இணையச் சிறையின் பணயக் கைதிகள் 18: உயிரைப் பறிக்குமா செல்போன் செயலிகள்?

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 18: உயிரைப் பறிக்குமா செல்போன் செயலிகள்?

உலக அளவில் வேறு எந்த ஸ்மார்ட்போன் செயலியும் பெறாத புகழையும் பரவலான வரவேற்பையும் பெற்ற ஒரே செயலி ‘டிக்டாக்’ (tiktok) மட்டும்தான். அதுவும் இந்தியாவில் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிவிட்டது.

டிக்டாக்கின் பிறப்பிடமான சீனாவில் மட்டும் 15 கோடிப் பேர் இதன் தீவிரப் பயன்பாட்டாளர்கள். உலக அளவில் பார்த்தால் 50 கோடிப் பேருக்கு மேல் இதன் ரசிகர்களாக உள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின்  ‘ஆப் ஸ்டோ’ரிலிருந்து 2018-ல் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி டிக்டாக்தான். உலக அளவில் பார்த்தாலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கூகுள்  ‘ப்ளே ஸ்டோ’ரிலிருந்து அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியும் இதுதான்.

ஃபேஸ்புக் பயன்படுத்த வேண்டுமானால் கூட, கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்க வேண்

டும். கொஞ்சம் படித்தவர்களால்தான் ஃபேஸ்

புக் நன்கு கையாளப்படுகிறது. ஆனால், டிக்டாக் வீடியோ போடுவது என்பது எல்லோ

ராலும் செய்ய முடிகிறது. 15 செகண்டுகளில் நம் திறமையைக் காட்டி உலகின் முன் பறை

சாற்ற முடிகிறது என்ற கிளர்ச்சி இளைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

மிக எளிதான பயன்பாடு. வேண்டிய மாதிரிஎல்லாம்  ‘எடிட்’ செய்துகொள்ளலாம். பாடல்

களுக்கேற்ற உதட்டசைவு ஆகட்டும், ஏதேனும்செய்து காண்பிக்கும் சவாலான வீடியோக்கள்ஆகட்டும், முகத்தையும் உடலையும் வேறு மாதிரிஆக்கிக்கொண்டு பயமுறுத்துவது ஆகட்டும், செல்லப் பிராணியோடு கொஞ்சுவது தொடங்கி, கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங் போகும்போது செய்த ரொமான்ஸின் வீடியோ பதிவாகட்டும்… எல்லாவற்றிற்கும் களம் அமைத்துத் தருகிறது டிக்டாக்.

அதிலும் சாகசம் செய்கிறேன் பேர்வழி என்று எசகுபிசகாக ஏதேனும் சவாலான காரியங்களைச் செய்து விபத்தில் சிக்குவதோ, உயிரிழப்பதோ நாளிதழ்களில் நாம் அடிக்கடி காணும் செய்தியாகிவிட்டதை மறுக்க முடியுமா? சென்ற வாரம்கூட கர்நாடகத்தில் ஒரு சம்பவம். இளைஞர் ஒருவர் ஓடிவந்து தன் நண்பனின் மேல் ஏறி, தலைகுப்புற பல்டி அடித்துக் கீழே குதிக்க முயல்கிறார். கரணம் தப்பிவிடுகிறது. முதுகெலும்பே உடைந்து போய்விடுகிறது. மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லை. மரணமடைந்துவிட்டார். சாதிக்க வேண்டும்; அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல்தான் அபரிமிதமாக இருக்கிறதே ஒழிய, பாதுகாப்புணர்ச்சியும் எச்சரிக்கையும் காற்றில் பறந்துபோய்விடுகின்றனவே… என்ன சொல்ல?

