மண்.. மனம்.. மனிதர்கள்! - 17

நீலா ரகுபதி!
மண்.. மனம்.. மனிதர்கள்! -  17

 ப ள்ளிப் பருவத்தில் என்னுள் நின்றதோர் அதிசயப் புள்ளி.

புகழான கடல் ஆசாரி, மனம் போன போக்கில் வாழும் உல்லாச சம்சாரி என்பதையெல்லாம் கடந்து ஏதோவொரு வசீகரம் அவரிடம் இருந்தது.

பூமியின் மேற்புறத்தில் இருப்பதைப் போலவே கடலுக்கடியிலும் மேடு, பள்ளங்கள் உண்டு. மடுவும் மலைகளும் உண்டு. நீரோட்டம் எனப்படும் ஆறோட்டம் உண்டு. புதர்கள் உண்டு. புதையல் உண்டு. இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும் அவருக்கு அத்துப்படி.

இந்தியாவின் முதல் ஃபைபர் போட் செலுத்தப்பட்டது மெரினாவில்தான். அதைப் பரிசோதனை ஓட்டமாக செலுத்திக்கொண்டுபோன முதல் பைலட் அவர்தான்.

கடற்புரத்தில் மிதக்கின்றதே ஆயிரக்கணக்கான கட்டுமரங்கள், அதில் 95 சதமான கட்டுமரங்களை செதுக்கித் தந்த நீலக்கடல் ஆசாரி அவரே.

அவர் ருசிக்காத கடலோரப் பனைமரக் கள்ளே இல்லை.

அதிகாலை இறக்குவது ஆசாரிக்கு என்று தனியே எடுத்து வைத்து விடுவார்கள்.

எப்போதும் அவரோடு பத்திருபது பேர் இருக்கக் காணலாம்.

கடலாடிகளின் வணக்கத்துக்குரிய குரு அவர். ஆசாரி ரகுபதி!

திருவல்லிக்கேணி நடுக்குப்பத்துவாசி. ஆனாலும் எப்போதாவதுதான்

அங்கே அவரைக் காண முடியும். பழவேற்காடு டு பாண்டிச்சேரி மணற்பரப்புத்தான்

அவரது கட்டுமரப் பட்டறை.

மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட அல்ஃபீஸா மரங்கள் மணற் பரப்பெங்கும்

ரகுபதி ஆசாரியின் வருகைக்காகக் காத்திருக்கும்...

வெற்றிலைப் பாக்கு பழங்களோடு சிறு தொகை ஒன்றை வைத்துப் பணிந்து அழைக்கும் கடலாடிகளை ஆதூரப் புன்னகையோடு தட்டிக்கொடுத்தபடி

கோடாரியைக் கையிலெடுக்கும் ரகுபதி ஆசாரி,

அடுத்த பத்து நாட்களுக்குத் தவமாய் முனைந்து செதுக்கி அந்த அல்ஃபீஸாவைக் கட்டுமரமாக உருமாற்றிக் கடலுக்குள் தள்ளிய பின்தான் தன் நினைவுக்கு மீள்வார்.

அறிவியலும், கலையுணர்வும் ததும்ப வடிக்கப்பட்ட அந்தக் கட்டுமரம், உப்புக் கடலில் மிதந்து மிதந்து தன்னுள் கொண்ட மரப்பாலை எல்லாம் வெளித் தள்ளித் தள்ளித் தக்கையான பின் அதனைக் கரையேற்றி ஃபினிஷிங் டச் கொடுக்கும் ரகுபதி ஆசாரி,

ஈரக்கடல் மண்ணில் பிள்ளையார் உருண்டை பிடித்து மஞ்சள் குங்குமம் தெளித்து

சிறிய பள்ளம் தோண்டி அதில் கற்பூரம் ஏற்றி தேசம்மாவை வணங்கியபின்

“போய் வா தாயே...” எனக் கடலேற விடுவார்.

