காதல் ஸ்கொயர் - 12

காதல் ஸ்கொயர் - 12

மறுநாள் காலை டேட்டாபேஸ் மேனேஜ் மென்ட் செஷன். அதற்கு முன்பாக நந்தினியை பார்த்துவிடலாம்  என்று  நந்தினியின் பிளாக்கிற்கு முன்பாக கௌதமும், அருணும் நின்றுகொண்டிருந்தார்கள். எட்டரை மணி போல் நந்தினியும், மஹிமாவும் பிளாக்கிலிருந்து வெளியே வந்தனர். நந்தினியின் கையில் கௌதமின் ஜெர்கின் இருந்தது. இவர்களைப் பார்த்ததும் ஒரு வினாடி தயங்கிய நந்தினியும் மஹிமாவும் பின்னர் அவர்களை நோக்கி வந்தனர். சற்று தூரத்தில் நின்றுகொண்ட நந்தினி, மஹிமாவிடம் ஜெர்கினைக் கொடுத்தனுப்பினாள்.

கௌதமிடம் அருண், “என்னடா... பழம் கனிஞ்சிடுச்சு. பால்ல விழுந்துடும்ன்ன. பழம் அங்கயே நிக்குது” என்றான்.

“இன்னும் முழுசா கோபம் போகல போல”

“நீ பழம் சாப்பிடுறதுக்கு நான் ஏன்டா நிக்கணும்?”

“அது வரைக்கும் டைம்பாஸ் பண்ண...” என்ற கௌதமை முறைத்தான் அருண். கௌதமின் அருகில் வந்த மஹிமா சிரித்தபடி கௌதமிடம் ஜெர்கினை நீட்டினாள்.

கௌதம் அதை வாங்கியபடி, “இட்ஸ் ஆல்ரைட்னு நந்தினிகிட்ட சொல்லிடுங்க” என்றான்.

“எதுக்கு?”

“இல்ல... அவ தேங்க்ஸ் சொல்லச் சொல்லியிருப்பா.”

“அதெல்லாம் ஒண்ணும் சொல்லல. இனிமே காலங்காத்தால இந்த மாதிரி பிளாக் முன்னாடி வந்து  நிக்காதீங்கன்னு சொன்னா. நாங்களே வந்து ஜெர்கின கொடுக்க மாட்டோமான்னு கேக்கச்சொன்னா” என்றவுடன் அருண் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.

“அய்யோ... நான் ஜெர்கின வாங்க வரலங்க. அவள சமாதானப்படுத்தத்தான் வந்தேன்.”

“தெரியும். ஆனா நாங்க அப்படித்தான் சொல்வோம்...” என்ற மஹிமா திரும்ப... அருண், “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அழைக்க., மஹிமா நின்றாள்.

“தமிழ் நல்லா பேசுறீங்க” என்றான் அருண்.

“பிஇ படிச்சதெல்லாம் கோயம்புத்தூர்லதான்.”

“கோயம்புத்தூர் பசங்கள்லாம் நாலு வருஷம் சந்தோஷமாஇருந்துருப்பாங்க. நீங்க திருச்சூர்தான?” என்று அருண் கேட்டவுடன் முகம் மலர்ந்த மஹிமா, “எப்படி கரெக்டா சொல்றீங்க?” என்றாள்.

“கேரளாவுல... அழகான பொண்ணுங்க எல்லாம் திருச்சூர்லதான் இருப்பாங்கன்னு ஐநா சபைல சொல்லியிருக்காங்க” என்றவுடன் முகம் மாறிய மஹிமா, “இப்படில்லாம் பேசுனா விழுந்துருவோமா?” என்றாள்.

“வேறு என்னா பண்ணா விழுவீங்க?”

“மஹிமான்னு என் பேரச் சொல்லி கத்திகிட்டு, கோடநாடு வியூபாயின்ட்ல இருந்து குதிங்க” என்ற மஹிமா அவனை முறைத்தபடி சென்றாள்.

கௌதம் சிரித்துக்கொண்டே அருணிடம், “ஏன்டா... இப்படி எல்லா பொண்ணுங்ககிட்டயும் பல்பு வாங்குற...” என்றான்.

