மண்... மனம்... மனிதர்கள்! - 13

ஸ்டாலின்
மண்... மனம்... மனிதர்கள்! - 13

 திருவல்லிக்கேணியில் சில வீதிகளில் மட்டும்தான் பார்த்தசாரதி ஸ்வாமி ஆண்டுக்கொருமுறை பிரத்யேகமாக எழுந்தருளிச் செல்வார். எங்கள் தெருவும் அதிலொன்று!

அனைத்துச் சமூகமும் கூடி வாழும் எங்கள் வீதிவாசிகளுக்கு அதிலொரு பெருமை. வஸந்தோர்ஸவ புறப்பாட்டுக் காலத்தில் ராஜகோலத்தோடு சின்னக் குதிரை வாகனத்தில் எங்கள் தெருவுக்கு வருவார் பெருமாள்.

நாயுடு மாமா முன்னெடுப்பில் தெருவே களைகட்டும். வீடுவீடாகச் சென்று ஆண்டுதோறும் பெருமாளுக்காக முடிந்து வைத்த பணத்தை

அகன்ற வெள்ளி சொம்பில் பெற்றுக்கொண்டு கிழக்கு பார்த்து நின்றபடி “கோவிந்தா...கோவிந்தா... கோவிந்தா...” என மூன்று முறை ஓங்கிக் குரல் கொடுப்பார் நாயுடு மாமா.

கார்ப்பரேஷனில் சொல்லி தெருவிளக்குகள் மாற்றப்படும். மொத்த வீதியும் பளிச்செனப் பொலியும்.

ஒன்பதாம் நம்பர் வீட்டு நரசிம்மனின் அப்பா வாசலில் வந்து நின்று சூரிய நமஸ்காரம் செய்தபின் எல்லோருக்கும் கல்கண்டு கொடுக்க, அம்பயர் ராமசாமி மாமா வீட்டு வாசலில் பந்தல் போடப்பட, மொத்த தெருவும் நாளெல்லாம் அலம்பி விடப்பட்டு மாலையில் வாசலெங்கும் மங்கலப் பெண்கள் பட்டுடுத்தி இறங்கி பென்னம் பெரிய செம்மண் கோலங்களாகப் போட்டு அலங்கரித்து வைத்திருக்க, ஜாம் ஜாமென்று பந்தலில் வந்திறங்குவார் பெருமாள்.

ப்ரபந்தம் பாடி, வஸ்திரம் சாத்தி, ஆரத்தி ஆனபின் ஆனந்தமாகப் புறப்பட்டுச் செல்வார். அந்தப் புனிதத்தை ஆண்டு முழுவதும் காப்பாற்ற பிரயத்தனப்படுவார்கள் தெருவாசிகள் என்பதால், எங்கள் தெருவில் ஆச்சாரம் அதிகம்.

அப்படிப்பட்ட தெருவில்தான் கொச்சைத்

தமிழ் பேசும் ஆங்கிலோ இண்டியன் எலிஸபெத் டீச்சர் குடி வந்தார்.

தெருவாசிகளிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்ட பின்தான் தன் ஆறாம் நம்பர் வீட்டின்

கீழ் போர்ஷனை வாடகைக்குக் கொடுத்தார் கட்டதொட்டி மாரிமுத்து மாமா.

திருவல்லிக்கேணியின் எளிய கான்வென்ட்டான வாஷிங்டன் ஸ்கூலில் எலும்பும் தோலுமாக வளைய வந்தவர் எலிஸபெத் டீச்சர்.

“வொய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஆன் த வெயிலு..? சிட் அண்டர் த வேப்பா மர்த்து கூல் நெயிலு...” என்று ஸ்கூல் பிள்ளைகளை கம்மிய குரலில் அரவணைக்கும் எலிஸபெத் டீச்சரின் வெள்ளந்தியான அன்பு பெரிது!

விதவையான எலிஸபெத் டீச்சருக்கு ஒரே பிள்ளை ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு டான் பாஸ்கோ படிப்பு. ஒன்பதாவது படிக்கும் வரையில் சூட்டிகையாகத்தான் இருந்தான் ஸ்டாலின். அவனுக்கு அப்பா பாசம் அதிகம்.

அவனது அப்பா ஆன்ட்டனிரெஸ்ஸல் அன்றைய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக இருந்தார். ஏதோ ஒரு யூனியன் தகராறில் அகாலமாக அவர் இறந்துபோக, அந்தத் தருணத்தில் வாழ்க்கை குறித்த மொத்த ஸ்வாரசியத்தையும் சுருக்கென இழந்து போனான் ஸ்டாலின்.