அதற்காகவே காத்திருந்ததுபோல அடுத்தொரு மீனவ கிராமத்தில் இருந்து

பாக்கு வெத்தலையும் பாண்டிச்சேரி பாட்டிலுமாக வந்து அவரை

அலாக்காகத் தூக்கிக்கொண்டுபோய் விடுவார்கள்.

ரகுபதி ஆசாரிக்கு மூன்று குழந்தைகள். வசதியான வீட்டில் பிறந்து

நடுக்குப்பத்தில் வாழ்க்கைப்பட வந்தவர் அவரது மனைவி நீலா.

ஆசாரிக்கு அப்படியொரு மனைவி அமைந்தது வரம்.

கணவன், குடும்பப் பொறுப்பில்லாமல் கடலோர கிராமங்களில்

நாடோடி போல சுற்றினாலும் எவ்வளவுதான் மடங்கக் குடித்தாலும்

சம்சார துரோகம் மட்டும் செய்துவிட மாட்டார் என்று தெரிந்துவிட...

அதுவே போதும் என மொத்த குடும்பப் பாரத்தையும்

“முருகா, முருகா” என்றபடி தலைமேல் சுமந்தார் நீலாம்மா.

எப்போதாவது வீடு வரும் ரகுபதி, நண்பர்களோடு குடித்து அழித்தது போக பாக்கிப் பணத்தை கொடுத்து விட்டுக் கிளம்பி விடுவார். பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கியது மொத்தமும் நீலாம்மாதான்.

அவரது பிள்ளைகள் மாறனும் வர்மனும் எனக்குப் பால்ய நண்பர்கள். “வந்துட்டியே.... சாப்ட்டுத்தான் போயேன்ப்பா...” நீலாம்மாவின் பாசக் குரலும் வாஞ்சை யான அவரது முகக்குறியுமே வயிற்றை நிரப்பிவிடும்.

கடுமையான சம்சாரத்தில் கட்டாய சன்னியாச வாழ்க்கை வாழ்ந்த களைப்பு நீலாம்மாவின் முகத்தில் தோய்ந்திருக்கும். அதையும் மீறி புன்னகைத்திருக்கும் நீலாம்மாவுக்கு கண்களும் சிரிக்கும் .

ரகுபதி, ஆரம்பத்தில் சென்னை துறைமுகத்தில் மஸ்தூர் வேலையில்தான் இருந்தார். அந்த செழித்த வேலையை விட்டு அவர் வெளியேறக் காரணம் சக ஏழை மீனவர்களின் பால் அவர் கொண்ட நேசம்.

ஆம், கடலோடும் கட்டுமரங்கள் காலப்போக்கில் அலைகளில் அடிவாங்கி அடிவாங்கி ஆங்காங்கே பிளந்து நசிந்து போகும். புது மரம் வாங்க வசதியில்லாத எளிய மீனவர்கள் கடற்தொழிலைத் தொடர முடியாமல் தவித்து நிற்பார்கள்.

இதைப் போக வரப் பார்த்துக்கொண்டிருந்த ரகுபதி ஒருநாள் மனம் பொறுக்க முடியாமல் சொன்னார்...

“பாத்துக்கலாம்யா... ரெண்டு நாள் பொறுத்து வாங்கையா...’’

துறைமுகத்துக்கு லீவு போட்டுவிட்டு கோடாரியைத் தூக்கியவர் சிதைந்த கட்டுமரத்தின் மீது தன்னந்தனி யாளாகச் செயல்பட்டார்.

உளியும் அரமும் கொண்டு மரத்தின் பிசிரிய பகுதி களை மெல்ல மெல்ல ஊடறுத்து செதுக்கி எதிர்ப்புறம் சுகூர் நூலளவெடுத்து...

இருபுறமும் சமன் செய்து கொடா என்னும் அடிக்குழியை பேலன்ஸ் செய்து நிறுத்தி, கயிறு மாற்றிக் கட்டி, சுற்றிவர சன்னம் இழைத்து, பெயின்ட் அடித்துப் புத்தம்புதுப் பொலிவோடு பளபளவெனக் கடலில் இறக்கிக் கொடுத்து நின்றார் ஆசாரி ரகுபதி.

