இணையச் சிறையின் பணயக் கைதிகள் 20 - ஆன்லைன் விளையாட்டுகள்: தொடரும் தடைகள்!

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 20 - ஆன்லைன் விளையாட்டுகள்: தொடரும் தடைகள்!

இத்தொடரைப் படித்துவிட்டு என்னை போனில் அழைத்தார் ஒரு கல்லூரி மாணவனின் தந்தை. எப்போது பார்த்தாலும் செல்போனிலேயே இருக்கிறார் தம் மகன் என்று வருத்தப்பட்ட அவர், ‘‘இவ்வளவு தூரம் அவனுக்கு அடிமைத்தனம் ஆகியிருக்கும்னு நான் நினைக்கவே இல்லை சார்... எந்த நேரமும் செல்போனிலும் இணையத்திலுமே இருந்ததன் விளைவு இப்போ 24 பேப்பர்ல அரியர்ஸ் வெச்சிருக்கிறான். இந்த விஷயமே எங்களுக்கு இப்பதான் தெரிய வந்தது.சொல்லவே கூச்சமாயிருக்கு… அவன் குளிச்சே பத்து நாளாகுது சார்... சொன்னால் மறுக்கிறார். தனக்கு ஒண்ணுமில்லை... ஒரு முக்கியமான ஆராய்ச்சிக்காக இப்போ பிசியாக இருக்கேன். இன்னும் ஒரு மாசத்துல படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சில் எல்லா அரியர்ஸையும் பாஸ் பண்ணிடுவேன்னு சொல்றார் சார்” என்று விவரிக்கலானார்.

‘‘ஆலோசனைக்கு அழைத்து வாருங்கள்’’ என்றேன்.  “முடியாது, வர மாட்டான். தான் நார்மலாகத்தான் இருப்பதாகச் சொல்கிறான். வேறு வழியில் அவனை சிகிச்சைக்கு உட்படுத்த முடியுமா?” என்று கேட்டார் அந்தத் தந்தை. அடிமைத்தனத்திலிருந்து மீள்வது ஒரு நெடிய முயற்சி, மருந்துகளோடு சேர்த்து நிறைய நடத்தை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும், எனவே சம்பந்தப்பட்டவருக்கு அதில் சம்மதமும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்பதை அவருக்கு வலியுறுத்தினேன்.

கடந்த ஒரே வாரத்தில் இது நான்காவது அழைப்பு. எல்லாமே இணையம், அதீத செல்போன் பயன்பாடு, இணைய விளையாட்டுத் தொடர்பான பிரச்சினைகள்தான். எங்கோ சில வெளிநாடுகளில் ஏதோ சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நாம் நினைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. இங்கே நம் ஊரில், நாம் குடியிருக்கும் தெருவில் விசாரித்துப் பார்த்தாலும் இணையம் மற்றும் செல்போன் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக ஆன்லைன் வீடியோகேம்களின் தாக்கம் கணிசமாகவே இருக்கிறது. 2012-ம் ஆண்டில்  ‘கேண்டி க்ரஷ்’ (candy crush saga) விளையாட்டு ரிலீஸ் செய்யப்பட்டதிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் கட்டுண்டு கிடந்தார்கள். என்னோடு இதை விளையாட வாருங்கள் என்ற ரிக்வெஸ்ட் உங்களில் அநேகம் பேருக்கு முகநூலில் வந்திருக்கும் என நம்புகிறேன். அதற்கடுத்து இளைஞர்களை சகட்டுமேனிக்கு ஆட்டிப்படைக்கும் விளையாட்டுகளில் ஒன்று PUBG (PlayersUnknown’s Battlegrounds) என்பதையும் நம்மில் பலர் அறிவார்கள்.

மிகவும் அடிமைத்தனம் கொண்டதாகக் கருதப்படுகிறது இந்த விளையாட்டு. இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். எளிதாக விளையாடலாம்; பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. மற்றவர்களோடு சேர்ந்து விளையாடலாம் என்பதால் கூடுதல் மனக்கிளர்ச்சி கொண்டதாகிறது இவ்விளையாட்டு.

