
ந.வினோத் குமார்
“என்னிடம் வாருங்கள்… உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குகிறேன்..!” என்று மீனவர்களைப் பார்த்துச் சொன்னார் இயேசு. அவரின் வழியே பைபிளைக் கற்று பிரசாரகர் ஆனவர்தான் ஃபாதர் ரஃபேல் கார்சியா ஹெரேரோஸ். தேவாலயத்தில் பிரசாரம் செய்து, மக்களின் மனங்களைப் பிடித்து கிறிஸ்துவை நோக்கிச் செலுத்தியவர் ஆனானப்பட்ட பாப்லோவைப் பிடித்து அரசிடம் ஒப்படைத்தார் என்று சொன்னால், கொலம்பிய மக்களுக்கு அவர் தேவதூதர்தான் இல்லையா..?
மெதஜின், கலி கார்ட்டெல், போலீஸ், கெரில்லா படைகள் போன்றவற்றுக்கு இடையே நடைபெற்ற மோதல்களில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் கூட, மிக அதிக அளவில் உயிர்த் தியாகம் செய்த ஒரு கூட்டம் உண்டு என்று சொன்னால் அது பத்திரிகையாளர்கள்தான்..! 1983 முதல் 1991 வரை பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 26 பத்திரிகையாளர்கள் ‘நார்கோ’ குழுக்களால் கொல்லப்பட்டனர். டயானா துர்பே, அந்தக் கொலைகளின் கடைசி கன்னியாக இருந்தாள்.
இந்தத் தருணத்தில்தான் அதிபர் சீஸர் கவீரியா அமெரிக்க டி.இ.ஏ. ஏஜென்ட்டுகளின் உதவியை நாடினார். அந்த ஏஜென்ட்டுகள் தாங்களாக வெளிப்படையாக எந்த சாகசங்களையும் செய்யாமல், கொலம்பிய அரசு 1986-ல் உருவாக்கிய 'சர்ச் பிளாக்’ அமைப்புக்கு உதவி செய்தனர். அப்படி ஒரு உதவியால்தான் பாப்லோவின் சரிபாதியாகக் கருதப்படும் கஸ்தாவோ கவீரியா 1990-ல் கொல்லப்பட்டான். அவனுக்கு முன்பு, முந்தைய ஆண்டு பாப்லோவின் கூட்டாளி ‘மெக்ஸிகன்’ கொல்லப்பட்டான். இந்த அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தியவர், கர்னல் ஹியூகோ மார்டினெஸ். அவரையும் தன் வலையில் வீழ்த்தப் பார்த்தான் பாப்லோ. ஆனால், அவர் மசியவில்லை. எனவே, அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆனால், கர்னலுக்கு ஆயுசு கெட்டி..!