இணையச் சிறையின் பணயக் கைதிகள் 12- விபரீதங்களின் நுழைவாயிலும் விடுதலைக்கான வழிகளும்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 12- விபரீதங்களின் நுழைவாயிலும் விடுதலைக்கான வழிகளும்

அலைபேசியை அதிகம் சார்ந்திருப்பது என்பது அடிமைத்தனமா என்ற விவாதத்தைக்கூட விட்டுவிடலாம். ஆனால், அலைபேசிப் பயன்பாடு பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறி வருவதை நிச்சயம் மறுக்க இயலாது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பக்கத்து வீட்டுத் தாத்தா வரை அலைபேசியைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். தவறில்லை. அலைபேசியும் இணையமும் நம்முடைய பல வேலைகளை மிக எளிதாக முடித்துக்கொள்ள வழிவகை செய்கின்றன. அவற்றின் பயன்பாடு அபரிமிதமாக அதிகரிக்கும்போது, நம் உடலும் மனமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன என்பதுதான் நாம் சுதாரிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

உடல் ரீதியிலான பாதிப்புகள்

கண்களில் பலவிதமான பிரச்சினைகள் வருகின்றன. மங்கலாகத் தெரிவது, கண்களில் எரிச்சல், கண்கள் சோர்ந்துபோவது போன்ற பிரச்சினைகளை நிறைய பேரிடம் பார்க்கிறோம். கணினி அல்லது அலைபேசியைச் சார்ந்துதான் பணி என்றிருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகளுக்கான சாத்தியம் அதிகம். Computer vision syndrome என்றே இதை அழைக்கிறோம்.

கழுத்துப் பகுதியிலும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் தலை குனிந்தபடியே அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருப்பது, காலப்போக்கில் ஒருவித தீராத கழுத்து வலியில் கொண்டுபோய் விட்டுவிடும். இதை Text neck என்று சொல்கிறோம்.

இன்னும் தீவிரமான பிரச்சினைகள் உண்டு. ‘சாட்’ செய்துகொண்டே வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாவதும் தற்போது அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும்போது கவனித்திருப்பீர்கள். உங்கள் முன்னால் போகும் வண்டி காரணமில்லாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் சாலையை அளக்கும். கண்டிப்பாக டிரைவர் அலைபேசியில் ஏதாவது செய்துகொண்டிருப்பார். பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதல்ல. மின்னஞ்சல் பார்ப்பது, காலையில் போட்ட நிலைத்தகவலுக்கு ‘லைக்ஸ்’ கிடைத்திருக்கிறதா என்று பார்ப்பது என ஏதோ ஒரு உந்துதலின் அடிப்படையில் அலைபேசியை செக் செய்வார்கள். அந்த உந்துதல்தான் ஆபத்தான விபத்துகளுக்கும் காரணமாகிறது. ஏனெனில், கண நேரக் கவனச் சிதறல்கள் விபத்தில் போய் முடியும்.

ஒரு சூழல் பிடிக்கவில்லை. அலைபேசியைச் சரணாகதி அடைந்து தனிமைப்பட்டுக்கொள்கிறோம். நீண்ட வரிசையில் நிற்கும்போது, நம்மை யாராவது கவனிக்கும்போது, நம்மிடம் யாராவது பேச எத்தனிக்கும்போது அலைபேசி உலகத்துக்குள் சென்றுவிடுகிறோம். சும்மாங்காட்டியும் ஒரு ஸ்டைலுக்காகவேனும் சிலர் இதைச் செய்வதுண்டு.

ஒருகட்டத்தில் அலைபேசியில்தான் சகலமும் என்றானவுடன் மனிதர்களுடனான உண்மை நிலை உறவு சம்பாஷணைகளைத் தெரிந்தே தவிர்க்கிறோம். இதனால் உளவியல் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், உறவுகள் சார்ந்த சச்சரவுகளும் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

ஏற்கெனவே மனச்சோர்வு, கூச்ச சுபாவம் என உழன்றுகொண்டிருப்பவர்கள், அதற்கு வடிகாலாக அலைபேசியையும் இணையத்தையும் நாடுவார்கள். தற்காலிக ஆபத்பாந்தவனாகத் தெரியும் அலைபேசியும் இணையமும் காலப்போக்கில் நிரந்தர ஆபத்துகளுக்கே காரணமாகிவிடும்.