எல்லோரையும் கொன்று  முடித்துவிட்டு  நாம் மட்டும் தனியாளாய் அந்தத் தீவில் நிற்க வேண்டும். அதுதான் வெற்றி என்னும்போது எல்லோரையும் கொன்று  குவிப்பதிலேயே மூளை  பிசியாகி விடுகிறது. நேரம் போவதே தெரியாமல் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கட்டுண்டு கிடக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் இவ்விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 120 மில்லியன்களைத் தாண்டுகிறதாம். எந்த நேரத்தில் எடுத்தாலும் அதிகம் பேர் தரவிறக்கம் செய்யும் விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதே இவ்விளையாட்டின் தாக்கத்தைப் புரிய வைப்பதாக இருக்கிறது.

தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டுகளிலேயே ஈடுபட்டிருப்பது மாணவர்களின் மன நலம் மற்றும் உடல் நலனைப் பாதிக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

நீண்ட நேரம் இதிலேயே செலவிடுவதால் படிக்கவோ வீட்டுப்பாடம் செய்யவோ நேரம் இருப்பதில்லை. செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் மூழ்கிக் கிடப்பதால் வெளிவட்டார நண்பர்கள் இல்லை. வேறு வித விளையாட்டுகளுக்கான வாய்ப்பும் அறவே இல்லாமல் போகிறது.

குனிந்து ஸ்கீரினையே பார்த்துப் பார்த்து கண்கள் ஓய்வடைந்து பார்வைக் கோளாறுகளில் முடிகிறது. கூடவே, கழுத்து வலியும் வந்துவிடும். மணிக்கட்டுப் பகுதியில் வலியுடன் கூடிய ஒரு பிரச்சினை ஏற்படும். இதற்கு carpal tunnel syndrome என்று பெயர்.

விளையாடும் ஜோரில் பசிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், ஒன்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். ஏகத்துக்கும் உடல் பருமன் அடைந்து அதன் விளைவாக மந்த நிலைமை, மூட்டுவலி என்று இதர பிரச்சினைகள் தலையெடுக்கும். இல்லாவிட்டால் அவசியத்துக்கும் குறைவாகச் சாப்பிடுவதனால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகளைச் சந்திக்க நேரிடும்.

விளையாட்டுக்காக அடுத்தவர்களைச்  ‘சுட்டுத்’ தள்ளினாலும் குழந்தைகள் மனதில் வன்மத்தின் நிழல் படிவதை நாம் தடுக்க முடியாது. பெற்றோர்களிடம் காரணமின்றிக் கோபப்படுவதில் ஆரம்பித்து சக குழந்தைகளுடன் சண்டையிடுவது, அவதூறு பரப்புவது போன்ற துர்குணங்களை மனதுக்குள் விதைக்கின்றன இதுபோன்ற விளையாட்டுகள்.

இதன் பாதிப்பை அனைவரும் மெல்ல உணர்ந்து கொண்டு வருவதால் ஆங்காங்கே இது போன்ற ஆன்லைன் கேம்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. ஈராக் மற்றும் நேபாளத்தில் PUBG விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜீலை 6-ம் தேதி முதல் இவ்விளையாட்டைத் தடை செய்திருக்கிறது ஜோர்டான் நாடு. நம் நாட்டில் குஜராத் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட இவ்விளையாட்டை தடையை மீறி விளையாடியதாக இளைஞர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜ்காட், அஹமதாபாத் போன்ற இடங்களிலும் காவல் துறை கைது நடவடிக்கை வரை போயிருக்கிறது. வீடியோ கேம் ஒன்றை விளையாடுவதற்கு இவ்வளவு பெரிய நடவடிக்கை தேவையா என்று ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தாலும் அழுத்தமான காரணங்கள் இல்லாமல் சில நாடுகளும், சில மாநிலங்களும் அதற்குத் தடை விதித்திருக்குமா என்றும் கேட்கின்றனர் ஒருசாரார்.

தமிழகத்தில் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதோடன்றி வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக அம்மாணவர்கள் இவ்விளையாட்டில் ஈடுபடுவதைத் தடை செய்திருக்கிறது அந்த நிர்வாகம். இவ்விளையாட்டினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் கவலை தருவதாக இருப்பதனாலேயே இது போன்ற தடைகள் தவிர்க்க முடியாததாக ஆகி வருகின்றன.

