இணையச் சிறையின் பணயக் கைதிகள் 13: ஏன் இப்படி ஃபார்வேர்டு செய்கிறோம்?

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 13: ஏன் இப்படி ஃபார்வேர்டு செய்கிறோம்?

கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு நடந்த சமயம். நான் இருக்கும் மருத்துவர்கள் வாட்ஸ்அப் குழுவில் நண்பரொருவர் ஒரு காணொலியைப் பகிர்ந்திருந்தார். அதாவது ஃபார்வேர்டு செய்திருந்தார்.

போராட்டக்காரர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தில் பதுங்கிக் கொள்கிறார்கள், அங்கிருப்பவர்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன் சில ஆயுதங்களையும் கொடுக்கிறார்கள். அக்காணொலியில் இருந்த காட்சிகள் அப்படித்தான் இருந்தன. ஆனால், அது சம்பந்தமே இல்லாத காணொலி என்பதை உடனடியாகக் கண்டுகொண்டேன். காரணம், காணொலியில் இருந்தது தமிழகமே அல்ல. காவலர்களின் சீருடை நம் காவல் துறையின் சீருடை அல்ல என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது.

சற்று ‘ஜூம்’ செய்து பார்த்தபோது ஒரு நபர் குளிர்பானங்கள் நிரம்பிய ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது தெரிந்தது. உடனே அந்தக் குளிர்பானத்தின் பெயரை இணையத்தில் தேடியபோது மகாராஷ்டிரத்தில் தயாரிக்கப்படும் குளிர்பானம் அது என்று தெரியவந்தது. ஆக, அந்தச் சம்பவம் (அப்படி ஒன்று நடந்திருந்தால்) ஏதோ ஒரு வெளி மாநிலத்தில் நடந்துள்ளது. நமக்கு அதன் தலையும் தெரியாது.வாலும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி யாரோ கிளப்பிவிட்ட அக்காணொலி வைரலாகிவிட்டது. இதை உடனே தகுந்த ஆதாரங்களுடன் நான் குழுவில் பகிர, எல்லாம் அமைதியாகிவிட்டது. அதன் பின், சந்தேகத்துக்குரிய எதையும்ஷேர் செய்வதை அந்த நண்பர் நிறுத்திவிட்டார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஏராளமான அனுபவங்கள் இருக்கலாம்.

ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்துக்குத் தங்கம் வாங்கித்தந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து, போட்டியின்போது அணிந்திருந்த காலணிகள் தொடர்பாகப் பரபரப்பாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட மீம்கள், ஸ்டேட்டஸ்கள் ஏராளம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது அசாத்தியமான திறனாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்த அவர், பதக்கம்பெற்ற பின்னர் கொடுத்த சில பேட்டிகளைத் தவறாக உள்வாங்கிக்கொண்ட சிலர், வறுமையின் காரணமாகத்தான் இரு கால்களிலும் வெவ்வேறு வண்ணங்களிலான காலணியை அவர் அணிந்திருந்தார் என்று ‘மீம்’கள் மூலம் பரப்பிவிட்டனர். இதையடுத்து, விளையாட்டுத் துறை, அரசு என்று எல்லா தரப்பையும்அர்ச்சித்து அடுத்தடுத்து பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. கடைசியில் உசேன் போல்ட் போன்ற பிரபல வீரர்களும் இதேபோன்று வெவ்வேறு நிறங்களில் காலணிகள் அணிந்திருந்ததைக் காட்டும் படங்கள் வெளிவரத் தொடங்கின. அதன் பிறகுதான், விஷயம் தெரியாமல் அறச்சீற்றம் காட்டிய பலரும் நாக்கைக் கடித்துக்கொண்டனர். அந்த விஷயம் அப்படியே அமுங்கிப்போனது.