படிப்பு நின்றுபோக எந்த வேலைக்கும் போகாமல் 21 வயதிலும் அம்மா சம்பாத்தியத்தில் விட்டேத்தியாகச் சுற்றிக் கொண்டிருந்தான் .

ப்ரூஸ்லீ பனியனும் லுங்கியுமாக தெருவில் இறங்கி வரும் ஸ்டாலினைக் கண்டால் பெரியவர்கள் யாருக்கும் சுத்தமாக ஆகவே ஆகாது . அவன் வயதுக்காரர்கள் எல்லாம் காலேஜ் கோயர்கள் என்பதால், படிக்காத பையன் என்று யாரும் அவனோடு சேருவதேயில்லை.

ஆனால், சிறுவர்களான எங்களுக்கு ஸ்டாலினை ரொம்பவும் பிடித்துப்போனது.

வயது வித்தியாசம் பார்க்காமல் கலகலவென்று எங்களோடு பழகுவான். ஸ்டாலினுக்கு மூன்று குப்பங்களிலும் சினேகிதம் இருந்தது. பீச் கிரிக்கெட் சண்டையில் ஸ்டாலின் பேரைச் சொன்னால் பயப்படுவார்கள்.

சில சமயம் ஸ்டாலினே நேரில் வந்து மேட்ச் முடியும் வரை கூடவே இருந்து லுங்கியை முக்காலடி கட்டியபடி பீச் ரோட்டில் சர்பத் வண்டியை மடக்கி “காமான் பாய்ஸ்...” என்று தன் செலவில் எங்களுக்கு லெமன் சர்பத் வாங்கித் தந்து அனுப்புவான்.

தெருவாசிகளைப் பற்றிக் கவலைப்படாத ஸ்டாலின் தன் சகவாசங்களை வெளியாட்களோடு வைத்திருந்தான்.

எலிஸபெத் டீச்சர் ஸ்கூல் விட்டு வந்தால் வீட்டில் இல்லாத மகனை எதிர்பார்த்து வாசலிலேயே அச்சத்தோடு காத்திருப்பார். வெளி சகவாசத்து போதையில் மெல்ல எட்டுப் போட்டு வருவான் ஸ்டாலின்.

“ஐயீயோ...” என்று வாய் பொத்தியபடி தெருவிலிறங்கி ஓடி வரும் எலிஸபெத் டீச்சர் ஸ்டாலினைப் பிடித்து இழுத்துப்போய் வீட்டுக்குள் அடைத்துக் கொள்வார்.

ரகஸிய தொண்டையில் அழுதுகொண்டே திட்டிக் கொண்டிருப்பார். சற்றே திறந்திருக்கும் பெட்ரூம் சன்னலில் இருந்து எல்லாம் எங்களுக்குக் கேட்கத்தான் செய்யும்.

“லுக்... உனுக்கப்பன் ஆன்ட்டனிரெஸ்ஸல் காட் ஹிஸ் ஓன் ஹெவன்... அண்ட் யூ ப்ளடி எனுக்கு குடுக்குற இந்த ட்ரபிள்... எவ்ளோ ஷேம் இந்த ஸ்ட்ரீட்ல எனுக்கு..? இனஃப் இஸ் இனஃப்...” என்றபடி தலைகாணியைத் தூக்கி அவன் மேல் பூஞ்சையான வேகத்தில் விட்டெறிவார்.

கொஞ்ச நேரம் கழித்து ஸ்டாலினுக்குப் பிடித்த கோதுமை தோசையை சுட்டெடுத்துக் கொண்டு வந்து மெல்ல அவனை எழுப்பி ஊட்டுவார்.

“ஸ்டாலின்... இது ஹோலியான தெர்ரு... அவங்க சாமி வரப்போற ஸ்ட்ரீட் இது. கல்ட்சர்டா இருக்குற இந்தத் தெர்வுல...நீ இப்டி இருந்தா மம்மிக்கு ஷேம் ஆவாதா ஸொல்...? ”

“மம்மி... பெருமாள் சாமி வர ஸொல்ல உயிர் கேர் செய்யாம கரன்ட் போஸ்ட் மேல ஏறி ஒயருங்கள தூக்கி விடுறவன் நானு... கூல் மம்மி... ஐ நோ, ஐ லவ் திஸ் ஸ்ட்ரீட் மம்மி...”

