மண்... மனம்.. மனிதர்கள்! - 16

கொடிக்கா! (சென்ற வார தொடர்ச்சி...)
மண்... மனம்.. மனிதர்கள்! - 16
Updated on
4 min read

லாக்கப்புக்குள் இருந்த கொடிக்காவை ஒரு பார்வை பார்த்தபடி கலங்கிய கண்களோடு தீர்க்கமாக நின்றிருந்த ருக்குமிணியை ஏறிட்டார்  ‘டி- 3’ இன்ஸ்பெக்டர்.

“ஐயா, உறுதியா சொல்றேன் கேட்டுக்குங்க. கொடிக்காவ சொந்த ஊரோட அனுப்பிடப் போறேன். அவனால இனிமே இங்க யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்காது. அவனும் இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேன்னு என் மேல சத்தியம் உட்டுட்டான். வேணும்னா எழுதிக்கூடத் தாரோம். நம்புங்க...”

கொடிக்காவை அழைத்துக் கொண்டு அழுதபடியே போனாள்.

பார்த்தசாரதி சன்னதியில் நடுங்கும் கரங்களைக் கூப்பியபடி அழுது வீங்கிய முகத்தோடு தழுதழுத்தக் குரலில் முறையிட்டு நின்றாள் ருக்மிணி.

“சாரதியப்பா, எங்கியோ பிறந்த எங்கள உன் திருவல்லிக்கேணி மண்ணுக்கு வர வெச்சது நீதான். இன்னிக்கு என் கொடிக்காவ மட்டும் தனியாப் பிரிச்சு ஊரோடப் போகச் சொல்றதும் நீதான். சாரதியப்பா, உன்ன நம்பித்தான் என் கொடிக்காவ ஒண்டிமா அனுப்புறேன். நீயே நின்னு பாத்துக்க...”

போலீஸ் வந்துபோன கடையை கோமியத்தால் ஏழு முறை அலம்பி சுத்தப்படுத்தினாள்.

“இனி யாரையும் நம்பறதா இல்ல, என் கடைய நானே பார்த்துக்குவேன்…” என்றவள் சரஸுவை

வேலையை விட்டு நிறுத்தினாள்.

கொடிக்காவை அழைத்துச் சென்று அவனுக்குப் பிடித்த

‘விவேகா ஓட்டல்’ பூரி செட்டை வாங்கிக் கொடுத்து,

கையில் நூறு ரூபாயை வைத்துத் திணித்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனாள்.

சந்திரபோஸ் முதன் முறையாக கொடிக்காவை

கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.

“கொடிக்கா, சாரதிப்பா உன் கூடவே இருந்து பாத்துக்கினுருப்பாரு. தெகிரியமா போய் வா...” என்று ரயிலேற்றி விட்டார் சந்திரபோஸ்.

எந்த எதிர்ப்பும் காட்டாமல், வெறித்த  அமைதியான முகத்தோடு ரயிலேறிப் போனான் கொடிக்கா.

***

பழைய திருவல்லிக்கேணியிலிருந்து எகிறி

பெங்களூரு வந்து விழுந்தேன்.

திருட்டுப் பட்டத்தோடு திருவல்லிக்கேணியை விட்டு

வெளியேறிப்போன கொடிக்கா, எத்தனையோ

வருடங்களுக்குப் பின் இப்போது என் எதிரே...

“ஈவ்னிங் ரூமுக்கு வாயேண்டா, நிறைய பேசலாம்...”

தோளைத் தொட்டு அழைத்துவிட்டு மேடையேறப் போனேன்.

எப்போது கிளம்பிப் போனான் என்று கவனிக்கவில்லை.

சரியாக மணி 5 அடிக்க ரூமுக்கு வந்தான் கொடிக்கா.

சரேலெனத் தாவி மெத்தையில் விழுந்து அமர்ந்து

கள்ளங்கபடமில்லாத அதே சிரிப்பை விசிறி அடித்தான்.

மூக்கைத் தவிர அனைத்து பாகங்களிலும்

தங்க ப்ளாட்டினங்களாகச் சுமந்திருந்தான்.

வொயிட் அண்ட் வொயிட்டில் அவனது ஸ்கின் டோன் மின்னியது.

அவன் போட்டிருந்த சென்ட்டை மீறி செல்வ வாசனை வீசியது.

