மண்.. மனம்.. மனிதர்கள்! -  18

மண்.. மனம்.. மனிதர்கள்! - 18

சேது வாத்தியார்!

இந்த மண்ணில் எத்தனையோ கலைகள் கடத்துவாரின்றி முடங்கி அழிந்து போயிருக்கின்றன.

அப்படிப்பட்டதொரு கலைதான் குடாக்களரி.

எதிரிகளைக் கதிகலங்கச் செய்யும் அதிரிபுதிரியான அந்த தற்காப்புக் கலையைக் கேரள களரியின் உச்சம் என்பார்கள்.

உலோகத்தோடு சிலபல மூலிகைகளையும் சேர்த்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட இரண்டே இரண்டு குடைக் கம்பிகளே ஆயுதங்கள்.

அவற்றை ஒன்றாக்கிப் பிணைத்து அதில் குடை முடைந்தபடி சாதாரணமாகப் பிடித்து வருவார்களாம். எதிரிகள் எதிர்ப்படும் நேரம் சடுதியில் அதைப் பிரித்துக்கொண்டு சுழற்றினார்கள் என்றால் மழைத்துளி கூட அவர்கள் மேல் விழாதாம்.

அவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் சுழற்றுவார்களாம். அதன் முனையில் விஷக்கத்தி சொருகி வைத்திருப்பார்களாம்.

அந்தக் காலத்தில் கேரள மண்ணில் குடையோடு வருபவர்களிடம் வழிப்பறிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிகையாகவே இருப்பார்களாம். “என்னிடம் யாரும் வாலாட்ட முயற்சி செய்ய வேண்டாம்...” என்னும் அறிவிப்பாகவே இருக்குமாம் அது.

18-ம் நூற்றாண்டு வரை கேரளாவில் இந்தச் சண்டைமுறை மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது. அதன் பின் அன்னியர்களின் முன்னெடுப்பால் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இன்று கூட கேரள மக்கள் எங்கு சென்றாலும் தங்கள் கையில் குடை ஒன்றைக் கொண்டு செல்வதைக் கண்டிருக்கலாம்.

பொதுவாகவே அது சாரல் பூமி என்பதால் குடையை எடுத்துக் கொண்டு போவது அவர்களின் வாழ்வியல் அங்கம் என்றுதான் நாம் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அது குடாக்களரிக் கலையின் மிச்சப் பழக்கமாகவும் இருக்கலாம்.

அப்படிப்பட்ட ‘குடாக் களரி' தமிழகத்துக்கு இறக்குமதியான விதம் அலாதியானது. அதி சுவாரசியமானது.

கே.ஆர். வேணுகோபால் சர்மா. மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான விகடகவியாகத் தன் வாழ்வைத் துவக்கிப் பெரும் பொருள் ஈட்டியவர். இன்று நாம் காணும் திருவள்ளுவருக்கு திருவுருவம் கொடுத்தவர்.

சுமார் நாற்பதாண்டுக் கால தீவிர முயற்சிக்குப் பின் திருவள்ளுவருக்கு இறுதி வடிவத்தை அவர் கண்டடைந்தது மாயவரத்தின் மதீனா விடுதியில்தான் என்பது வரலாறு.

மூன்று திரைப்படங்களை தயாரித்து இயக்கி தன் கைப்பொருளை எல்லாம் இழந்து மேலும் கடன்பட இருந்தவரை ‘ஓவியப் பெருந்தகை' ஆக்கி ப்ரேக் போட்ட பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கும் தமிழ்வாணன் அவர்களுக்குமே உண்டு .

வேணுகோபால் சர்மா இரண்டு ஆண்டுகள் மாயவரம் மதீனா விடுதியில்

தங்கியிருந்தபோது அவருக்கு நெருக்கமானவர்தான் சேது வாத்தியார் !

சேது வாத்தியார் !

மாயவரத்துப் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக இருந்தவர்.

அதுபோக சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரபலமான குஸ்தி வாத்தியார்.