வாய்பிளந்து நின்ற எளிய மீனவர்கள் அவரைத் தோளில் தூக்கிக் கொண்டாடினர்.

பட்டுப்போன கட்டுமரத்துக்கு உயிர் கொடுக்கிறார் ரகுபதி ஆசாரி என்ற செய்தி வேகமாகப் பரவ, எங்கெங்கிருந்தோ படையெடுத்து வந்தார்கள் பாவப்பட்ட மீனவர்கள்.

துறைமுக மேலதிகாரி, “யாரைக் கேட்டு லீவு போட் டாய்...” என்று எகிற, கொஞ்சமும் யோசிக்காமல் மத்திய அரசின் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு தன் மீனவ மக்களோடு இரண்டறக் கலந்தார் ஆசாரி ரகுபதி.

அதன்பிறகு புதியதும், பழையதுமாக ஆயிரக்கணக் கான கட்டு மரங்களை செதுக்கி ராஜ மரியாதையோடு வாழ்ந்தார்.

சமயங்களில் ஒரு மாறுதலுக்காகக் கடலேறி வலை வீசப் போவார் ஓடாளி ரகுபதி. தன்னந்தனியாகத்தான் கடலேறுவார்.

அவருக்குப் பிடித்த கடவெறா, வஞ்சிரம், கோலா போன்றவை நடுக்கடலில்தான் கிடைக்கும் என்பதால் திரும்பிவரக் குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும்.

அகண்டமாங்கடலில் தனியனாகச் சுற்றித் திரிந்து வருவார் ரகுபதி. அந்த நேரங்களில் அவரது முகம் ஏதோ துளசிவனத்தில் தீராத்தவம் செய்து திரும்பும் முனிவரைப் போல தேஜஸ் காட்டும்.

பிடித்ததை சுற்றங்களுக்குப் பிரித்துக் கொடுத்தபின் மிஞ்சியதை வீட்டுக்குக் கொண்டு வருவார். ஒரு சொல் சொல்லாமல் மலர்ந்த முகத்தோடு சமைத்து வைப்பார் நீலாம்மா.

தகப்பன் மேல் அடிக்கும் நெடிக்கு அஞ்சியபடி பத்தடி தொலைவில் நின்று கொண்டிருக்கும் தன் பிள்ளைகளின் மேல் ‘நயன தீட்சை’ போல் ஓர் பார்வையை வீசுவார் ஆசாரி. அதோடு சரி.

மீண்டும் பழையபடி கடலோரம் சென்று புதுச் சரக்கோடு புகழ் மொழிகளைக் கேட்டபடியே படுத்துறங்கி விடுவார். சித்தம் போக்கு சிவன் போக்கு.

ஆசாரி வாழ்வில் ஆச்சரியமானதொரு நிகழ்வு கல்பாக்க அழைப்பு.

ரகுபதி ஆசாரியின் கடல்சார் நுண்ணறிவையும் துணிச் சலையும் மீன்வளத் துறையின் மூலமாகக் கேட்டறிந்த கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள்  ரகுபதியைத் தேடி நடுக்குப்பத்துக்கே பழக்கூடையோடு காரில் வந்து இறங்கினார்கள் .

நீலாம்மாவுக்குப் பெருமை பிடிபடவில்லை.

“அப்பாடா, இனி வாழ்க்கை விடிந்ததுபோல்தான்...” என மகிழ்ந்தவர் வந்தர்களுக்கெல்லாம் இஞ்சி டீ போட்டு உபசரித்த பின், உள்கதவு ஓரமாகச் சென்று நின்றுகொண்டு தன் கணவனையே கவனித்துக் கொண்டிருந்தார்.

“ரகுபதி ஐயா, உங்களைப் போன்ற கடலின் சூட்சுமங் களை நன்கு அறிந்த மரபார்ந்த மீனவர்களைத்தான் உலகப் புகழ்பெற்ற எங்கள் ஹோமிபாபா எதிர் நோக்கி யிருக்கிறார். அருமையான வாய்ப்பு இது. எங்களோடு வந்து விடுங்கள். கை நிறைய சம்பளம், குடியிருப்பு, குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் எல்லாவற்றையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்...”

