
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
grsnath71@gmail.com
தன் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த அருணைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்த கௌதம், “டேய்... அங்க அப்பாகிட்ட என்னடா பேச்சு? இங்க வாடா...” என்று அழைத்தான். கௌதமின் குரலில் பழைய நட்பின் நெருக்கமும் உரிமையும் தெரிந்தது. அருண் உற்சாகத்துடன் கௌதமை நோக்கிச் சென்றான். மூர்த்தி சில வினாடிகள் யோசித்துவிட்டு வெளியே வந்தார்.
நந்தினி, பூஜா ஆகிய இருவரையும் வராந்தாவின் ஓரத்திற்கு அழைத்துச் சென்ற மூர்த்தி, “கௌதம் இப்ப ஃபுல்லா ரெக்கவர் ஆயிட்டான். உங்க ரெண்டு பேர லவ் பண்ணதும் அவனுக்கு ஞாபகமிருக்கு” என்றவுடன் இரண்டு பேரின் முகங்களும் சந்தோஷத்திற்கு மாறின. ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அவர்களின் முகங்கள் உடனே இறுக்கமாகின.
“இப்ப... உங்க லவ்வ விட முக்கியமான விஷயம், கௌதமோட ஹெல்த் தான். அவன் ஃபுல் நார்மலுக்கு வந்து, அவனே யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவான். அதுவரைக்கும் அவனத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று மூர்த்தி கூற... தலையாட்டிய நந்தினி, “அவனப் பாக்கலாம்ல அங்கிள்?” என்றாள். மூர்த்தி, “பாருங்க... ஆனா உங்க லவ் மேட்டரப் பத்தி இப்போதைக்கிப் பேசாதீங்க” என்றார். “ஓகே...” என்று பூஜா கூற... அறைக்குள் சென்ற மூர்த்தியின் பின்னால் நந்தினியும் பூஜாவும் சென்றனர்.
அருணுடன் பேசிக்கொண்டிருந்த கௌதமின் முகம், நந்தினியையும் பூஜாவையும் பார்த்தவுடன் மாறியது. ஒரே கணத்தில் கண்களில் மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் உணர்வுகள் தோன்றி மறைந்தன. ஒன்றும் பேசாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
நந்தினியைப் பார்த்த கௌதமின் கண்களில் அந்தப் பழைய நெருக்கமும், காதலும் தெரிய... சட்டென்று நந்தினியின் கண்கள் கலங்கிவிட்டன. கௌதம், “ஏய்... நந்தினி...” என்று அவள் கையை ஆறுதலாகப் பிடித்து இறுக்கினான். இதைப் பார்த்த பூஜா, “கௌதம்...” என்று வேகமாக அழைத்தபோது, அவள் கண்களும் கலங்கிவிட்டன. கௌதம், “பூஜா... வாட் இஸ் திஸ்?” என்று இன்னொரு கையால் அவள் கையையும் ஆறுதலாகப் பிடித்து அழுத்தினான். இருவருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்த கௌதமின் விழிகளிலும் கண்ணீர்ப் படலம்.