போர்முனை டு தெருமுனை - 1: உயிரிக் கழிப்பறை எனும் உயரிய கண்டுபிடிப்பு

போர்முனை டு தெருமுனை - 1: உயிரிக் கழிப்பறை எனும் உயரிய கண்டுபிடிப்பு

பலத்த பாதுகாப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ராணுவ ஆய்வுக்கூடங்களை வெளியிலிருந்து பார்க்கும் பலரும், ‘நமது வீரர்களுக்கான ஆயுதங்கள் தயாராகும் இடம் இது’ என்று கடந்துவந்திருக்கலாம். ஆனால், ஆயுதங்கள் மட்டுமல்ல, அன்றாடம் நம் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு சாதனங்களின் பிறப்பிடமே ராணுவ ஆய்வுக்கூடங்கள்தான் என்பதை அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆம், ராணுவப் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்டு, நாளடைவில் சாமானிய மனிதர்களின் சாதனங்களாகிப்போன கண்டுபிடிப்புகளைப் பற்றித்தான் இந்த புதிய தொடரில் பார்க்கப்போகிறோம்.

ராணுவ விஞ்ஞானிகளின் சிந்தையிலிருந்து சந்தைக்கு வந்து பொதுமக்களின் தினசரி வாழ்வைத் தொடுகிற தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் பொறியியல், கொஞ்சம் மானுடவியல் சேர்த்து வழங்கும் முதல் முயற்சி இது. தமிழ் கூறும் நல்லுலகம் இதை வாசித்து வரவேற்கும் என நம்புவோமாக.

நன்றிக்குரிய ராணுவ விஞ்ஞானிகள்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அறிவியல் சொற்கள் பொதுவெளியில் புழங்குவது அதிகரித்திருக்கிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ரேண்டம் எண், 4G அலைக்கற்றை என வகுப்பறைகளில் ஒலித்த சொற்கள் நம் வரவேற்பறைகளுக்கு வருகை தந்திருக்கின்றன. அறிவியலுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறையத் தொடங்கியிருக்கிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி, மங்கள்யானாக ஸ்ரீரிஹரிகோட்டாவிலிருந்து கிளம்பி, 2,000 ரூபாய் கரன்ஸி தாளில் தரையிறங்கியதில் நாம் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். 300 கிலோமீட்டர் உயரத்தில் வினாடிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த செயற்கைக்கோளை, ‘மிஷன் சக்தி’ 

ஏவுகணை மூன்றே நிமிடங்களில் தாக்கி அழித்த நமது பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் வெற்றியை ‘பகிரி’யில் (அட, நம்ம வாட்ஸ்-அப் தான்!) கொண்டாடுகிறோம்.

விஞ்ஞானிகளுக்கு மனிதகுலம் ‘அயனோஸ்பியர்’ வளிமண்டலம் வரை நன்றிகளை அடுக்கினாலும் போதாது. குறிப்பாக, ராணுவ விஞ்ஞானிகளுக்கு! நவீன உலகைக் கட்டமைப்பதில் கணிசமான பங்காற்றியிருப்பவர்கள் ராணுவ விஞ்ஞானிகள். இன்றைக்கு இளையோர் முதல் முதியோர் வரை அனைவரின் வாழ்விலும் கலந்துவிட்ட இணையம் உருவாக்கப்பட்டது ராணுவப் பயன்பாட்டுக்குத்தான் என்பது ‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?’ விமானமும் முதலில் போர்த் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு, பிறகுதான் பயணிகள் சேவைக்குப் பரிமாறப்பட்டது. உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்தற்குக் காரணம் ராணுவ விஞ்ஞானிகளும், போர்க்காலத் தேவைகளும்தான் என்பதை வரலாறு தனது லேசர் விரல்களால் பதிவுசெய்திருக்கிறது.

டியர் டி.ஆர்.டி.ஓ

இந்தியாவில் தரைப் படை, விமானப் படை, கப்பற்படை மற்றும் துணை ராணுவப் படைகளின் மூளையாக இருப்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research & Development Organisation- டி.ஆர்.டி.ஓ). அக்னி, பிரமோஸ், ஆகாஷ், பிரித்வி, மிஷன் சக்தி உள்ளிட்ட ஏவுகணைகளையும் தேஜஸ் போர் விமானம், அர்ஜூன் ராணுவ பீரங்கி உள்ளிட்ட பல போர்த்தொழில் தளவாடங்களையும் உருவாக்கி தேசத்தின் எல்லைக்கு எந்தத் தொல்லையும் வராமல் பாதுகாக்கும் அரசு நிறுவனம் இது.

