இணையச் சிறையின் பணயக் கைதிகள் 24: ஆன்லைன் டேட்டிங்: அழகியலும் அவலங்களும்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 24:  ஆன்லைன் டேட்டிங்: அழகியலும் அவலங்களும்

கடந்த இதழில் ஒரு பெண் ஆன்லைனில் ஒருவருடன் பழகிஅவருடனான நட்பு திடீரென முறிந்து போனதால் மனச்சோர்வடைந்தார் எனக் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தஅந்தப் பெண் மகிழ்வாக இருப்பதாகவும் மருந்துகள் இனி தேவைப்
படாது எனவும் கூறவே நானும் மகிழ்ந்தேன். “இப்போ என்னை ரொம்ப நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தரைச் சந்திச்சிருக்கேன்... அவ்ளோ நல்லா என்னைப் புரிஞ்சி பேசறார்... ரொம்ப ஜாலியா இருக்கேன் சார்” என்று பட்டாம்பூச்சியாய்ச் சிறகடித்தார் அவர்.
“இவரும் ஆன்லைன் ஃப்ரெண்ட்தான்... சென்னைல தான் இருக்கார். இந்த சைட்லதான் இவரை சந்திச்சேன்… அப்பப்பா… ஆம்பளைன்னா அவர்தான்... எங்க மனநிலை அப்படியே ஒத்துப்போகுது. என் வீட்டுக்காரருக்கும் அவரை அறிமுகப்படுத்தப்போறேன்… ஒரு டேட்டிங் போலாம்னு நினைக்கிறோம்... அவருக்கு டைம் கிடைச்சா உடனே டேட்டிங் தான்” என்கிறார் வெகு சந்தோஷமாக.

‘ஒரு பொண்ணால ஏற்பட்ட காயத்தை மறக்கணுமா உடனே இன்னொரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பி... எல்லாம் சரியாயிடும்’ என்று கல்லூரிக்காலத்தில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பான் ஒரு நண்பன்.
“தம்பி… ஒரு காலத்துல நான் பயங்கரமா புகை பிடிச்சிக்கிட்டு இருந்தேன். குறைச்சே ஆகணும்னு சொல்லி சிகரெட்டைக் குறைச்சிட்டு பான்பராக் போட ஆரம்பிச்சேன். இப்ப என்னடான்னா ரெண்டையுமே விட முடியல. பேசாம புகையோட நின்னிருந்தா கூட தேவலாம்னு தோணுது” என்று என்னிடம் புலம்பிய ஒரு மூத்த மருத்துவரை இப்போது நினைவு கூர்கிறேன்.
ஒரு போதையை மறக்க இன்னொரு போதை. குடியை மறந்தால் சிகரெட். சிகரெட்டை விட்டால் மாத்திரை. போதை மீட்பு சிகிச்சையில் இதை சகஜமாகப் பார்க்கலாம். அதைப்போல அந்தப் பெண் இணையம் மூலமாக மீண்டும் இன்னொரு நட்பைத் தேடிக்கொண்ட பின் இப்போது மகிழ்வாக இருக்கிறார்.

டேட்டிங் போகிறேன் என்று சாதாரணமாக அந்தப் பெண் சொன்னது எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
உறவுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்திருக்கும் இணைய உலகின் இன்னொரு வரம்தான் டேட்டிங் செயலிகள் (online dating apps). கடந்த பத்தாண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இச்செயலிகள் இன்றைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டன.

டேட்டிங்

‘‘டேட்டிங் என்றால் என்ன?’’ அப்பெண்மணியைக் கேட்டேன். “ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும் இல்லையா அதுக்காக ஒரு நாளை ஒதுக்கி மீட் பண்றதுதான் இது. போன்லயும் ‘வீடியோ கால்’லயும் மட்டும் பேசிக்கிட்டிருந்தா ஒருத்தரைப் பத்தி எல்லாம் புரிஞ்சுடுமா என்ன... அதுக்காகத்தான் டேட்டிங் போறது” என்றார்.

டேட்டிங் என்ற வார்த்தையின் அர்த்தம் நாட்டுக்கு நாடு மாறுகிறது. காலம் செல்லச்செல்ல வேறு வடிவங்களையும் எடுக்கிறது. நேரில் பார்த்துப் பேசிப் பழக்கம் உள்ளவர்களை பர்சனலாக சந்திக்க ஒரு நாளை ஒதுக்குவது டேட்டிங் என்றால் அதே நட்பை இணையம் வழியாகப் பெறுவதுதான்  ‘ஆன்லைன் டேட்டிங்’.

