உலகம் சுற்றும் சினிமா - 11: ஒரு கொலையும் ஐந்து கோணங்களும்

ராஷோமோன் (1950)
உலகம் சுற்றும் சினிமா - 11: ஒரு கொலையும் ஐந்து கோணங்களும்

ஒவ்வொரு மனிதரின் மனதுக்குள்ளும் ஒரு ரகசியப் பகுதி இருக்கும். தங்கள் இயலாமை, பலவீனம், கையாலாகாத்தனம் இவையனைத்தையும் வெளியுலகம் பார்த்துவிடாவண்ணம் பாதுகாத்துவைக்கும் பிரத்யேகமான தளம் அது. அந்தத் தளத்தைக் காப்பாற்றிக்கொள்ள பொய் சொல்லவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். மற்றவர்களும் அந்தத் தளத்தைத் தீண்டத் தயங்குவார்கள். அவர்களுக்கும் பிரத்யேகமான மர்மத் தளங்கள் இருக்குமல்லவா?

இப்படி நம் அனைவருக்குள்ளும் உள்ள இந்த விசித்திர குணத்தைப் பற்றிய ஓர் குறுக்குவெட்டுத் தோற்றம்தான் ஜப்பானியப் படமான ‘ராஷோமோன்'. ஜப்பானியத் திரையுலகின் பிதாமகன் அகிரா குரோசாவா இயக்கிய இத்திரைப்படம் ஜப்பானிய எழுத்தாளரான ருயூநோசூகே அகுதாகவா எழுதிய 'இன் எ குரோவ்' நாவல் மற்றும் ‘ராஷோமோன்’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது.

கதை என்ன?

ராஷோமோன் நகர வாயிலின் பெருமழைக்கு ஒதுங்கி அமர்ந்திருக்கும் கிகோரி எனும் விறகுவெட்டியும், தபிஹோஷி எனும் துறவியும் அவ்வழியாக வரும் வழிப்போக்கனிடம் தாங்கள் எதிர்கொண்ட விசித்திர நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வதாகப் படம் தொடங்கும்.
விறகு வெட்ட காட்டுக்குச் செல்லும் கிகோரி, அங்கே ஒரு சாமுராயின் சடலத்தையும் பெண்ணின் தொப்பி ஒன்றையும் காண்கிறான். இதை அவன் காவலர்களுக்குத் தெரியப்படுத்த, வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அங்கே கிகோரி, தபிஹோசி, சாமுராயைக் கொலைசெய்ததாகவும் - அவரது மனைவியைப் பலாத்காரம் செய்ததாகவும் ஒப்புக்கொள்ளும் கொள்ளையன் தஜோமாரு, சாமுராயின் மனைவி, சாமுராயின் ஆவி என்று ஐந்து பேரும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இவ்வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களான சாமுராயின் ஆவி, அவரது மனைவி மற்றும் கொள்ளையன் தஜோமாரு இவர்கள் மூவரின் வாக்குமூலங்களும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. தங்களுடைய பலவீனங்களை மறைத்து, முடிந்த அளவிற்குத் தங்களைப் புனிதமாக்கிக்கொள்ளும் அவர்களது எத்தனிப்பின் வெளிப்பாடே அவர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. இதில் எது உண்மை என்ற மர்ம முடிச்சைப் படத்தின் இறுதியில் அவிழ்க்கும் விதத்தில், தான் ஒரு மேதை என்பதைக் குரோசாவா நிரூபித்திருப்பார்.

இவ்வுலகில் நூறு சதவீத உத்தமர் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைதான் நம்முடைய உத்தமத் தன்மையின் காலாவதி காலத்தை நிர்ணயிக்கும் என்பதை எந்த விதமான பாசாங்கும் இன்றி, நேர்த்தியான திரைக்கதை மூலம் உணர்த்தியிருப்பார் குரோசாவா.

“மனிதன் இவ்வுலகில் உண்மையான யதார்த்தத்தை ஏற்பதற்குப் பக்குவம் அடையாததால்தான் ஜோடனை யான பொய்களில் சுகம் காண்கிறான்” என்று இறுதிக் காட்சியில் அந்த வழிப்போக்கன் பேசும் வசனம், மனித வாழ்வின் அவலத்தை மிக இயல்பாகச் சுட்டிக்காட்டிவிடும்.

சர்வதேசப் புகழ்

நாடக பாணியிலிருந்த ஜப்பானிய சினிமாவை யதார்த்தத்தின் வழி மடைமாற்றியவர் அகிரா குரோசாவா. அவ்வகையில் ‘ராஷோமோன்’ திரைப்படம் ஜப்பானிய சினிமாவில் மேலும் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். 1950-களில் சில ஹாலிவுட் படங்களே ஸ்டுடியோவுக்குள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முழுக்க முழுக்கச் சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இது. நடிகர்களின் முகத்தில் அதிக வெளிச்சம் விழுவதற்காக, சூரிய வெளிச்சத்துக்கு எதிரே கண்ணாடியை வைத்து சூரிய வெளிச்சத்தை அவர்களின் முகங்களில் பிரதிபலிக்கச்செய்து படம் எடுத்தார் குரோசாவா.

‘ராஷோமோன்’ படத்திற்கு முன்பு 10 படங்களைக் குரோசா இயக்கியிருந்தாலும் இந்தப் படம்தான், உலக அளவில் அவருக்கான அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. 1951-ல், நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் 'தங்க சிங்கம்' விருது, 1952-ல், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது என்று பல்வேறு விருதுகளை இப்படம் வென்றது.
ஒரே நிகழ்வைச் சுற்றி பல்வேறு கோணங்களில் கதை சொல்லும் பாணி, இன்று ‘ராஷோமோன் எஃபெக்ட்' என்று அழைக்கப்படுவதே இப்படம் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சான்று. தமிழில், ‘அந்த நாள்’ (1954), ‘விருமாண்டி’ (2004) போன்ற படங்களில் இந்தப் பாணி கையாளப்பட்டிருக்கும்.

தனித்தன்மை மிக்க படைப்பு

‘இன் எ குரோவ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, ‘தி அவுட்ரேஜ்' (1964), ‘அயர்ன் மேஸ்’ (1991), ‘இன் எ குரோவ்’ (1996 – ஜப்பானிய மொழி), ‘மிஸ்டி’ (1997), ‘தி அவுட்ரேஜ்' (2011), ‘இன் எ குரோவ்' (அமெரிக்கா 2012), ‘தி பாட்டம்லெஸ் பேக்’ (2017) என்று பல படங்கள் உருவாகியுள்ளன. ஆனால், இவற்றில் எதிலும் ‘ராஷோமோன்’ அளவிற்கு யதார்த்தமான திரைக்கதை இல்லை என்பதே இப்படத்தை அரை நூற்றாண்டு கழித்தும் நாம் கொண்டாட முக்கியக் காரணம்.

அகிரா குரோசாவா ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார். “மனிதர்கள் தங்களைப் பற்றி தங்களிடமே நேர்மையாக இருப்பதில்லை. அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள் இல்லாமல் தங்களைப் பற்றி அவர்களால் பேச முடிவதில்லை.”  ‘ராஷோமோன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கும்போது அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பொருள் விளங்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in