“கொடிக்கா உன்னை ஒண்ணு கேக்கலாமா ?”

“கேளு குரு… எதுனா வாங்கி வரச் சொல்லவா...?”

“அது கெடக்குது... நீ சொல்லு, அன்னிக்கு ஏன் அப்படி செஞ்ச..?”

“என்னிக்கு... எப்படி..?”

“சும்மா மழுப்பாத கொடிக்கா ! உங்க அம்மா உன் மேல

எவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்க..?”

“ஆமா...”

“காசுன்னு கேட்டிருந்தா அம்மாவே அள்ளிக் குடுத்திருக்கும்ல..?”

“......”

“ஏன் சொந்தக் கடைக்குள்ளாறவே திருடப்போன ?”

கொடிக்கா சத்தம் போட்டு சிரித்தான்.

“ஹையயோ, எத்தன வருஷம் கழிச்சு அந்த மேட்டர கேக்கற பார். அது பழைய கத குரு, அது எதுக்கு இப்போ..?”

“அதெல்லாம் இல்ல, நீ சொல்லியே ஆகணும்…”

“நடந்த உண்மைய இதுவரைக்கும் என் பொண்டாட்டிக்

கிட்டகூட சொல்லலப்பா. இப்ப சொல்லியே ஆவணும்கறியா..?”

“யெஸ்...”

கொடிக்காவின் முகம் சிரிப்பைத் துறந்து இறுகியது. யோசித்துக்கொண்டே ரோலக்ஸ் வாட்சைக் கழற்றி அதைத் தலைகாணியின் மேல் மெல்லத் தூக்கிப் போட்டவன் கழுத்தைக் குலுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

அவன் குரலில்  ‘ரிவர்ப்’ வைத்தாற் போலொரு தொனி இருந்தது…

“அன்னிக்கு சனிக்கிழமன்னு நியாபகம் வெச்சிருக் கேன். மழை வலுக்குறதுக்குள்ள கடையை ஏற கட்ட மாட்டாங்குப்பம் சரஸுவை வரச் சொல்லியிருந்துச்சு எங்கம்மா... சரஸு வர லேட் ஆவ ஆவ எங்கம்மாவா புலம்பிக்கிட்டே இருந்துது...

என்னிக்கும் இல்லாத திருநாளா சரி நாமளே போய் மூட்டைங்கள உள்ளே நவுத்தி வெச்சிடலாம்னு நினைச்சு, சைலன்ட்டா எழுந்திருச்சு எங்கப்பாவோட கடை சாவியை எடுத்துக்கிட்டுத் தனியாப் போனேன். போனேனா..?”

“ம்ம்ம்...”

“மழைத்தூரலுக்கு தெருவே வெறிச்சோடி இருந்துது. பக்கத்துல போன சமயம், கடைக்கு உள்ளே என்னவோ ஒரு மாதிரியா சத்தம் கேட்டுச்சு. திருடனா இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட்...”

“ம்ம்…”

“தோடா, என் கடைக்குள்ளயேவான்னு மெல்ல சத்தம் போடாம ஒரு கதவை மட்டும் கழட்டி வெச்சுட்டு நைசா உள்ளே போய் பாத்தவன் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்ப்பா...”

“ஏன்டா..?”

“உள்ளே இருந்தது யார் தெரியுமா ?”

“யாரு..?”

“நம்ம கணக்கு வாத்தியார் சந்தானமையங்கார்... அதுவும் அம்மணக் கட்டையா..!”

“என்னடா சொல்ற..?”

“இன்னுங் கேளு... கூட இருந்தது யாரு தெரியுமா ?”

“......?”

“மாட்டாங்குப்பம் சரசு. அது, முக்கா அம்மணக் கட்டை...”

“அடக் கண்றாவிக் கருமமே… அப்புறம் ?”

“என்னா நொப்புறம்? கணக்கு வாத்தியாருக்கு அப்படியே வேர்த்துக் கொட்டிப்போச்சு. பொத்துன்னு என் கால்ல விழுந்து, வெளிய சொல்லிடாதடா. என்னை காப்பாத்துடா கொடிக்கான்னு சின்னப் புள்ளமாரி அழுவுறாரு...”

“.................”

