இணையச் சிறையின் பணயக் கைதிகள் 22- ‘ஆன்லைன்’ உறவுகளின் மறுபக்கம்...

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 22- ‘ஆன்லைன்’ உறவுகளின் மறுபக்கம்...

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த ஒரு இளம் பெண்ணின் பிரச்சினை கொஞ்சம் வித்தியாசமானது. திருமணமாகி இரண்டு குழந்தைகள், நல்ல வேலையில் இருக்கும் கணவன் என அமைதியான அழகான குடும்பம் அவருடையது. குடும்பத்தலைவியாக வீட்டில் பணிகளைக் கவனித்து வந்த அவருக்கு செல்போனில் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் (நம்ம ஊர்) இளைஞனிடம் பேசிப் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

அழைத்து வந்த கணவன் சொல்ல ஆரம்பித்தார். “மூணு மாசத்துக்கும் மேலே அந்தப் பையங்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க சார்... திடீர்னு அந்தப் பையன் பேசறதை நிறுத்திட்டான். அவனுக்குக் கல்யாணம் ஆகப் போகுதுங்கற மாதிரியும் வேலை மாறிட்டதால முன்பு போல் பேச முடியாமல் போனதாகவும் இவங்க சொல்றாங்க. ஆனால், அதிலிருந்தே எல்லா பிரச்சினையும் ஒவ்வொண்ணா ஆரம்பிச்சிடுச்சி. தாங்க மாட்டாம அழறா. குழந்தைங்ககிட்ட எரிஞ்சி விழறா. செல்போனையும் தூக்கிப் போட்டு உடைச்சிட்டாங்க. தானும் சரியா சாப்பிடறதில்லே... எங்களுக்கும் சமைக்கறதில்லே... இதுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸ் ஆகக் கூடாதுன்னு நானும் பல முறை சொல்லிட்டேன்... ஊஹீம்” என்றார் அந்தக் கணவர்.

 “அதெப்படி சார் அந்தப்பையன் திடீர்னு பேசறதை நிறுத்தலாம்... தினமும் எங்கிட்டே பேசாம இருக்க மாட்டான். வீடியோ கால் பண்ணிப் பேசாம அவன் இருந்ததே இல்லை. என்ன காரணம்னும் என்கிட்டே சொல்லலை. இப்போ சுத்தமா என்கிட்டே தொடர்பு இல்லை. மனசு தாங்க மாட்டேங்குது சார்... எதையோ பறி கொடுத்த மாதிரியும் இருக்கு. காரணம் என்னன்னு தெரியாம மண்டை வெடிச்சிடும் போலவும் இருக்கு” என்று விசும்பலுடன் சொன்னார் அந்த இளம் குடும்பத்தலைவி.

அவர் வசிப்பது ஒரு புறநகர்ப்பகுதி. கல்லூரி இளங்கலைப் படிப்பு முடித்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமே பரஸ்பர அன்பில் குறையில்லை. தாம்பத்யம் முதல் தங்கநகை வாங்குவது வரை இருவர் கருத்தும் ஒன்றாகவே இருக்குமென்றும் பேச்சினூடே தெரிவித்தார்கள்.

பின் எதனால் அந்தப் பெண் இப்படிப் புலம்புகிறார்? போனில் பேசிப் பழகிய பையனிடம் இருந்து இவருக்கு என்ன வேண்டும்? நிச்சயமாக இவரை விட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கும் ஒரு இளைஞனிடம் இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு எப்படிப்பட்டது? பாலியல் ரீதியாக இதற்கு காரணங்கள் இருக்க முடியுமா? இப்படியான ஆன்லைன் உறவுகளின் தாக்கம் என்ன?ஆன்லைன் உறவால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடியாக வேண்டும்.

ஆழமாகப் பேசுகையில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். கல்லூரியில் படிக்கும்போதும் சக மாணவனுடன் காதல். பெற்றோருக்குத் தெரிந்து கண்டிக்கப்பட்டவுடன் அதிலிருந்து மீண்டு வந்து விட்டார். அவருடைய நட்பு வட்டத்தில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாம். மொபைல் போன் பிரியர். இருபத்து நான்கு மணி நேரமும் போனில் இணையத் தொடர்பு ‘ஆன்’ செய்யப்பட்டுதான் இருக்கும். குறிப்பிட்ட அந்த இளைஞரோடு ‘ஸ்கைப்’ (skype) மூலமாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பாராம்.

எந்த நேரமும் வண்ணமயமான ஆடை அணிந்து கொண்டு புத்துணர்ச்சியுடன் இருக்கவே விரும்புவார். குறிப்பாக அவரது அழகையும், சமையலையும் ரசித்துச் சொல்லிவிட்டால் குதூகலத்தின் உச்சிக்கே சென்று விடுவாராம். இவையெல்லாம் அவரிடமும் குடும்பத்தாரிடமும் பேசி நான் கிரகித்துக் கொண்டவை.