பித்துப் பிடித்ததுபோல இளைஞர்கள் இந்தச் செயலியில் கட்டுண்டு கிடக்கும் ரகசியத்தை உளவியலாளர்கள் இப்போதுதான்சுறுசுறுப்பாக ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தச் செயலியில் நேர்மறையான அம்சங்கள்எத்தனை இருப்பினும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் சமயங்களில் எல்லோருக்குமே இதனால் வரும் சிக்கல்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

“மேலும் மேலும் என்னை வீடியோ பதிவேற்றத் தூண்டுகிறார்கள். என்னாலும் அந்த உந்துதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கமென்ட்டுகள் அதிகமாக வேண்டும் என்றும், நம்மை  ‘ஃபாலோ’ செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்காதா என்றும் ஏக்கமாக இருக்கிறது. வீடியோவை ரசித்து, நிறைய பேர் எண்களைப் பகிர்ந்துகொண்டு, என்னிடம் பேசுவதும் உண்டு. என் வயதுடைய ஒரு மாணவனுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தால், கடைசியில் அந்த நபருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும். என் நடனத்தை ரசிப்பது மாதிரியே கமென்ட்டுகளை இட்டுவிட்டு, கடைசியில் பொதுவெளியில் என் பெயரைக் களங்கப்படுத்திவிட்டான்” என்கிறார் 17 வயதான ஒரு மாணவி. தக்க சமயத்தில் தன் வீட்டாரிடம் இதைப்பற்றிச் சொல்லிவிடவே, பிரச்சினை ஏதுமின்றி வெளியே வந்துவிட்டார்.

“என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி தொந்தரவு செய்துகொண்டே இருந்தார் ஒரு நபர். என் வீடியோக்களை மிகவும் ரசிப்பதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். திடீரென்று ஒருநாள் என் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது எதிரில் நின்று வழிந்தார். ஆபாசமாகப் பேசினார். நல்லவேளை என் கணவரின் நண்பர் ஒருவர் அங்கே வரவே தப்பித்தேன்” - பதற்றத்துடன் இப்படிச் சொல்கிறார் ஒரு இளம் பெண் பெங்களூருவிலிருந்து.

இப்படி இணையத்தின் வழியாகப் பாலியல் தொந்தரவு கொடுப்பது, பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு புகைப்படங்கள் மற்றும் வதந்தியைப் பரப்புவது, கமென்ட் பகுதியில் வந்து சொல்லொணா ஆபாச வார்த்தைகளால் திட்டித் திட்டி வெறுப்பேற்றுவது, உச்சகட்டமாகப் புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து வெளியிடுவது போன்ற தொந்தரவுகள் அனைத்துமே ‘சைபர் புல்லியிங்’ (cyberbullying) என்று அழைக்கப்படும்.

இது போன்ற இணையவழி இம்சைகளுக்கும் டிக்டாக் செயலி காரணமாகிவிடுகிறது. ஏகப்பட்ட மாணவர்கள் இதில் பதிவிடும்போது எந்த இடத்திலிருந்து பதிவிடுகிறோம் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பள்ளியின் வாசலிலிருந்து, மைதானத்தில் சீருடையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் அபிமான கதாநாயகனின் படத்தைத் தங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் தோழியுடன் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பதிவிடும்போது...எனத் தங்கள் இருப்பிடம் முதல் பள்ளிக்கூடம் வரை எல்லா தகவல்களையும் மொத்த உலகத்துக்கும் சொல்லிவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார். உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகவிரோத சக்திக்கு உங்கள் முகவரியை நீங்களே எழுதிக்கொடுத்ததுபோல் அல்லவா ஆகிவிடுகிறது?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் டிக்டாக்போன்ற ஜனரஞ்சகமான செயலிகளிலும், ஏகப்பட்ட பேர் போலிக் கணக்குகளிலும், போலி முகத்துடனும் உலவிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை  ‘ஆன்லைன் பாலியல் அரக்கர்கள்’ (online sexual predators) என்றே சொல்கிறது உளவியல். குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்

தெடுத்து அவர்களை ஒவ்வொரு கணமும் பின்தொடரும் இவர்களது செயலை  ‘சைபர் ஸ்டாக்கிங்’ (cyberstalking) என்றே அழைக்கிறோம். ‘ஸ்டாக்கிங்’ என்றால் பின்தொடர்தல். இணையவெளியில் பின்தொடர்வதால் இதற்கு ‘சைபர் ஸ்டாக்கிங்’ என்று பெயர்.

இது போன்ற இம்சைகளில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆண், பெண் பாகுபாடின்றி ஏதோ ஒரு வகையில் இரு பாலினத்தவரும் இம்சைக்கு ஆளாகிறார்கள்.