“நல்லதுங்க... ஆனாப் பாருங்க, ஒரு பத்து பன் னெண்டு கட்டுமரங்கள பழுது பாத்துத் தரேன்னு ஒத்துக் கிட்டிருக்கேன்... என்னை விட்டா எங்க ஜனத்துக்கு வேற யாரும் இல்லீங்க... முடிஞ்சதும் பார்க்கலாம்...”

கதவுக்குப் பின்னால் “புசுக்” கெனும் சத்தத்தோடு அனிச்சையாய் சிரித்துக் கொண்டார் நீலாம்மா. தோற்றுப் பழகிய பெண் மனதின் பெரும் ஓலம் அது.

மழைக் காலங்களில் பொழுதுபோக்காக வீட்டுக்குள் அமர்ந்து மினியேச்சர் பாய்மரக் கப்பல்களை செதுக்கிக் கொண்டிருப்பார் ரகுபதி ஆசாரி.

கையளவுக்கு அவர் செய்யும் தத்ரூபமான பாய் மரக்கப்பல்கள் மிகப் பிரசித்தம். அமைச்சர்கள், பெரும் பணக்காரர்கள் வீட்டு ஷோ கேஸ்களில் பரிசுப் பொருட் களாக ரகுபதி ஆசாரியின் மினியேச்சர் கப்பல்கள் இன்னமும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

மினியேச்சர் கப்பல்களை வாங்கவரும் வெளிநாட்டுக் காரர்களை டூரிஸ்ட் கைடுகள் நடுக்குப்பத்துக்கே அழைத்து வருவார்கள். வாய்க்கு வந்த விலையைச் சொல்வார். பேரம் பேசினால் எழுந்து உள்ளே போய் விடுவார். சமயத்தில் சும்மா தூக்கிக் கொடுப்பதும் உண்டு. ரகுபதி ஆசாரியை கணிக்கவே முடியாது.

எந்தக் கவலையுமில்லாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே சுழன்றாடி அனுபவித்துக்கொண்டிருந்த ரகுபதி ஆசாரியை ஒரே அடியாக அடித்து வீழ்த்தியது அவரது மனைவியின் மறைவு.

20 வருடங்களாகக் காசநோயோடு போராடி தன் குடும்பத்துக்காக ஓடியாடி இளைத்த நீலாம்மா, சுற்றி வர உறவுகளிருந்தும் கவனிக்க ஆளின்றி, நுரையீரல் ஒன்றை இழந்து போதுமடா சாமியென்று முருகனுக்கு உகந்ததோர் சஷ்டி நாளில் ஐ.சி.யூவில் நிலை குத்திப் போனார்.

அப்போது ரகுபதி ஆசாரி 80 வயதை நெருங்கி யிருந்தார். மனைவி இறந்த தகவலை யாரும் அவருக்குச் சொல்லக்கூடவில்லை.

யார் யாரோ வாசலில் வந்து இறங்குவதையும் ஷாமி யானா போடும் வேலைகள் நடப்பதையும் கண்ட ஆசாரி கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து நிலை குலைந்து போனார்.

“அட, ரகுபதி ஆசாரிக்கு அழக்கூடத் தெரியுமா..? ”

மொத்த நடுக்குப்பமும் கூடி நின்று ‘உச்’ கொட்டிக் கொண்டிருந்தது.

காரியம் முடிந்து கடற்கரையில் நின்று பிண்டம் கரைத்த அந்த நொடியில் தன் சாராய விருப்பத்தையும் சேர்த்துக் கரைத்துவிட்டார் ஆசாரி. ஆம், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் ப்ளாஸ்டிக் டம்ப்ளரைத் தொடுவதில்லை .

மாலை ஆறு மணியானால் வீட்டு வழக்கத்தையொட்டி வாசல் விளக்கின் ஸ்விட்சைப் போட்டு விடுகிறார்.

