காதல் ஸ்கொயர் - 18

காதல் ஸ்கொயர் - 18

வேனிலிருந்து மீட்கப்பட்ட கௌதம், நந்தினி ஆகிய இருவரையும் பரிசோதித்த டாக்டர், இருவரும் உயிரோடு இருப்பதாகக் கூற… அருண் நிம்மதியானான்.  ஆனால், அவர்கள் மயக்க நிலையில் உள்ளதாகவும்,  மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தால்தான் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியும் என்றும் டாக்டர் சொன்னார்.

கௌதமும் நந்தினியும் ஸ்ட்ரெச்சரில் வேகமாக மேலே தூக்கிச் செல்லப்பட்டனர். ஓரே ஆம்புலன்ஸில் இருவரும் ஏற்றப்பட்டனர். உடன் அருணும், மஹிமாவும் ஏறிக்கொள்ள…ஆம்புலன்ஸ் புறப்பட்டது. நர்ஸ்கள், இருவரின் உடலிலிருந்தும் ரத்தம் வழிந்த இடத்தில் கட்டுகள் போட்டனர். ஏதோ இன்ஜெக்‌ஷன் போட்டார்கள். இருவரின் முகத்திலும் ஆக்சிஜன் மாஸ்க்கை பொருத்த…அருண் இருவரையும் கவலையோடு பார்த்தான்.

மஹிமா, “அருண்… டிவி நியூஸ்ல எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனி டைம்… கௌதம், நந்தினியோட வீட்லருந்து போன் வரும். அதுக்கு முன்னாடி சொல்லிடுவோம்” என்றாள். அருண் யோசனையுடன் மொபலை எடுத்து கௌதமின் அப்பா மூர்த்திக்கு அடித்தான். ரிங் போக… கௌதம் பதற்றத்துடன் நகத்தைக் கடித்தான்.

மறுமுனையில், “ஹாய் அருண்… ஹவ் ஆர் யூ?” என்றார் மூர்த்தி உற்சாகமாக.

“ஃபைன் அங்கிள்…” என்ற அருணின் குரல் நடுங்கியது.

“கௌதம் பக்கத்துல இருக்கானா? குடு. அவன்கிட்ட பேசி நாலு நாளாவுது” என்றார். சில வினாடிகள் தடுமாறிய அருண் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி, “அங்கிள்… டிவி நியூஸ் பாக்கலியா?” என்றான். “பாக்கல…ஏன்?” என்ற மூர்த்தியின் குரல் மாறியது.

“அங்கிள்… டென்ஷன் ஆகாதீங்க. பெருசா பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” என்றவுடன் பதற்றமான மூர்த்தி, “அருண்…எனி ப்ராப்ளம்? கௌதமுக்கு ஏதாச்சும்…” என்று இழுத்த மூர்த்தியின் குரல் குழறியது.

“நத்திங் சீரியஸ் அங்கிள். நாங்க மசினகுடி போனப்ப…” என்ற அருண் சில வினாடிகள் இடைவெளி விட்டு, “பள்ளத்துல வேன் கவுந்து ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்… கௌதமுக்கு அடிபட்டுடுச்சு” என்றவுடன் எதிர்முனையில் மூர்த்தி, “கடவுளே...” என்று பதறினார்.

“அங்கிள்… பயப்படாதீங்க… டாக்டர் செக் பண்ணிட்டு, உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லன்னு சொல்லிட்டார். நெறய ப்ளட் போயிருக்கிறதால கௌதம் இப்ப மயக்கமா இருக்கான். அவ்வளவுதான்.  இப்ப ஊட்டி ஹாஸ்பிட்டல் போயிட்டிருக்

கோம்” என்றான். மூர்த்தி சட்டென்று தொண்டை அடைக்க, “அருண்… நீ எதையும் மறைக்கலையே?” என்றபோது மூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

“சத்தியமா இல்ல அங்கிள்… இப்ப நான் அவன்கூடதான் ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிட்டல் போயிட்டிருக்கேன்” என்றவுடன், “ஓகே… நாங்க உடனே கிளம்பறோம். நீ பாத்துக்க…” என்று மூர்த்தி  மொபைலை கட் செய்தார். பின்னர் மஹிமா, நந்தினியின் அப்பாவுக்கு போன் செய்து விபரம் சொன்னாள். ஏறத்தாழ மேற்சொன்ன அதே உரையாடல்தான் மீண்டும் நிகழ்ந்தது.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகமே பயங்கர களேபரமாக இருந்தது. ஹைக்ரோ பயிற்சி நிறுவனத்திலிருந்து உயர் அலுவலர்கள், ஏராளமான பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், டிவி சேனல்காரர்கள். போலீஸ், பொது

