போர்முனை டு தெருமுனை - 2 : கொசுத் தொல்லைக்கோர் தீர்வு

போர்முனை டு தெருமுனை - 2 : கொசுத் தொல்லைக்கோர் தீர்வு

“சார், ஏவுகணை, ராக்கெட் எல்லாம் தயாரிக்கிறீர்களே. எங்கள் பகுதியில் ஒரே கொசுத் தொல்லை. அதற்கு ஒரு ஆயுதம் தயாரிக்கக் கூடாதா?” என்று என்னை நோக்கிப் பாய்ந்த அந்தக் கேள்வி, ஒரு தனிமனிதரின் கேள்வியல்ல. நமது விஞ்ஞானிகள் மீது நம் ஒட்டுமொத்த தேசமும் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு.

இந்திய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கான நிதியும் அவர்களின் மாதச் சம்பளமும் இதர வசதிகளும் அரசு கஜானாவிலிருந்துதான் வருகின்றன. மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் ஆராய்ச்சி, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே?

ராணுவம், கப்பற்படை, விமானப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரக் காவல் படை, மத்திய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளின் வீரர்கள் காடு, மலை, பாலைவனம், கடற்கரை, சதுப்புநிலம் போன்ற பகுதிகளில் இரவிலும் பகலிலும், வெயில்-மழை-பனி என்று பாராமல் தேசத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வீரர்கள் எதிரிகளைத் தாக்கவும், தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணைகள், விமானங்கள், ராணுவ டாங்குகள் போன்றவற்றை ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கித் தந்துள்ளனர். அதேபோல், பகலிலும் இரவிலும் இவர்களைப் பதம் பார்க்கும் கொசுக்கடிக்கு எதிரான ஒரு ஆயுதம் தயாரிப்பதும் அவசியம் அல்லவா?

உயிருள்ள குட்டிப் போர் விமானங்களான கொசுக்களை எதிர்கொள்ள ராணுவ விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தீபா கொசு மருந்து 

நமது போர் வீரர்களுக்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தயாரித்ததுதான் ‘தீபா’ (DEPA) என்ற கொசு விரட்டி. இது கொசுவை மட்டுமல்ல, பூச்சியையும் விரட்டக்கூடியது. தீபா என்பது ‘டை ஈத்தைல் ஃபீனைல் அசிட்டமைடு’ (N-Di Ethyl Phenyl Acetamide) என்பதின் சுருக்கம். இம்மருந்து பல வடிவங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசனை திரவம் (Spray) போல தெளிக்கலாம்;. ஈரத் திசுத் தாளாகத் (Wet Wipes) துடைத்துக்கொள்ளலாம்; களிம்பாக (Cream) முகத்திலும் அங்கங்களிலும் பூசிக்கொள்ளவும் செய்யலாம். 6 முதல் 8 மணி நேரம் வரை கொசுக்கள் உங்கள் பக்கமே அண்டாது.

தீபா எப்படிச் செயல்படுகிறது?

எதிரிகளை ஏமாற்றுவதும் ஒரு போர்த் தந்திரம் அல்லவா! ராணுவத்தின் ஏமாற்றுத் தந்திரத்தையே விஞ்ஞானிகள் தீபாவில் பயன்படுத்தியுள்ளனர். நமது தோலில் சுரக்கும் லாக்டிக் அமிலம், சுவாசிக்கும்போது நாம் வெளிவிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு, உடலின் வெப்பம் எனக் கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் பல விஷயங்கள் நம்மிடம் உண்டு. தீபாவின் மூலக்கூறுகள் கொசுவின் உணர்வு உறுப்போடு செயல்பட்டு மனித ரத்தம் அருகில் இருப்பதை உணரவிடாமல் செய்துவிடுகின்றன. அதாவது கொசுக்களைக் குழப்பி, ஏமாற்றமடையச் செய்கின்றன. இதனால் மனிதர்கள் அருகில் இருந்தாலும் கொசுக்கள் கடிப்பதில்லை.

