போர்முனை டு தெருமுனை - 5 : விஞ்ஞான சமையல் சாதம்!

போர்முனை டு தெருமுனை - 5 : விஞ்ஞான சமையல் சாதம்!

ராணுவம் தனது வயிற்றால் நகர்கிறது என்று சென்ற வாரம் குறிப்பிட்டேன். ஆம், போர்முனையில் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வீரர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்வது மிகவும் அவசியம்.

முகாம்களில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு முறையாகச் சமைத்த உணவுகள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், எல்லைக் கண்காணிப்புப் பணியில், நில எல்லைக்கோட்டுக்கு அருகிலும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும், டாங்க் வாகனத்தில் பாலைவன ரோந்துப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு எப்படிப் பந்தி பரிமாறுவது? போர்ச்சூழலில், பாலை நிலங்களிலும், பனி மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் உண்ண நேரமின்றி பல நாட்கள் தொடர்ந்து எதிரிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் தரும் வீரர்களுக்கு உணவளிப்பது 

எப்படி?

சமையல் விஞ்ஞானிகள் போர்க் கருவிகளின் உருவாக்கத்தில் மட்டுமின்றி உணவுத் தொழில்நுட்பங்களிலும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள். மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி நிறுவன (Defence Food Research Laboratory) விஞ்ஞானிகள், உடனடியாகச் சாப்பிடக்கூடிய பதப்படுத்தப்பட்ட பல உணவு வகைகளைக் கண்டுபிடித்துத் தயாரித்திருக்கிறார்கள்.

40 நாள் கெடாத இட்லி-சாம்பார்!

வீட்டில் செய்த இட்லிகளை சில மணி நேரங்களில் அல்லது அதே நாளில் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் கெட்டுப்போய்விடும். ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்த இந்த இட்லி மாவு, தூள் வடிவில் இருக்கும். அதில் வெந்நீரை ஊற்றினால் 3 முதல் 5 நிமிடங்களில் இட்லி மாவு தயார். ‘பாலிப்ரோபிலீன் ’ உலோகமேற்றப்பட்ட பாலியெஸ்டர் பைகளில் கிடைக்கும் இந்த இட்லி மாவுத்தூள் 6 மாதங்களுக்குக் கெடாது. இன்னொரு அனுகூலம், குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இதைப் போலவே, வெந்நீர் ஊற்றி 5 நிமிடங்களில் சாம்பார் தயாரிக்கும் தொழில்நுட்பமும் சாத்தியமாகியிருக்கிறது. 5 நிமிடங்கள் காத்திருந்து இட்லி செய்யும் வரை பொறுக்கமாட்டாத சூழலில், பதப்படுத்தப்பட்ட, அப்படியே சாப்பிடக்கூடிய (Ready To Eat) இட்லியும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இட்லி, ‘ஸ்கேனிங் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்’ (SEM) உள்ளிட்ட
பரிசோதனைகளைக் கடந்து நிரூபணமானது என்பது உண்பவர்களுக்கு ஒரு அறிவியல் ஆறுதல். இந்த இட்லிகள் ஏறக்குறைய 40 நாட்கள் கெடாமலிருக்கும்!

போர்க்கள மெனு

இட்லி-சாம்பார் தவிர உப்புமா கலவை இன்னொரு தென்னிந்திய உடனடி உணவு. ஒரு வருடம் வரை கெடாத சப்பாத்திகளும் பரோட்டாக்களும் ராணுவத்தில் உண்டு. காய்கறி புலாவ், கடலைப்பருப்பு குழம்பு, கீரை-பருப்பு குழம்பு, தேங்காய் சட்டினி, கொத்தமல்லி சட்டினி, சேமியா, புளியோதரை உள்ளிட்ட உடனடி சைவ உணவுகள் பல உண்டு. ஒரு வருடம் வரை கெடாத ஆட்டுக்கறி சாண்ட்விச், வறுத்த கோழிக் கால்கள் என அசைவப் பட்டியலும் உண்டு.

சென்னை வெள்ளமும் - ராணுவ விஞ்ஞானிகளும்

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், முப்படை வீரர்களின் பசியைப் போக்குவதோடு நில்லாமல், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் உடனடி உணவாக விநியோகிக்கவும் பயன்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் உணவுப் பொட்டலங்களை வீசுவதைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இப்பொட்டலங்களைத் தயாரிப்பது டி.ஆர்.டி.ஓ நிறுவனம் என்பது பலரும் அறியாத செய்தி.

