கண்ணான கண்ணே- 20

கண்ணான கண்ணே- 20

பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், குழந்தை வளர்ப்புகூட பெரிய சவாலாகிவிட்டது. ஒரு விண்கலம் அனுப்புவதற்கான மெனக்கிடலைக் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் காட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்,அத்தனை மெனக்கிடல் தேவையில்லைஎன்பதுதான் உண்மை.

பெற்றோர்களின் இந்த மெனக்கிடுதல்உணவுப் பழக்கவழக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது. புரதம், ஸ்டார்ச், நார்ச்சத்து இப்படித்தான் உணவைத் திட்டமிடுகிறார்கள். இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, உப்புமா, கிச்சடி எல்லாம் பெயர் உச்சரிக்கக் கூடாத பழமையாகிவிட்டது. இது எவ்வளவு அபத்தமானது.

உணவை விமர்சிக்கக் கூடாது என்பதுதான் முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த நற்பழக்கம். ஆனால், நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறோம். உணவை உணவின் பெயரால் அழைக்காமல் ஊட்டச்சத்தின் பெயரால் அழைக்கச் சொல்லி அவர்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறோம்.

எளிமையான விஷயத்தை நாம் கடினமாக்கிக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து வரும் எதிர்வினையும் கடினமானதாகவே இருக்கிறது.அதில் முதலாவதாகப் பட்டியலில் இடம்பெறக் கூடியது சாப்பிட அடம்பிடிக்கும் பழக்கம்.

உங்கள் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா ?

இந்த நூற்றாண்டு, குழந்தைகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளைத் தருகிறது. ஒன்றில்லை என்றால் இன்னொன்று. சாப்பாட்டிலும் அந்த வாய்ப்பு இல்லாமல் இல்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் சாப்பாட்டில் அடம்பிடிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்.

பெரும்பாலும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் எல்லாம் வீட்டு உணவு மீதுதான் வெறுப்பைக் காட்டுவார்களே தவிர, ஹோட்டல் உணவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டார்கள். காரணம் உணவுத் தொழிற்சாலைகள் அவர்களைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருக்கின்றன.

அப்படிப்பட்ட குழந்தைகளிடம் எத்தகைய கெடுபிடியை நீங்கள் காட்ட வேண்டும் என்பதற்கான பட்டியலைத் தருகிறேன்.

1. உணவைக் கொடுக்கும்போதே இதைத்தான் சாப்பிட வேண்டும் வேறு வாய்ப்பில்லை என்பதை உணர்த்திவிடுங்கள்.

2. ஒருவேளை உங்கள் குழந்தை அந்த உணவை வேண்டாம் என்று புறக்கணித்தால் 1, 2 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின் பசி என்று சொன்னாலும் அந்த உணவையே திரும்பக் கொடுங்கள்.

நான் எனது சிறு வயதில் இதுபோன்று அடம் பிடித்திருக்கிறேன். அப்போது என் தந்தை எனக்கு ஒரு பாடலைப் பாடுவார். “நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்… இன்று இதுதான் உன் உணவு, வாழ்வின் சின்ன சந்தோஷங்களையும் நேசி, அன்றாட உணவும் ஒருவகை ஆசிர்வாதமே, அதை மதிக்கப் பழகு. எல்லோருக்கும் உணவு வழங்கப்படும் நேரத்திலேயே நீயும் சாப்பிட்டுப் பழகு. நான் பார்த்த முதல் குழந்தை நீ மட்டுமல்ல…” என்று பொருள்படும் அந்தப் பாடலைப் பாடுவார்.

நீங்கள் இதே கருத்தை விளக்கும் வகையில் இப்பாடலை உங்கள் குழந்தைக்கு வெவ்வேறு வார்த்தைகளில் அவர்களுக்குப் பிடித்தமான மெட்டில்பாடலாம். ஒருவேளை உங்கள் குரல்வளம் மிக மோசமாக இருந்தது என்றால் கவலைப்படாதீர்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே நீங்கள் கொடுப்பதை மறுக்காமல் சாப்பிடப் பழகிக்கொள்வார்கள்.

