கண்ணான கண்ணே- 18

கண்ணான கண்ணே- 18

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை நாள் குதூகலத்தை அனுபவிக்க விரும்பாதோர் இருக்கவே முடியாது. அதுவும் குழந்தைப் பருவத்தின் விடுமுறை நாட்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை உணரும் பருவம். ஆதலால், உங்கள் குழந்தைகளின் விடுமுறை காலத்தை அவர்கள் ஆனந்தத்துடன் எதிர்கொள்ளச் செய்வது பெற்றோராகிய உங்களின் கடமையே.

குழந்தைகளுக்கான விடுமுறை காலத்தை நான்கு வகைகளாக நான் பட்டியலிடுகிறேன்.

1. உறவினர்கள் வீட்டிற்குச் சென்று தங்குவது. குறிப்பாக தாத்தா-பாட்டி வீடு, அத்தை வீடு, பெரியப்பா, சித்தப்பா வீடு என நெருங்கிய உறவினரின் வீடுகளில் உங்கள் குழந்தை விடுமுறையைக் கழிக்க அனுமதியுங்கள். ஓரிரு தினங்களாவது அவர்கள் மட்டும் உறவினர்கள் வீட்டில் தங்க அனுமதிப்பது சிறப்பு.

2. பள்ளி, பயிற்சி வகுப்புகள் என வழக்கமான நாளாக இல்லாத விடுமுறை நாட்களை உங்கள் குழந்தைகள் உங்கள் வீட்டிலேயே உங்களுடன் கழிக்கலாம். இவை ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் நாட்களாக அமையும். விருப்பமான உணவைக் குடும்பத்தினருடன் உண்ணுதல் போன்றவை மனதுக்கு நெருக்கமான அனுபவங்களைத் தரும்.

3. உங்கள் வீட்டுக்கு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களை வரவழைத்து விருந்தோம்பலாம்.

4. இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களுக்கு உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அழைத்துச் செல்லலாம். கடற்கரை, பாலைவனம், வனப் பகுதி, விவசாயப் பகுதிகள், பழங்காலத்து வரலாறு சொல்லும் கோட்டைகள் ஆகியவற்றுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். ட்ரெக்கிங், பனிச்சறுக்கு போன்றவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் குழந்தைகளை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால், அது கட்டாயமல்ல. அப்படியே அழைத்துச் சென்றாலும்கூட எடுத்த எடுப்பிலேயே சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றுவிடாதீர்கள். ஏனெனில், குழந்தைகள் ஷாப்பிங் மால்கள்தான் சுற்றுலா தலங்கள் என்ற எண்ணத்துக்குள் வந்துவிடுவார்கள்.

விடுமுறைகளின் முக்கியத்துவம்

குழந்தைகளுக்கு விடுமுறை ஏன் முக்கியம் என்பதைக் கூறுகிறேன். குழந்தைகள் வெவ்வேறு விதமான உணவு, தண்ணீர், வாழும் இடங்கள் ஆகியவற்றுக்கு அறிமுகமாவது அவசியம். இதில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. தண்ணீர் ஒரு பிராந்தியத்தின் உணவு, மொழி, மக்கள், கலாச்சாரம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பலவிதமான தண்ணீரைக் குடித்தவர்களின் குடலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் என்பது கூடுதல் சுவாரசியம்.

முதல் வகை விடுமுறை:

உறவினர் வீட்டில் தங்குவது எனும் முதல் ரக விடுமுறை நாட்கள், எப்படி நல்லதொரு விருந்தாளியாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பாட்டை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வீட்டில் செல்லமாக நடத்துவீர்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு கிரீடம் இருப்பதுபோல் உணர்வார்கள். ஆனால், விருந்தினரின் வீட்டில் அப்படி ஒரு கிரீடத்தை எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தையும், அதேவேளையில் அங்கும் நேசத்தையும் பாசத்தையும் அனுபவிக்க  முடியும் என்ற உண்மையையும் உணர்வார்கள்.