குறைந்தபட்சம் ஒரு நாளாவது உடன் இருந்து பேசிப் பழகி, ஒருவேளை இவரையே நாம் திருமணம் செய்யலாமா, சரியாக வருமா என்ற முடிவை எடுக்கப் பயன்படும் இந்த டேட்டிங் கலாச்சாரம் இப்போதெல்லாம் வெவ்வேறு பரிமாணங்களை எட்டிவிட்டது.
சந்திக்கலாம், பழகலாம், எந்த எல்லை வரை போகிறதோ பார்க்கலாம். சரிவரவில்லையென்றால் விலகி விடலாம். அட அவ்வளவு ஏன், ஒரு இரவு ஸ்நேகமாக முடிந்தாலும் லாபம்தானே என்ற நினைப்பில் இது போன்ற டேட்டிங் செயலிகளில் தம் ப்ரொஃபைலைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்கள் ஏராளம்.

பெரும்பாலும் தனியாக வசிப்பவர்கள், துணையை இழந்தவர்கள், வயதாகிப் போனதால் திருமணம் செய்து கொள்ளாமல் விட்டவர்கள்... இது போன்ற செயலிகளில் மூழ்கி துணை தேடுகிறார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்றில் ஒரு பங்கினர் டேட்டிங் தளங்கள் வழியாகத்தான் தன் துணையை எட்டினோம் என்று சொல்கிறார்கள். அது போன்ற செயலிகளை இன்றளவும் நன்றி கூர்ந்து அடுத்தவருக்கு சிபாரிசும் செய்கின்றனர். அதே நேரம் இதன் மூலமாகச் சந்தித்த தவறான மனிதரிடமிருந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் ‘தெரியாத நபரின் சகவாசமும் வேண்டாம்... அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் வேண்டாம்’ என்று அலறி ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வகை செயலிகளால் ஏற்படும் நன்மை ஒரு புறம் இருக்கட்டும். இதனால் என்னென்ன தீமைகள் என்பதைத்தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

நோக்கம் என்ன?

ஒரு நட்பைத் தேடி நம் உணர்வுகளைப் பகிர்ந்து மகிழ்வோடு பயணிக்கலாம் என்றோ, இன்று வெளியூர் போகிறோம் அங்கு பொழுதுபோக யாரேனும் கிடைத்தால் இரவைப் போக்கிவிட்டு அடுத்த வேலைக்குப் போகலாம் என்றோதான் இரு வேறு எல்லைகளில் இது போன்ற தளங்களை நாடுகிறார்கள். இவ்வகை நோக்கங்களைப் பொறுத்தே உங்களின் இணையை இணையத்தில் தேடும் முயற்சி இருக்கும்.

தவறான தகவல்கள்

பெரும்பாலும் தன் சொந்தப் புகைப்படத்தைக் கொடுக்க மாட்டார்கள். மின்னஞ்சல் முகவரியில் இருந்து வசிக்கும் ஊர் வரை தவறான, போலியான முகவரிகளைக் கொடுத்திருப்பார்கள் என்ற கருத்து நிறைய பேருக்கு இருக்கிறது. ஓரளவுக்கு அது உண்மைதான். குறைந்தபட்சம் தமது புகைப்படங்கள் அழகானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். இயல்பாகவே தாம் இளமையாக அழகாக இருக்கும், ஐந்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு இருப்பார்கள். நேரில் பார்க்கும்போது ‘என்னடா இப்படி ஆகி விட்டதே’ என்று அதிர்ச்சி அடைந்து ஓடியவர்களும் உண்டு.

ஆண்களாக இருப்பின் பெரும்பாலும் தமது வேலை, வருமானம் போன்றவற்றை மிகைப்படுத்திச் சொல்வார்கள். பெண்கள் வயதை மறைக்க முயலும் நேரத்தில் ஆண்கள் வருமானத்தை மறைக்க முயற்சி செய்வார்கள்.

உதாசீனப்படும்போது ஏற்படும் வலி

தமது ப்ரொஃபைலைப் பதிவிட்டுவிட்டு நாள் கணக்கில் மாதக்கணக்கில் காத்திருப்பவர்கள் உண்டு. நமக்கான மேட்சையோ அல்லது நம் ப்ரொஃபைலை யாரேனும் விரும்பி விருப்பக்குறியிட்டு இருந்தாலோ அவரை நாம் பார்க்க விரும்புவோம். ஆனால், அந்த சர்வீஸ் உங்களுக்கு வேண்டுமானால் இந்தத் திட்டத்தில் இவ்வளவு பணம் கொடுத்து சேருங்கள் என்று அந்தச் செயலி சொல்லும். இலவசம் என்று நினைத்து உள்ளே வந்தால் காசு கேட்கிறார்களே என்ற வெறுப்பில் பணமும் கட்டிவிட்டால் உங்களுக்கு ஓரளவு வழி பிறக்கும்.
இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ ‘ஸ்வைப்’செய்வதன் மூலம் நம் நண்பரைப் பார்க்கலாம். குறுந்தகவல் அனுப்பலாம். எண்கள் பரிமாறிக்கொள்ளலாம்.