“மச்சி... நான் இந்தியாவோட ஒருமைப்பாட்டுல, அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கேன். அதனாலதான் இந்த பெங்காலி, மலையாளப் பொண்ணுங்ககூடல்லாம்ஒரு தேசிய நல்லிணக்கத்தோட வாழலாம்ன்னு  ட்ரைபண்றேன். ஆனா அவங்க இன்ட்ரஸ்ட் காமிக்க மாட்டேங்கிறாங்க.”

“நீ ஏன் நம்ம ட்ரெய்னிங் சென்டர்ல இருக்கிற ஆம்பளைங்க கூடல்லாம் நல்லிணக்கத்தோட வாழக் கூடாது?”

“இங்க கேரளா, பெங்கால்ருந்து ஜென்ட்ஸ்எல்லாம் வந்துருக்காங்களா என்ன?” என்று அருண் கேட்க... சத்தமாக சிரித்தான் கௌதம்.

நந்தினியும், மஹிமாவும் அவர்களைக் கடந்து செல்ல... கௌதம் வேகமாக அவர்கள் பின்னால் நடந்தான். சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்த நந்தினி நின்றாள். திரும்பி அவனை நோக்கி

வந்தவள், “கௌதம்... குளிருக்கு ஜெர்கின் தந்த... திருப்பிக் கொடுத்துட்டேன். மறுபடியும் மறுபடியும் என்னைத் தொந்தரவு பண்ணாத” என்றாள்.

“நேத்தே நீ சமாதானமாயிட்ட. அப்புறம் ஏன் மறுபடியும் கோச்சுக்குற?”

“நான் எங்க சமாதானமானேன்?”

“இல்ல... நான் கன்யாவ பத்தி சொன்னப்ப உதட்டோரத்துல லேசா சிரிப்பு வந்துச்சு. அப்படியே வாயப் பொத்தி சிரிப்ப அடக்கிட்ட.”

“அதெல்லாம் இல்ல.”

“ஏய்... சும்மா மாத்தி மாத்திப் பேசாத.”

“அப்படித்தான் பேசுவன்” என்று  கூறிவிட்டு  நந்தினி நடக்க... கௌதம் அங்கேயே நின்றான். அவனருகில் வந்த அருண், “நீ பின்னாடி சுத்திக்கிட்டேயிருந்தா, இப்படித்தான் ஃபிலிம் காட்டுவாளுக. இன்னைக்கி செஷன் முடியிற வரைக்கும் கண்டுக்காம இரு. ஈவ்னிங் பழம் தானா உன் மடில வந்து விழும்” என்றான்.

அதேபோல் கௌதம் அன்று முழுவதும் கண்டுகொள்ளாமல் இருந்தான். மெஷின் ரூம் செல்வதற்காக க்ளாஸிலிருந்து வெளியே வரும்போதுகூட, நந்தினி அவன் அருகில்தான் வந்தாள். ஆனால், கௌதம் அவளைப் பார்க்காதது போல் தாண்டி முன்னால் சென்றுவிட்டான்.

மாலை மெஷின் ரூமிலிருந்து வெளியே வரும்போது கௌதமிடம் அருண், “மச்சி... நீ கண்டுக்காம இருந்ததுக்கு செம எஃபெக்ட்... பாப்பா மெஷின் ரூம்ல உன்ன பாத்துட்டே இருந்துச்சு” என்றபோது கௌதமின் மொபைலிலிருந்து மெசேஜ் சத்தம் கேட்டது. கௌதம் வேகமாக எடுத்துப் பார்த்தான். நந்தினி  மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

“டேய்... நந்தினி மெசேஜ் அனுப்பியிருக்காடா” என்ற கௌதம் உற்சாகமாக மெசேஜைப் பார்த்தான், அதில், “நான் இன்னும் கோபத்துலதான் இருக்கேன்” என்ற மெசேஜைப் பார்த்துவிட்டு சிரித்தபடி சுற்றிலும் பார்த்தான். சற்று தூரத்தில் வந்த நந்தினி, மஹிமாவை அனுப்பிவிட்டுத் தனியாக வந்தாள். அருணின் தோளில் கைவைத்த கௌதம், “நண்பா... நம்ப இப்ப பிரியற நேரம் வந்தாச்சு” என்றான் சீரியஸாக. அருண் கடுப்பாக, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பிரியமாத்தானடா என்னைப் பாத்த... அவகிட்டருந்து மெசேஜ் வந்தவுடனே, எப்படிரா யாரையோ பாக்குற மாதிரி பாக்குற?” என்று கேட்க... “நீங்க யாரு?” என்றான் கௌதம். சிரிப்புடன் அருண் ஓங்கி அவன் வயிற்றில் குத்திவிட்டு நகர்ந்தான்.