நீங்கள் பெரிதாகச் சொல்லித்தராமலேயேகூட விருந்தினராகச் சென்ற இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதைப் புரிந்து, பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உணவில் எப்படி சமரசம் செய்து கொள்வது. உணவு நேரத்தில் எப்படிச் சூழலுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது, மாறுபட்ட ருசியை எப்படி ஏற்றுக்கொள்வது எனப் பல்வேறு விஷயங்களை வெகு இயல்பாகக் கற்றுணர்வார்கள். சில நேரங்களில் தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை நாசூக்காக விருந்தினர் இல்லத்தினரிடம் தெரிவிக்கவும் பழகிக்கொள்வார்கள். விடுமுறை நாட்களில் இத்தகைய வாழ்வியல் படிப்பினைகளைத்தான் குழந்தைகள் பெற வேண்டும்.

இரண்டாம் வகை விடுமுறை:

இது, நான் சொன்னபடி தன் சொந்த வீட்டிலேயே விடுமுறையைக் கழிக்கும் விதம். வழக்கமான பரப்பான நாட்களுக்கும் விடுமுறைக்கும் என்ன வித்தியாசம் என்ற அடிப்படைப் புரிதலை இது ஏற்படுத்தும். அதிகமான நேரம் விளை

யாடலாம், அதிகமான நேரம் தூங்கலாம், சற்றே அதிகமாகச் சாப்பிடலாம் என நிறைய சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். நண்பர்களுடன் வீட்டுக்குள் விளையாடலாம். ஒரு வீடு எப்படி இயங்குகிறது என்பதைக் குழந்தைகள் பொறுமையாகக் கற்றுணர்வதற்கு இத்தகைய விடுமுறை நாட்கள் பேருதவியாக இருக்கும்.

இது போன்ற நாட்களில் குழந்தைகளை அவர்களின் அறையை, அலமாரியைச் சுத்தம் செய்வதில் ஈடுபடுத்தலாம். சமையல் வேலைகளில் அவர்களையும் ஈடுபடுத்தலாம். அடுப்பங்கரையைச் சுத்தம் செய்வது,வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிவருவது எனச் சிறுசிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். வாரச் சந்தைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். மொத்தத்தில் குழந்தைகளும் பெற்றோர்களும் மனம் விட்டுப் பேசவும், வேறு எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் இயல்பாகப் பேசிப் பழகவும் இத்தகைய விடுமுறை நாட்கள் மிக மிக அவசியம்.

மூன்றாம் வகை விடுமுறை:

இது மிகவும் முக்கியமானது என்பேன். இந்த முறை விருந்தாளிகளை வீட்டிற்கு வரவேற்று நீங்கள் உபசரிக்க வேண்டும். உங்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை விருந்தினரை உணரச் செய்யும் விருந்தோம்பல் ஒரு கலை. அந்தக் கலையைக் குழந்தைகள் இயல்பாகக் கற்றுக்கொள்ள, உங்கள் வீட்டிற்கு உறவினர்களை அழையுங்கள்.

உங்கள் குழந்தைகள் எப்படி விட்டுக்கொடுப்பது, சமரசம் செய்துகொள்வது போன்ற பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள். அன்பைக் கொடுத்துப் பெறும் பண்பைப் பெறுவார்கள். சில நேரங்களில் விருந்தினர்களால் ஏற்படும் சிற்சில இடையூறுகளைக்கூட எப்படி இன்முகத்துடன் எதிர்கொள்வது எனப் புரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் இதுவே அடுத்த முறை அவர்கள் எங்காவது விருந்தினராகச் செல்லும்போது நடந்துகொள்ள வேண்டிய விதத்தையும் கற்றுக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், என் கவலை எல்லாம், உறவினர்கள் வீட்டில் தங்குவதும், விடுமுறை நாட்களில் விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பதும் இன்றைய காலகட்டத்தில் அருகிவருகின்றன என்பதே.

