காதல் ஸ்கொயர் 27

காதல் ஸ்கொயர் 27

லைட்ஹவுஸ் கடற்கரை. இளைஞர்கள் இளமையைத் தக்கவைக்கும் உத்தேசத்துடனும், நடுத்தர வயதுக்காரர்கள் இளமைக்குத் திரும்பும் உத்வேகத்துடனும், முதியவர்கள் மரணத்திற்கு வாய்தா வாங்கவும் வாக்கிங் சென்றுகொண்டிருந்தனர். கூடுதல் ஆரோக்கியத்திற்காக மக்கள் ஆங்காங்கே மூலிகை ஜுஸ் அருந்துவதில் மும்முரமாக இருந்தனர்.

கடற்கரை மணலில் ஒரு பெரியவர் பொரி போட… காகங்கள் கும்பலாகக் கொத்தித் தின்றுவிட்டு சேர்ந்தாற்போல் பறப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கௌதம். அவன் அருகில் அமர்ந்திருந்த அருண் சிகரெட்டைப் பற்ற வைத்தபடி, “இங்கவந்து கால்மணி நேரமாவுது கௌதம். பேசுடா” என்றான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…நந்தினியும் நானும் லவ் பண்ணது உண்மையா இருக்கலாம்.”

“இருக்கலாம் இல்ல. நூறு சதவீதம் பரிசுத்தமான உண்மை…”

“யா…யா… ஆனா, இப்ப அது எதுவுமே எனக்கு ஞாபகமில்லை. நேத்து நந்தினி என் மடில படுத்து அழுதுகிட்டிருந்தப்ப எனக்கு அவ மேல பரிதாபம்தான் வந்ததே தவிர, ஒரு துளிகூடகாதல் வரல. ஏன்னா இப்ப என்னோட மூளைல அந்தக் காதல் இல்ல…”
“ஆனா அவளுக்கு எதுவும் மறக்கலையே…”

“அஃப்கோர்ஸ்… எனக்குப் புரியுது. ஆனா இப்ப நான் பூஜாவ லவ் பண்றேன். இந்த ரெண்டு மாசத்துல அவதான் எனக்கு இந்த உலகத்தைக் காட்டுனா. என்னை ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கிறா. ஸோ… என்னை அறியாமலே அவ மேல காதல் வந்துடுச்சு. இறந்த காலம்னு ஒண்ணு இல்லாத ஆளா இருக்கேன். இந்த நிலைமையிலயும் என் மேல பூஜா உயிரையே வச்சுருக்கா.”
“நந்தினி, பூஜாவவிட ஆயிரம் மடங்கு உன்னைக் காதலிச்சுருக்காடா...”

“இருக்கலாம் அருண். ஆனா,அது எனக்குத் தெரியாதே…” – கெளதமின் குரல் உயர்ந்தது.

“அப்ப என்னதான் பண்ணப்போறே?” என்றான் அருண். பதில் ஒன்றும் சொல்லாமல் கடல் அலைகளைச் சில வினாடிகள் பார்த்த கௌதம், “என்னோட நிலைல நீ இருந்தா என்ன பண்ணுவ?” என்றான். சில வினாடிகள் யோசித்த அருண், “தெரியல… பயங்கரக் குழப்பமா இருக்கும்” என்றான்.

“யெஸ்… அதே நிலைமைதான் எனக்கும். ஒண்ணு மட்டும் தெரியுது. இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இப்போதைக்கு நந்தினிகிட்ட எதுவும் சொல்லவேணாம். போலாமா?” என்று எழுந்தான் கௌதம்.

அலுவலகத்தில் அருணிடம், “கௌதம் என்ன சொன்னான்?” என்று கேட்டாள் நந்தினி.

