இப்போதும்தான் இருந்து வருகிறது). அதாவது, அவன் வெட்டிக் கொண்டிருந்தான் என்றால் மட்டும், நாம் எத்தனை அவசரத்தில் கூப்பிட்டாலும் வராமல் இருக்கலாம் என்று அர்த்தம் ஆகிறது.

ஆனால், இப்போது காரியமே மாறிப் போய் விட்டது. என்னது தெரியுமா? வெட்டுகிற காரியம் போய், தூர்ப்பதுதான் முக்கியமான காரியமாக இருக்கிறது.

குழாயில் தண்ணீர் நின்று விட்டாலோ, அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ‘ஏண்டா குளத்தைத் தூர்த்தோம்... கிணற்றை மூடினோம்?’ என்றெல்லாம் துக்கமாக வருகிறது.

முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால், இழுக்கத் தெரிந்த மனுஷனுக்கு மட்டும்தான் அது பிரயோஜனமாகும்.

குளம் என்றால் வாயில்லாப் பிராணிகளுக்கும், காக்கை, குருவி முதற்கொண்டு சகல விதமான ஜீவராசிகளுக்கும் அது பயன்படும்’’ என்று சொல்கிறார் மகா பெரியவா.

தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் வெறி கொண்டு கோபத்துடன் பலரையும் குத்திக் கிழிப்பது போல் வந்த ஒரு மாட்டையே, சாத்வீகமாக அடக்கி இருக்கிறார் கருணைக் கடலான நம் காஞ்சி மகான். 
 
(ஆனந்தம் தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in