உளவியல் ரீதியிலான பிரச்சினைகள்

தூக்கத்தை இழப்பதுதான் முதல் பிரச்சினை. உணவு, குடிநீரைப் போல நல்ல தூக்கம் என்பதும் நம் உடலுக்கு மிக முக்கியம். தூக்கமின்மைதான் எத்தனையோ மன நோய்களுக்கான வாயிற்படி என்பதை மறக்க வேண்டாம் நண்பர்களே!

உறங்கப்போவதற்கு முன் அலைபேசியைப் பயன்படுத்தும்போது, அந்தத் திரை வெளிச்சம் நமது மூளையைச் சுறுசுறுப்படையச் செய்துவிடும். இதனால், தூக்கம் வருவது தாமதமாகும்.

இன்னொரு விசித்திரப் பிரச்சினை உண்டு. நம் அலைபேசி தூரமாக எங்காவது இருக்கும். அழைப்புகூட எதுவும் வந்திருக்காது. ஆனாலும். அலைபேசியிலிருந்து வைப்ரேட்டர் அதிர்வோ அல்லது ரிங் அடிக்கும் ஒலியோ வருவதுபோல் உணர்வோம். எடுத்துப் பார்த்தால் எந்த அழைப்பும் வந்திருக்காது. பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். இதைத்தான் Phantom vibration syndrome என்கிறோம். ஒரு வகையான ‘உணர்வுப் பிறழ்வு’ போன்றது இது. ஒரு அழைப்புக்காகக் காத்திருக்கும்போதோ அல்லது ஏற்கெனவே பதற்றமான சூழலில் இருக்கும்போதோ இப்படியான மாய ரிங்டோன்கள் நமக்குக் கேட்கலாம்.

மிதமிஞ்சிய தகவல்களைப் படிப்பது, தொடர்ந்து ஒலிக்கும் ரிங்டோன்களின் சத்தம், குறுத்தகவல் வந்தடையும் சத்தம் என்று பல்வேறு சமாச்சாரங்கள் மூளையில் ஏறிக்கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் ‘ஓவர் லோட்’ ஆகிவிடும். அதன் விளைவாக எந்தஒரு காரியத்திலும் சில நிமிடங்களுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. செய்யும் தொழிலில் ஏற்படும் கவனக்குறைவு நமது உற்பத்தித் திறனுக்கே உலை வைத்துவிடும். அலைபேசியைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலை எல்லோராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அவ்வளவு ஏன், வேலை செய்யும் இடத்தில் வெறுமனே அலைபேசியை வைத்திருந்தாலே தமது பணி பாதிக்கப்படுகிறது என்று ஊழியர்கள் ஒப்புக்கொள்வதைப் பல ஆய்வுகள் சொல்கின்றன.

படைப்பாற்றலுக்குத் தேவையான அமைதியையும் இழக்கிறோம். அடுத்து நாம் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைக்காக அமைதியாக ஆலோசிக்க வேண்டி சில நிமிடங்களை ஒதுக்கவேண்டும் என்று தெரிந்திருந்தும்  ‘கொஞ்ச நேரம் போனைப் பார்த்துட்டு அப்புறமா அந்த வேலையைப் பார்க்கலாம்’ என்று நினைக்கத் தலைப்படுகிறோம். நண்பர்களைச் சந்திக்கத்தயங்குகிறோம். ‘செல்போனை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள்’ என்று உங்கள் குடும்பத்தினரோ நண்பர்களோ வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் அளவுக்கு அலைபேசி உபயோகம் அளவுமீறிப்போகிறது. வீட்டில் உள்ள வேலைகள் போட்டது போட்டபடி கிடக்க, அலைபேசியை விட்டு வெளிவர முடியாமல் படுக்கையிலேயே கிடப்பது, விடுமுறை நாட்களில் சோறு தண்ணியில்லாமல் அலைபேசி உலகத்துக்குள் சஞ்சரிப்பது என்று உங்கள் பயன்பாடு  இருந்தால்  நீங்கள் நிறுத்தி நிதானிக்க வேண்டிய, மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பொருள்.

அடிமைத்தனம் ஏற்பட என்ன காரணம்?