இந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவரானவர்தான் நம் மதிப்பிற்குரிய அப்துல் கலாம்.
இந்தியாவின் பிற ஆய்வு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்பவை. அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் ஒற்றை இலக்கை நோக்கி உழைப்பவர்கள். ஆனால், ராணுவ விஞ்ஞானிகளோ எல்லா தொழில்நுட்பத் துறைகளிலும் அணு அணுவாக ஆராய்ச்சி செய்பவர்கள். கடலுக்கடியில், கடல் மட்டத்தில், நிலத்தில், பனிமலையில், வானத்தில், விண்வெளியில் என எல்லா தளங்களிலும் ஏறக்குறைய இந்தியாவின் 50 ஆய்வுக்கூடங்களில் ராணுவ விஞ்ஞானிகள் களமாடிவருகிறார்கள்.

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் டி.ஆர்.டி.ஓ, ஏவுகணைகள், போர் விமானங்கள், தாக்குதல் கருவிகளைத் தாண்டி, பல தொழில்நுட்பங்களையும் உருவாக்கியிருக்கிறது. இத்தொழில்நுட்பங்களில் பொதுமக்களுக்கானவை நிறைய. குடிநீர்த் தொழில்நுட்பம், கொசுமருந்து, செயற்கைக் கால், உயிரிக் கழிப்பறை, இதய வலைகுழாய், தீயணைப்பு நுட்பங்கள் என நீளும் பட்டியல் அது. இந்தத் தொடரில் அவற்றைப் பற்றி விரிவாக அலசுவோம்!

உயிரிக் கழிப்பறை (Bio Toilet)

உலகத்தின் உயரமான போர்க்களம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இமயமலைத் தொடர்களில் ஏறக்குறைய 22,000 அடி உயரத்தில் உள்ள ‘சியாச்சின்’, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஆகும். இங்கு பனி மூடிய சிகரங்களின் வழக்கமான சவால்களோடு, மிக முக்கியமான சவாலாக இருப்பது மனிதக் கழிவு மேலாண்மை.

பனிமலைகளில் கழிவுநீர் வடிகால் வசதியில்லை. மண்ணில் கழிவுகளைப் புதைத்து மக்கச் செய்யும் வழக்கமான முறையிலும் ஏராளமான பிரச்சினைகள். பனியின் உறைநிலை வெப்பத்தில் கழிவுகள் மக்காது. நண்பகல் சூரியன் பனிப்படிவுகளை உருக்கும்போது, கழிவுகளும் நீரில் கலக்கும். பனிக்கட்டிகள் நீரோட்டமாகி ஜீவநதிகளில் கலக்கும். கழிவுகளும் அவற்றில் கலந்துவிடும். இதனால் நதியோரக் கிராமங்களுக்குத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உண்டு.

கால்பந்து மைதானம் போல கிடைமட்டமான பரந்த நிலப்பரப்பு இதுபோன்ற உயரமான பகுதிகளில் கிடையாது. கிடைத்த இடங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் தங்குமிடம், ஆயுத அறை, சமையலறை என எல்லாவற்றிற்கும் இடம் வேண்டும். இந்த நெருக்கடியில் மக்காத கழிவின் துர்நாற்றமும், நுண் கிருமிகளின் அபாயமும் நம் நாடு காக்கும் வீரர்களுக்கு, நம் எதிரிகளைவிட மிகப் பெரும் சவால்களைத் தருபவை.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியதுதான் உயிரிக் கழிப்பறை. உயிரி செரிமானி (Bio Digester) என்ற தொழில்நுட்பப் பெயரும் இதற்கு உண்டு.

இது எப்படி இயங்குகிறது?

காற்றில்லா பாக்டீரியா (Anaerobic Bacteria) தொகுதிதான் இதன் சூட்சுமம். கழிப்பறையின் தொட்டியில் இந்த பாக்டீரியா திரவம் ஊற்றப்படும். இது மனிதக் கழிவை நீர், மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு எனப் பிரிக்கிறது. இதிலிருந்து வெளிவரும் நீர் தெளிவானது, வாசனையற்றது, தோட்டத்திற்கும், உபகரணங்களைக் கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். மீத்தேன் மிகச் சிறந்த எரிபொருள். சமைக்கவும், அறைகளை வெப்பமேற்றவும் உதவும். இதிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு மிகக் குறைவு. இந்த உயிரிக் கழிப்பறை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செயல்படும். பனிப் பிரதேசங்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு என்ற பேச்சேயில்லை.