ஏன் இவ்வளவு விவரிக்கிறேன் என்றால் இதுபோன்ற குணாதிசயங்களுக்கும் இப்போது அவர் சிரமப்படும் விஷயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இணையமும் ஸ்மார்ட்போனும் நம் உலகத்தை இன்னும் நவீனம் ஆக்கியதன் பின் நிறைய நடத்தை மாற்றங்களை நாம் அனைவருமே உணர முடிகிறது. பஸ் நிறுத்தத்தில் நின்று போனில்  ‘சாட்’ செய்து கொண்டிருக்கும் மாணவி சேலம் போகும் பஸ்ஸுக்குப் பதிலாக திருச்சி போகும் பஸ்ஸில் ஏறுகிறார். டீக்கடையில் வடை, டீ சாப்பிட்டுவிட்டு போனைப் பார்த்துக்கொண்டே பைசா கொடுக்க மறந்து கிளம்பி விடுகிறோம். ரயில் நிலையத்தில் மனைவியை வரவேற்க வந்த இடத்தில் முகநூலில் மூழ்கி, ரயில் வரும் அறிவிப்பை கவனிக்கத் தவறி அது வந்தபின் திடீரென மனைவி இருக்கும் பெட்டி நினைவுக்கு வந்தவராய் பரபரப்பாக ஓடுகிறோம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

செல்போன் திரைகளில் இப்படி நம்மை மூழ்கடித்துக் கொள்வதன் காரணங்கள் இன்னும்கூட ஆய்வு நிலையில்தான் இருக்கின்றன. இயல்பான நிஜங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை தரும் வெம்மையைத் தணித்துக் கொள்ளபல மாற்று நடத்தைகளை நம் மனம் விரும்புகிறது.

அந்த இடத்தைவிட்டு, அந்தச் சூழ்நிலையை அப்போதைக்கு மறந்துவிட்டு, வேறு விஷயங்களில் நம் மனம் ஆழ்ந்து போகும்போது தற்காலிகமான ஒரு நிம்மதியும், விடுபட்டு வந்த ஒரு சுகமும் கிடைக்க மனம் அதில் மயங்கி விடுகிறது. மீண்டும் மீண்டும் அதையே எதிர்பார்க்கிறது.

குடிப்பழக்கம் உள்ளவர்களைக் கேட்டால் சாதாரணமாகச் சொல்வார்கள். “கொஞ்ச நேரமாவது இந்தப் பிரச்சினைகளை எல்லாம் மறந்து இருக்கலாம்னுதான் சார் குடிக்கிறேன்” என்று. அது போல பல தகவல்களின் பெருஞ்சுரங்கமாக விளங்கும் இணையத்தின் வாயிலை ஸ்மார்ட்போன் என்ற சாவி கொண்டு திறந்து அப்பெருங்கடலில் மூழ்கிக் கிறங்கிப் போய் விடுகிறோம்.

கிட்டத்தட்ட நம்மை விட்டு நாமே விலகிப்போய் வேறு ஒரு உலகத்துக்குள் சஞ்சரிக்கச் சென்று விடுகிறோம். இதை ‘டிஸ்ஸோசியேஷன்’(dissociation) என்றேவர்ணிக்கின்றனர் சில உளவியலாளர்கள். பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காக நம் ஆழ்மனது மேற்கொள்ளும் பலவித வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

இதன் விளைவுதான்  ‘விரீச் விரீச்’ என்று அழுது கொண்டிருக்கும் ஐந்து வயதுக் குழந்தையின் கையில் மொபைல் போனைக் கொடுத்தால் அந்த வினாடியில் அது அழுகையை நிறுத்துகிறது. கோயிலில் மொட்டை அடிக்க உட்காரவைத்தவுடன் நாவிதர் கத்தியை எடுப்பதற்கு முன் பெற்றோர் மொபைலை குழந்தையின் கையில் கொடுக்கின்றனர். முழுமொட்டையும் அடித்து முடிக்கும்வரை அசையாமல் இருக்கிறது குழந்தை.

எந்தக் காரணத்துக்காகக் குழந்தை அழுதாலும் அவர் கையில் மொபைலைத் திணித்து விட்டால் நம் வேலையை நாம் நிம்மதியாகச் செய்துவிடலாம் என்பது இப்போது நிறைய பெற்றோருக்குப் பழக்கமாகிவிட்டது.

குழந்தைகளுக்கே உரிய துறுதுறுப்பு, ஓரிடத்தில் நிற்காமல் பரபரப்பாக ஓடுவது, விளையாடுவது, உணவு சாப்பிட அழுவது எனப் பல விஷயங்களைச் சரிக்கட்ட ஒரு கிரியா ஊக்கியாக விளங்குகின்றன இணையமும் ஸ்மார்ட்போனும்.