‘சரி இதெல்லாம் எனக்கு நடக்கவேயில்லையே இதுவரை’ என்று புலம்புகிறவர்கள் நிறைய பேர். என்னை யாருக்குமே பிடிக்கவில்லையா, ஒருவர்கூட எனக்குப் பொருத்தமானவர் இல்லையா என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி சுய பச்சாதாபத்தில் உழல்பவர்களும் உண்டு.

நிஜ வாழ்க்கையில்தான் மனதுக்கும் உடலுக்கும் நெருக்கமாக யாரும் கிடைக்கவில்லையே என்று ஏற்கெனவே வருத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு நிழல் வாழ்க்கையிலும் எந்த விண்ணப்பமும் வராது போனால் மனம் நோகாமல் என்ன செய்யும்?

ஏன் உங்களை விரும்பவில்லை?

டேட்டிங் தளங்களில் தம் ப்ரொஃபைலை வெறுமனே பதிந்துவிட்டு விளையாட்டு காட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என்று பிரஸ்தாபித்துவிட்டு, எத்தனை பேர் தன்னைப் பார்த்து கிறங்கிப் போகிறார்கள் என்பதை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதில் இவர்களுக்கு அலாதியான போதை. ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட நார்சிஸம் (narcissism) எனப்படும் சுயக்காதல் மேலோங்கியவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம்.

இதுவும் ஒர் அடிமைத்தனமே

டேட்டிங் தளங்கள் இன்று மிகவும் அலங்காரமாகி விட்டன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வண்ணமயமான  வடிவமைப்புகள், பல்வேறு தரப்பட்ட சந்தா தொகைகள்  என  முழு நேர  வியாபாரமாகவே  மாறி விட்டன  இத்தளங்கள். ஆக ஆன்லைன் விளையாட்டுகளைப் போலவே இது போன்ற தளங்களுக்கு அடிமையாகி விடும் வாய்ப்பும் அதிகம்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று ஒரு நட்பு ஹலோ சொல்ல மனம் சுறுசுறுப்படைகிறது. இழந்த சக்தியைத் திரட்டிக்கொண்டு மீண்டும் நட்பு வானில் சிறகடித்துப் பறக்கிறோம். ஒரு வேளை அந்த நட்பு தொடரவில்லை என்றாலும் கவலை இல்லை. எண்ணற்ற ப்ரொஃபைல்கள் இருக்கின்றன பார்க்கவும் ரசிக்கவும் பழகவும். விரல் நுனியில் நினைத்த நேரத்தில் நினைத்த நபரைப் பார்க்க முடியும், முயற்சி செய்ய முடியும் என்ற நினைப்பே பலரைக் கட்டிப் போட்டிருக்கிறது.

நட்பு பாராட்டுகிறோமோ இல்லையோ, இத்தளங்களில்மேய்வது ஒரு கிளுகிளுப்பைத் தருகிறது என்பதற்காகவே மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுபவர்கள் அதிகரித்திருக்கின்றனர். வாரத்துக்கு குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து மணி நேரங்கள் டேட்டிங் தளங்களில் மூழ்கியிருக்கிறார்கள் பல இளைஞர்கள்.

மனித குல வரலாறு ஆரம்பித்ததில் இருந்து இனப் பெருக்கத்தை முன்னிட்டு எவ்வளவோ மாற்றங்களையும் வளர்ச்சியையும் நாம் எட்டியிருக்கிறோம். 

ஆனால், எல்லாவற்றையும்விட நட்பையும், இணையையும் தேடுவதில் இது போன்ற டேட்டிங் தளங்களின் பங்கு மகத்தானது என்று 
சிலாகித்துச் சொல்லும் உளவியலாளர்களும் இருக்கிறார்கள்.

கேட்டதெல்லாம் கொட்டும் இணையத்தில் தமது இணையையும் கேட்டுப் பெறத் தயாராகும் எல்லோரும் அதன் இன்னொரு பக்கத்தையும் தெரிந்து கொண்டு களத்தில் இறங்கினால் உடலும் உள்ளமும் நலமாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in