“ஸரசு பே பேன்னுகிட்டே புடவையை அவசரமா அள்ளி சொருகுறா. அதுலருந்து கட்டுப் பணம் பொத்துன்னு கீழ விழுது. திரும்பிப் பாத்தா அங்க கடை கல்லா திறந்து கெடக்குது. பின் கதவைத் திறந்துகிட்டு ஓடியே போயிட்டா சரஸு. ஓஹோ, இது வழக்கமா நடக்குற வேலைதான்னு புரிஞ்சிக்கிட்டேன்...”

தலையணையில் ஓங்கிக் குத்திய கொடிக்கா தொடர்ந்தான்...

“எங்கம்மா கோயில் மாதிரி வெச்சிருந்த இடத்துல இப்படி ஒரு வேலைய பாத்திருக்காங்களேன்னு நினைக்க நினைக்க அப்டியே கழுத்த திருகிடலாமான்னு வந்துது. ஆனா, சந்தானமையங்காரைப் பாக்கப் பாவமா இருந்துது.

ஒழிஞ்சு போவட்டும்னு அவரையும் அதே பின் வழியில அனுப்பி வெச்சுட்டு... கீழ இருந்த நாலாயிரம் ரூபாவை எடுத்துகிட்டு கதவைச் சாத்தும்போதுதான் போலீஸ் உள்ளே வந்துடுச்சு…”

“.......”

“என்னா பண்றதுன்னு புரியாம, நானும் பின் பக்கமா ஓடிடலாம்னு ட்ரை பண்ணும்போதுதான் அமுக்கிப் புடிச்சு வெளியே கொண்டாந்திருச்சு போலீஸ். அப்புறம் நடந்ததெல்லாம்தான் உனக்குத் தெரியுமே..!”

“என்னடா...எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்லிக்கிட்டிருக்குற..?”

“என்னத்த செய்ய சொல்ற..?”

“அந்தாளை அப்பவே புடிச்சுக் குடுத்திருக்கணும்டா. நீயெல்லாம் ஒரு வாத்தியாரான்னு காரித் துப்பி இந்த சொஸையிட்டியில இருந்தே அந்தாள ஒதுக்கியிருக் கணும்டா...”

“அதெப்படி குரு? உலகத்துல ஒவ்வொரு பொறப்புக்கும் ஒரு குறை இருக்கத்தானே செய்யுது. எனக்குக் கூடத்தான் படிப்பு ஏறல. அதுக்குன்னு இந்த ஸொஸைட்டி என்னைத் தூன்னு துப்பி ஒதுக்கிருச்சா? அந்தக் குறையோடவே என்னை ஏத்துக்கிடுச்சில்ல? அப்படித்தான் அந்தாளுக்கு ஒரு குறை...”

“ஆனாலும், ஊருக்கெல்லாம் படிப்பு சொல்லிக் குடுக்க வேண்டிய ஒரு ஸ்கூல் வாத்தியார் இப்படிச் செய்யலாமாடா ?”

“அதை அவர் இல்ல யோசிச்சிருக்கணும் ?”

“அதுசரி, உங்கம்மாவுக்கு இது தெரியுமா ?”

“தெரியும். சொல்லிட்டேன்..!”

“எப்போ ?”

“லாக்கப்புல என்னை கட்டிக்கிட்டு அழும்போதே சொல்லிட்டேன்...”

“ஓஹோ…”

“அம்மா மெரண்டு போயிடுச்சு. யெப்பா கொடிக்கா, எவ்ளோ அழுத்தமா நின்னு கணக்கு வாத்தியார காப்பாத்தியிருக்குற..? உன்ன பெத்தது என் அதிர்ஷ்டம் டான்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுதுது…”

“…………”

“தோ பாரு... கொடிக்கா ! நீ இனிமே இங்க இருக்க கூடாது. நீ இங்க குறுக்க மறுக்க போயிக்கிட்டிருந்தின்னா உன்னப் பாக்கும்போதெல்லாம் கணக்கு வாத்தியாருக்கு செஞ்ச பாவம் நெனப்பா வந்துகிட்டே இருக்கும். நிம்மதி போவும். ஸ்கூல் புள்ளைங்களுக்கு பாடம் எடுக்க முடியாம தெனாய்வாரு.

ஒருவேள மனக்கஷ்டத்துல அவரு ஊரவிட்டுப் போயிட்டாருன்னா இங்க எத்தன புள்ளைங்களோட படிப்பு கெடும். நம்ம திருவல்லிக்கேணிக்கே அது நஷ்டம்தான..?”