நிற்க. நாம் மேலே பார்த்த குடும்பத்தலைவி ஏதோ ஒரு வகையில் அந்த இளைஞனுக்கு அறிமுகமாகிறார். இருவரும் இதுவரை நேரில் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் அன்றாடம் இணையம் வழியாகப் பார்த்துப் பேசிப் பலவற்றைப் பரிமாறிக்கொள்கின்றனர். இயல்பாகவே நம்மை யாரேனும் பாராட்டிப் பேசினாலோ, நம் அழகைப் புகழ்ந்தாலோ அவரை நமக்குப் பிடித்துப்போய்விடும். அவ்வகையில் அந்த இளைஞர் இப்பெண்ணை வெகுவாகப் புகழ்ந்து வர்ணித்துப் பாராட்டி பலவகையிலும் அவர் மனம் கவர்ந்து விடுகிறார். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் ஆன்லைனில் இருந்துள்ளனர்.

வழக்கமான குடும்பப் பணிகளின் செயற்கைத் தன்மையை மறக்கத் தன்னைத் தொடுதிரையின் பின்னே ஒளித்துக்கொண்ட அப்பெண்ணைப் போல் பலர் உள்ளனர். பேச ஆரம்பித்த சில காலத்திலேயே இது போன்ற இணைய நட்பு வேறு  ‘எல்லைகளுக்கும்’ போகின்றது. உடைத்துச் சொல்வது என்றால் பாலியல் ரீதியான வேட்கைகளுக்கு வடிகாலாகப் பலரும் இணைய வழி நட்பைப் பயன்படுத்தத் துணிகிறார்கள்.

ஸ்கைப், வெப்கேம்,வாட்ஸ் - அப் வீடியோ அழைப்புகள் எனப் பல விதங்களில் தொடுதிரையில் பார்த்துக்கொள்ள முடிவதால் இது போன்ற ஆன்லைன் உறவுகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

வெளிநாடுகளில் ஆன்லைன் உறவு என்றாலே பெரும்பாலும்  ‘டேட்டிங்’ இணைய தளங்கள் (dating sites) மூலம் ஒரு இணையைத் தேடிப்பழகுவதுதான் நினைவுக்கு வருகிறது. தமக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலர் பல்வேறு டேட்டிங் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றின் வழியாக தம் இணையைக் கண்டு கொண்டு, மணமும் முடித்து மகிழ்வாகவும் வாழ்கின்றனர்.

‘வெறும் நட்பு மட்டுமே’ என்று ஒப்பந்தம் செய்துகொண்டு பார்ப்பது, பழகுவது, பரஸ்பரம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியது, முடிந்தால் அந்த நட்பைத் தொடர வேண்டியது, இல்லாவிட்டால் ஒரு ‘குட்பை’ சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வது என்று அத்தளங்களைப் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல் முகநூல், வாட்ஸ்- அப் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஏராளமானவர்கள் ஆன்லைன் நட்பைத் துவங்கிக் கொண்டு செல்கின்றனர்.

ஆன்லைனில் பேசுபவரின் அடையாளம் மறைக்கப்பட்டோ அல்லது பொய்யாகத் திரிக்கப்பட்டோ இருந்தால்கூட அதைப்பற்றி அறியாமல்/அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ‘சாட்டிங்’கில் இருக்கும் நிறைய பேரை நாம் பார்க்கலாம்.
தனக்குத் தோதான பெண்ணோ பையனோ சிக்கும் வரை மிகவும் நாகரிகமாக நடந்து கொண்டுவிட்டு, ஒரு கட்டத்தில் தம் விருப்பத்தைப் பல்வேறு விதங்களில் தெரிவிக்கும் சூத்திரதாரிகளும் உண்டு. இவர்கள் லேசாக விரசப் பேச்சைத் துவங்கி (flirting) நாளுக்கு நாள் மனதில் காம லாவண்யங்களைப் படிப்படியாகத் தூண்டிக் கடைசியில் தம் வழிக்குக் கொண்டு வந்து ஸ்கிரீன் வழியாகவே எல்லா இச்சைகளையும் தீர்த்துக்கொள்ளப் பழகிக் கொடுத்து விடுவார்கள். இதை சைபர்செக்ஸ்’(cybersex) என்றே சொல்கிறோம்.

நல்ல வாழ்க்கைத்துணை அமைந்திருந்தாலும் கூட தெரிந்தோ தெரியாமலோ இது போன்று இணையவழியில் ஒரு நட்பை உண்டாக்கிக்கொண்டு அன்றாட விஷயங்கள் தொடங்கி அந்தரங்க விஷயங்கள் வரை  ‘இ-பார்ட்னரி’டம் பகிர்ந்து கொள்பவர்கள் ஏராளம். இதனால் அக்குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களும் ஏராளம். இவ்வகை டிஜிட்டல் துரோகத்துக்கு  ‘ஆன்லைன் இன்ஃபிடலிடி’(online infidelity) என்றே பெயர். அது பற்றி அடுத்த வாரம்…
(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in