சரிந்து தூங்கும் ஸ்டாலினின் எதிர்காலத்தை எண்ணி ஏங்கியபடியே தூங்கப் போவார் எலிஸபெத் டீச்சர்.

அது, எண்பதுகளின் இறுதி...

வியாசர்பாடி தொடங்கி ஊரெங்கும் அந்த பயங்கர பீதி கிளம்பியிருந்தது.

பேய், பிசாசு, கொள்ளிவாய் பிசாசு, போன்ற பயங்கரங்களின் வரிசையில் லேட்டஸ்டாக  ‘தலையில்லா முண்டம்’ வந்து சேர்ந்திருந்தது.

தலையில்லாமல் கழுத்து வரை இருக்கும் முண்டம் ஒன்று ஆங்காங்கே அகோரமாக நடந்து வருவதாகவும் திடீரென்று மறைந்து விடுவதாகவும் ஊரெங்கும் பேச்சாக இருந்தது.

ஆதம் மார்க்கெட்டில் ஒருவரை விரட்டிக்கொண்டு போனது. கலா மண்டபம் காம்பவுண்டுக்குள் எகிறிக் குதித்தது. லைட் ஹவுஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தது எனப் பலவிதமான ஹெட்லைன்கள் வீட்டு வேலை செய்யும் தாய்க்குலங்களின் வாயிலாக அலையடித்துக் கொண்டிருந்தன.

அப்போதெல்லாம் இவ்வளவு பிரகாசமான தெரு விளக்குகள் கிடையாது . வீட்டுக்கு மாட்டும் அதே ட்யூப் லைட்தான் வீதி விளக்குகளுக்கும். அதுவும் அழுக்குப் படிந்து ஹை ஃபீவர் கண்டவன் போல பாதி திறந்து பார்த்து அடிக்கடி மூடிக்கொள்ளும்.

அந்தக் கொடுமை இருட்டைவிட பயங்கரமானதாக இருக்கும் என்பதால், பகல் வெளிச்சத்திலேயே மார்க்கெட் விஸிட்டுகளை முடித்துக்கொண்டார்கள் அன்றைய அம்மாக்கள்.

அந்தக் காலத்தில் அந்தத் தெருவில் எங்கள் வீட்டில் மட்டும்தான் டெலிபோன் இருந்தது. ஹாலில், திருவள்ளுவர் படத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அந்தக் கருத்த டெலிபோன் மாலையானால் ஓயாமல் அடிக்க ஆரம்பித்தது.

வரைந்துகொண்டிருக்கும் அப்பாவை டிஸ்டர்ப் செய்துவிடக்கூடாதென்று முதல் ரிங்கிலேயே ஓடிப் போய் எடுத்துவிடுவாள் அம்மா.

“ஸாரி மாமி, அங்கே ஒண்ணும் ப்ராப்ளமில்லையே....”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. மாமா..! எல்லாரும் இங்கே கந்த கவசம் சொல்லிண்டிருக்கோம். டோன்ட் வொர்ரி...” என்றபடி போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்த அம்மாவை , “நாளைக்கு ஸ்கூல் லீவாம்மா...?” என்று  எங்கள் பங்குக்கு நச்சரித்துக் கொண்டிருந்தோம்.

பயத்தின் உச்சகட்டமாக நடுநிசியில் தெரு சுற்றி வரும் கூர்க்கா தட்டும்  ‘க்லொட்...க்லொட்...’ சத்தம் திகிலை அதிகப்படுத்தி தூக்கம் கெடுக்கிறது என்று ஒரு மாசத்துக்கு அவரை வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

வழக்கமாக மங்கலான இருட்டில் ஐஸ்பாய் ஆடுவது எங்களுக்கு த்ரில். அந்த த்ரில் இப்போது திகில் ஆகி இருந்தது. இருட்டில் ஓடிக்கொண்டிருக்கும்போது தலையில்லாத முண்டம் எதிரே வந்துவிட்டால்..?

அன்று மார்கழி மாதத்து சில்லென்ற கும்மிருட்டு அமாவாசை. மொத்த தெருவும் போர்வைக்குள் சுருண்டிருந்தது.

மணி இரவு பதினொன்று போல இருக்கும். வீட்டு வாசலில் ஸ்டாலினுக்காகக் காத்திருந்து சலித்த எலிஸபெத் டீச்சர் “ச்சீ...ஹெல் வித்யூ...” என்று சபித்தபடி வீட்டுக்குள் சென்று அழுது தூங்கிப் போனார் .