உங்கள் குழந்தையிடம் நீங்கள் இன்று காட்டும் கடுமை நாளை அவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு அமைக்கும் அடித்தளம். அதனால், சில நேரங்களில் பெற்றோராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எப்போதும் தயங்காதீர்கள்.

சீரான உணவுப் பழக்கவழக்கம் அவர்களின் உடலில் வளர்சிதை மாற்றம் நேர்த்தியாக நடைபெறுவதையும் உறுதி செய்கிறது. வளர்சிதை மாற்றம் சீராக நடைபெற வேண்டுமானால் அவர்களின் பழக்கவழக்கத்தில் சிலவற்றை நாம் முறைப்படுத்த வேண்டும்.

1. சீரான உறக்கம்: குழந்தைகள் சரியான நேரத்தில் உறங்கச் செல்லுதல் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் படுக்கைக்குச் செல்வதை உறுதிப்படுத்துங்கள். வார விடுமுறை நாளில் வேண்டுமென்றால் காலையில் கூடுதலாக ஒரு மணி நேரம்தூங்க அனுமதிக்கலாம். அதைவிடுத்து விடுமுறை நாள்தானே என்று காலை 11 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டாம்.

2. தினமும் விளையாட்டு: குழந்தைகள் தினசரி விளையாடுவதை உறுதி செய்யுங்கள். குறைந்தது 60 நிமிடங்களாவது அவர்கள் வீட்டின் வெளியே ஓடியாடி விளையாடட்டும். அப்படியானால் அவர்கள் வீட்டுப் பாடத்தையும் உற்சாகமாகச் செய்வார்கள். சோம்பேறித்தனம் அவர்களை அண்டாது.

3. மலம் கழித்தலிலும் ஒழுங்கு: குழந்தைகள் தினமும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது அவசியம். காலை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது நிகழட்டும். அதற்காக அவர்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உணவுப் பழக்கவழக்கம் ஒழுங்காக இருந்தால் கழிவை வெளியேற்றுவதும் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடைபெறும்.

4. குறைவில்லா நோய் எதிர்ப்பு சக்தி: மேற்கூறியவற்றை நீங்கள் பழக்கப்படுத்தினால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கும். பருவகால நோய் தாக்கங்கள் ஏற்படுவது குறையும்.

5. வலியில்லா மாதவிடாய்: சீரான உணவுப் பழக்கம் சிறப்பான வளர்சிதை மாற்றத்துக்கு வித்திடும். வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் உங்கள் பெண் குழந்தையின் மாதவிடாய் காலம் வலியற்றதாக இருக்கும். அவர்கள், அந்த நேரத்தில் கோபமோ, எரிச்சலோ அடைவதுகூட குறைவாகவே இருக்கும்.

இவற்றையெல்லாம் உறுதி செய்வதுதான் ஒரு பெற்றோரின் கடமையே தவிர, குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருவது அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் அது இன்று பெருமையான விஷயமாக இருக்கலாம் ஆனால், எதிர்காலத்தில் நீங்கள் அதற்காக வருந்த வேண்டியிருக்கும்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப் படுத்துவது எப்படி?

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்த தினமும் அவர்கள் உணவுடன் வீட்டில் தயாரித்த ஊறுகாய், சட்டினி வகைகள், மாம்பழ ஜாம் போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை அவர்களின் குடல்நட்பு பாக்டீரியாக்களைப் பாதுகாக்கும்.

நெய், வெல்லம், இஞ்சி அத்துடன் சிறிய அளவு மஞ்சள் தூள் சேர்த்து மதிய உணவோ அல்லது இரவு உணவோ உண்ட பின்னர் வழங்கலாம். நம் நகத்தின் அளவில் சிறு உருண்டைகளாக இவற்றைப் பிடித்துக் கொடுக்கலாம்.

