காதல் ஸ்கொயர் 29

காதல் ஸ்கொயர் 29

கௌதமின் அறைக்குள் நுழைந்த டாக்டர், “ஹவ் ஆர் யூ கௌதம்?” என்றார். “ஃபைன் சார்” என்ற என்ற கௌதம் புன்னகைத்தான்.
“இப்ப தலைவலிக்குதா?”
“இல்ல டாக்டர்.”
“வாமிட் வர மாதிரி இருக்கா?”
“இல்ல டாக்டர்…” என்றவுடன் டாக்டர் சிறிய டார்ச் லைட்டை எடுத்து, அவன் கண்களை விரித்து, சில வினாடிகள் கூர்ந்து பார்த்தார். பிறகு மூர்த்தியைப் பார்த்து, “நோ ப்ராப்ளம்” என்று கூறிவிட்டு, கௌதமிடம் விஷ்வாவைக் காண்பித்து, “இவரு பேரு என்ன?” என்றார்.
“விஷ்வா” என்றான் கௌதம் உடனடியாக.
“இவர எங்க பாத்துருக்கீங்க?”
“இவன…” என்று கௌதம் யோசிக்க, “சென்னைலயா?” என்றார் டாக்டர்.
“இல்ல…இன் ஸம் ஹில் ஸ்டேஷன்…”
“ஹில் ஸ்டேஷன் பேரு?”
“ம்…” என்ற கௌதம் யோசித்தான்.
“ஓகே. நோ ப்ராப்ளம். ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று கூறிவிட்டு, “எல்லாரும் வெளிய வெய்ட் பண்ணுங்க. கௌதம யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நர்ஸ்… டேக் கேர் ஆஃப் ஹிம்” என்று சொல்லிவிட்டு வெளியே நடக்க… அனைவரும் அவர் பின்னால் சென்றனர்.
அறைக்கு வெளியே வந்தவுடன் டாக்டர், “மூர்த்தி… நீ என் கூட வா…” என்று கூறிவிட்டு நடக்க… மூர்த்தியும் ரேணுகாவும் அவர் பின்னால் சென்றனர். தனது அறைக்கு வந்தவுடன் அவர்களை எதிரில் உட்காரச் சொன்ன டாக்டர், “எப்படி திடீர்னு தலைவலி வந்துச்சு?” என்றார். ஒரு வினாடி ரேணுகாவைப் பார்த்த மூர்த்தி... பூஜா, நந்தினி விவகாரத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
கேட்டு முடித்தவுடன் டாக்டர், “மெடிகல் மிராகிள்ங்கிற வார்த்தைய இப்ப சினிமாவுல காமெடியாக்கிட்டாங்க. ஆனாலும் எனக்கு வேற வார்த்தை கிடைக்கல. ரியலி இட்ஸ் எ கிரேட் மெடிக்கல் மிராக்கிள். இந்த மாதிரி ரெட்ரோக்ரேடு அம்னீஸியாவுல பாதிக்கப்பட்டவங்க, ரெக்கவரி ஆவுறது ரொம்ப அபூர்வம். எனக்குத் தெரிஞ்சு… உலக அளவுல ரெண்டு, மூணு கேஸ்தான் இருக்கும். ரீஸன்ட்டான்னா… 2016-ல, கனடாவுல ஒருத்தனுக்கு ரெக்கவரி ஆச்சு. கிட்ச்னர்ங்கிற ஊர்ல இருந்த எட்கர்ட் லாட்டுலிப்ங்கிறவன், 1986-ல வீட்டுல யாருகிட்டயும் சொல்லிக்காம, தனியா நயாகரா ஃபால்ஸ் போயிருக்கான். அங்க தலைல அடிபட்டு, பழசையெல்லாம் மறந்துட்டு, நயாகரா பக்கத்துல இருக்கிற செயின்ட் கேதரின்ஸ்லங்கிற சிட்டில இருந்துருக்கான். அவங்க வீட்டுல தேடிப் பாத்துட்டு, ஆளக் காணோம்ன்னு கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு விட்டுட்டாங்க. திடீர்னு முப்பது வருஷம் கழிச்சு 2016-ல, எந்த ட்ரீட்மென்ட்டும் இல்லாம, அவனுக்குத் திடீர்னு பழசெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா ஞாபகம் வந்துருச்சு. அந்த மாதிரி கௌதமுக்கும் வந்திருக்கலாம். இல்ல… பூஜாவும், நந்தினியும் கொடுத்த பிரஷர்ல மூளை ஓவர்டைமா வொர்க் பண்ணி, நம்பளால கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு காரணத்தால, அவன் மூளைல ஏதாச்சும் சேஞ்சஸ் நடந்து, நினைவு திரும்பியிருக்கலாம்.”