“பொறுப்பாயிட்டீங்களே ஆசாரி...” என்றால்... “வெளக்கா... நான் போட்டனா ? என் நீலாதானே வந்து போட்டுச்சு..!” என்கிறார். தன் இல்லத்தரசி தன்னுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பதாய் பரிபூரணமாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

84  வயதிலும் கண்ணாடி இல்லாமல் கால் தடுமாறாமல் தனியே வாழ்ந்து வரும் ரகுபதி ஆசாரியைப் பழைய நினைவுகளோடு பார்க்கப் போனேன்.

மாலைக் கடற்காற்று வீசத் துவங்கிருந்த நேரம் நடுக் குப்பத்துக்குள் நுழைந்தேன்.

வீட்டு வாசலில் எதையோ குனிந்து எடுத்துக் கொண்டி ருந்தவர் மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்தார். அதே பழைய தோரணை.

“ஐயா, என்னைத் தெரியுதுங்களா..?”

பெயரைச் சொன்னதும் பிடித்துவிட்டார்.

“அட்டட்டடடா... நீதானாப்பா..? வா...வா...வா...”

குந்தி நடந்து சென்று கட்டிலைத் துடைத்து உக்கார வைத்தவர் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென்று மெல்லக் கையைத் தூக்கி தன் பின் தலையை லேசாகத் தட்டிக்கொண்டவர்...

“சும்மா பேச்சுக் குடுத்துக்கினே இருக்கேன் பாரு... வர்மன் எனுக்கு சாப்பாடு வெச்சுட்டுப் போயிருக் கான்ப்பா... சாப்புடுறியா..!”

“இருக்கட்டுங்க... இப்பதான் முடிச்சு வரேன்...”

“மூத்தவன் மாறனும் இங்கதான் இருக்கான். ராவுக்கு வந்து பாத்துட்டுத்தான் போவான். ரெண்டு பேரும் கவுருமென்ட் போஸ்ட்ல நெல்லபடியா இருக்காங்கப்பா. என் பொண்ணு, எனுக்கு பேரப் புள்ள எடுத்துக் குடுத்துடுச்சி தெரியுமா..?”

தான் பாதுகாப்பாகவும், குறையின்றி இருப்பதைப் பற்றியும் பெருமையோடு சொல்லிக்கொண்டேயிருந்தவர் தன் மனைவியைக் குறித்து ஏதும் பேசாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

கிளம்ப எத்தனித்தேன்.

“அடுத்த மினியேச்சருக்கு என்ன ஐடியா வெச்சிருக்கீங்க ..?”

“ஐடியாவா, என்னத்த ஐடியா ? எல்லாத்தையும்தான் கடலோரத்துல கரைச்சு வுட்டுட்டேனே... அது ஆச்சு அஞ்சு வருசம்...”

அவர் குரல் கம்மியது. அதற்கு மேல் அவர் எதிரே இருக்க அஞ்சி சட்டென எழுந்து கொண்டேன்.

“ஐயா, உங்களைப் பத்தி கொஞ்சம் எழுதலாம்னு இருக்கேன்...”

வெட்கமும் பொக்கையுமாய் சிரித்துக்கொண்டே என்னைப் பற்றி எழுத என்ன இருக்குப்பா என்பதைப் போல இரண்டு கைகளையும் மேலே விரித்துக் காட்டினார்.

“ஐயா, கடலாடிகளின் வாழ்க்கைக்கு நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கீங்க... கட்டுரைக்கு தலைப்பே ‘நீலக்கடல் ரகுபதி’ ன்னுதான் வைக்கப் போறேன்...”

வேண்டாம்...வேண்டாம் என்பதுபோல வேகமாக தலையசைத்தார்...

“ஏன் ?”

“நீலக்கடல்ல என்ன மாதிரி ஆயிரம் ரகுபதி வருவான்... போவான். அது வேணாம்ப்பா...”

“வேற..?”

“நீலா ரகுபதின்னு வையி !”

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in