சந்தேகமே இல்லாமல் மூளைதான் காரணம். நம் மூளையில் ‘ரிவார்டு சர்க்யூட்ஸ்’ (reward circuits) என்ற மூளைப் பாதைகள் உள்ளன. அங்கே ‘டோபமைன்’ (dopamine) எனும் தகவல் தொடர்புக்கான ஒரு வேதிப் பொருள் (neurotransmitter) சுரக்கிறது. நமக்கு மகிழ்வைத் தரும் தருணங்களில் சுரக்கும் பொருள் இது. ஒரு பரிசு, ஒரு நல்ல விளையாட்டு, ஒரு அங்கீகாரம், பாலியல் உறவில் திருப்தி என எல்லாவற்றின் போதும் டோபமைன் சுரந்து அந்த ரிவார்டு சர்க்யூட்ஸ் சுறுசுறுப்படைகின்றன. சூதாட்டம் போன்ற விளையாட்டுகளின் போதும் நம் மூளையில் இதேபோன்ற செயல்பாடுகள்தான் நடக்கின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாடு மிகுந்து நாம் அதற்கு அடிமையாவதற்கு அடிப்படையாக இருப்பது இதே நிகழ்வுதான்.

நம் பதிவுக்கும், புகைப்படத்துக்கும் விழும் லைக்குகளும் பின்னூட்டங்களும் நம்முள் ஒரு தொடர்வினையை நடத்தத் தொடங்கிவிடுகின்றன. ஆழ்மன ரீதியாக முதலில் நமக்கு இது புரியாது. காலம் செல்லச்செல்ல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிபடும். நேரில் நண்பர்களைச் சந்திக்க இயலாது போவது, மெய்நிகர் (virtual) விஷயங்களிலேயே திளைத்திருப்பது, போதுமான லைக்குகளும் அங்கீகாரமும் கிடைக்காவிட்டால் மனச் சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது என்று பாதிப்புகளைப் பட்டியலிடலாம்.

உங்கள் அலைபேசிப் பயன்பாடு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இன்றைக்குக் கேள்வித்தாள்கள் எல்லாம் வந்துவிட்டன. மார்க் போட்டே தெரிந்துகொள்ளலாம். அவ்வளவுஆய்வுகள் அவசியமில்லை என்றே சொல்வேன். கைப்புண்ணுக்குக் கண்ணாடி அவசியமா? எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோம், எதை எதைப் பயன்படுத்துகிறோம், கிடைத்த பலன் என்ன, பாதிப்புகள் என்னென்ன என்றுநம்மை  நாமே கேட்டுக்கொண்டாலே விடை  தெரிந்துவிடும்.

எப்படி மீண்டு வருவது?

பணி சார்ந்து எவ்வளவு நேரம், சமூக வலைதளங்கள், விளையாட்டு இத்யாதிகளுக்காக எவ்வளவு நேரம் அலைபேசியைப் பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு நேரஅட்டவணை போட்டுப் பாருங்கள். அநாவசியமான நேர விரயத்தில் ஈடுபடுவது உங்களுக்கே தெரியும்.

அலைபேசிக்கான நேரம் என்பது இவ்வளவுதான் என்று வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், பேசுவதற்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் அப்படித்தான். விளையாட்டு முதல்எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்‘நோ’ சொல்லிவிட  வேண்டும். குடும்பத்துக்கு என்று  உள்ளபிரத்யேகமான நேரங்களில் அலைபேசியை அனுமதிக்காதீர்கள். சமையலறை, டைனிங் டேபிள், படுக்கையறை போன்றவற்றில் அலைபேசியைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறுந்தகவல் மற்றும் இன்னபிற தகவல்களுக்கான அறிவிப்பு ஒலிகளின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது ‘மியூட்’செய்துவிடுங்கள். அதுபோன்ற ஒலிகளே நம்மை திசைதிருப்பி அலைபேசியைத் தொட அழைப்பு விடுக்கின்றன என்பதை மறவாதீர்கள்.

தேவையற்ற செயலிகளை அழித்துவிடுங்கள். சமூக வலைதளங்கள் மூலம் சஞ்சலம் ஏற்பட்டால் யோசிக்காமல் வெளியே வந்துவிடுங்கள். உலகம் ஒன்றும் தலைகீழாகிவிடாது. ஒரு ‘பிரேக்’ எடுத்துக்கொண்டு நன்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு உள்ளே வாருங்கள். மனமும் உடலும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியமாக உணர்வீர்கள். மிதமிஞ்சிப் போகும் எந்தப் பழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர இப்படியான இடைவெளிகள் அவசியம்தான் நண்பர்களே!

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in