மேற்சொன்னவை இரண்டு உதாரணங்கள்தான். ஆனால், அன்றாடம் எண்ணிலடங்கா தகவல்கள், புகைப்படங்கள், காணொலிகள் பல கோடி பேரால் உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. பாதிக்குப் பாதி பொய்யான தகவல்கள்தான் இப்படித் தீயைவிட வேகமாகப் பரப்பப்படுகின்றன.

ஏன் இப்படி வெறித்தனமாக ஷேர் செய்கிறோம்? ஃபார்வேர்ட் செய்கிறோம்? இதன் உளவியல்தான் என்ன?

எனக்குத்தான் முதலில் தெரியும்

‘அரசியலோ அறிவியலோ புவியியலோ புடலங்காயோ… இந்தத் தகவல் எனக்குதான் முதலில் தெரிந்திருக்கிறது. எந்த குரூப்பைச் சேர்ந்தவர்களும் இதை இதுவரை பார்க்கவில்லை. மற்றவர்களுக்கு முன் நான் முந்திக்கொள்ள வேண்டும்’ என்ற அவசரம் கண்ணை மறைக்க, அந்த விஷயத்தின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்க மறந்துவிடுகிறோம்.

எப்போதோ ஒரு அறுவைசிகிச்சைக்கு ரத்தம் கேட்டு யாரோ பகிர்ந்திருப்பார். சொல்லப்போனால் சிகிச்சை முடிந்து அந்த நோயாளி வீட்டுக்கே போயிருப்பார். அதைப்போய் இப்போது பகிர்வார் நம்மவர். ஏதோ நல்ல காரியம் செய்வதாக நினைத்துதான் செய்கிறார். ஆனால், ஆர்வத்தின் பேரில் அறியாமையை வெளிக்காட்டுகிறார் என்பது அவருக்கே தெரியாது.

என்னுடைய மேதாவித்தனம் பாரீர்

சில மீம்கள், தகவல்கள், குறுஞ்செய்திகளைப் பரப்பும்போது ஒரு மானசீக அடையாள அட்டை அணிந்துகொள்கிறோம். “பாத்தியா எவ்ளோ பெரிய சமாச்சாரத்தை ஃபார்வேர்ட் பண்ணியிருக்கேன்” என்று மார்தட்டிக்கொள்கிறோம். அப்படி ஷேர் பண்ணுவதில் ஒரு பெருமை வருகிறதல்லவா? அதை ‘பிஷ்’ (PISH- Pride In Sharing Forward) என்றே செல்லமாகக் குறிப்பிடுகிறார்கள்.

முன்பு சொன்ன ஃபோமோ (FOMO - Fear Of Missing Out)வைப் போன்ற ஒரு விஷயம்தான் இது. ‘ஃபோமோ’வில் கூட்டத்தைவிட்டு விலகிவிடுவோமோ, விலக்கி வைத்துவிடுவார்களோ போன்ற பயங்கள் அதிகம் இருக்கும். ‘பிஷ்’-ஐப் பொறுத்தவரை, ‘நாங்களும் ஷேர் செய்வதில் கில்லிதான்’ என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள். ஷேர் செய்ததாலேயே கிணறு வெட்டிய திருப்தி இவர்களுக்குக் கிடைத்துவிடும். இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். நல்லதோ கெட்டதோ அது நம் சொந்தச் சரக்காக இல்லாதபட்சத்தில் உண்மையை உண்மையாகவே காட்டிவிடுகிறது வாட்ஸ்அப். வேறு ஒருவரின் நிலைத்தகவலாக இருந்தால் forwarded என்ற குறிப்புடன் காட்டிவிடுகிறது.

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்கிறோம்

‘நீ தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு’, ‘இன்னும் இரண்டு நிமிடத்துக்குள் இதை பத்துப் பேருக்கு ஷேர் செய்யுங்க. அதிர்ஷ்டம் கூரையை மட்டும் அல்ல; தரையையும் பிய்த்துக்கொண்டு கொட்டும்’ போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இதில் சேர்த்தி.

