இணையச் சிறையின் பணயக் கைதிகள் 30: சமூக வலைதளப் பதிவுகளின் நாகரிகம்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 30:  சமூக வலைதளப் பதிவுகளின் நாகரிகம்

சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை வேறு என்ன மாதிரியெல்லாம் சிறப்பாக, நாகரிகமாகப் பயன்படுத்தினால் நம் நட்புவட்டம், தொழில் அதன் மூலம் பொருளாதாரம் போன்றவை எப்படி உயரும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

வேலை வாய்ப்பைப் பற்றித் தெரிவிக்க/ ஆட்களைப் பெற அற்புதமான களமாக முகநூல் உள்ளது. என் மனநல மையத்துக்கு ஆட்கள் தேவையென்பதை முகநூலில் பதிந்தேன். இரண்டு நாட்களிலேயே ஒரு போன். நிறுவனம் பற்றியும் தேவை என்ன என்பதையும் விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட அப்பெண், "சார் இது சமூகப் பணியாளர்களுக்கான ஒரு பிரத்யேகக் குழு (closed group). ஒவ்வொரு பணியழைப்பையும் சரி பார்ப்பது எங்கள் வேலை. பின் அதனை எங்கள் முகநூல் குழுவில் பகிர்வோம். தகுதியுடையவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்” என்று சொன்னார்.

என்ன ஆச்சரியம்! அதன் மூலம் எனக்குப் பணியாளர்கள் கிடைத்தும் விட்டனர். ஆயிரக்கணக்கானோர் உள்ள ஒரு குழுவில் நம் தேவையைச் சொல்லச் சில நிமிடங்களே போதும். ரிசல்ட் இருக்கிறது. இது ஒரு சாம்பிள் மட்டுமே.

ஒரே கொள்கை, ஒரே குழு

தமிழ் இலக்கிய வாசிப்பாளர்கள், கவிஞர்கள் நாடகாசிரியர்கள் தொடங்கி நில புரோக்கர்கள், வண்டி வாகன விற்பனையாளர்கள் வரை ஆளுக்கொரு குழு வைத்திருக்கிறார்கள் முகநூலிலும் வாட்ஸ் - அப்பிலும். முறையாக விதிகளைப் பின்பற்றும் சில குழுக்கள் தம் கொள்கையை அழகாக நிறைவேற்றிக் கொள்கின்றன. வீண் குழப்பவாதிகளோ நோக்கம் இல்லாதவர்களோ அந்தக் குழுவில் இல்லாத பட்சத்தில் குழுவும் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. அதன் அங்கத்தினர்களும் மகிழ்வுடன் பயணிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்து தமிழ் வாசிப்புலகில் நாட்டம் கொண்டு இயங்கும் ஒரு குழுவில் சுமார் மூவாயிரத்தில் இருந்து நான்காயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தொடுதிரைகள் மூலம் இலக்கியச் சுவை பருகும் அவர்கள் அவ்வப்போது நேரிலும் சந்தித்து மகிழ்கிறார்கள். இலக்கியத்தில் இனி குறுகிய வட்டமே இல்லை என்னும் அளவிற்கு ஒவ்வொருவரின் படைப்புகளும் வாசிக்கப்படுகின்றன. பொதுவெளியில் பாராட்டப்படவும் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றனர்.

வளரும் எழுத்தாளர்களின் முதல் நூல் அறிமுகப்படுத்தப்படுவது முதல் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் படைப்பை விமர்சிப்பது வரை குழு உறுப்பினர்களால் செம்மையாக நடத்தப்படுகிறது.

காவல் துறையிலும் கோலோச்சுகிறது

முக்கியக் காவல் அதிகாரிகள் தங்கள் கைப்பேசியின் எண்ணைப் பொது வெளியில் பகிர்ந்துள்ளனர். முகநூலிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களது பக்கத்தில் சென்று புகார் அளித்தாலே போதுமானது. உடனே அதைக் கவனிக்கும் மேலதிகாரி அதைப் பிறருக்கும் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கிறார். அதோடு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் கேட்டு அதையும் பொது வெளியில் பகிர்கிறார். அற்புதமாக நடக்கின்றன காரியங்கள்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் காவல் துறை சரிபார்த்தல் நடக்கும் அல்லவா? அதற்கும் வாட்ஸ் -அப் போன்றவை மூலமாகவே சரி பார்க்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

தனி மனிதப் பாதுகாப்பு தொடங்கி தற்காப்புக்கலைகள் கற்றுக்கொள்வது வரை நிறைய செயலிகள் (apps) வந்துவிட்டன. வெறுமனே ‘சாட்’ செய்வதற்கும் தற்புகழ்ச்சிப் படங்களைப் பதிவேற்றுவதற்கும்தான் சமூக வலைதளங்கள் இருக்கின்றன என்ற நினைப்பை மாற்றிக்கொண்டு பாருங்கள். அவைகளின் அற்புதச் செயல்பாடும் அதன் பலனும் நமக்குப் புரியும்.