சிகரங்களில் புழங்கும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட உயிரிக் கழிப்பறையின் பயன் பரந்துபட்டது. கழிவுநீர் வடிகால் வசதியில்லாத குக்கிராமங்களிலும் தீவுகளிலும் சுற்றுலா மையங்களிலும் சுலபமாக இதை அமைக்கலாம். ஒடிஷாவில் ஏவுகணை தளத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இதை டி.ஆர்.டி.ஓ பொதுமக்களுக்காக அமைத்துத் தந்தது. இதன் பலனை மேலும் விரிவாக்க, 1,000 கிராமப் பஞ்சாயத்துகளில் இக்கழிப்பறையை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

ரயிலுக்கு வந்த கதை

‘இந்தியாவின் நீளமான கழிப்பறை’ என்று சங்கடத்துடன் அழைக்கப்படும் அளவுக்கு மனிதக் கழிவுகள் விஷயத்தில் இந்திய ரயில்வே துறை பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக, தண்டவாளங்களில் சேரும் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரம் சொல்லி மாளாது.

இந்தச் சூழலில்தான், உயிரிக் கழிப்பறைகளை ரயில் பெட்டிகளில் அமைக்க விரும்பியது இந்திய ரயில்வே. லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு மற்றும் தரநிலை நிறுவனப் பொறியாளர்களும் ராணுவ விஞ்ஞானிகளும் ரயில் பெட்டிகளில் பொருத்துவதற்கேற்ப உயிரிக் கழிப்பறைத் தொட்டியை மாற்றம் செய்தனர். இன்றைய தேதிக்கு, குறிப்பிட்ட சில ரயில்களில் உயிரிக் கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக எல்லா ரயில்களுக்கும் இது விரிவடையலாம். மேலும் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனக் கழிவுநீர் வடிகால் வசதியற்ற இடங்களில் இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும். 

காஷ்மீரின் ‘டல்’ ஏரியின் படகு வீடுகளில் உயிரிக் கழிப்பறை அமைக்கும் சோதனை முயற்சிகள் நடந்துவருகின்றன. பலருக்கும் பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இத்தொழில்நுட்பம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது (Transfer of Technology). தமிழகத்திலும் இத்தகைய நிறுவனங்கள் உண்டு.

ராணுவ வீரர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்திய விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு, சாமானிய மக்களுக்கும் பரந்த அளவில் பயன்பட்டு, பொதுச் சுகாதாரம் மேம்படுமானால் அது பெருமைப்படக்கூடிய சங்கதிதானே!
சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் உரையாற்றச் சென்றிருந்தேன். ஏவுகணைகளைப் பற்றி உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து இறங்கியபோது, அப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் கேட்டார், “சார், ஏவுகணை, ராக்கெட் எல்லாம் தயாரிக்கிறீர்களே... எங்கள் பகுதியில் ஒரே கொசுத் தொல்லை. அதை ஒழிக்க ஒரு ஆயுதம் தயாரிக்கக் கூடாதா?”
ஆழமான, அர்த்தமுள்ள கேள்வி. கொசுக்கு எதிராக ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் ஆயுதங்கள் என்னென்ன?

(பேசுவோம்)

டில்லிபாபுவைப் பற்றி...

இந்திய போர் விமான இன்ஜின் உருவாக்கத்தின் திட்ட மேலாளராக இருக்கிறார் வி.டில்லிபாபு. அப்துல் கலாமின் ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தின் உந்துதலால் விஞ்ஞானியானவர். பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தமிழ் இலக்கியதிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். இலக்கியம், அறிவியல் சார்ந்த ஆறு நூல்களைப் படைத்துள்ளார். இவரின் ‘போர்ப்பறவைகள்’, ‘எந்திரத்தும்பிகள்’ நூல்கள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் குறித்த தமிழின் முதல் பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தொழில்நுட்பங்கள் மக்களுக்காகவே’ என்ற அடிநாதத்துடன் மாணவர்களை ஒருங்கிணைத்து சமூகத் தொழில்நுட்பத் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம்-தமிழ்-சுயமுன்னேற்றம் சார்ந்த எழுச்சியுரைகள் மூலம் மாணவ சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார். இவர், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் கவுரவ இயக்குநராகவும் அண்மையில் நியமிக்கப் பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in