2015-ல், வரலாறு காணாத வெள்ளத்தில் சென்னை சிக்கித் தவித்தபோது, ஏறக்குறைய 3,000 கிலோ உணவுப் பொருட்களை டி.ஆர்.டி.ஓ
இலவசமாக விநியோகித்தது என்பது மற்றுமொரு மனிதாபிமானச் செய்தி. ஆய்வுக்கூடத்தில் சமன்பாடுகளோடு நின்றுவிடாமல், வெள்ளத்தில் சிக்கி மருண்டு நிற்கும் மக்களோடு களமாடி அவர்தம் பசி போக்கினர் ராணுவ விஞ்ஞானிகள். 2018-ல், கேரளத்தை வெள்ளம் ஆட்கொண்ட போதும் 9,000 கிலோ உணவுப்பொருட்களைத் தயாரித்து அனுப்பி உதவினர் ராணுவ விஞ்ஞானிகள்.
டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளின் உடனடி உணவுப் பொருட்கள், எம்.டி.ஆர் (MTR) உள்ளிட்ட வணிக நிறுவனங்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

அசைவ சாக்லேட்

உட்கார்ந்து உணவருந்த நேரமும் சூழலும் இல்லாத போர் வீரர்களுக்கு அவ்வப்போது உடனடி சக்தி தர, சாக்லேட்-பிஸ்கெட் வடிவ உணவுக் கண்டுபிடிப்புகளும் உண்டு. சாதாரண சாக்லேட்களைக் குளிர்பதனப்படுத்த வேண்டும். ஆனால், குளிர்பதனமில்லாமல் 9 மாதங்கள் பயன்படுத்தக்கூடிய அதிசக்தி சாக்லேட் (High Energy Bar) போர்வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 100 கிராம் சாக்லேட்டில் 410 கிலோ கலோரிகள் சக்தி கிடைக்கும். இது தவிர ஆளி விதை, பார்லி, தேங்காய், கோகோ, வெல்லம், மஞ்சள், இஞ்சி, சோயா, கோதுமை, வாதுமை கொட்டை (வால் நட்) என விதவிதமான சாக்லேட்டுகள் வீரர்களுக்கு உடனடி சக்தி தரவும், அவர்களின் பசிக்குப் போர்க்கள அவசர விருந்தாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆட்டுக்கறி, கோழிக்கறி சாக்லேட்டுகளும் உண்டு. 100 கிராமுக்கு 475 கிலோ கலோரிகள் சக்தி தரும் முட்டை பிஸ்கெட், கோழிக்கறி பிஸ்கெட், சீ பக்தார்ன் பிஸ்கெட் என நொறுக்குத் தீனி வகைகளையும் விஞ்ஞானிகள் விட்டுவைக்கவில்லை.

விண்வெளியில் விருந்து

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா, இந்திய ராணுவ விஞ்ஞானிகளின் தயாரிப்பான அதிசக்தி சாக்லேட்டுகளை எடுத்துச் சென்றார் என்பது இன்னொரு பொறியியல் சுவாரசியம்.

அது மட்டுமல்ல, 2021-ல் இஸ்ரோ செலுத்தவிருக்கும் ‘ககன்யான்’ கலத்தில் செல்லும் மூன்று இந்திய விண்வெளி வீரர்களின் உணவை வடிவமைத்து உருவாக்கும் பணியில் தற்போது இறங்கியிருக்கிறார்கள் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள்.

மூலிகை உணவுகள்

பனிமலையில் அதிக நாட்கள் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பசியின்மை ஏற்படும். இதற்காக மூலிகையாலான, மென்று சாப்பிடக்கூடிய (Munch) பசியூக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பூரவள்ளி, ஓமம் இவற்றாலான பசியூக்கிகள் வீரர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றவை. வயிற்றுப்புண்ணைப் போக்கும் கற்றாழை சார்ந்த பழக்கூழும் (Jam), புளியால் தயாரிக்கப்பட்ட பழக்கூழும் நமக்குப் புதியவை, ஆனால், போர் வீரர்களின் நாக்குகளுக்கு நன்கு அறிமுகமானவை!

தானே சூடாக்கும் பொட்டலம்!