சமூக வலைதளங்களில் தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பெரும்பாலானோர் செய்யும் ஒரு காரியம் தற்பெருமை அடித்துக்கொள்வது. ஆங்கிலத்தில் இதனை ‘ப்ராகிங்’ (bragging) என்கிறோம்.

நாம் சென்று வந்த இடங்கள், சாப்பிட்ட ரெஸ்டாரென்ட்டுகள், கூட நின்று படம் எடுத்துக்கொண்ட நடிகர் நடிகையர், ஆசைப்பட்டு லோன் பெற்று வாங்கிய புல்லட், அதில் சென்ற ‘த்ரில்லிங்’ பயணங்கள் என்று நம் சுய புராணத்துக்கான ஒரு களமாகவே மாறி விட்டன முகநூல் போன்ற சமூக வலைதளங்கள்.

நான்தான் உசத்தி, என்னால்தான் இதைச் செய்ய முடிந்தது, என்னைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியுமா? என்பன போன்ற தற்பெருமைகளைப் பேசுவோரின் கூடாரமாகவும் சமூக வலைதளங்கள் மாறி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். தங்களுக்குள் இயங்கி வரும் ‘நார்சிஸம்’ (narcissism) என்ற சுயகாதலுக்குத் தீனி போட்டுக்கொள்ளவே பலர் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் உலா வருகின்றனர்.

தம்மை, தம் மேதாவிலாசத்தைப் பறை சாற்றும் புகைப்படங்களை மற்றவர்களும் சிலாகித்து ரசிக்கிறார்கள் என்றுதான் அதைப் பதிவிட்ட பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மை அப்படியல்ல. இப்படித் தற்புகழ்ச்சிக்கு ஆட்பட்டு நீங்கள் வகைதொகை தெரியாமல் பதிவிட்டுக்கொண்டே இருந்தால் அதுவே உங்கள் மீதான மற்றவர்களின் அபிமானம் குறைந்து போவதற்கு வழி அமைத்துவிடும்.

ஆம். ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. நடத்தை அறிவியல் (behavioural science) என்றே ஒன்று இருக்கிறது. உடல் மொழி என்றும் வார்த்தைகளில்லா தொடர்பு (nonverbal communication) என்றும் உளவியல் பலவாறாய் நம்மை ஆராய்கிறது.
செய்த சாதனைகளைக் கூறுவதிலும் ஒரு நளினம் இருக்கிறது. சென்று வந்த இடங்களைப் பற்றிப் புகைப்படம் போடுவதிலும், பயணக்குறிப்பு வரைவதிலும் கூட ஒரு அழகியல் இருக்கிறது. பணிவு மேலோங்கிய ஒரு பகிர்தலே பலராலும் ரசிக்கப்படும்.
எவெரெஸ்ட்டை எட்டிப் பிடித்த சாதனையாளர் டென்சிங் (Tenzing Norgay) சிலை முன்பு ஒரு படம் எடுத்து அதைப் போடும்போது அந்தப் படத்தின் நாயகன் டென்சிங் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ‘இந்தக் குளிரில் சின்ன முகட்டை ஏறுவதற்கு நமக்கு இப்படி மூச்சிரைக்கிறதே, அந்தக் காலத்திலேயே உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட என்ன பாடுபட்டிருப்பாரோ இந்த மனுஷன்!’ என்ற ரீதியில் மற்றவர்களுக்குத் தகவலையும் சொல்ல வேண்டும்.

நாம் அங்கு பத்தோடு பதினொன்றாக நின்று புகைப்படம் எடுத்ததை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகப் பதிவிட்டுப் பாருங்கள். பத்து கமென்ட்டுகள் அதிகமாகவே வரும். ‘வாவ் என்ன ஒரு மனிதர்... என்ன ஒரு சாதனை... அவர் சிலை முன் நின்று புகைப்படம் எடுத்தத நீங்கள் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்ற ரீதியில் கமென்ட் வரும்.

