மண்.. மனம்.. மனிதர்கள்! - 21

பாச்சு மாமா
மண்.. மனம்.. மனிதர்கள்! - 21

கார் ஷெட்டோடு கூடிய மூன்றடுக்கு வீடு. செங்கல்பட்டில் 12 ஏக்கர் நிலம். எம் காம்., படிப்பு. ஐ ஓ பி-யில் கேஷியர் வேலை. எதுவுமே பெரிசில்லை பார்த்தசாரதி என்னும் பாச்சு மாமாவுக்கு.

காத்தாடி என்றால் உயிர்.

திருவல்லிக்கேணியில் அஞ்சாம் நம்பர் வீட்டுக் காத்தாடி எழும்பி நிற்கிறது என்றால் சுத்து வட்டாரத்தில் பீதி கிளம்பும் .
பொதுவாக திருவல்லிக்கேணி வானத்தில் பாணா காத்தாடி ஒன்று நின்று விளையாடுகிறது என்றால் ஒன்று அது சிவராஜபுரத்து தாதா கோல்டு எழுப்பியதாக இருக்கும். அல்லது கிருஷ்ணாம்பேட்டை தாதா துரைராஜ் சுடுகாட்டிலிருந்து எழுப்பியதாக இருக்கும் .
பறக்கும் விதத்திலேயே அது யாருடையது என்று தெரிந்து விடும். சாதா காத்தாடிகள் எல்லாம் அவசர அவசரமாக சைடு வாங்கி கடகடவெனத் தரையிறக்கப்பட்டுவிடும். அவ்வளவு அச்சம்.

சும்மாவா ?
வஜ்ஜிரம், ‘வாட்லோடு’ எனப்படும் பவுடராக நசிக்கப்பட்ட பாட்டில் துண்டுகள், மயில்துத்தம், பன்றியின் காய்ந்த மலம் இன்னும் எந்தெந்தக் கருமத்தையெல்லாமோ கலந்த  ‘மாஞ்சா’ எனப்படும் அந்த மந்திர வஸ்துவோடு பெரிஞ்சகிரி நூலில் எழுப்பப்படும் தாதாக்களின் காத்தாடியை நெருங்குவது என்பது பட்டை வெயிலில் தூக்கில் தொங்குவதற்குச் சமானம்.

காத்தாடி டீலில் தாதாக்களின் காத்தாடியை யாரேனும் ‘காலி’ செய்துவிட்டால் கிழிஞ்சுது கதை. அடிப்பொடிகள் வீடு தேடி வந்து அதகளம் செய்து விடுவார்கள் .

அசர மாட்டார் பாச்சு மாமா.  “வாங்கடா ஜாட்டான்...” என்றபடி பாணா எழுப்பிக் காட்டுவார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன்  பேண்ட் எய்டை விரல்களில் சுற்றிக்கொண்டு பரபரவென மாஞ்சா நூலை விட்டு சுண்டிச் சுண்டி இழுப்பார்.

எதிர் காத்தாடியோடு டீல் போடும் நேரம் அலாதியான தியான நிலைக்குப் போய் விடுவார். சடக்சடக்கெனத் திரும்பி நூல் விடும் கருவியான ‘லொட்டாயி’யை நாங்கள் சரியாக பிடித்துக்கொண்டு பின் தொடருகிறோமா என்று செக் செய்துகொண்டே இருப்பார்.
அந்த நேரம் அவரது முகத்தைப் பார்க்க வேண்டும். தூணைப் பிளப்பதற்கு முன் இருந்த நரசிம்மரைப் போல வெகு உன்னிப்பாக இருக்கும்.
வீட்டு மாடியில் காத்தாடிக்கெனத் தனி அறையையே ஒதுக்கி வைத்திருந்தார் பாச்சு மாமா.
அலமாரிக்குள் ஹிக்கின்பாதம்ஸிலிருந்து வாங்கி வரப்பட்ட EARLY AVIATION , THE ART OF JAPANESE KITE போன்ற புத்தகங்கள் இருக்கும். அடிக்கடி விழுப்புரம் போய் வருவார். மாஞ்சா போடும் டெக்னிக் அங்குதான் ப்ரஸித்தமாம் .
மாடி அறையில் வேட்டியைக் கோவணம் போல சுற்றிக் கட்டிக்கொண்டு ஹோமம் வளர்ப்பது போல அமர்ந்தபடி விறகு அடுப்பை மூட்டி நீளமான இரும்பு ஊதுகுழலை வைத்து “உஷ்..உஷ்..” என்று ஊதிக் கொண்டிருப்பார். விறகு அடுப்பில்தான் மாஞ்சா சாமான்கள் பக்காவாக வேகும் என்பார்.

எங்களைப் போல சிறுவர்களை ஏவல் துணைக்கு வைத்துக்கொண்டு அறை முழுதும் குறுக்கும் மறுக்குமாக ஹாங்கர் அடித்து பெரிஞ்சகிரி நூலில் கொல்கத்தா ஸ்டைல் மாஞ்சா போடுவார்.
கொடூர நாத்தம் அடிக்கும் அந்த அறையில் நாற்றத்தைப் போக்குகிறேன் பேர்வழி என்று கெட்டியான மட்டிப்பால் ஊதுபத்தி ஒன்றை ஏற்றி வைப்பார். இரண்டும் சேர்ந்து இன்னும் குமட்டும்.

எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை பாச்சு மாமா. காத்தாடி ஒன்றே குறி.
பாச்சு மாமாவின் அம்மா கோதை அப்படியே ஆப்போஸிட். படு மடி. பச்சைத் தண்ணி பல்படாமல் “சிந்தூராருண நிக்ரஹாம். திரி நயனாம்...” என ஆரம்பித்து மூச்சு விடாமல் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி எழக்கூடிய கேரக்டர்.
பூண்டு வாசனையே பிடிக்காத அவளுக்கு மாஞ்சா நாத்தம் பிடுங்கி எடுக்காதா? பல்லைக் கடித்துக் கொண்டு காலம் தள்ளினாள். சிறு வயதிலேயே விதவையாகிவிட்ட அவளுக்கு இருக்கும் ஒரே துணை பாச்சு மாமாதானே.
அவளுக்கு இருந்த ஒரே குறை 40 வயது ஆகி முன் வழுக்கை விழுந்த பின்னும் தன் மகனுக்கு இன்னும் கல்யாண ப்ராப்தி வரவில்லையே என்பதுதான். எப்படி வரும்?

அந்த வேளையும் வந்தது. ஸ்ரீரங்கம் ஜீயருக்கு தூரத்து சொந்தம் என்று சொல்லிக்கொண்டு 32 வயதில் செவ்வாய் தோஷத்தோடு ஒரு ஜாதகம் வந்தது.
பட்டப்படிப்பு. ஏஜிஎஸ் ஆபீஸில் வேலை. முப்பது ஏக்கர் சொத்து. ஒரே பெண். விடுவாளா கோதை.  “தோஷமாவது கோஷமாவது எல்லாம் பெருமாள் பாத்துப்பர்” என்றாள் கோதை.
 “கல்யாணமா... எனக்கா? அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா” என்று பாச்சு மாமா எகிற ஓவென்று அழுதாள் கோதை.
“பெத்தவள கதறவிடாதேடா, காலில் வேணும்னா விழறேண்டா பாச்சு...” தொபுக்கட்டீர்ன்னு கீழே விழுந்து விட்ட அம்மாவைத் தட்ட முடியாமல் போனது.

“தோ பாரும்மா... பொண்ணு பாக்க வா, சொஜ்ஜி சாப்பிட வான்னு என்கிட்ட வந்து நிக்காத... எந்தக் கல்யாணமானாலும் தீபாவளிக்கு அப்புறம் வெச்சுக்கோ...”
“தீபாவளிக்கு அப்புறமான்னா மார்கழி வந்துடுமேண்டா பாச்சு..?”
“ரெண்டுத்துக்கும் நடுவுல எத்தன்னா பாத்துத் தொலையேன்மா...”
“சரிடா, சரிப்பா...எதுக்கு கோவிச்சுக்கற. பொண்ணாத்துக்காராளை நம்மாத்துக்கே வரச் சொல்லிடுறேன்ப்பா...”
தீபாவளிக்கு முந்தைய சீஸன் பாச்சு மாமாவுக்கு ரொம்ப முக்கியம். காற்று வீசி அடிக்கும் காலமல்லவா?
 ‘தீவாளி காத்தாடி’ என்று தனியாக லீவ் போட்டு இறங்குவார். விழுப்புரத்திலிருந்து ஸ்பெஷல் காத்தாடிகளை வரவழைப்பார்.
அங்கே மாஞ்சாவுக்கென்று தனி மெஷின் உண்டாம். நாலு பக்க நோட்ஸ் எழுதி அனுப்பி ஸ்பெஷல் மாஞ்சாவைத் தருவிப்பார்.
வீசும் காற்றுக்கு ஏற்றாற்போல சூஸ்திரம் போட்டு பாச்சு மாமா எழுப்பும் காத்தாடிக்கு அத்தனைக் காத்தாடிக்காரர்களும் அஞ்சுவார்கள்.

பாச்சு மாமாவுக்கு ரிஷப ராசி என்பதால் நாள் நட்சத்திரம் பார்த்து பெண் வீட்டில் அடித்துப் பேசி நவம்பர் 20 ஐ ஃபிக்ஸ் செய்தே விட்டாள் கோதை.