மதம், அரசியல் தொடர்பான தகவல்கள் மின்னல் வேகத்தில் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கும் சூத்ரதாரிகள்தான் வெகுஜன உணர்வை, குறிப்பாக இளைஞர்களின் உணர்வைத் தூண்டிவிட இப்படிச் செய்கிறார்கள். குறிப்பாக, இதுபோன்ற இடைச்செருகல் வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள். நியாயமானவையாக இருந்தால்கூட பரவாயில்லை. பெரும்பாலும் விஷமத்தனமான தகவல்களுக்குத்தான் இப்படி கேப்ஷன் வைத்து இளைஞர்களைத் தூண்ட முயல்கின்றனர்.

மத்திய வயதுக்கும் மேல் மொபைலுக்கும் இணையத்துக்கும் அறிமுகமாகியிருக்கும் நபர்கள் இந்த ஃபார்வேர்டுகளை வெள்ளந்தியாகச் செய்துவிடுகிறார்கள். ஒரு காலத்தில் ஒரு தகவலை அடுத்தவருக்கோ, அடுத்த ஊரிலிருக்கும் உறவுக்காரர்களுக்கோ சொல்ல என்னென்ன பாடுபட வேண்டியிருந்தது? தந்தி கொடுத்து அது வந்து சேராமல், உறவுக்காரர் காரியத்துக்குப் போக முடியாமல் போன அனுபவங்களைப் பலரும் கடந்து வந்திருப்பார்கள். ஒவ்வொரு ஊர் உறவினருக்கும் தபால் அட்டை எழுதித் தகவல் சொன்னதை மறக்க முடியுமா? ஒரு கவிதை எழுதினால் ‘வேண்டியவர்’ கண்ணில் அது பட வேண்டுமே என்று எத்தனை பரிதவித்திருப்போம்? அப்படிப்பட்ட காலத்திலிருந்து வந்தவர்களின் மனநிலை இன்றைக்கு எப்படி இருக்கும்?

ஒரு கட்டுரையோ, கவிதையோ, புகைப்படமோ பதிவிட்ட சில நொடிகளில் வான்வெளியில் பறந்து உங்கள் நாலாயிரத்துச் சொச்சம் ஃபேஸ்புக் நண்பர்களை யும்  சென்று  சேர்ந்துவிடுகிறது. கமெண்ட்டுகளும் லைக்குகளும் நள்ளிரவில்கூட குவியத் தொடங்குகின்றன. சொல்லொணா புளகாங்கிதம் நம் நெஞ்சையெல்லாம் நிறைக்கிறது. இப்படி ஒரு மாயாஜாலத்தை எப்படி ‘மிஸ்’ பண்ண விரும்பும் நம் மனித மனம்?

‘நான் அவ்வளவு அறிவானவன்; அறமுமானவன். இந்த மக்களுக்கு என்னாலான சமூகக் கடமையை ஆற்றிவிட்டேன். அதுவும் மற்றவர்களுக்கு முன்பாகவே’ என்று நம்மை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்கிறோம். இந்த மகிழ்வை மீண்டும் மீண்டும் அனுபவிக்க விரும்புகிறோம். ஃபார்வேர்டு செய்துகொண்டேயிருக்கிறோம். நம் ‘ஈகோ’வை திருப்திப்படுத்திக்கொண்டேயிருக்கிறோம். அவ்வளவே!

ஃபார்வேர்டு செய்வது இலவசமாகவும் எளிதாகவும் இருப்பது ஒரு காரணம். கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால் பாதிக்குப் பாதி ஃபார்வேர்டுகள் குறைந்து விடும் என்று சொல்லப்படுவது சரியானதுதான்.

அடுத்து நாம் வைக்கும் அதீத நம்பிக்கை. ‘இன்னார் அனுப்பினால் சரியாகத்தான் இருக்கும்’ என்ற மனப்பான்மையில் அந்தத் தகவலை அவரின் முக மதிப்பிற்காக பல்லாயிரம் பேருக்குத் தட்டிவிடுகிறோம்.