அந்த நாளில் மயிலாடுதுறையில் அவருக்குக் கீழே வாட்ட சாட்டமான இளைஞர்கள் அடங்கிய பெரும்படை ஒன்று இருந்திருக்கின்றது.

அன்றாடம் மாலை சாயுங்காலத்தில் மாயவரம் மணிக்கூண்டுக்குஅருகே அமைந்திருந்ததோர் மைதானத்தில் சேது வாத்தியாரின் தலைமையில்குஸ்திப் பயிற்சி நடக்கும்.

முரட்டு இளைஞர்கள்தான் என்றாலும் எந்த விதமான கெட்டப் பழக்கமும் இல்லாத தனிமனித ஒழுக்கத்துக்குப் பேர் போனவர்கள் அவர்கள். சேது வாத்தியாரின் வளர்ப்பு அப்படி.

ஊர்வலமாகச் செல்லும் திருக்கோயில் தேர் திருவிழாக்கள்,பெரும் பணக்காரர்கள் வீட்டு திருமண விழாக்கள் போன்றவற்றில் காவலாகஅணிவகுத்துப் போவது சேது வாத்தியாரின் படைதான்.

மதிப்புமிக்க பகட்டான நகைகள் புழங்கும் நேரம் என்பதால் அசலூர் கள்வர்கள் கைவரிசை காட்டிவிடக் கூடாது என்று சேது வாத்தியாரின் சிஷ்யர்கள் அணைகட்டி வருவார்களாம்.

அதனால், சேது வாத்தியாருக்கு உள்ளூரிலும் அசலூரிலும் மதிப்பும்மரியாதையும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றது.

வேணுகோபால் சர்மாவுக்கும் குஸ்தி மற்றும் வர்மக் கலையில்தேர்ச்சியிருந்தது. ஓவியம் சண்டைப் பயிற்சி சங்கீதம் என ஒத்த அலைவரிசைகூடி நின்றதால் இருவரும் மிக நெருக்கமாகிப் போனார்கள்.

மாயவரத்தில் தங்கியிருந்த நாட்களில் எந்த நேரமும்வேணுகோபாலரின் அறையிலேயே இருப்பாராம் சேது வாத்தியார்.

“யாருக்கும் லேசில் அசராத மனுஷன் சேது வாத்தியார். ஆனால் சர்மா ஐயாவின் ஒரு சொல்லுக்கு மீறாமல் நிற்பார். அவர் மேல் சேது வாத்தியார் காட்டிய பாசத்தைப் பார்க்க பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது...” என்று இன்றும் சிலாகிக்கிறார் அன்று அந்த மதீனா விடுதியை லீஸுக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த பதி சார்.

சில சமயங்களில் மாலை வேளைகளில் வேணுகோபாலரும்

சேது வாத்தியாரோடு மைதானம் சென்று சண்டைப் பயிற்சியைக் கண்டு உற்சாகப்படுவதுண்டாம். அப்போது மைசூர் சமஸ்தானத்தில் கற்றுக்கொண்ட சண்டை நுணுக்கங்களை இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பாராம் .

சேது வாத்தியாரின் தனிப்பயிற்சி மிரட்டலாக இருக்குமாம்.

ஓடும் காவிரி ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு சரேலென காலைத் தூக்கி தன் நெற்றியில் தட்டித் தட்டிப் பயிற்சி செய்வாராம்.

முற்றிய தேங்காயை நடுவிரல் முட்டிகொண்டு ஓங்கிக் கொட்டியே பிளந்து விடுவாராம். 10 அடி உயரத்தை அநாயசமாகத் தாண்டிப் பயிற்சி செய்வாராம் .

உருவி விட்டாற்போலொரு உடல். செதுக்கி வைத்தாற்போலொரு முகம். கழுகின் பார்வையும் முயலின் வேகமும் ஒன்று கூடியதொரு அசகாய சூரக்காரர் சேது வாத்தியார்.