பெத்த கடமை முடிந்தது எனக் குதூகலித்துக் கொண்டிருந்த கோதைக்கு தீபாவளிக்கு முந்தைய வாரம் நடந்த கூத்து தெரியாது.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மத்தியான வேளை. மணி சுமார் இரண்டு போல இருக்கும்.
பாச்சு மாமாவின் காத்தாடியை சுடுகாட்டு துரைராஜின் காத்தாடி ஒரே அறுப்பில் காலி செய்துவிட்டது. காலி செய்தது மட்டுமில்லாமல் சுற்றி சுற்றி ‘பலேட்’ போட்டுக் காட்டி சீண்டிக் கொண்டேயிருந்தது.
மாடியில் சிறுவர்கள் நாங்கள் ஒரு பத்துப் பேர் மனமொடிந்து நின்று கொண்டிருந்தோம். பாச்சு மாமாவுக்கு அவமானம் பிடுங்கியது.
பனியனுக்கு உள்ளே கையை விட்டவர் பரபரவெனத் துழாவி பூணூலில் கோர்த்திருந்த காத்தாடி ரூம் கீயை உருவி எடுத்தபடி என்னை அழைத்தார்.

“டேய்...கீழ போ. கொல்கத்தா ப்ரீடு ஒண்ணு பீரோவுக்குப் பின்னால சாய்ச்சி வெச்சிருக்கேன். ஃபுல் ஷீட் பாணா. ரோஸ் கலர்ல இருக்கும். அதும் பக்கத்துல ப்ளூ கலர்ல மாஞ்சா லொட்டாயி ரெண்டு இருக்கும். ஒவ்வொண்ணும் பத்துக் கட்டு. அலுங்காம தூக்கிட்டு வா. மவன... விடக் கூடாதுடா...”

அடுத்த ஒரு மணி நேரம் திருவல்லிக்கேணி வானம் களேபரமானது.
சிவராஜபுரத்திலிருந்தும் சுடுகாட்டிலிருந்தும் மாறி மாறி எழுப்பப்பட்ட பாணாக் காத்தாடிகள் அத்தனையையும் வெறிகொண்டு காலி செய்தார் பாச்சு மாமா. 
ஒரு கட்டத்தில் சுடுகாட்டு காத்தாடி ஒன்று சைடு வாங்கிப் போக விடாமல் விரட்டினார்.
“வேணாம் மாமா...காத்து தோது இல்ல மாமா...” ன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் “இர்றா, அவன வலிச்சி வாங்கறேன் பாரு...”ன்னு அழிச்சாட்டியமாக இழுத்து துவம்சம் செய்தார்.
ஏறத்தாழ 12 காத்தாடிகள் அனாதையாக அலைபாய்ந்து போக சுடுகாட்டு துரைராஜ் தரப்பு டென்ஷனானது. பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

தீபாவளி கடந்து நவம்பர் 20 வந்தது.

கோதை பரபரத்தாள். பருப்புப் பாயசம் பண்ணித் தரேன் வாங்க டான்னு எங்களை அழைத்து மாடி ரூமை க்ளீன் பண்ணச் சொன்னாள். மாக்கோலமும் மங்கலமுமாக அஞ்சாம் நம்பர் வீடு களை கட்டியது.
ஜீயர் வழி சம்பந்தமாயிற்றே என்று பார்த்தசாரதி கோயில் சம்பத் பட்டரையும் வக்கீல் சேஷையங்காரையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள் கோதை.

பாச்சு மாமாவை ஓயாமல் வற்புறுத்தி பஞ்ச கச்சமும் நெற்றி நாமமுமாக நிற்க வைத்தாள் . பாச்சு மாமாவுக்கும் அப்படி இப்படி கல்யாணத்தைப் பற்றி ஒரு ஐடியா வந்துவிட்டிருந்தது.

வீட்டு டெலிபோன் அடிக்க ஓடோடிப்போய் எடுத்தாள் கோதை.

“நமஸ்க்காரம். என்னது, மவுன்ட் ரோட்ல இருக்கேளா ? பீச் ரோடு பிடிச்சி வந்துடுங்கோ. சாந்தோம் பக்கம் போயிடதேங்கோ. அதுக்கு முன்னயே விவேகானந்தர் அவுஸ் இருக்கும். ரைட்ல திரும்பிடுங்கோ. எல்லாரும் ரெடியா இருக்கோம்...”
சரியாக கூவம் பிரிட்ஜ் ஏறி இறங்கி சிவராஜபுரத்தைக் கடந்த சமயம் அந்த அம்பாஸிடர் கார் புஸ்ஸுக்கென பஞ்சராகி நின்றது.
எதிரே இருந்தது சுடுகாட்டு தாதா துரைராஜின் சிஷ்யன் மனோகரின் மெக்கானிக் கடை.
விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் பாச்சு மாமாவை என்பதைப் போல...காசு கொடுக்கும் சமயம் மனோகரிடம் பாச்சு மாமா வீட்டுக்கு ஷார்ட் ரூட் கேட்டிருக்கின்றார்கள் பெண் வீட்டார்.

“அட, காத்தாடி பாச்சு வீடா. நல்லாத் தெரியுமே. நம்மாளுதான். நேர்க்கா போயி ரைட் வாங்குங்க. சுகுர்றா பத்தாவது வீடு பாச்சு வீடு. ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். காசெல்லாம் வேணாங்க. சும்மா கிளம்புங்க...”
 கிளம்பிய கார் அப்படியே திரும்பி வேறு எங்கோ ஓடியே போனது.
(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in