ஆயிரக்கணக்கானோர் நம் நட்பு வட்டத்திற்குள் இருக்கிறார்கள்; இன்னும் பலர் நம்மைப் பின் தொடர்கிறார்கள் என்ற நிலையில் நம் பதிவுகள் அர்த்தமுள்ளதாகவும், தாழ்மையுடையதாகவும், சக மனிதருக்கும் ஏதேனும் ஒரு சேதியைச் சொல்பவை யாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் அடையாளத்தை மறைக்காதீர்கள்

உங்கள் துறை சார்ந்து மட்டுமே பெருமை பேசிக்கொள்ளுங்கள். பதிவிடுங்கள். வேறு அடையாளம் தரிக்க முற்பட்டு உங்கள் நம்பகத் தன்மையை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். ‘அந்தாளு ஒரு பில்டப் பார்ட்டிபா’ என்று கிண்டலடிக்கப்படுவீர்கள்.

உண்மையான தகவல்களைப் பதிவிடுங்கள்

வார்த்தைகளால் உங்கள் கருத்துகளை அலங்கரித் தாலும் சரி, போட்டோ ஷாப் மூலம் உங்கள் படத்தை மெருகேற்றினாலும் சரி... அதில் உண்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ‘செக்’ செய்து பார்த்தாலும் பொய் இருக்காது என்றபடிக்கே நம் நிலைத்தகவல்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து பின் தொடர்பவர்களும் அதிகரிப்பர்.

இடம் பொருள் இங்குமுண்டு

ஆம். முகநூலில் பதிவிட வேண்டியதை வாட்ஸ் - அப்பில் போட்டு ‘யாரும் விரும்பவில்லையே’ என்று புலம்பக்கூடாது. சிறிய அளவிலான காணொலிகள், புகைப்படங்கள், சுருக்கமான கருத்துகள் போன்றவற்றை முகநூலில் போடலாம். நீளமான கட்டுரைகள் முகநூலில் எடுபடாது. அதே போல் ‘லிங்க்ட் இன்’ (linkedin) போன்ற தளங்கள் வேலைவாய்ப்பு பற்றியும் நம் தொழில் தொடர்பான செய்திகளுக்குமான ஒரு இடம். அங்கு வேறு விஷயங்களைப் பதிவிடுவது அர்த்தமற்றது.

எதைப் பதிவிட்டாலும் உங்கள் நோக்கத்தை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தற்பெருமைக்கும் விளம்பரத்துக்குமுள்ள மெல்லிய கோட்டை மனதில் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும்போது அவர்கள் மகிழா விட்டாலும் பரவாயில்லை. வெறுப்பு, கோபம், பொறாமை போன்ற எதிர் மறை உணர்வுகளைத் தூண்டும் வகையில் நம் பதிவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே சமூக வலைதள நாகரிகம்.

ஏனென்றால் நம் முகநூல் பதிவுகள், வாட்ஸ் - அப் ஃபார்வேர்டுகள், இன்ஸ்டாகிராம் அட்டகாசங்கள் போன்றவற்றை வைத்தே நாம் யார்? எத்தகைய ஆளுமையைக் கொண்டவர்கள்? என்பதைக் கண்டுபிடிக்கும் காலம் வந்துவிட்டது.

மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மட்டும் நான் சொல்லவில்லை. மனிதர்களின் நுண்ணறிவு இப்போது மெஷின்களுக்கும் வந்துவிட்டது. வரவழைத்து விட்டோம். அதுதான் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence).

‘உன் நண்பன் யார் என்பதைச் சொல். உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்’ என்பதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இப்போது நம் சமூக வலை தளங்களின் முகவரியை மட்டும் கொடுத்தனுப்பிவிட்டு அடுத்த நாள் போன் செய்து பாருங்கள். உளவியல் நன்கு தெரிந்தவர்களாக இருந்தால் ஓரளவுக்கு உங்களைப் பற்றிச் சொல்லிவிடுவார்கள்.

மனிதனே சொல்ல முடியுமென்றால் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு இன்னும் என்னவெல்லாம் செய்யும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இப்படி சமூக வலைதளங்கள் மூலமாக செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி மக்களின் மனநிலை போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும்; அதை அரசியல் முதலான லாபங்களுக்குப் பயன்படுத்தவும் முடியும் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் 
வருகிறோம்.

சைபர் சைக்காலஜி வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில் மெய்நிகர் உலகம் (virtual reality) என்ற ஒரு ஆச்சரிய வெளியில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதே போல் ‘இனி எல்லாத் துறைகளிலும் இதன் தாக்கம் இருக்கும்’ என்று சொல்லப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) குறித்தும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in