காதல் ஸ்கொயர் 16

காதல் ஸ்கொயர் 16

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

காதல் வந்த பிறகு, காதலர்கள் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தைப் படைத்துக்கொள்கிறார்கள். கௌதமும் நந்தினியும் விடிய விடிய தூங்காமல், “இப்ப மணி இங்க ரெண்டு, அங்கயும் ரெண்டா?” என்று அபத்தமாக மெசேஜ் அனுப்பிக்கொண்டார்கள். சுற்றிலும் பத்துப் பேர் இருக்கும்போதும், எதையோ நினைத்து வெற்றிடத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். மீண்டும் மீண்டும் சந்தித்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள்.

சிவப்பு நிறப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் ஸ்பெத்தோடியா மரத்தடியில் அமர்ந்தபடி நந்தினி, “கௌதம்…நமக்குக் கல்யாணமாயி… ரெண்டு, மூணு வருஷத்துல நான் செத்துட்டேன்னு வச்சுக்க…” என்று ஆரம்பிக்க, கௌதம், “சீ… பைத்தியம் மாதிரி பேசாத” என்றான்.

“இல்ல… சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்குறேன். அப்படி செத்துப் போயிட்டேன்னா, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?” என்றவுடன் கௌதம் குறும்புச் சிரிப்புடன், “வேற வேலை?” என்றான். நந்தினியின் முகம் மாறியது. தொடர்ந்து கௌதம், “இன்னும் கொஞ்சம் சின்னப்பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன் நினைப்புல நான் அவ மடில படுத்து அழ… அவ கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்ல… நான் அப்படியே அவகூட கட்டில்ல உருண்டு பொரண்டு அழ…” என்று கூற… பாய்ந்து அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்த நந்தினி ஆவேசத்துடன், “அழறதுக்கு ஏன்டா கட்டில்ல உருண்டு பொரளணும்? நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணினன்னு வச்சுக்க… ஜென்மத்துக்கும் உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்காது” என்றாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in