இணையச் சிறையின் பணயக் கைதிகள் 23:  ‘திக்’ ‘திக்’ எனும் டிஜிட்டல் துரோகம்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 23: ‘திக்’ ‘திக்’ எனும் டிஜிட்டல் துரோகம்

மனித உறவுகள் மகத்தானவை. அதிலும் குடும்ப உறவுகளின் பிணைப்பினாலும் நம்பகத்தன்மையினாலும்தான் மனிதச்சங்கிலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருமண பந்தமாக இருந்தாலும் சரி... ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மற்றும் புரிதலின் வழியே ஏற்படுத்திக்கொண்ட(committed relationship) உறவாயினும் சரி… அந்த மெல்லிய உறவு நூலிழைதான் மொத்தக் குடும்பத்தின் நலனையும் பேணும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

இவ்வகை உறவுகளுக்கு அப்பாற்பட்டு வெளிவட்டாரத்தில் ஏற்படும் உறவுகளை ‘துரோகம்’ (Infidelity) என்றே அழைத்துப் பழகியிருக்கிறோம் நாம். உடல் ரீதியாக தமது துணை நெறி தவறிவிட்டார் என்பதைக் கேட்டுப் பழகியிருக்கிறோம். ஆனால், உணர்வு ரீதியாக என்னுடன் இணைய மறுக்கிறார், வேறு யாருடனோ இணையத்தின் வழியாக உறவை ஏற்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொள்கிறார் என்பன போன்ற சிக்கல்கள் தற்பொழுது மெல்ல அதிகரித்து வருகின்றன. இதைத்தான் ‘ஆன்லைன் இன்ஃபிடெலிட்டி’ (online infidelity), அதாவது இணையவழி நடக்கும் துரோகம் என்று வர்ணிக்கின்றனர் சைபர் சைக்காலஜிஸ்டுகள்.
உடல் ரீதியாகவே நெறி பிறழ்வது (physical infidelity), எண்ணங்கள் வழியாக மட்டுமே நெறி பிறழ்வது (emotional infidelity) என இதிலும் இரண்டு வகை இருக்கின்றன.

இப்படி இணையம் வழி பழகுவதை முதலில் துரோகம் என்றோ, கள்ளக்காதல் என்றோ குற்றஞ்சாட்டி விட முடியுமா என்று நாம் கேட்கலாம். பெரிய ஏமாற்றுவேலை எனக் கொள்ளாவிட்டாலும் இதுவும் துணைவரை ஏமாற்றுவதாகத்தான் கொள்ளப்படும். இதை ‘மைக்ரோ சீட்டிங்’ (micro cheating) என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு வகையில் இணைய வழி நண்பரிடத்தில் ஈர்க்கப்படும் இவர்கள் முதலில் ஃப்ளிர்ட்டிங் (flirting) என்ற அளவில் பரிமாறிக்கொண்டிருப்பர். அதாவது வெளிப்படையாக ‘நான் உன்னை விரும்புகிறேன்’ ‘உன் அழகில் மயங்கி இருக்கிறேன்’ என்று சொல்லாமல் சூசகமாகப் பல வழிகளில் அடுத்தவருக்குப் புரிய வைக்க நாம் செய்யும் காரியங்களைத் தான் ஃப்ளிர்ட்டிங் என்கிறோம்.

தமது இச்சையை இலைமறை காயாகத் தெரிவிக்கும்போதே எதிராளி வளைந்து கொடுப்பாரா இல்லையா என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப காய் நகர்த்துபவர்களும் இருக்கிறார்கள்.
அடுத்து, தம்மைப் பற்றிய எல்லா விஷயங்களையும் மெல்ல மெல்ல ஆன்லைன் நண்பரிடத்தில் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவர். குடும்பப் பிரச்சினைகள் 

முதல் தாம்பத்ய வாழ்க்கை வரை எல்லாம் பகிரப் படும்போது இந்த உறவு அடுத்த கட்டத்துக்குப் போய் விடுகிறது.
இதற்கென்றே காத்திருந்தது போல் நம்மை அரவணைப்பது மாதிரியான வசனங்கள், உத்தரவாதங்கள் எல்லாம் கொடுக்கப்படும். சாய்வதற்குத் தோள் கிடைக்காதா என்று நினைத்திருந்த நேரத்தில் நடைபெறும் இச்சம்பாஷணைகள் நம்மை அவரின் காலில் விழும்படியாகவே செய்து விடும்.

அதன் பின் அடுத்த கட்டம்  ‘செக்ஸ்டிங்’. எவ்வளவு நேரம்தான் வீட்டு விஷயங்கள், நாட்டு நடப்புகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது? சில தனியான நேரங்களில் தனியான சமாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கும் இவர்கள் நகரும் அடுத்த கட்டம்தான் ஆபத்தானது; விரசங்கள் நிறைந்தது.


புகைப்படங்கள். குறுந்தகவல்கள் சிறு காணொலிகள் வாயிலாக அந்தரங்க இச்சைகளைக் குறிக்கும் வகையில் பரிமாறிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். விரசம் நிறைந்த, பாலியல் இச்சைகளுக்கு வடிகாலான விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதைத்தான் ‘செக்ஸ்டிங்’ (sexting) என்கிறோம்.


கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கதவைச் சாத்திக்கொண்டு வீடியோ அழைப்பின் மூலமாக ஆன்லைன் நண்பருடன் மணிக்கணக்கில் அளவளாவிக் கொண்டிருப்பதே முழுநேர வேலையாகிப் போய் விடுகிறது. தவறு செய்ய ஆரம்பித்தவுடன் எல்லாவித திருட்டுத்தனங்களும் கூடவே ஒட்டிக்கொண்டு விடும். செல்போனுக்கும், மடிக்கணினிக்கும் கடவுச்சொல் உள்பட எல்லாப் பூட்டும் போட்டுப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது. பல விஷயங்களில் பொய் சர்வ சாதாரணமாகப் புழங்கும்.
நேரடியான உறவின் உன்னதத்தை இழக்கத் தொடங்கும் இவர்கள் மெய்நிகர் நட்பின் மாயப்போதைக்குக் கட்டுண்டு கடைசியில் சைபர் செக்ஸுக்கு அடிமையாகி விடும் அவலமும் நடக்கிறது.

தனது துணைவரைக் காரணமின்றி உதாசீனப்படுத்துவார்கள். காரணமின்றி அவரிடமும் குழந்தைகளிடமும் கூடக் கோபப்படும் இவர்களின் நடவடிக்கையைப் புரிந்து கொள்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அவரது கள்ளத்தனம் தெரிந்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் பார்ட்னர்கள்.
‘பெரிதாகக் கண்டிப்பதற்கு என்ன உடல் ரீதியாகவா முறை தவறி விட்டனர்’ என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டாலும், நாளடைவில் தன்னவர் தன்னைவிட்டு விலகிக்கொண்டே வருவதன் காரணம் ஆன்லைன் உறவுதான் என்பதைப் புரிந்து கொண்டு துடியாய்த் துடிப்பர்.

இயலாமையும் ஆற்றாமையும் ஒருசேர ஆட்டுவிக்கும் நிலையில் கடும் குடும்பக் குழப்பங்கள் ஏற்படும். விளைவு... விவாகரத்தில் கூட வந்து விடுகிறது. அல்லது கடும் மனச்சோர்வு, பயம் ஏற்பட்டு சமயங்களில் தற்கொலையிலும் முடிவதுண்டு.
அப்படி ஒரு காந்தசக்தி இதுபோன்ற இணைய வழி உறவுகளுக்கு இருக்கிறதா என்று ஆச்சரியப் படலாம். இருக்கிறது என்பதே உண்மை. அருகே நிஜமாக இருக்கும் துணைவர் எல்லாம் செய்யக் காத்திருந்தும் எங்கோ இருக்கும் ஒரு நபருக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் அறியாமையை என்னென்பது? சாதாரண ‘ஹலோ’ என்னும் தகவல்கூட இணைய வழியாக வரும்போது ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விடுகிறது.

இதுபோன்ற நட்புகள் பெரும்பாலும் விரசப் பரிமாற்றங்களுடன் முடிந்தாலும் சில நட்புகள் அடுத்த கட்டத்துக்குப் போயே தீரும். அதாவது நேரில் சந்தித்து உறவைப் பலப்படுத்திக் கொள்வது. அங்கிருந்து இன்னும் பல பிரச்சினைகள் மேலும் பூதாகரமாக மேலெழும்பத் துவங்கும். இதுவரை உணர்வு ரீதியில் தொடர்ந்த நட்பு, உடல் ரீதியாகவும் வளரத் தொடங்கி விடுகிறது. அதன் பின் அக்குடும்பத்தில் வீசும் புயலைப் பற்றி யாரும் சொல்லத் தேவையில்லை.

இப்படி முகநூல் வழியாக இருவர் முகம் தெரியாமல்  நெடுநாள் பேசிக் கொண்டிருந்தார்களாம். எவ்வளவு நாள்தான் இப்படியே பேசிக்கொண்டிருப்பது என்று நேரில் சந்திக்க முடிவு செய்தனர். நாள் கிழமை எல்லாம் குறித்தனர். சந்தித்தனர். அய்யகோ… சந்தித்த வேளையில் ஆளுக்கொரு புறமாகத் தெறித்து விழுந்தனர். பின்னே, புருஷன் பெண்டாட்டியையே அல்லது பெண்டாட்டி புருஷனையே மீண்டும் நேரில் சந்தித்தால் எவ்வளவு பெரிய கொடூரம் அது? இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்தது.
நகைச்சுவைப் பூச்சோடு இச்சம்பவம் இருந்தாலும் எவ்வளவு ஆழமான உண்மைகளைத் தாங்கி இருக்கிறது பாருங்கள். அவ்வளவு நாள் பேசிக்கொண்டாலும் இருவருமே பரஸ்பரம் உண்மையான முகத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. இணைய வழித்தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான் இருவருக்கும் இருந்தது. அதேநேரம் தம் அடையாளத்தை மறைப்பதிலும் இருவரின் கருத்தும் ஒன்றாக இருந்தது ஆச்சரியம்!