 நள்ளிரவு.

அமைதியைக் கிழித்தபடி ஊய்... ஊய்... என்று ஒரே அமானுஷ்யமான சத்தம்.

தெருவில் தடதடவென்று அங்குமிங்குமாக பலர் ஓடுவதும் திரும்புவதுமாகக் கூக்குரல். சட்டென்று அமைதி. மீண்டும் தடதடவென்று சத்தம்.

“ஏய்... ஸ்கௌன்ட்ரல் ப்ளடி நில்றா... ஏய்...” இது ஸ்டாலின் குரலேதான்.

கார்ரே... பூர்ரே என்று சத்தமும் அழுகைக் குரலுமாய் கேட்டுக்கொண்டிருக்க...

அலறியடித்துக்கொண்டு எழுந்த எலிஸபெத் டீச்சர் வீதியிறங்கி கூச்சல் போட ஆரம்பிக்க... போலீஸுக்கு போன் அடிக்கப்பட்டு... சடசடவென்று கதவுகள் திறந்து தெருவே கூடிவிட்டது.

அச்சத்தோடு எட்ட நின்ற 25 டார்ச் லைட்டுகளும் ஒன்றாக ஒளி உமிழ, அந்த ஒளி வெள்ளத்தில்...

இரண்டு கைகளிலும் கனத்த இரும்பு ராடுகளோடு மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தான் ஸ்டாலின்.

அவன் காலுக்குக் கீழே இரண்டு திருடர்கள் கால் உடைந்து மடங்கியபடி கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலையிலும் மூக்கிலும் ரத்தமாக வழிந்து கொண்டிருந்தது.

“யூ ப்ளடி டெவில்... எப்டிடா வந்த என் தெர்வுக்கு... வர்லாமாடா... வந்தா வுட்டுடுவேனாடா...வுட்டுடுவேனாடா...” என்றபடி அடங்காமல் அவர்களை ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டேயிருந்தான் ஸ்டாலின்.

தெருவே ஸ்தம்பித்து நின்றிருந்தது.

போலீஸ் வந்து ஸ்டாலினிடமிருந்து திருடர்களைப் பிரித்தது.

பித்தளைக் குடத்தை ஆவேசமாகத் தூக்கி வந்த எலிஸபெத் டீச்சர்,

“ஹஷ்... த்ரோ த வெப்பன்ஸ்... வாஷ் யுவர் ஹாண்ட்ஸ்...” என்றபடி சலசலவென்று தண்ணீரைக் கொட்ட...

இரும்பு ராடுகளை அம்பயர் வீட்டுப் படிக்கட்டில் தூக்கிப் போட்டுவிட்டு அமைதியாகக் கையலம்பிக் கொண்டு நகர்ந்தான் ஸ்டாலின்.

முனகிக்கொண்டிருந்த திருடர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போனது போலீஸ்.

இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“சார், ஊரெல்லாம் தலையில்லாத முண்டம்னு புரளியைக் கிளப்பி விட்டவங்களே இவங்கள போல திருடங்கதான் சார். முதல்ல மக்களை திகில்படுத்தி வீட்டுக்குள்ள முடங்க வெச்சிடுவானுங்க. அப்புறமேற்பட்டு அந்த பயத்த காட்டியே கொள்ளையடிச்சுட்டு ஓடிப் போயிடுவானுங்க. இது வடநாட்டு புது டெக்னிக்காம் சார்...

பேட்டர்ன் தெரிஞ்சதும் அலர்ட்டாதான் இருந்தோம். அதுக்குள்ள உங்க தெரு பையன்கிட்ட வசமா சிக்கிக்கிட்டாங்க... நோ வொர்ரி சார்... வீ வில் லுக் ஆஃப்டர் சார்...”

அந்த நல்லிருளில் தன் வீட்டு வாசலில் செம்மாந்து நின்றிருந்த எலிஸபெத் டீச்சரை அம்மாக்களெல்லாம் கூடிக்கூடிக் கைப்பிடித்துப் பேசி நெகிழ வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்டாலின், ஒருக்களித்திருக்கும் பாம்பணை போல லுங்கியை தலைக்கிழுத்துக்கொண்டு ஆழ்ந்துறங்க ஆரம்பித்திருந்தான்.

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in