இணையச் சிறையின் பணயக் கைதிகள்!  - 15: அளவுக்கு மிஞ்சினால் அன்பும் நஞ்சுதான்

இணையச் சிறையின் பணயக் கைதிகள்!  - 15: அளவுக்கு மிஞ்சினால் அன்பும் நஞ்சுதான்

மிகத் தீவிரமான மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு, தற்கொலை எண்ணங்களுடன் வந்த இளைஞர் ஒருவருக்கு, கடந்த இரண்டு மாத காலமாகச் சிகிச்சையளித்து வருகிறேன். இளைஞர் இப்போது நன்றாகத் தேறியிருக்கிறார். ஒரே மகன் இப்படி ஆன சோகத்திலிருந்து அவரது தந்தையும் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்.

திடீரென்று இளைஞரின் தந்தையிடமிருந்து போன். “சார் நான் உங்களை உடனே பார்க்கணும். சில விஷயங்களை உங்களிடம் சொல்லணும். உங்க கட்டுரையை இப்போதான் படிச்சேன்…மனசு துடிக்குது” என்றார் பரபரப்பாக. வரச்சொன்னேன். மகனுடன்தான் வந்தார்.

“இந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இவ்வளவு பிரச்சினைகளை உண்டாக்கும்னு லேட்டாத்தான் உணர்ந்துக்கிட்டேன் டாக்டர். நான் பண்ணத இப்போ நினைச்சுப் பார்க்கும்போது அதெல்லாம் எவ்ளோ பெரிய தப்புன்னு புரியுது” என்று ஆரம்பித்தார்.

“என் பையன் எல்கேஜி படிக்கும்போதே அவனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தேன்” என்றார்.



என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு நான்கு வயதுக் குழந்தைக்கு எதற்கு அவ்வளவு பெரிய கணினி என்று எனக்குப் புரியவில்லை. அதன் பின்னர், ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் மகன் கேட்ட அல்லது கேட்காமலேயே ஒவ்வொரு மின்னணு சாதனங்களாக வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

ஒரே மகன். கூட ஓடிப்பிடித்து விளையாட உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. சிறு வயதில் ஒரு மாநகரத்தில் ஒரு அடுக்ககத்தில் வசித்தபோது எல்லா குழந்தைகளும் இவன் வீட்டில் தான் இருப்பார்கள். காரணம், மூன்று சக்கர சைக்கிள் முதல் முந்தாநாள் வெளிவந்த நவீன செல்போன் வரை இவன் வீட்டில் இருக்கும்.

பணிநிமித்தம் அவர்கள் குடும்பம் வேறு ஊருக்கு மாறுதல் அடைந்த பின்னர்தான் அவன் வாழ்க்கையில் வெறுமை சூழ ஆரம்பித்தது. அது தனி வீடு. அக்கம் பக்கத்து வீடுகளில் குழந்தைகளும் குறைவு. பள்ளி நண்பர்களைத் தவிர வீட்டில் அப்பா அம்மா மட்டும்தான். அந்தச் சூழலில் அம்மாணவன் செய்ய ஆரம்பித்த காரியம்தான் அவனை ஒரு மனநோயாளியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

“எப்ப நேரம் கிடைச்சாலும் ‘சிஸ்டம்’ முன்னாடிதான் சார் உட்கார்ந்திருப்பான். நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டான். அவன் நோட்டுல எழுதிப் படிச்சதைவிட கீபோர்டில் டைப் அடிச்சுப் படிச்சதுதான் அதிகம். மெல்ல மெல்ல விளையாட்டு, யூ - டியூப், சீரியல்கள் பார்க்கறதுன்னு மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பான். ஸ்கூல்ல படிக்கிறதோட சரி. வீட்டுக்கு வந்தவுடனே கம்ப்யூட்டர் பார்க்க ஆரம்பிச்சுடுவான். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தால்கூட, கிடைக்கும் கொஞ்ச இடைவெளியிலயும் இன்டர்நெட்ல உலவிட்டுத்தான் போவான். ஓரளவுக்கு மார்க் வாங்கினதால நானும் பெரிசா கண்டுக்கலை. அப்புறம் திடீர்னு ஒரு நாள் அவன் அம்மா கிட்டதான் அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கான்” என்று இடைவெளிவிட்டபோது அவர் குரல் தழுதழுத்து, கண்கள் கலங்கியதைக் கவனித்தேன்.