இணையத்தின் மூலம் நாம் ‘சாட்’ செய்யும் பலரும் போலிக்கணக்குகளிலும் போலி முகங்களுடனும்தான் உலவுகின்றனர். காம விளையாட்டுக்கான களம்தானே என்ற நினைப்பில் தம்மை நம்பி அணுகுபவர்களைக்கூட ஏமாற்றத் தயங்காதவர்களின் கூட்டம் இணையவெளியில் ஏராளமாக உலவிக் கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாவித வேட்கைகளையும் இணையம் மூலமே தீர்த்துக்கொள்ளும் இத்தகைய சைபர்செக்ஸ் வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. ஆன்லைன் கேம்கள், ஆன்லைன் சூதாட்டம் போன்று இதற்கும் அடிமைத்தனம் ஏற்பட்டுவிடுகிறது. கணிசமான நேரம் இதிலேயே செலவாகிப் போவதால் அவர்தம் வேலை, குடும்பப் பொறுப்புகள் போன்றவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. இதிலிருந்து மீள முடியாமல் பலரும் கடும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.

எந்தக் காரணமும் இன்றியே தன் மனைவியைச் சந்தேகப்படுவார் ஒரு கணவர். பல மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். அவரின் குணம் அறிந்து மனைவியும் எந்த ஆண்களிடமும் பேசுவதையோ பழகுவதையோ நிறுத்திவிட்டார். யதேச்சையாக ஒரு முறை கணவரின் சந்தேக புத்தியைப் பற்றித் தன் அக்காள் கணவருடன் பகிர்ந்துகொண்டு விட்டார்.
பின் அவ்வப்போது அவரிடம் போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒருமுறை தன் கணவன் வீட்டுக்குள் நுழையும்போது மேற்படி நபருடன் பேசிக்கொண்டிருக்க, கணவன்  “யாரிடம் பேசுகிறாய்?” எனக் கேட்க, அதற்குள் பேசிய எண்ணை மனைவி அழித்துவிட... பிரச்சினை பெரிதாகி விட்டது.
எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறேன் பார் என்று கிளம்பிய கணவன் தன் மனைவி போனில் பேசிய மொத்த அழைப்பு விவரங்களையும் எடுத்துவிட்டார். எந்தத் தவறான தொடர்பும் தனக்கு இல்லை என்று மனைவி சத்தியம் பண்ணிச் சொன்னபோதும்  “அப்புறம் எதுக்காக தினமும் இவ்வளவு நேரம் பேசியிருக்கறே... ராத்திரி பதினோரு மணிக்கு மேல மட்டும் இத்தனை மெசேஜ் அனுப்பியிருக்கே... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்” என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டு விட்டார் கணவர்.
அவ்வப்போது மது அருந்திக்கொண்டு இருந்த அந்த இளைஞர் தற்போது தினமும் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்கே வருகிறார். ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த அவருக்கு தன் மனைவியின் ரகசிய நடவடிக்கைகள் சந்தேகத்தை அதிகரித்து விட்டன என்பதில் ஐயமில்லை.

இன்னொரு பெண்ணுக்குத் தன் கணவன் மீது சந்தேகம்.  “அந்தப் பொண்ணுகூட பேசலேங்கறார்... ஆனால், அவள் பெயர் தனலட்சுமி. அதனாலதான் ‘தனா’ ன்னு போன்ல ‘சேவ்’ பண்ணி வெச்சிருக்கார். கேட்டா, ‘என் ஃப்ரெண்டு தனசேகர் பேரைத்தான் அப்படி சுருக்கமாக வச்சிருக்கேன்’னு சொல்றார் சார்... எதுவும் நம்பற மாதிரி இல்லே...” என்று என்னிடம் சொன்னார் விசும்பலுடன்.
ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கூட தங்கள் துணை தவறு செய்கிறார்களோ என்ற சந்தேகமும் செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளும், இணையமும் இதற்குப் பேருதவி புரிகின்றன என்ற ஐயப்பாடும் நிறையவே இருக்கின்றன. தப்பான தொடர்புகளுக்கு செல்போன் பயன்படுகிறது என்ற புரிதல் கணிசமானவர்களுக்கு இருக்கிறது.
ஆன்லைன் மூலம் ஏற்படும் உறவுகள் நல்லதா கெட்டதா என்பது வேறு விவாதம். ஆனால், முன்பெல்லாம் கடிதம் வழியாகவும், கண் வழியாகவும், நண்பன் விடு தூதாகவும், தோழி விடு தூதாகவும் பேசிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய் விட்டது. ஒரே நேரத்தில் நான்கு பேருடன் நான்கு அடையாளங்களில் நான்கு காரணங்களுக்காக நான்கு வெவ்வேறு இடங்களில் சந்திப்போம் என்று சொல்லி விளையாட்டுகளில் ஈடுபடும் இணைய ரோமியோக்களின் காலம் இது.

(இணைவோம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in