அப்படிப்பட்டவரின் மாணவர்களுக்கு ஒரு ஆசை. தங்கள் குருநாதரின் வித்தைகளை அவர் சினிமாவில் காட்டியாக வேண்டும் என்று பரபரத்தார்கள். வேணுகோபால் சர்மாவுக்கு சினிமா தொடர்புகள் உண்டு என்று தெரிந்ததால் அவ்வப்போது அவரது அறைக்குச் சென்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சேது வாத்தியாரை தனியே அழைத்த வேணுகோபாலர் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

“சேது, சினிமாவை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது இருக்கட்டும். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்...

கோட்டயத்தில் நான் சில காலம் தங்கியிருந்தபோது அங்கே கேரளீய பாரம்பரிய போர்க் கலைகளைப் பயிற்றுவிக்கும் அசாதாரணமான குரு ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவரிடத்தில் ஓர் அற்புதமான வித்தையைக் கண்டேன். அதற்குப் பெயர் குடாக்களரியாம் …”

சேது வாத்தியார் மிக உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.

வேணுகோபாலர் அவரது கரங்களைப் பற்றியபடி தொடர்ந்தார்…

“சேது... அற்புதமான அந்தக் கலை அப்படியே அழிந்துவிடக் கூடாது. உங்களைவிட வேறு யாராலும் அதை முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது.

நீங்கள் அவசியம் சென்று குடாக்களரிக் கலையினைக் கற்றுக்கொண்டுவந்து தமிழகத்தில் பரப்ப வேண்டும். வீரத்துக்குப் பேர் போன நமது மண் அதனால் பயனடைய வேண்டும். ஒரு அற்புதக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். செய்வீர்களா..?”

“ஐயா சொன்ன பிறகு மறுவார்த்தை ஏதுங்க…இதோ கிளம்பிட்டேன்…”

“நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் சேது. இந்த குடாக்களரி வித்தை கடும் பயிற்சியை உள்ளடக்கிய தாம். முழுமையாகக் கற்றுக்கொள்ள குறைந்தது இரண்டு வருடங்களாவது பிடிக்குமாம். அது உங்களுக்குச் சம்மதமென்றால் வேறெதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். மற்ற ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்…”

கோட்டயத்தில் இருந்த தன் நண்பரான ஒரு சர்ச் ஃபாதரின் முகவரியையும், சிபாரிசுக் கடிதத்தையும், செலவுக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்திருக் கிறார் வேணுகோபால் சர்மா.

சேது வாத்தியாருக்கு அப்போது 4 வயதில் ஒரு மகள். பெயர் மணிமேகலை. அந்தச் சிறுமியை வேணு கோபாலரிடம் விட்டுவிட்டு, மாணவர்கள் கூடி பாதி மனதோடு வழியனுப்ப, கிளம்பியே விட்டார் சேது வாத்தியார்.

அப்பாடா ஒரு நல்ல விஷயத்தை செய்துவிட்டோம் என்னும் மன நிம்மதியோடு மாயாவரம் மதீனா லாட்ஜில் திருவள்ளுவருக்கு இறுதி வடிவம் கொடுக்கும் தன் வேலையில் முழு மூச்சாகியிருக்கிறார் வேணுகோபால் சர்மா.

எண்ணி பதினைந்தே நாட்கள்தான். ஒடுங்கிய மேனியோடு மாயவரத்துக்கே திரும்பி விட்டார் சேது வாத்தியார். அவரது சிஷ்யர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு வேணு கோபாலரின் அறைக்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

வித்தை கற்கப் போன சேது வாத்தியார் திரும்பி விட்டதாகவும், மிகவும் மெலிந்திருப்பதாகவும், மைதானத்தில் மேல் சட்டைகூட இல்லாமல் தலை கவிழ்ந்தபடியே நின்று கொண்டிருப்பதாகவும் சொல்லச் சொல்ல பிரஷ்ஷைக் கீழே வைத்த வேணுகோபாலர் ஜிப்பாவுக்குள் தன்னை அவசரமாக நுழைத்துக் கொண்டிருந்தார்.