“ரொம்ப தனிமையா ஃபீல் பண்றேம்மா. காரணமே இல்லாம மனசு கவலையா இருக்கு. யார் முகத்தையும் நேருக்கு நேர் பாத்துப் பேச முடியல. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு... காலேஜ்ல யாரு கூடவும் நல்லா பழக முடியல. நாம  ‘வேஸ்ட்’ ஆயிட்டமோன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு… பேசாம செத்துப் போயிடலாமான்னு தோணுதும்மா” என்று அழுதிருக்கிறார். அப்போது கல்லூரி முதலாண்டு மாணவர். விஷயம் அறிந்து அதிர்ந்துபோன தந்தை, பின்னர் சுதாரித்து அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினார். அவர் மகன் அடிக்கடி பார்த்த இணையதளங்கள் எல்லாம் வித்தியாசமானதாகவும், விபரீதமானதாகவும் இருந்தன.

தற்கொலை செய்துகொள்வது எப்படி? எத்தனை வழிகள் இருக்கின்றன? எப்படி முயன்றால் வலி இல்லாமல் சாகலாம்? – இப்படி விபரீதமான விஷயங்களைத் தேடியிருக்கிறார். எப்போது பார்த்தாலும் சோகமான பாடல்களைக் கேட்பது, சரியாக உணவருந்தாமல், குளிக்காமல், பல் தேய்ப்பதில்கூட ஆர்வமில்லாமல் விரக்தியான மனநிலையில் இருந்திருக்கிறார்.

“ஒருநாள் ராத்திரி ஒன்பது மணிக்கு நான் தூங்கப்போறதுக்கு முன்னால, என் பையன் லேப்டாப் முன்னால உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்திருச்சி அவன் ரூமுக்குப் போய்ப் பார்த்தால் அதே பொசிஷன்ல உட்கார்ந்து லேப்டாப்புல ஆழ்ந்திருந்தான். ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன். இதுக்கு மேல் விடக் கூடாதுன்னுதான், உங்க கிட்ட ட்ரீட்மென்ட் எடுக்க அழைச்சிட்டு வந்தேன்” என்றார் அந்தத் தந்தை.

சாதாரணமாகவே கணினியில் உட்கார்ந்தால் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் கழித்துத்தான் எழுவாராம் அந்த இளைஞர். அதிலும் ஏதோ விளையாட்டில் மூழ்கினால் ஏழு மணி நேரம்கூட ஆகிவிடுகிறதாம். இங்கே இவர் ஆன்லைனில் இருக்க, ஹைதராபாத்தில் இவரது நண்பரும் ஆன்லைனில் வந்துவிடுவாராம் விளையாட.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு அதைப் பயன்படுத்தியிருக்கிறார் அந்த இளைஞர். “சார் நம்ப மாட்டீங்க... ஒரு கட்டத்தில  ‘ஹேக்கிங்’ (hacking) செய்யறது எப்படிங்கறதுல இருந்து, அடுத்தவங்க ‘டேட்டா’வைப் பார்க்க முடியுங்கிற வரை என்கிட்டே சொன்னப்பதான் நான் பயந்துட்டேன். சைபர் கிரைம் பத்தி எடுத்துச் சொன்னப்பதான் தெரியும். ஆனால், பண்ண மாட்டேன்னு சொன்னான்” என்கிறார் அந்தத் தந்தை மிரட்சியுடன்.

தன் மகன் ஒரு அறிவாளியாக வளர்கிறான் என்பதைக் கண்ட அவர், அவன் ஒரு மனநோயாளியாகவும் மாறிக்கொண்டிருக்கிறான் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

மது அருந்துகின்ற அனைவரும் குடிநோயாளிகளாக மாறிவிடுவதில்லை. அதேபோல கணினியையும் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்துபவர்கள் அனைவருமே அவற்றுக்கு அடிமையாகிவிடுவதில்லை.

தனிமையை ஒழிக்க மது குடிக்க ஆரம்பித்தேன். இப்போது மதுவிலேயே மூழ்கிவிட்டேன் என்பார்கள் சிலர். “மதுப் பழக்கத்திற்கு ஆளானவுடன் தொழில், குடும்பம், சமூகம் என எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு எல்லோரும் என்னை வெறுக்கத் தொடங்கினர். அதனால் தனிமைப்படுத்தப்பட்டேன். இப்போது மதுதான் என் துணை. கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும் நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன்.

அடிமைத்தனங்களுக்கே உண்டான ஒரு விசித்திரமான மனப்பாங்கு இது. குடிப்பதனால் ஏற்பட்ட தனிமை… அந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ள மேலும் குடிப்பது என்று இந்தச் சக்கரம் சுற்றிச் சுற்றி, கடைசியில் வாழ்க்கை வண்டி சுடுகாட்டில் வந்து நின்றுவிடும்.