“..............?”

“கொடிக்கா சட்டுன்னு கிளம்பி நம்ம ஊருக்கே போயிரு. அங்க நமக்கு நிலமிருக்கு. எப்படியாவது பொழைச்சுக்கலாம். நம்மள ஆளாக்குன திருவல்லிக் கேணிக்கு நம்மாலான நல்லதுன்னு நெனைச்சுக்க. செய்வியாடா கண்ணு...” ன்னு மார்ல தலைய சாய்ச்சு அழுதுக்கிட்டே கேட்டுச்சு.

மிரண்டு கலங்கிய கண்களோடு கொடிக்காவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் கம்மிய குரலில் தொடர்ந்தான்…

“அம்மா சொல்லுக்குக் கட்டுப்பட்டேன். பல்லைக் கடிச் சிக்கிட்டு என் உயிரான திருவல்லிக்கேணியை விட்டுக் கிளம்பிட்டேன்...”

“………...”

“சொந்த ஊர்ல கொஞ்ச நாள் இருந்தேன். பிடிக்கல. பொழைப்பு தேடி பெங்களூரு வந்தேன். ஆரம்பத்துல லாட்ஜு வேல. அப்பல்லாம் இங்க கிணறுதான். ஒரு நாளைக்கு 300 வாளி 400 வாளி தண்ணி சேந்தணும். கடுமையா உழைச்சேன். கன்னடம், கொங்கணி, துளு, இங்கிலீஷ்னு பேசக் கத்துக்கிட்டேன். பல லிங்க்ஸ். எல்லா இடத்திலயும் விசுவாசமா உண்மையா இருந்தேன்.

இன்னிக்கு அம்மா பேர்ல ‘ருக்கு குரூப்ஸ்’னு ஆரம்பிச்சு ஏழெட்டு பிசினஸ் செய்யறேன். 14 ப்ராஞ்ச். மாசமானா 160 பேருக்கு சம்பளம் போடுறேன். எங்க அம்மா புண்ணியத்துல நல்லாயிருக்கேன்…”

யாருக்கோ நடந்தது போல சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டிருந்த கொடிக்கா வாட்சை எடுத்துக் கட்டிக்கொண்டான்.

“ஏதோ, என்னால முடிஞ்சவரைக்கும் ஒரு 200 ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கிறேன்ப்பா. சிஎஸ்ஆர்ல ஏரி, குளங்கள தூர் வாரிவரேன். எங்கம்மா தொண்ணூறு வயசுலயும் சாரதியப்பாவ விட்டு வரவே மாட்டேன்னு அடம் பிடிக்குதுது. திருவல்லிக்கேணியில பெரிய வீடா கட்டி ராணி மாதிரி உக்கார வெச்சிருக்கேன்.

இங்க பெரிய பெரிய மனுஷங்க எல்லாம் நம்மள  ‘அண்ணாவ்ரு’ ன்னு அன்பா, ஆதரவா, மரியாதையா கூப்ட்டு வெச்சிருக்காங்க.... வேற என்ன வேணும் குரு..?”

“கொடிக்கா, உன்னை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு...”

“அட, திருவல்லிக்கேணின்னாலே அப்படித்தா னேப்பா...” இடி போல வெடித்து சிரித்தான் கொடிக்கா.

“கொடிக்கா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?”

“ம்ம்ம்...”

“அந்த சந்தானமையங்கார் என்ன ஆனார் தெரியுமா..?”

“ம்ம்ம்...”

அவர் இப்போ உயிரோட இல்லை தெரியுமா..?”

“ம்ம்ம்...”

“சித்திரைத் தேர் சுத்திவரும்போது... கரெக்ட்டா, நம்ம கங்கணா மண்டபத்துக்கு பக்கத்துல திரும்பும் சமயம் சடார்னு வழுக்கி தேர்க் காலில் சிக்கி நசுங்கி கடகடன்னு உருத்தெரியாம சிதைஞ்சு... ஐய்யோன்னு போயிட்டாருப்பா...”

“ம்ம்ம்....”

“எப்படி வந்து சொடுக்குது பாரு விதி...”

“அதுக்கு பேரு விதி இல்ல குரு...”

“பின்ன..?”

“சாரதியப்பாவின்  சாட்டை...”

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in