
வாழ்க்கையின் மிகப் பெரிய சங்கடங்களுள் ஒன்று, மற்றவர்களின் துக்கத்திற்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவிப்பது.
கோயம்புத்தூர் மருத்துவமனைக்குள் அழுகைச் சத்தத்துடன் நுழைந்த கௌதமின் அப்பா மூர்த்தியையும், அம்மா ரேணுகாவையும் பார்த்தவுடன் அருண் கலங்கிப்போய்விட்டான். அருணைப் பார்த்தவுடன், ரேணுகா பாய்ந்து வந்து அவன் தோளைப் பிடித்து உலுக்கியபடி, “உன் கூடவேதானடா எப்போதும் இருப்பான்… ஏன்டா தனியா விட்ட? ஏன் தனியா விட்ட?” என்று அழுதபடி கதறினார். அருண் பதில் ஒன்றும் சொல்லாமல், ரேணுகாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டான். மூர்த்தி ஒன்றும் பேசாமல், ரேணுகாவின் தோளை இறுக அணைத்தபடி கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தியும் ரேணுகாவும் டாக்டராக நூற்றுக்கணக்கான காயங்களையும் மரணங்களையும் பார்த்தவர்கள். ஆனால், அவர்கள் எல்லாம் பேஷன்ட்ஸ். ஆனால், கௌதம்… மகன்.
தொண்டையைக் கனைத்துக்கொண்ட மூர்த்தி, “இப்ப கண்ணு முழிச்சிட்டானா?” என்றார்.
“இன்னும் இல்ல. ஆனா உயிருக்கு ஆபத்தில்லன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.”