“இப்ப அவனுக்கு முழுசா நினைவு திரும்பிடுமா டாக்டர்?”
“விஷ்வா… ஹில் ஸ்டேஷன் பத்தியெல்லாம் சொல்றத பாத்தா, அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பிக்கிட்டிருக்கு. ஸடனா ஒன் அவர்லயும் முழுசா எல்லாம் ஞாபகத்துக்கு வரலாம். இல்ல கொஞ்சம், கொஞ்சமாவும் வரலாம். எந்த அளவுக்கு மெமரி ரெக்கவரி ஆயிருக்குன்னு கண்டுபிடிக்க, இப்ப நிறைய டெக்னிக் வந்துருக்கு. க்ரோவிட்ஸ் டெக்னிக், கால்ட்டன் க்யூ வேர்டு டெக்னிக்னு நிறைய மெதட் இருக்கு. நான் நியூரோ ஸைக்காலஜிஸ்ட் ஸ்டீஃபன வரச்சொல்றேன். அவரே சொந்தமா சில டெக்னிக்ஸ்லாம் யூஸ் பண்ணுறாரு. அவரு வந்து கௌதம்கிட்ட பேசட்டும். அதுக்கு முன்னாடி நீங்கள்லாம் அவன்கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்.”
“டாக்டர்… கௌதமுக்கு இப்ப பழசெல்லாம் நினைவுக்கு வந்துட்டா, ஆக்ஸிடென்ட் ஆயி, இந்த ரெண்டு மாசத்துல நடந்ததும் ஞாபகத்துல இருக்குமா?”
“தெரியல. அதெல்லாம் மூளையோட எந்தப் பகுதிகள், எப்படி செயல்படுதுங்கிறத பொறுத்தது. ஸ்டீபன் வந்துடட்டும்” என்ற டாக்டர் மொபைலை எடுத்தார்.
தகவல் அறிந்து, காலை பத்தரை மணிக்கு பூஜாவும் அங்கு வந்து சேர்ந்தாள். கௌதமுக்கு நினைவு திரும்பிய விஷயம் கேள்விப்பட்டு, முதலில் சந்தோஷப்பட்டாள். ஆனால் நந்தினியைப் பார்த்தவுடன், பூஜாவின் முகம் மாறியது. பூஜாவிற்கு சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை.
மூர்த்தியிடம் பூஜா, “அங்கிள்… நான் இப்ப கௌதமப் பாக்கலாமா?” என்றாள்.
“வேண்டாம். நியூரோசைக்காலஜிஸ்ட் வந்து செக் பண்ற வரைக்கும், யாரும் பாக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்காரு” என்றவுடன் வேறு வழியின்றி பூஜா அமைதியானாள்.
11 மணிக்கு மேல் டாக்டர் ஸ்டீபன் வந்தவுடன், அந்த இடமே பரபரப்பானது. அறைக்கு வெளியே டாக்டர் மனோகர், ஸ்டீபனிடம் கௌதமின் கேஸ் ஹிஸ்டரியை ஆங்கிலத்தில் கூறினார். பின்னர் கௌதமின் அறைக்குள் டாக்டர் ஸ்டீபனுடன், டாக்டர் மனோகரும் மூர்த்தியும் ரேணுகாவும் மட்டும் சென்றனர். கௌதமின் படுக்கையருகில் நெருங்கிய ஸ்டீபன், “கௌதம்… ஹௌ ஆர் யூ? உன்னால உட்கார முடியுமா?” என்றார்.
“உட்காரலாம் டாக்டர்” என்ற கௌதம் எழுந்து அமர்ந்தான். அவனுக்கருகில் ஒரு சேரைப் போட்டு அமர்ந்துகொண்ட டாக்டர் ஸ்டீபன், “நான் மட்டும் உன் கேஸ வெளிய சொன்னேன்னா, நியூரோஃபீல்டுல நீதான் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஹாட் சப்ஜெக்ட்” என்றவுடன் கௌதம் புன்னகைத்தான்.
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, உனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகி, நீ பழசையெல்லாம் மறந்துட்ட. இப்ப திடீர்னு உனக்கு, பழைய நினைவெல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு. உனக்கு எந்த அளவு ரெக்கவரி ஆயிருக்குன்னு தெரியணும்” என்ற டாக்டர் தனது மொபைலில் தேடி சில புகைப்படங்களை டவுன்லோட் செய்தார். பிறகு கலைஞர், ஜெயலலிதாவின் புகைப்படங்களைக் காண்பித்து,
“இவங்க யாருன்னு தெரியுதா?” என்றார்.
“ம்… கலைஞர், ஜெயலலிதா.”
