
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
கௌதமும் நந்தினியும் சென்ற வேன் பள்ளத்தாக்கில் விழுந்ததைப் பார்த்துவிட்டு, பின்னால் அருண் வந்த வேனில் இருந்தவர்கள் அலறினர். டிரைவர் வேகமாக பிரேக்கைப் போட்டார். வேன் நிற்பதற்குள் அருண் கதவைத் திறந்துகொண்டு, பதற்றத்துடன் கீழே குதித்தான்.
அருணும் மற்றவர்களும் பீதியுடன் அலறியபடி ஓடினர். பள்ளத்தாக்கைப் பார்த்த அருண், “அய்யோ…” என்று கத்த… அனைவரும் கீழே பார்த்தனர். அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கும் புதர்ச்செடிகளுக்கும் நடுவே கிடுகிடுவென்று ஆழமாக இறங்கிய பள்ளத்துக்கு நடுவே, சிதைந்த நிலையில் வேன் விழுந்துகிடப்பது தெரிந்தது.
பள்ளத்தாக்கில் கிடந்த வேனிலிருந்து ஓலக்குரல்கள் மெலிதாகக் கேட்டன. அழுகையுடன் ஒலித்த ஒரு பெண்ணின் குரல் அலறலாகக் கேட்டது. “இது… நந்தினிடா…” என்று கத்திய அருணும் இன்னும் இரண்டு பேரும், பாதையே இல்லாத ஆபத்தான அந்த மலைச்சரிவில் இறங்கப் பார்க்க… மற்றவர்கள் அவர்களைத் தடுத்தனர். “விடுங்கடா… அது நந்தினியோட குரல்டா” என்ற அருணின் குரல் அழுகையாக மாற, மஹிமா அழுதபடி அருணின் தோளில் சாய்ந்தாள். பெண்கள் சத்தமாகக் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தனர். அருண் உடைந்துகிடந்த கம்பித் தடுப்பில் சாய்ந்தபடி தலையில் அடித்துக்கொண்டு அழ… ,“அழாத அருண். யாருக்கும் ஒண்ணும் ஆயிருக்காது” என்ற மஹிமா சட்டென்று குரல் உடைந்து மேலும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.