அந்த இளைஞரின் பழக்கத்தை இந்த உவமையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்தில் தனிமையை உணர்கிறான். மிகச் சிறு பிராயத்திலேயே தொழில்நுட்பங்களுக்கு அறிமுகமாகிறான். இயல்பாகவே அதில் நாட்டம் மிகுந்துபோக, வெளியில் சென்று மற்ற நண்பர்களுடன் நேரம் செலவிடுவது குறைகிறது. தெருவில் இறங்கி விளையாடுவதைவிட திரையில் மூழ்கி விளையாடுவதே பிரதானமாகிப்போன ஒரு தலைமுறையின் சாட்சியாகிறார்.

நண்பர்கள், விளையாட்டு இவற்றுக்குப் பதிலாக தன் உலகமே அந்தக் கணினிதான் என்று மூழ்கிவிட, இணைய உலகின் விஸ்தாரங்களை மிகச் சிறு வயதிலேயே கற்றுக்கொள்கிறான். இருப்பினும் கல்வி, நட்பு வட்டம் போன்றவை விரிவடையாமல் இருக்கும்போது குற்றவுணர்ச்சி வருகிறது. சக நண்பர்களிடம்கூட முகம் பார்த்துப் பேச முடியாத அளவுக்குத் தாழ்வு மனப்பான்மை அவனைப் பிடுங்கித் தின்றது. இயல்பாகவே பதின்ம வயதைக் கடந்துவருவது என்பது புயலுக்கு நடுவேயான பாய்மரப் பயணம் போன்றதுதான். அந்த வயதின் சில்மிஷங்களைக்கூட இழந்த அவன், “அப்பா, எல்லோருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எனக்கு யாரும் இல்லேப்பா. எனக்குப் பொண்ணுங்ககூட பழகத் தெரியலப்பா” என்று ஒரு முறை கூறியதை என்னிடம் நினைவுகூர்ந்தார் அந்தத் தந்தை.

நிஜ வாழ்க்கையின் உறவுகள் வேறு. மெய்நிகர் உலகில் மேயும்போது நாம் கடந்துவரும் உறவுகள் வேறு. அதேபோல தொடர்ச்சியான, அதீதமான இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் நாம் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற கோளாறுகளுக்கு ஆளாவோம் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை. கூடவே, மரபணு ரீதியாக நமக்கு உளவியல் பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம் இருந்தால் - அதாவது நம் குடும்பத்திலும் மூதாதையர்களுக்கு மனநோய்களின் தாக்கம் இருந்திருக்கும் பட்சத்தில் - நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த இளைஞரைப் பொறுத்தவரை பள்ளிப் பிராயத்திலேயே இணையத்துக்கு அறிமுகமானது முதல் தவறு. தெரிந்தோ தெரியாமலோ அவர் தந்தை அதற்குக் காரணமாகிவிட்டார். பாசம் காட்டுகிறேன் என்று இப்படி ஆபத்தான காரியங்களைச் செய்யக் கூடாது என்பதே பெற்றோர்கள் உணர வேண்டிய விஷயம்.

‘Internet addiction disorder’ என்பது இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு உளவியல் கோளாறாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு நாடு விகிதாசாரம் சற்று மாறுபட்டிருந்தாலும் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் சந்திக்கின்ற முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக இணையமும், அது சார்ந்த பயன்பாடுகளும் மாறிவருவதை உணர்கிறோம். இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தென்படும் இது போன்ற இணைய உளவியல் சிக்கல்கள், நாளை நமக்கு வெகு அருகாமையில் வந்துவிடும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

போதைப் பொருட்களின் பயன்பாடும், அவை சார்ந்த உடல், மன பாதிப்புகளும் முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. மருந்தல்லாத அடிமைத்தனங்களில் ஒன்றான இணையம் மற்றும் அது சார்ந்த அடிமைத்தனங்கள் பெருகிவருவது, கடலில் தெரியும் பனிப்பாறையின் நுனியைப்போல இன்றைக்குச் சிறிதாகத்தான் தெரிகிறது. ஆனால், வெளியே தெரியாமல் கடலில் பெரும் பனிப்பாறை மூழ்கியிருப்பதுபோல் மிகப் பெரிதானவை இப்பிரச்சினைகள். நாளை குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு முன், பெற்றோர்கள்தான் முதலில் விழித்துக்கொள்ள வேண்டும்.

இணையப் பயன்பாட்டைத் தடுக்க தடுப்பூசி எதுவும் இல்லை நண்பர்களே. நம் அன்பும் அறிவான வளர்ப்புமே ஆயுதம்!

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in