திருநங்கைகளைப் போன்று வேடமிட்டுப் பேசி, பாடி டிக்டாக் வீடியோ பதிவேற்றுவதில் ஆர்வம் காட்டினார் ஒரு இளைஞர். பாராட்டி சில கமென்ட்டுகள் என்றால், பரிகசித்துப் பல கமென்ட்டுகள் கிடைத்தனவாம். என்ன மாதிரி பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை. தூக்கில் தொங்கி உயிரை விட்டுவிட்டார் அந்த இளைஞர்.

திறமைகளை வெளிப்படுத்த ஏகப்பட்ட பேர் முயன்றுகொண்டிருக்கும் அதே டிக்டாக்கில்தான், ஆபாசமான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

ஒரு முறை அதுபோன்ற விரசமான, இரட்டை அர்த்தம் தொனிக்கும்  வீடியோக்களைப் பார்த்துவிட்டால், நாம் அதுபோன்றுதான் அடுத்த வீடியோவும் பார்ப்போம் என்ற algoritham-களின் அடிப்படையில், அடுத்த முறை செயலியைத் திறந்தவுடனே அதுபோன்ற மலிவான வீடியோக்கள் கொட்டுகின்றன. நல்ல விஷயம், சவாலான

விஷயம் என எதைப் பார்த்தாலும் இதேபோன்று அவற்றை

நோக்கியே நம்மை இழுத்துச்செல்லும் இந்தப் பாங்கு, டிக்டாக் பெற்ற அபரிமித வெற்றிக்கு இன்னொரு காரணம்.

13 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் டிக்டாக் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் அதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் எந்த வரைமுறையும் இல்லை. வீடியோக்களை இன்னார் மட்டுமே பார்க்கலாம் என்று ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியாமல் போவது இதன் இன்னொரு பிரச்சினை என்கிறார்கள். ஃபேஸ்புக்கில்கூட யாரெல்லாம் நம் பதிவுகளைப் பார்க்கலாம் என்பதை எளிதில்  ‘செட்’ செய்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்க.

எல்லாவற்றையும் தாண்டி, நம் தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் பரவிவிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் இணையத்தை ஆராய்பவர்கள். குறிப்பாக, இந்தச் செயலி வேறு ஒரு நாட்டின் கண்டு

பிடிப்பு என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்கள், இதைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை மற்றவர்களால் பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும் என்ற விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்கள்.

டிக்டாக் செயலி மீது விமர்சனங்கள் எழாமல் இல்லை. தடை கொண்டுவர வழக்குத் தொடுக்கப்படுகிறது. என்ன திருத்தங்கள் சொல்கிறீர்களோ அதைச் செய்துவிடுகிறோம் என்று அந்நிறுவனம் சார்பில் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. பிறகு, நீதிமன்றத்தால் அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தலையிட்டபோதும் இது போன்றதொரு விளக்கமே அந்நிறுவனத்தால் அளிக்கப்பட்டது.

ஆக, டிக்டாக் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதல்ல நம் விவாதம். இதுபோன்ற செயலிகள், எல்லோரிடமும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஒருவரை உலகறியச் செய்யும் இதே செயலி, இன்னொருவர் உலகத்தை விட்டே போகவும் காரணமாகிவிடுகிறது. கணிசமான நேரத்தை விழுங்கிவிடும் இதுபோன்ற செயலிகளால், மாணவர்களின் படிப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இணையப் பயன்பாடு பெருகப் பெருக, நாம் சந்திக்கும் பிரச்சினைகள் பல பரிமாணங்களில் இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை நன்கு உறுதிசெய்யும் வகையில் இதுபோன்ற செயலிகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம். இல்லாவிட்டால், விளைவுகள் விரும்பத் தகாதவையாகவும் இருக்கலாம்.

இன்று மிகச் சிறிதாகத் தோன்றும் இதுபோன்ற பிரச்சினைகள், நாளை நம் சந்ததியினரின் உடல் மற்றும் மன நலனைப் பாதிப்பதற்கு முன் விழித்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை!

 (இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in