“ஐயா, எங்க வாத்தியாரையாவைப் பார்க்கவே ரொம்பக் கவலையாயிருக்குங்க… யாரிடமும் எதுவும் பேச மாட்டேங் குறாரு… எது கேட்டாலும் சர்மா ஐயாவை உடனே இங்கு வரச் சொல்… அப்படீன்னு உறுமிக்கிட்டே இருக்காருங்க…”

குழம்பிப்போன வேணுகோபால் சர்மா மைதானத்துக்கு விரைந்தோடியிருக்கிறார்.

மைதானத்தின் நடுவே சேது வாத்தியார்.

அந்தி ஆரம்பமாகும் மெல்லிருட்டு நேரம். பறவைகள் பெருங் கிறீச்சிடலோடு கூடு நோக்கி விரைந்தபடியும் இறைந்தபடியுமாக இருக்க...

ஒடுங்கிய கண்களும் மண்ணை நோக்கிய வெறித்த பார்வையுமாக நின்றுகொண்டிருந்த சேது வாத்தியாரின் கோலம் வேணுகோபாலரை அதிர வைத்தது.

மெல்ல அருகே சென்ற வேணுகோபாலர் வழக்கமான வாஞ்சையான குரலில் அன்போடு வினவினார்...

“வாரும் சேதுங்க..?”

உக்கிரப் பார்வையோடு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார் சேது வாத்தியார்…

“பணம் தீர்ந்துட்டுதுங்களா? அதுக்கென்ன தேவையா னதைக் கொடுக்கும்படி ஃபாதருக்கு எழுதியிருந்தேனே..?”

“……………..”

“ஓஹோ...மகள் மணிமேகலை நியாபகம் வந்துட்டு துங்களா… நான்தான் பத்திரமா பாத்துக்குறேன்னு சொல்லியிருந்தேன்ல..?”

பதிலேதும் இல்லை.

“சொல்லும்...வேறு ஏதும் ப்ரச்சினையா ?”

சேது வாத்தியார் பேசவில்லை. வேணுகோபாலர் மனம் குழம்பினார்.

“சேது , என்ன நடந்தது ? அவர்கள் உங்களுக்கு வித்தை சொல்லித்தர மறுத்து விட்டார்களா ? அங்கு யாரேனும் உங்கள் மனம் வருந்தும்படி நடந்துகொண்டார்களா. புறப்பட்டு வரேன், போவோமா ?”

“………………..”

“ஓஹோ, வித்தை பழக முடியவில்லையா? கடினமாக இருந்ததா ?”

தலையை மேலும் கவிழ்த்துக்கொண்டார் சேது வாத்தியார்.

அதிர்ந்து பேசாதவரான வேணுகோபால் சர்மா, இப்போது பொறுமை இழந்து தன் குரலை சற்றே உயர்த்தினார்.

“ஏன்யா ? இப்படி உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் ? உம்மிடம், என்ன சொல்லி அனுப்பினேன். ஒரு உன்னதமான கலை அழியும் நிலையில் இருக்குது. உம்மை விட்டால் அதைக் கற்றுக்கொள்ளும் திறமை இங்க வேற யாருக்கு இருக்குது..?

அது கடினமான கலை. நாளானாலும் பரவாயில்லை கற்றுக்கொண்டு வாரும் என்று சொல்லித்தானே அனுப்பினேன். நீரும் சரி சரின்னு தலையாட்டியபடித் தானே போனீர் ? இப்படி, போன கையோடு திரும்பி வந்தால் என்ன அர்த்தம் சேது ? பதில் சொல்ல முடியுமா முடியாதா ?”

சத்தம் போட்டுவிட்டார் சர்மா. அவ்வளவுதான்.

சரேலென நிமிர்ந்தார் சேது வாத்தியார்.

இடுப்பில் இருந்து இரண்டு குடைக் கம்பிகளை உருவியவர் கடகடவென்று சிரித்துக்கொண்டே மின்னல் வேகத்தில் புயலாகச் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.