நந்தினி , கௌதமைக் கடக்கும்போது, அவனைப் பார்க்காததுபோல் உதட்டோரம் சிரிப்புடன் நடந்தாள். “இங்க பார்ரா...” என்று அவள் பின்னால் சென்ற கௌதம், “பேசமாட்டன்னு சொல்லிட்டு, மெசேஜ்ல்லாம் அனுப்புற...” என்றான்.

“பேச மாட்டன்னுதான் சொன்னேன். மெசேஜ் அனுப்ப மாட்டன்னு சொல்லலியே...”

கௌதம், “இன்னும் கோபத்துலதான் இருக்கன்னாஎன்ன அர்த்தம்?” என்றதற்கு நந்தினி பதில் ஒன்றும் சொல்லவில்லை. தொடர்ந்து கௌதம், “அதாவது... நான் இன்னும் கோபத்துலதான் இருக்கேன். வந்து சமாதானப்படுத்துன்னு அர்த்தம். அதானே” என்றான். அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் நடக்க... கௌதம், “எப்படி சமாதானப்படுத்துறது?” என்றான். “எனக்குத் தெரியாது” என்றபடி சிரிப்புடன் நகர்ந்தாள். சில வினாடிகள் யோசித்த கௌதம், “ம்... தமிழ் சினிமால காமிக்கிற மாதிரி, ஏதாச்சும் மொக்கை ஜோக் சொல்றேன். நீ கலகலன்னு சிரிச்சிடு. அப்படியே சமாதானமாயிடலாம்....” என்றதற்கு அவள் புன்னகையுடன் நடந்தாள்.

“இல்லன்னா... நீ திடீர்னு வயித்தப் பிடிச்சுகிட்டுவாந்தி எடு. நான்அப்படியே வாந்திய கைல பிடிக்கிறேன். நீ சமாதானமாயி...” என்றபோது, நந்தினி குறும்புச் சிரிப்புடன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, “வ்வாக்” என்று சத்தம் எழுப்பினாள். பிறகு வாயைப் பிளந்துகொண்டு வாந்தி எடுப்பது போல் தலையைக்குனிந்தாள். அவள் நடிப்பதைப் புரிந்துகொண்ட கௌதமும் பொய் பதற்றத்துடன், “நந்தினி... என்னாச்சு?” என்று பாய்ந்து இரண்டு கைகளையும் சேர்த்து, வராத வாந்தியைப் பிடித்தான். அவள்

மீண்டும், “வ்வாக்... வ்வாக்” என்று சத்தமெழுப்பியபடி  வாந்தி எடுப்பது போல் நடிக்க... கௌதம்  மீண்டும் மீண்டும் வாந்தியைப் பிடித்து ஓரத்தில் ஊற்றினான். “என்னாச்சும்மா?” என்றான் பதற்றத்துடன்.

அவள் கண்களை சொக்கினாற்போல் வைத்துக் கொண்டு, “மதியானம் சாப்பிட்டது ஒத்துக்கல” என்றாள்.

“என்னம்மா நீ... நல்லதா சாப்பிடக் கூடாது?

உனக்கு எதாவது ஒண்ணுன்னா. நான் செத்துடுவன்ம்மா....” என்றபடி பொய்யாகக் கண்களைத் துடைத்துக்கொண்டான். சட்டென்று பாய்ந்து அவன் வாயைப் பொத்திய நந்தினி, “அப்படில்லாம் விளையாட்டுக்குக்கூட சொல்லாத கௌதம். அப்புறம் நானும் செத்துடுவேன்” என்று பயங்கர ஃபீலிங்காகக் கூற.... கௌதம் ரசித்துச் சிரித்தான். நந்தினியும் சிரித்தாள். சிரித்தார்கள்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in