தனது பெற்றோர் இதை விளையாடக் கூடாது என்று சொன்னதனால் தற்கொலை செய்து கொண்டான் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன். கடந்த ஏப்ரல் மாதம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது இந்தச் சம்பவம். ஹரியானாவிலும் இதே போல 17 வயது மாணவன் தனது அம்மா கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டான். பத்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல்இருந்த அந்த மாணவன் பெரும்பாலான நேரத்தை ஆன்லைன் விளையாட்டுகளிலேயே கழித்திருக்கிறான்.

இதைவிடக் கொடுமை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் தன்னை விளையாடக் கூடாது என்று திட்டியதால் தன் அண்ணனைக் கொன்றுவிட்டான் ஒரு 15வயது மாணவன். ஜம்முவில் மிகத்தீவிரமாக இந்த விளையாட்டில் ஈடுபட்டதனால் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அந்த இளைஞர் ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.

விளையாட்டு விளையாட்டாக இருக்கும் வரை பிரச்சினை இல்லைதான். ஆனால், அடிமைத்தனம் மிக்கதாக இருப்பதால் மாணவர்களின் நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நாம் ஏற்கெனவே அலசியபடி யாருக்கு அடிமைத்தனம் ஏற்படும், யார் மேம்போக்காக விளையாடித் தப்பித்துக் கொள்வார்கள் என்பது ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. குடிப்பழக்கம் முதலான அனைத்துவித அடிமைத்தனங்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன இதுபோன்ற விளையாட்டுகள் என்பதில் மிகையில்லை.

அளவு கடந்தும், மிக அதிக நேரமும் விளையாட முடியாதவாறு ஆரோக்கியமான மாற்றங்களையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியதாக இனி வரும் காலங்களில் இது போன்ற விளையாட்டுகள் இருக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

 ‘விளையாட்டுக்கு அடிமைத்தனம்’(Gaming addiction) என்பதை மற்ற மன நலக் கோளாறுகளுக்கு இணையான ஒரு அடிமைத்தனக் கோளாறாகவே கருதக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. மன நல மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளிலும் மாநாடுகளிலும் முக்கியமான ஒரு பேசுபொருளாக இருக்கும் ‘விளையாட்டுக்கு அடிமைத்தனம்’ எதிர்காலத்தில் நாம் போராட வேண்டிய ஒரு முக்கியக்களமாகவே இருக்கும்.

சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் இப்பிரச்சினைகளைக் கையாள்வதற்காக சிகிச்சை மையங்கள் (digital detox centres) நிறைய வந்து விட்டன. நம் நாட்டிலும் இதன் விழிப்புணர்வு மெதுவாக பெற்றோர்களிடம் ஏற்பட்டுக்கொண்டு வருகிறது. எங்கே போவது, யாரை அணுகுவது, என்ன சிகிச்சை இருக்கிறது என்ற கேள்வியுடன் நிறைய பெற்றோர் தவிக்கிறார்கள். அவர்களுக்கான பதில், நீங்கள் மன நல மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணர்களை அணுக வேண்டும்.

மூளை நரம்பியல் மற்றும் மன நலம் தொடர்பான தென்னிந்தியாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான ‘நிம்ஹான்ஸி’ல் (NIMHANS) இணையப் பயன்

பாடு சம்பந்தமான கோளாறுகளைக் கவனிப்பதற்காக SHUT Clinic(Services for Healthy Use of Technology) என்ற பிரிவைத் துவங்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நிறைய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களால் இங்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அடிமைத்தனத்தின் விளைவாக மனச்சோர்வு, நடத்தைக்கோளாறுகள் மற்றும் வேறு போதைக்கு அடிமையாவது போன்ற பல பிரச்சினைகளுக்கு மன நல மருத்துவர்களை நாடுகின்றனர். முதலில் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களைத் தேற்றுவதுடன் அடுத்த கட்டமாக நடத்தை மாற்று சிகிச்சைக்காக இதுபோன்ற சிறப்பு மையங்களை அணுக பரிந்துரைக்கிறோம்.

இனிவரும் காலங்களில் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் ஆங்காங்கே மையங்கள் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in