மக்கள் பயன்பாட்டில்…

ராணுவ வீரர்களுக்காக ராணுவ விஞ்ஞானிகள் அளித்த இந்தத் தற்காப்பு ஆயுதம், பொதுமக்களின் பயன்பாட்டிலும் இருக்கிறது. ‘மேக்ஸோ மிலிட்டரி’ என்ற வணிகப் பெயரில் தீபா கொசு மருந்துக் களிம்பும், ஈரத் திசுத் தாள்களும் விற்பனையாகின்றன. ‘உஜாலா’ சொட்டு நீலம் தயாரிக்கும் ‘ஜோதி லெபாரட்டரீஸ்’ நிறுவனம்தான் இவற்றைச் சந்தைப்படுத்திவருகிறது. இது தவிர ‘சேஃப்’(Safe) என்ற பெயரிலும் டி.ஆர்.டி.ஓ தயாரித்த கொசு மருந்து கிடைக்கிறது.

டெங்கு கொசுக்களை அழிக்க…

டெங்கு காய்ச்சலைப் பரப்புவது  ‘ஏடிஸ் எஜப்டை’ (Aedes Aegypti) என்ற கொசு வகை. இவ்வகையைச் சேர்ந்த பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. தேங்கிய நீர்ப் பரப்புகளில் கொசு முட்டையிடும். கொசுக்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஏற்கெனவே முட்டைகள் உள்ள நீர்ப் பகுதியில் பிற கொசுக்களும் முட்டைகளிடும். இதனால் கொசுக்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகும். எப்படி முட்டைகள் உள்ள பகுதியைக் கொசுக்கள் கண்டுபிடிக்கின்றன? 

கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் ‘C21-ஹைட்ரோகார்பன்’ என்ற ரசாயனம் முட்டைகளில் இருக்கிறது. இதனால், அதிகக் கொசுக்கள் கவரப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாகும். நோய் பாதிப்பும்தான்!
இதை எப்படி எதிர்கொள்வது? போர்த் தந்திரங்களுள் ஒன்று எதிராளியைக் கவர்ந்து பின்னர் கொல்வது (Lure & Kill).  ‘ஏடிஸ் எஜப்டை’ கொசுவை ஒழிக்க ‘கவர்ந்து - கொல்’என்ற போர்நுட்பத்தை ராணுவ விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ‘C21- ஹைட்ரோகார்ப’னைத் தனியாகப் பிரித்தெடுத்து அதனுடன் கொசு அழிப்பு மருந்தைக் கலந்து கொசுமருந்து தயாரித்தனர். இம்மருந்தை நீர்நிலைகளில் தெளித்தால், இதிலுள்ள ‘C21- ஹைட்ரோகார்ப’னால் கொசுக்கள் கவரப்பட்டு முட்டையிடும்.  ஆனால், அவை புழுப் பருவத்தை அடைவதற்குள் கலந்திருக்கும் கொசு அழிப்பு மருந்து முட்டைகளை அழித்தொழித்துவிடும்.

போர் வீரர்களின் பாதுகாப்பிற்காகத் தயாரிக்கப்பட்ட இம்மருந்தை டெல்லி மாநகராட்சி 2004-ல், பயன்படுத்த ஆரம்பித்தது. அப்போது வருடத்துக்கு 2,838 பேருக்கு டெங்கு பாதிப்பு, 34 மரணங்கள் எனும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஒரே வருடத்தில் இந்த நிலை மாறியது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 590; டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 3 என்று நிலைமை கட்டுக்குள் வந்தது.

மூலிகை கொசுவிரட்டி

ஆறு மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி ‘ஆவியாக்கி’  (Vaporizer) வடிவத்தில் கொசுவிரட்டியையும் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதனால், பக்கவிளைவுகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க 
அம்சம்.

கொசு மாத்திரை

ராணுவம் முகாமிடும் வனப் பகுதிகள், மலைப்பகுதிகள், கணவாய்கள், புதர்கள் நிறைந்த பகுதிகள் போன்றவற்றில் உள்ள நீர்நிலைகளில் கொசுமருந்து தெளிப்பது அத்தனை சுலபமல்ல. அதற்கான தீர்வுதான் கொசு மாத்திரை. கொசு மாத்திரை எப்படி வேலை செய்கிறது? மாத்திரையை நீர்நிலைகளில் வீசினால், 20 நாட்கள் நீரில் மிதந்து கொசு முட்டைகளையும், புழுப் பருவக் கொசுக்களையும் கொன்றுவிடும். கொசு மருந்து தெளிப்பதைவிட, மாத்திரைகளை நீர்நிலைகளில் வீசுவது மிகச் சுலபம்.