பல மாதங்கள் கெடாமலிருந்தாலும், சுடச்சுடப் பரிமாறப்படும் உணவுக்கு ஈடில்லை. வீடுகளில், உணவகங்களில் நமக்குச் சுடச்சுட உணவு கிடைக்கிறது. கடுங்குளிரில் நாடு காக்கும் வீரர்களுக்கு ஆறிப்போன ஆகாரமா?

போர்முனையில் சமையலறைக்கு, அடுப்புக்கு எங்கே போவது? அடுப்பின்றி, மின்சாரமின்றி, நேர விரயமின்றி எப்படிப் பதப்படுத்தப்பட்ட உணவைச் சூடாக்குவது? இச்சவாலை எதிர்கொண்ட விஞ்ஞானிகள், சுய வெப்பமூட்டிப் பொட்டலத்தை (Self Heating Pocket) உருவாக்கினர். எப்படி இந்தப் பொட்டலம் உணவைச் சூடாக்குகிறது?

பள்ளிக்கூடத்தில் ‘வெப்ப உமிழ் வினை’ (Exothermic Reaction) பற்றி நாம் படித்திருக்கிறோம். இரண்டு வேதிப்பொருட்கள் இணையும்போது வெப்பம் வெளிப்படுவதே இந்த வேதிவினை. உதாரணமாக, சலவைத் தூளைத் தண்ணீரில் கலக்கும்போது வெதுவெதுப்பை உணர்ந்திருப்பீர்கள். இது ‘வெப்ப உமிழ் வினை’தான்.

சுய வெப்பமூட்டிப் பொட்டலத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு மூடப்பட்ட உறைகள் இருக்கும். உள் உறையில் பதப்படுத்தப்பட்ட உணவு இருக்கும். வெளி உறையில் ஒரு வெப்ப உமிழ் வேதிப்பொருள் இருக்கும். உணவைச் சாப்பிடும் முன்பு, வெளி உறையை வெட்டி, தண்ணீரூற்ற வேண்டும். நீர் வேதிப்பொருளுடன் கலக்கும்போது உடனடியாக வெப்பம் உருவாகும். இவ்வெப்பத்தினால் உள் உறையில் இருக்கும் உணவுப்பொருள் சூடாக்கப்படும். உறையை வெட்டினால் கடுங்குளிரிலும் சுடச்சுட உணவு கிடைக்கும்!

கையடக்க அடுப்பு

வெந்நீர் குடிக்கவாவது அடுப்பு வேண்டுமே, என்ன செய்வது போர்க்களத்தில்? அதற்கும் பதிலிருக்கிறது விஞ்ஞானிகளிடம். அது, மடித்து விரிக்கக்கூடிய கையடக்க ஸ்டவ். ஹெக்ஸமைன் மாத்திரைகள்தான் இதற்கு எரிபொருள். மாத்திரைகளையும் அடுப்பையும் எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம்.

செரிக்கும் கரண்டி

பிளாஸ்டிக் தேக்கரண்டிகளும் தட்டுகளும் பயன்பாட்டுக்குப் பிறகு மக்காத குப்பைக் கழிவுகளாகிச் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றன. ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஸ்பூன், பயன்படுத்திய பின்னர் குப்பைக்குப் போகாது, தொப்பைக்குத்தான் போகும்! ஆம். கரண்டியை மென்று சாப்பிடலாம் - கூம்பு ஐஸ்கிரீம் குப்பி போல. மாவுதான் இக்கரண்டியின் மூலப்பொருள். இப்படி ‘ஸ்டார்ச்’சினால் செய்யப்பட்ட கிண்ணம்கூட தயாரிக்கப்பட்டிருக்கிறது.

எல்லைகளில் காவல் செய்யும் வீரர்கள் குப்பைகளைக் குறைக்கும் பசுமை வீரர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்தக் கரண்டிகளும் கிண்ணங்களும் வந்தால் பெருமளவு குப்பைகள் குறைக்கப்படும். விழாக்களில், இனி பலகாரம் தின்றபின் கிண்ணங்கள் மாயமாவது பற்றி யாரும் கவலைப்படாத சூழலும்கூட உருவாகலாம்!

வெள்ளப்பெருக்கில் பாலங்கள் அடித்துச் செல்லப்படுவதுண்டு. வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல நீர்மட்டம் உயர, தானே உயரும் பாலங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 (பேசுவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in