மாயவரம் மைதானத்தில் புழுதி பறந்திருக்கிறது.

பாம்பு சீறுவது போன்றும் புறாக்கூட்டம் கத்துவது போன்றும் ஓயாத சத்தம் அவரிடமிருந்து புறப் பட்டபடியே இருக்க...

வெடித்து சிதறியது  ‘குடாக்களரி’ !

எல்லோரும் திகைத்துப்போய் நின்றிருக்கின்றனர்.

ஆம். மலையாள பூமிக்கே உரிய அந்த அருங் கலையை, அந்த மலையாள தேசத்து குருவே வியக்கும் படியாக வெறும் பதினைந்தே நாளில் மொத்தமாகக் கற்றுக்கொண்டு வந்துவிட்டார் நமது சேது வாத்தியார்.

சுதாரித்துக்கொண்ட வேணுகோபால் சர்மாவும் மற்றவர்களும் மைதானத்தில் இருந்த கற்களை எல்லாம் எடுத்து சேது வாத்தியாரை நோக்கி காட்டுத்தனமாக எறிந்தபடியே மைதானம் முழுதும் துரத்தியிருக்கின்றனர்.

ம்ஹூம்...ஒரு கல்லும் அவர் மேல் படவில்லை. மொத்தக் கற்களும் அவரது கையில் இருந்த குடைக் கம்பியில் பட்டுத் தெறித்தபடியே இருக்க, நடுக்கடல் சூறாவளியாய் சுழன்று வீசிக்கொண்டிருந்தார் சேது வாத்தியார்.

குடாக்களரியை அசுர பயிற்சியோடு கற்றுக்கொண்டு வந்த சேது வாத்தியாரின் திறமையை எண்ணி பிரமித்துப் போன வேணுகோபால் சர்மா அவரை வாரி அணைத்துக் கொண்டார்.

“நான் ரெண்டு வருஷத்தில் திரும்பி வந்துவிடு வேன்னு நீங்க ரொம்ப நம்பிக்கிட்டிருந்தீங்க… முதலும் கடைசியுமா உங்க நம்பிக்கையைப் பொய்யாக்கிட் டேன்…” என்றபடி கலகலத்திருக்கிறார் சேது வாத்தியார்.

அதன்பின் எத்தனையோ பேருக்கு அதனைக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கிறார். பயிற்சியின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அனைவரும் பின் வாங்கிருக்கிறார்கள்.

சேது வாத்தியாரை தன்னுடைய மூன்றாவது படமான தெய்வீகம் திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகப்படுத்தி இருக்கிறார் வேணுகோபால் சர்மா. அதுவும் வெளிவராமலேயே போய்விட்டது.

பிற்காலத்தில் சென்னைக்கே வந்து விட்ட சேது வாத்தி யாரின் மகள் மணிமேகலை, வேணுகோபாலரை அப்பா என்றே அழைத்து வந்தார். ஓவியப் பெருந்தகையும் மற்றவர்களிடத்தில் எனது மகள் என்றே அவரை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் புகழோடு பணியாற்றிய மணிமேகலை அவர்கள் தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

இவருடைய கணவர் செம்பியம் சாரதி அவர்கள் குறிப்பிடத்தகுந்த தொழிற்சங்கங்கத் தலைவர்களில் ஒருவர். சேது வாத்தியாரின் இளைய மகள்தான் பட்டிமன்ற புகழ் புனிதா ஏகாம்பரம்.

சேது வாத்தியாரைப் பற்றி எழுதிக்கொண்டிருந்த அந்தக் காலை நேரம் மணிமேகலை அக்காவிடம் இருந்து அலைபேசிஅழைப்பு...

“தம்பி தெரியுமா… இன்று சேது அப்பாவோட நினைவு நாள் !”

தூக்கிவாரிப் போட்டது. எண்ண அலைகளும் நினை வலைகளுமாய் பொங்கித் ததும்பும் இப்பூவுலகில்...

காரணமில்லாமல் காரியமில்லை !

(சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in