அட்டை எதிர்ப்பு ஆயுதம்

நீர்நிலைகளுக்கு அருகில் முகாமிடும் ராணுவக் குழுக்களும், நீர் நிலைகளைக் கடக்கும் போர் வீரர்களும் எதிர்கொள்ளும் இன்னொரு அபாயம் - அட்டைகள். வலிக்காமலேயே ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடும் அட்டைகள் வீரர்களைப் படாதபாடு படுத்திவிடும். இதற்கும் நமது விஞ்ஞானிகளிடம் ஆயுதம் உண்டு. அட்டை, கொசு இரண்டையும் அண்டவிடாத மூலிகை எண்ணெய்க் கரைசலை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். பயன்படுத்த வசதியாகத் தெளிப்புக் குடுவைகளில் இந்த எண்ணெய் கிடைக்கிறது. ஆடைகளிலும், காலுறைகளிலும் இதைத் தெளித்துவிட்டால், பதினைந்து நாட்களுக்கு அட்டைகள் அண்டாது.
உடலில் பூசிக்கொள்ளும் விதத்தில் களிம்பு வடிவத்திலும் இம்மருந்து தயாரிக்கப் பட்டுள்ளது. ஒரு முறை பூசினால் ஏறக்குறைய பத்து மணிநேரம் பாதுகாப்புக் கிடைக்கும். மழையில் நனைந்தாலும் இந்தக் களிம்பு உடலில் தொடர்ந்திருக்கும் என்பது கூடுதல் தகவல்.

பாம்பு விரட்டி

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எல்லையில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் வீரர்கள் எதிரிகளின் தாக்குதலோடு, பாம்பின் தாக்குதலையும் சமாளித்தாக வேண்டும். ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், தங்களது தொப்பியில் ஒரு கருப்பு நிற கயிற்றைக் கட்டியிருப்பார்கள். ஏன் தெரியுமா? எதிர்பாராதவிதமாகப் பாம்பு கடித்தால், அந்தக் கயிற்றால் காயத்திற்கு அருகில் இறுகக் கட்டி, கத்தியால் கீறி, ரத்தத்தோடு விஷத்தை வெளியேற்றுவார்கள். பாலைவனப் பகுதியில் இரவில் பாம்புகள் தாக்கும். எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் இந்த சர்ப்பத் தாக்குதலைச் சமாளிப்பது சிரமம். ஏராளமான வீரர்கள் இப்படி பாம்பு கடித்து உயிரிழந்திருக்கிறார்கள்.
இதற்காக ராணுவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததுதான் பாம்பு விரட்டி. ‘ஸ்பிரே’ குடுவையில் உள்ள இந்த மருந்தைத் தெளித்தால் போதும். அந்த இடத்தில் ஏறக்குறைய 6 மணி நேரம் பாம்புகள் நெருங்காது. பாம்புகளிடமிருந்து நமது வீரர்களைக் காக்கும் பாதுகாப்பு வளையம் இது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஏறக்குறைய 50,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக ராணுவ மருத்துவக் கணிப்பு கூறுகிறது. பாம்புக் கடிக்கான சிகிச்சை ஒரு புறம் இருக்க, முன்னெச்சரிக்கையாகப் பாம்பு விரட்டி போன்றவை மலை வாழ்விட மக்களுக்கு நிச்சயம் பெரும் பயனளிக்கும்.

ஒருமுறை நான் இமயமலை சாகசப் பயணத்தில் பங்கேற்று சுமார் 14,000 அடி உயரம் வரை மலையேறினேன். பனிமலையில் திரிந்து கூடாரங்களில் புழங்கிய அந்த எட்டு நாட்களில், உயரமான பகுதிகளில் காத்திருக்கும் ஆபத்துகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அவை என்னென்ன? மாதக்கணக்கில் தங்கி, காவல் புரியும் நமது வீரர்கள் அவற்றை எப்படி மேற்கொள்கிறார்கள்?

(பேசுவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in