அதற்குப் பதிலாக மேற்கத்திய கலாச்சாரம் போல் ‘ப்ளே டேட்’ (Play date) என்ற புதிய முறையைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஊக்குவிக்கின்றனர். உங்கள் நண்பர் அல்லது உறவினருடன் நீங்கள் நெருங்கிப் பழகி புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே அந்த நாட்கள் முடிந்துவிடுகின்றன.

நான்காம் வகை விடுமுறை:

இது நான் கூறியதுபோல் உள்நாட்டுச் சுற்றுலா. இது குழந்தைகளுக்குப் பலவித கலாச்சாரம், வரலாறு, பூகோளம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்கவழக்கம் முதல் அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரம் வரை எப்படி அந்தப் பகுதியின் வரலாறும், அவர்கள் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகிறது. மலைப் பிரதேசங்களுக்கும் நீர் நிலைகளுக்கும் பாலைவனப் பகுதிகளுக்கும் வனப்பகுதிகளுக்கும் செல்லும்போது இப்போதெல்லாம் சூழல் மாசு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை வெகுவாகப் பார்க்க முடிகிறது. இங்கெல்லாம் தாங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனியின் உறைகள் எப்படி மாசு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் குழந்தைகள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் தங்கள் சுற்றுப்புறத்தை எப்படித் தூய்மையாக வைத்துக்கொள்வது என்று குழந்தைகள் தெரிந்துகொள்வார்கள்.

விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான உணவு வகைகள்:

(இரண்டு மணி நேர இடைவெளியில் இந்த உணவு முறையைப் பின்பற்றலாம்)

முதல் உணவு: உலர் கொட்டைகள் அல்லது பழ வகைகள். இது குழந்தை எழுந்ததில் இருந்து முதல் 40 நிமிடங்களுக்குள் சாப்பிடும் உணவாக இருக்கட்டும்.

இரண்டாம் உணவு: வீட்டில் தயாரிக்கப்பட்ட காலைச் சிற்றுண்டி. வெளியூரில் இருந்தால் அந்த ஊரின் பிரத்யேகமான காலை உணவு.

மூன்றாம் உணவு: வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள். எலுமிச்சைச் சாறாகக்கூட இருக்கலாம்.

நான்காம் உணவு: தயிர் சாதம், காய்கறி வகைகள், சப்பாத்தி, முழுமையான மதியச் சாப்பாடு இவற்றில் ஏதேனும் ஒன்று.

ஐந்தாம் உணவு: மறுபடியும் உலர் பழங்கள், வீட்டில் தயாரித்த லட்டு அல்லது அப்பளம்.

ஆறாம் உணவு: வீட்டிலேயே தயார் செய்த சமோசா, கச்சோரி, அல்லது உள்ளூர் உணவு வகைகள்.

ஏழாம் உணவு: அரிசி சாதம், காய்கறி வகைகள், பாலாடைக் கட்டி, தயிர் என எடுத்துக்கொள்ளலாம்.

எட்டாம் உணவு: குழந்தைகள் விரும்பினால் பால். அத்துடன் மஞ்சள் அல்லது ரோஜா குல்கந்து சேர்த்துக் கொடுக்கலாம்.

விடுமுறை நாட்கள் என்பவை, குழந்தைகள் அதீதமாகப் பசியை உணரும் நாட்கள். அதுபோன்ற நாட்களில் அவர்கள் பசிக்கான உணவு வீட்டில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், அவர்களை மெதுவாகச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். ஏதாவது ஒரு நேரம் சற்றே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் அடுத்த உணவைப் பசியறிந்து தேவைப்படும்போது சாப்பிடும்படி ஊக்குவிக்கவும்.

விடுமுறை நாட்களில் அடுத்த ஆண்டிற்கான பாடத்திற்குப் பயிற்சி என்று பிள்ளைகளை வதைக்காமல் அவர்களை ஆனந்தமாக விடுமுறையைக் கொண்டாட அனுமதியுங்கள். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் தங்களையும் அறிய முற்படுவார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் தெரிந்துகொள்ள முற்படுவார்கள்.

(வளர்வோம்… வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in