“அவங்க இப்ப எங்க இருக்காங்க.”
“ரெண்டு பேருமே இறந்துட்டாங்க…” என்றவுடன் ஸ்டீபன், மூர்த்தியிடம், “இந்த ரெண்டு மாசத்துல, நீங்க கௌதம்கிட்ட கலைஞர், ஜெயலலிதா பத்தில்லாம் பேசினீங்களா?” என்றார்.
“இல்ல சார்…”
“குட்…” என்ற டாக்டர், கௌதமைப் பார்த்து, “ஃபேமஸ் பர்சானலிட்டிஸ்லாம் நினைவுல இருக்கு. ஜெயலலிதாவையும், கலைஞரையும் எந்த ஆஸ்பிட்டல்ல சேத்துருந்தாங்க?”
“ஜெயலலிதாவ அப்போலா ஆஸ்பிட்டல்ல. கலைஞர காவேரி ஆஸ்பிட்டல்ல.”
“குட்… இப்ப நீ ஒண்ணு பண்ணு. உன் பர்சனல் லைஃப்ல நடந்த, பத்து முக்கியமான விஷயங்கள ஒரு பேப்பர்ல எழுதிக் காமி.”
“ஓகே டாக்டர்…” என்ற கௌதமிடம், நர்ஸ் ஒரு பேடில் பேப்பரை வைத்து நீட்டினார். சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு கௌதம் எழுத ஆரம்பித்தான். அனைவரும் அமைதியாக கௌதமைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ கால் மணி நேரத்திற்குப் பிறகு கௌதம் அந்தப் பேப்பரை நீட்டினான்.
ஒரு முறை அந்தப் பேப்பரை மேலோட்டமாகப் படித்த டாக்டர், “இதுல கௌதம் எழுதியிருக்கறதப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கதான் பார்த்துச் சொல்லணும்” என்று அந்தப் பேப்பரை மூர்த்தியிடம் நீட்டினார். மூர்த்தியும் ரேணுகாவும் பரபரப்புடன் அந்தப் பேப்பரை வாங்கிப் படித்தனர். படிக்கப் படிக்க… அவர்கள் முகம் சந்தோஷமாக மாறியது.
மூர்த்தி, “அவன் எழுதியிருக்கிற பத்து விஷயமும் கரெக்ட் டாக்டர். அவனுக்கு விவரம் தெரிஞ்சதுலருந்து நடந்த முக்கியமான எல்லா விஷயத்தையும் கவர் பண்ணியிருக்கான்” என்றவுடன் முகம் மலர்ந்த டாக்டர் ஸ்டீபன், “தட்ஸ் ஆல். ஹி ஹேஸ் கம்ப்ளீட்லி ரெக்கவர்டு…” என்று எழுந்தார். பிறகு டாக்டர் மனோகரைப் பார்த்து, “டிஸ்சார்ஜ் ஹிம். கௌதமோட கேஸ் ஃபைல எனக்கு அனுப்பி வைங்க” என்று கூறிவிட்டு வேகமாக வெளியே நடந்தார். அவர் பின்னாலேயே மூர்த்தியும் ரேணுகாவும் சென்றனர். வெளியில் வந்தவுடன் மூர்த்தி, டாக்டரிடம், “டாக்டர்…ஃபர்தரா ஏதாச்சும் ட்ரீட்மென்ட்?” என்றார்.
“ஒண்ணும் தேவையில்ல. அதான் 100 பர்ஸன்ட் ரெக்கவர் ஆயிட்டானே…” என்று கூறிவிட்டு நடந்தார்.
நந்தினி, மூர்த்தியை சந்தோஷத்துடன் நெருங்கி, “அங்கிள்… கௌதமுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?” என்றாள்.
“வந்துடுச்சு. நீங்க இங்கயே இருங்க” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல... அருண் மட்டும் அவர் பின்னால் சென்றான்.
“அங்கிள்… ஒரு விஷயம் மட்டும் சொல்லிடுங்க.”
“சொல்லு.”
“அவனுக்கு நந்தினிய லவ் பண்ண விஷயமெல்லாம் ஞாபகமிருக்கா?”
“ம்… இருக்கு. அவன் எழுதியிருக்கிற பத்து முக்கியமான விஷயங்கள்ல, நந்தினிய லவ் பண்ணத சொல்லியிருக்கான்.”
“தேங்க் காட்…” என்று அருண் சந்தோஷத்துடன் சிரித்தான்.
”ரொம்ப சந்தோஷப்படாத. அவனுக்குப் பூஜாவ லவ் பண்ணதும் ஞாபகமிருக்கு” என்று கூற… அருண் அதிர்ச்சியுடன் மூர்த்தியைப் பார்த்தான்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in