ஒரு குழு என்றிருந்தால் நமக்கு ஒத்த கருத்துடையவர்களும் இருப்பார்கள். ஒருவருடைய கருத்து உங்களோடு ஒத்துப்போவதால், அவர் அனுப்பும் எதையும் ‘ஆஹா… கூட்டாளி அனுப்பிட்டான்’ என்ற உணர்வில் சரிபார்க்காமல் பகிர்ந்துவிடுகிறோம். ஒரு விஷயம் குறித்த நம் நம்பிக்கையையோ, நிலைப்பாட்டையோ பாதிக்காதவரை எதையுமே ஷேர் செய்வது சரிதான் என்றே பலரும் நினைக்கிறோம்.

அதிலும் பலரது ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்த்தால் வரிசையாக, ஷேர் செய்த சங்கதிகள் மட்டுமே அதிகமாக இருப்பதைக் கவனிக்க முடிகிறது. எத்தனை மாதங்கள் நீங்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் அது மட்டுமே இருக்கும். சொந்தமாக எதையுமே பதிவிட்டிருக்க மாட்டார்கள்.

இன்னொரு காரணம் தகவல்களை வெளிப்படுத்தத் தெரியவில்லை என்ற குறை. ‘கருத்துச் சொல்ல விரும்புறேன். ஆனா, டைப்பிங் தெரியல. தமிழ்ல வரல… இங்கிலீஷும் தெரியாது’ என்பவர்கள் தங்கள் கருத்துக்குத் தோராயமாக ஒத்துப்போகும் எதைப் பார்த்தாலும் பகிரத் தலைப்படுகின்றனர். அது இயல்புதான்.

கையால் எழுதப்பட்ட குறிப்புகளைவிட அச்சில் உள்ள தகவல்களை மக்கள் வேகமாக நம்பிவிடுவார்கள். அதிலும் சில குறிப்பிட்ட எழுத்துருக்களுக்கு (font) மக்களின் நம்பிக்கை ஓட்டைப் பெறும் சக்தி அதிகமாம். அப்படிப்பட்ட பொய்த் தகவல்கள் திரும்பத் திரும்ப நம் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

தகவல்களில் பலவிதம் உண்டு. ஆபத்து எதையும் ஏற்படுத்தாத உண்மைத் தகவல்கள், ஆபத்து இல்லாத, ஆனால் பொய்யான தகவல்கள், மக்களைத் திசை திருப்பும் ஆபத்தான ஃபார்வேர்டுகள், விஷமத்தனமும் ஆபத்தும் ஒருங்கே இணைந்து தனி நபருக்கும் இயக்கங்களுக்கும் எதிராக எழும் தகவல்கள், ‘குழந்தையைக் கடத்திப்போக வந்துவிட்டார்கள், எல்லோரும் உஷாராக இருங்கள்’ என்று தவறாகப் புரிந்துகொண்டு பதற்றத்தில் அனுப்பப்பட்ட நிலைத்தகவலால் உயிர் பலி நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும். பேரபாயங்களை உண்டாக்கும் அப்படிப்பட்ட ஆபத்தான ஃபார்வேர்டுகளும் உண்டு.

‘நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்ல வேண்டும், அதுவும் உடனே சொல்ல வேண்டும்’ என்பது நம் மனதின் இயல்பான உந்துதல்தான். அதில் தவறேதும் இல்லை. ஆனால், இணையமும் அலைபேசியும் இருக்கிறது என்பதற்காகக் கண்ணில் பார்ப்பதையெல்லாம் பகிர வேண்டும் என்ற உந்துதலைக் கட்டாயம் நாம் அனைவரும் மட்டுப்படுத்தியே ஆக வேண்டும். சரி, இந்தத் தகவலையும் எல்லோருக்கும் ஷேர் பண்ணிவிடுவோம்தானே?!

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in