மக்கள்… என்று அந்த மருத்துவமனை அவ்வளவு கும்பலைத் தாங்க முடியாமல் தடுமாறியது. மீட்கப்பட்ட அனைவரும் எமர்ஜென்ஸி வார்டில் பரிசோதிக்கப்பட்டனர். ஒன்பது பேர் மரணம் என்று அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலை மார்ச்சுவரிக்குக் கொண்டு சென்றபோது, ஹைக்ரோ பயிற்சியாளர்கள் மொத்தமாகக் கூக்குரலிட்டு அழுத காட்சி, அங்கிருந்தவர்களை உலுக்கியெடுத்தது.

கௌதமுக்கும் நந்தினிக்கும் பரிசோதனை நடந்துகொண்டிருந்த வார்டுக்கு வெளியே அருணும் மஹிமாவும் காத்திருந்தார்கள். வெளியே வந்த டாக்டர், “கௌதம், நந்தினி கூட யார் வந்துருக்காங்க?” என்று கேட்க… அருணும் மஹிமாவும் முன்னால் சென்றனர். அவர்களிடம் டாக்டர், “ரெண்டு பேரு உயிருக்கும் ஆபத்தில்ல. மானிட்டர்ல  வைட்டல் பாராமீட்டர்ஸ்லாம் நார்மலா இருக்கு” என்றவுடன் இருவரும் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து டாக்டர், “நந்தினிக்கு எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததுல முதுகெலும்புல ஒரு மேஜர் ஃப்ராக்ச்சர். உடனே சர்ஜரி பண்ணணும். அதுக்கு இங்க ஃபெஸிலிட்டி இல்ல. கோயம்புத்தூர்தான் போகணும்”

என்றார்.

அருண், “டாக்டர்… கௌதம்…” என்று இழுத்தான்.

“அவருக்கு ப்ரெய்ன் ஸிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல, தேர் இஸ் ஸம் ப்ராப்ளம். இப்போதைக்கு ஃபிட்ஸ் வராம இருக்க எப்டாயின் கொடுத்

திருக்கோம். ஃபர்தர் ட்ரீட்மென்டுக்கு ரெண்டு பேரையும் கோயம்புத்தூர் ஜிஹெச் அழைச்சுட்டுப் போகணும். இவங்க மட்டுமில்ல, இன்னும் நாலு பேரும் சீரியஸா இருக்காங்க. ஆறு பேரையும் உடனே கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போகணும். வழியில ட்ராஃபிக் ஜாமாகாம இருக்க எஸ்பிகிட்ட சொல்லி, கோயம்புத்தூர் ரோட்டுல வேற வெஹிக்கிள்ஸ் வராம  பிளாக் பண்ணச் சொல்லியாச்சு” என்றார் டாக்டர்.

“டாக்டர்…நந்தினியும் கௌதமும் கண்ணு முழிச்சிட்டாங்களா?”

“கௌதம் மயக்கமாத்தான் இருக்காரு. நந்தினி கண்ணு முழிச்சுட்டாங்க. அவங்கள வேணும்னா பாக்கலாம்” என்று கூறிவிட்டு டாக்டர் நகர… அருணும் மஹிமாவும் நந்தினியின் அறையில் நுழைந்தனர். உள்ளே ஒரு நர்ஸ் மானிட்டரை வாட்ச் செய்ய… மற்றொரு நர்ஸ் நந்தினிக்கு ஊசி போட்டுக்கொண்டிருந்தார். ஊசி போட்டவுடன் நந்தினியின் முகம் சிணுங்கியது. இவர்களைப் பார்த்தவுடன் நந்தினியின் முகம் அழுவதுபோல் மாறியது. காதோரம் கட்டுப் போட்டிருந்தார்கள். கை மணிக்கட்டில் ஒரு கட்டு.

நந்தினியின் அருகில் சென்று அவள் கையைப் பிடித்த மஹிமா, “நந்தினி… பயப்படாத. ஹாஸ்பிட்டல் வந்தாச்சு. நோ ப்ராப்ளம்” என்றாள் கண்கலங்க. கஷ்டப்பட்டு வாயைத் திறந்த நந்தினி, “கௌதமுக்கு…” என்று ஆரம்பித்துவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் பேச்சை நிறுத்தினாள்.