“அவனுக்கு எதுவுமே ஞாபகத்துல இல்லங்கிறான்.”
“அதான் தெரியுமே… என்னைக் கல்யாணம் பண்ணிக்
கிறதப் பத்தி என்ன சொன்னான்?”
“அதைப் பத்தி எதுவும் சொல்லல” என்றவனைச் சில வினாடிகள் முறைத்த நந்தினி, “சரி… நானே அவன் கிட்ட இன்னைக்கி கேட்டுக்குறேன்” என்றாள்.
“ஏய்… அவனுக்குக் கொஞ்சம் டைம் கொடு நந்தினி.”
“எதுக்கு?” என்று கேட்ட நந்தினியின் குரலில் அத்தனை கோபம்.
அருண் பதில் ஒன்றும் சொல்லாமல் நிற்க… நந்தினி வேகமாகத் தனது இருக்கையை நோக்கிச் சென்றாள்.
கௌதமின் அறை. கௌதம், நந்தினியின் விஷயத்தைச் சொல்லி முடித்தவுடன் பூஜாஅதிர்ச்சியில்உறைந்துவிட்டாள். அவள்  உட்கார்ந்திருக்கும்  நிலையைப் பார்த்து பயந்துபோன கௌதம், “பூஜா… பூஜா…” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.
“பூஜா ப்ளீஸ் பேசு… உன்கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னுதான் சொன்னேன்.”
பூஜாவின் கண்களில் நீர்ப்படலம் ஒரு திரைபோல் படர்ந்திருக்க, கௌதமை உற்றுப்பார்த்தபடி, “சரி… அவ சொன்னதுக்கு நீ என்ன சொன்ன?” என்றாள்.
“ஒண்ணும் சொல்லல” என்றவுடன் வேகமாக எழுந்த பூஜா, “அவள லவ் பண்ணதுதான் உனக்கு ஞாபகமில்லல்ல? இப்ப நான் பூஜாவ லவ் பண்றேன்… அவளைத்தான் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்ல வேண்டியதுதானே…” என்றாள்.
“அது எப்படி பூஜா டக்குன்னு சொல்ல முடியும்? என்ன இருந்தாலும், அவள ஒரு காலத்துல நான் காதலிச்சதா சொல்றா…” என்றவுடன், அடிபட்ட பார்வையுடன் அவனைப் பார்த்த பூஜா, அவனருகில் நெருங்கினாள்.
“கௌதம்… நீ அவளைக் காதலிச்சது, உன் முற்பிறவியில காதலிச்ச மாதிரி. இப்ப இது உன்னோட புதுப் பிறவி. முற்பிறவியில காதலிச்சவங்களுக்குப் புதுப் பிறவியில எந்த இடமும் கிடையாது” என்றாள்.
அப்போது படிக்கட்டிலிருந்து, “கௌதம்…”
என்று நந்தினியின் குரல் கேட்க… கௌதம் பதற்றத்துடன் திரும்பிப் படிக்கட்டைப் பார்த்தான். பூஜாவின் முகமும் மாறியது. படியேறி அறைக்குள் நுழைந்த நந்தினி, பூஜாவைப் பார்த்ததும் தயக்கத்துடன் நின்றாள். பிறகு பூஜாவின் அருகில் சென்று,
“ஹாய்…” என்று கையை நீட்ட… பூஜா இயந்திரம் போல் அவள் கையைப் பற்றிக் குலுக்கினாள். கௌதமின் அருகில் வந்த நந்தினி, “கௌதம்… உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.
“எதா இருந்தாலும் இங்கயே பேசலாம்” என்ற பூஜாவின் குரலில் சீற்றம்.
“நான் கௌதம்கிட்டதான் பேசிக்கிட்டிருக்
கேன். உங்ககிட்ட கேக்கல” என்றாள் நந்தினி.
“எனக்குத் தெரியாத ரகசியம்னு கௌதம் வாழ்க்கைல  எதுவும் கிடையாது. கௌதம் உன் விஷயத்தைச் சொன்னான்” என்றவுடன் நந்தினியின் முகம் மாறியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “ஸோ வாட்? எனக்கு இப்ப கௌதம்கிட்ட பேசணும்” என்றவள் கௌதமைப் பார்த்து, “சொல்லு கௌதம்… உங்கம்மாப்பாகிட்ட சொல்லிட்டியா?” என்றாள்.
“அதுக்கு அவசியம் இல்ல” என்றாள் பூஜா.
“இங்கே பாருங்க…இது எங்க விஷயம். இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.”
“இல்ல…சம்பந்தம் இருக்கு…”
“என்ன சம்பந்தம்?” என்ற நந்தினியின் அருகில் நெருங்கி வந்த பூஜா, “நானும் கௌதமும் லவ் பண்றோம்” என்றாள் உறுதியான குரலில்.