காய்கறிக் கூட்டு, முளைகட்டிய பயிறு வகைகள் நிச்சயம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள். குடிக்கப் பயன்படுத்தப்படும் நீரானது, வீட்டில் வடிகட்டப்பட்டு, தேவைப்பட்டால் காய்ச்சிப் பயன்படுத்தப்படுவதாக இருக்கட்டும். குளிப்பதற்குகூட மினரல் வாட்டர்தான் என்று சொன்னீர்கள் என்றால் அதுவும் ஆபத்தே.

பொதுவாக வீட்டில் ஃப்ரிட்ஜ் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே அவ்வப்போது சமைத்த உணவைப் பறிமாறுங்கள்.

காலைச் சிற்றுண்டி அல்லது மதிய உணவுக்குப் பின் மருத்துவர் பரிந்துரைத்த மல்டி வைட்டமின் சிரப் கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைகளின் முன்னால் கோபப்படாதீர்கள். அவர்கள் முன்னால் மது அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற பழக்கவழக்கங்கள் கூடவே கூடாது.

குழந்தைகளுக்கு அநாவசியமாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்காதீர்கள். சளி தொந்தரவு 7 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். சில நாட்கள் உங்கள் குழந்தை மூக்கில் சளி வழிந்தபடி இருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

வீட்டின் நம்பகத்தன்மை வாய்ந்த பெரியவராக முதலில் குழந்தைகள் கருதுவது பெற்றோரைத்தான். அதனால், எப்போதுமே அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். அவர்களின் சிறுசிறு பேச்சுக்குக்கூட காது கொடுங்கள். விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சமூக நெருக்கடிக்கு உள்ளாவதும் நடக்கிறது. சிலரின் குழந்தை பார்ப்பதற்கு ஒல்லியான தேகத்துடன் இருக்கலாம். அதற்காக அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டது என்று அர்த்தமில்லை. அதேபோல் சில குழந்தைகளின் தோற்றம் பருமனாக இருக்கும். உடனே அந்தக் குழந்தை உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அர்த்தமில்லை. குழந்தைகளின் உடல்வாகை அவர்களின் மரபணுக்களும் முடிவு செய்கின்றன.

10-ல் இருந்து 12 வயது வரை உங்கள் குழந்தைக்கு (ஆண்/பெண் என இரு பாலரும்) லேசாகத் தொப்பை உருவாகலாம். அதுதான் ஹார்மோன்கள் சுரக்கும் பருவம். அந்தப் பருவத்தில் இவ்வாறாக ஏற்படும் தொப்பையை அடுத்தவர்கள் யாரேனும் கிண்டல் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தையும் அதனால் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வயதில் பிள்ளைகளிடம் பருவம் எய்துதல் குறித்து வெளிப்படையாகப் பேசித் தெளிவுபடுத்துங்கள்.

பொதுவாகவே, உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இயங்குகிறதா? நேரத்துக்குச் சரியாக சாப்பிடுகிறதா? மகிழ்ச்சியாக இருக்கிறதா? எந்த விஷயத்தையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்கிறதா என்பதைக் கவனித்துக்கொண்டே இருங்கள்.

இவையெல்லாம் சரியாக இருந்தால் ஒல்லி தேகம், பருமனான தேகம் என்றெல்லாம் வருத்தப்படத் தேவையில்லை. அப்படியான அடையாளத்தை உங்கள் அக்கம்பக்கத்தினர் உங்கள் பிள்ளைகள் மீது செலுத்தினாலும்கூட அதை நீங்கள் கையாளுங்கள். அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். மாறாக உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து பானங்களைத் திணிப்பதையோ, ஜிம், வாக்கிங், ஜாகிங் என்று உடற்பயிற்சிகளில் வலுக்கட்டாயமாகப் புகுத்துவதையோ செய்யாதீர்கள். பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடியைக் குழந்தைகள் மீது திணிப்பது அதிகமாக இருப்பதாக எனக்குத் தெரிந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் நிறைய பேர் கூறியிருக்கின்றனர்.

குழந்தை வளர்ப்பை இயல்பாகச் செய்யுங்கள். அதற்கான ஆலோசனைகளை உங்கள் பாட்டியிடமோ அல்லது வீட்டுப் பெரியவரிடமோ கேட்டுக் கொள்ளுங்கள்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in