“பக்கத்து ரூம்லதான் இருக்கான். நத்திங் சீரியஸ். அவனுக்கு வெறும் காயம்தான்” என்று அருண் கூற…  “இப்ப நான் அவனப் பாக்கலாமா?” என்றாள் நந்தினி, வலியில் முகம் சுளிக்க.

“இல்ல… உனக்கு முதுகெலும்புல அடிபட்டிருக்கு. இப்போதைக்கு மூவ் பண்ண முடியாது. ஃபர்தர் ட்ரீட்மென்ட்டுக்கு கோயம்புத்தூர் ஹாஸ்பிடலுக்குப் போறோம்” என்றான் அருண்.

மதியம் கோயம்புத்தூருக்கு மூன்று ஆம்புலன்ஸ்கள் கிளம்பியபோது சரியான மழை. அந்த மழையிலும், மருத்துவமனை வாயிலில் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்தனர். அருணின் ஆலோசனைப்படி கௌதமும் நந்தினியும் வெவ்வேறு ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டனர். மூன்று ஆம்புலன்ஸ்

களும் சைரன் சத்தத்துடன் ஒரே சமயத்தில் கிளம்பின. கௌதம் மற்றும் நந்தினியின் பெற்றோரிடம் கோயம்புத்தூருக்கு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தவுடனேயே, முதுகெலும்பு ஆபரேஷனுக்காக நந்தினி

ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு செல்லப்பட்டாள். கௌதமுக்கு

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு,  நியூரோ சர்ஜன்கள் நீண்ட நேரம் கலந்தாலோசித்தனர். வராண்டாவில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்த அருணை நோக்கி வந்த சீனியர் நியூரோ சர்ஜன் ரங்கராஜன், “கௌதமோட பேரன்ட்ஸ் வந்துட்டாங்களா?” என்றார்.

“இன்னும் இல்ல டாக்டர்… சென்னைலருந்து கார்ல வந்துட்டிருக்காங்க. இன்னும் டூ அவர்ஸ்ல வந்துடுவாங்க. கௌதம் பேரன்ட்ஸும் டாக்டர்ஸ்தான். எனி ப்ராப்ளம் டாக்டர்?”

“ம்… ஸ்கேன்ல பாத்த வரைக்கும் மூளைல ரத்தக்கசிவு இல்ல. ஸ்கல் போன்ஸ்லாம் நார்மலாத்தான் இருக்கு. அதனால ஆபரேஷன் ஏதும் தேவைப்படாது. ஆனா பெட் ஸ்கேன் எடுத்துப் பாத்தப்ப… ப்ரெய்ன் ஃபங்ஷன்லதான் ப்ராப்ளம்…” என்றவுடன் அருணும் மஹிமாவும் ஒன்றும் புரியாமல் டாக்டரைப் பார்த்தனர்.

தொடர்ந்து டாக்டர், “பெட் ஸ்கேன்ல பாக்குறப்ப… சில ப்ரெய்ன் பார்ட்ஸோட ஃபங்ஷன்… ஃபார் எக்ஸாம்பிள் ஹைபோதாலமஸோட ஃபங்ஷன்லாம் அஃபெக்ட்டாயிருக்கு. அதனால…” என்று சில வினாடிகள் இழுத்த டாக்டர், “கௌதமுக்கு மெமரி லாஸாகலாம்” என்று கூற… அருணும், மஹிமாவும் அதிர்ந்தனர். “மெமரி லாஸ்ன்னா… எந்த அளவுக்கு?” என்று மஹிமா இழுத்தாள்.

“தன்னோட வாழ்க்கைல இதுவரைக்கும் என்ன நடந்தது? தான் யாரு, என்ன ஊருன்னு எதுவுமே தெரியாம  போக சான்ஸ் இருக்கு. உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா அம்னீஷியா…” என்றார் டாக்டர்.

“எதுவுமே ஞாபகமிருக்காதா டாக்டர்?” என்றான் அருண் பதற்றத்துடன்.

“தெரியல… அவருக்கு எந்த அளவு மெமரி லாஸாயிருக்குன்னு கண்ணு முழிச்சாதான் தெரியும்”

“எப்ப கண்ணு முழிப்பாரு?”

“தெரியல… ரெண்டு நாளாகலாம், மூணு நாளாகலாம். சில கேஸ்ல ஒரு மாசம்கூட ஆகும்…” என்று கூறிய டாக்டர் ரங்கராஜனை அருணும் மஹிமாவும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in