நந்தினி அப்படியே உறைந்துபோய், அதிர்ச்சியுடன் கௌதமைப் பார்த்தாள். உடம்பெல்லாம் இறுகி, கால்கள் பதற்றத்தில் வெடவெடவென்று நடுங்கின. இதயம் படபடக்க, தளர்ந்துபோய் நிற்க முடியாமல் அருகிலிருந்த சுவரைப் பிடித்துக்கொண்டாள்.
ஏறத்தாழ ஒரு நிமிடம் அந்த அறையில், ஒருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனாலும், மனதிற்குள் ஏராளமாய்ப் பேசினார்கள்.

பின்னர், கௌதம், நந்தினியின் அருகில் வந்து, “நந்தினி…” என்று அழைக்க…சட்டென்று நந்தினி, “பூஜா சொல்றது நிஜமா?”
என்றாள். கௌதம் பதில் ஒன்றும் சொல்லாமல் பூஜாவைத் திரும்பிப்பார்த்தான். பூஜா கண்ணோரம் நீர் வழிய, “உண்மையச் சொல்லு கௌதம்” என்றாள். நந்தினியும் கண்ணீருடன், “உண்மையச் சொல்லு கௌதம். நீ பூஜாவ லவ் பண்றியா?” என்றவுடன் கௌதம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரின் கன்னங்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டேயிருந்தது.
ஒரு ஆணால், ஒரு பெண்ணின் கண்ணீரைச் சமாளிப்பதே மிகவும் கடினமான காரியம். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களின் கண்ணீரைப் பார்த்தவுடன் தடுமாறிப் போன கௌதம், ஒன்றும் பேசாமல் நின்றான்.

“சொல்லு கௌதம்… நீ பூஜாவ லவ் பண்றியா?” என்றாள் நந்தினி. கௌதம் அமைதியாக நிற்க… அவன் சட்டையைப் பிடித்த நந்தினி, “சொல்லு கௌதம். எதா இருந்தாலும் உண்மையச் சொல்லிடு” என்றாள் சத்தமாக.

சில வினாடிகள் அவளைத் தவிப்புடன் பார்த்த கௌதம், பின்னர் தலையைக் குனிந்துகொண்டு, “ஆமாம் நந்தினி…” என்றான். சட்டென்று நந்தினியின் ஆவேசம், அதிர்ச்சியாக மாறியது.

உதட்டைக் கடித்து அழுகையை நிறுத்த முயன்றபோதும், அவளை அறியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

கௌதம், “உன் நிலைமை எனக்குப் புரியுது நந்தினி. ஆனா, என் மனசுல உன்மேல எந்த உணர்வுமே இல்ல. உன் நிலைமையப் பாக்கறப்ப… நமக்குத்தெரிஞ்ச ஒரு பொண்ணு கஷ்டப்படுதுங்கிற ஃபீலிங்தான் வருதே தவிர, நீ என் காதலிங்கிற நினைப்பு வரவே இல்ல. ஏன்னா நம்ம காதல் என் நினைப்புலயே இல்ல. டூ யூ அண்டர்ஸ்டாண்ட் மை பாயின்ட்?” என்று கேட்க…கண்ணீரைத் துடைத்தபடி, “ஸோ?” என்றாள் நந்தினி.

“அதனால...” என்று தவிப்புடன் நந்தினியைப் பார்த்த கௌதம், திரும்பி பூஜாவைப் பார்த்தான். பூஜா, கௌதமின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைக்காகப் பதற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தாள்.

நந்தினியின் அருகில் நெருங்கிய கௌதம், “ஒருவேளை பூஜாவ நான் என் வாழ்க்கைல சந்திக்காம, அவளக் காதலிக்காம இருந்துருந்தேன்னா, நம்ம காதல் ஞாபகத்துல இல்லன்னாலும், ஒரு அரேஞ்டு  மேரேஜ் மாதிரி உன்னைக் கல்யாணம் பண்ணியிருப்பேன். ஆனா… இப்ப அதுக்கு சான்ஸே இல்ல. ஸோ…” என்று சில வினாடிகள் நிறுத்திய கௌதம், மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “ஸாரி டுஸே திஸ்… எத்தனை தடவ யோசிச்சுப் பாத்தாலும், பூஜாவத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது” என்று சொல்லி முடிப்பதற்குள் கையை நீட்டி அவன் பேச்சை நிறுத்திய நந்தினி, வேகமாகத் திரும்பி கண்ணீருடன் நடந்தாள்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in