மண்... மனம்... மனிதர்கள்! - 12

நாய்க்கர் தாத்தா!
மண்... மனம்... மனிதர்கள்! - 12

வாழ்க்கை விசித்திரமானது.

கிழக்கு மேற்கு என்னும் சட்டச் சரியான வரையறை மனித வாழ்க்கைக்குப் பொருந்தி விடுவதில்லை. வாங்கி வந்த வரத்துக்கேற்பகிழக்கு மேற்காகவும் மேற்கு கிழக்காகவும் நின்று விடுகிறது.

ஒண்டிக் கட்டையாக வாழ்ந்த பார்த்தசாரதி தாத்தாவுக்கு வாய்த்த வாழ்க்கை அப்படிப்பட்டது. நாங்கள் அவரை நாய்க்கர் தாத்தாஎன்றே அழைப்போம்.

நாய்க்கர் தாத்தா மேல் சட்டை போட மாட்டார். நாலு முழ வேட்டி மட்டும்தான். அவ்வப்போது அதை அகட்டி அகட்டி லங்கோட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வார். மொட்டைத் தலையும் குழிவிழும் கன்னத்து சிரிப்புமாக இருக்கும் அவருக்குச் சுற்று வட்டாரத்தில் எதிரிகளே இல்லை. சொல்லப் போனால் அன்றைய ஏரியா ‘டெரர்’ கோல்டு அன்பு கூட, நாய்க்கர் தாத்தாவுக்கு அடக்கம்.

இருந்திருக்கும் அப்போது அவருக்கு வயது  60... திருவல்லிக்கேணி பெசன்ட் ரோட்டில், நம்மாழ்வார் தெரு அருகே அமைந்திருந்த ரமணி லாண்டரி கடை வாசலில் அவருக்கென்று ஒரு மர ஸ்டூல் போடப்பட்டிருக்கும். அதன் அருகே 6 அடிக்கு ஒரு கம்பு சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.

ரமணி லாண்டரியின் ஓனர் முனுசாமி செட்டியாருக்கும் நாய்க்கர் தாத்தாவுக்கும் ஆதி காலத்து நட்பு. அவர்களுக்கிடையே இருந்த பந்தமும் போக்குவரத்தும் விளக்கி முடியும் விஷயமில்லை.

காலையில் கடை திறந்த கையோடு தாத்தாவிடம் 50 பைசா கொடுத்து விடுவார் செட்டியார். அன்று அந்த 50 பைசாவுக்கு விவேகா ஓட்டலில் ஐந்து இட்லி கிடைக்கும்.

பக்கத்தில் இருந்த பாலன் கடையில் மலையாளத்தில் பேச்சுக் கொடுத்தபடி பாலன் பிரியப்பட்டுக் கொடுக்கும் இரண்டு ஓஸி சிகரெட்டுகளை ஆழ்ந்து புகைத்து வருவார் நாய்க்கர் தாத்தா.

நாங்கள் ஸ்கூல் விட்டு வீடு வரும்போதெல்லாம் அவர்தான் ஓடோடி வந்து ரிக் ஷாவில் இருந்து கீழே இறக்கி விடுவார். யார் முதலில் இறங்குவது என்று எங்களுக்குள் சண்டை வந்தால் சுத்தியல் போல கரண்டு கருத்திருக்கும் விரல்களால் செல்லமாகத் தலையில் தட்டுவார். உயிர் போய் வரும்...

நாய்க்கர் தாத்தாவுக்கு கரளையான உடம்பு. அவ்வப்போது அவரிடம் “டென் ஊஞ்சல் ப்ளீஸ்...” என்று கெஞ்சுவோம். நல்ல மூடில் இருந்தால் ஓகே சொல்வார்.

பரத நாட்டியத்தில் அரை மண்டி என்பார்களே... அது போல பாதி அமர்ந்து விரல்களை இறுக்கிக் கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் விரித்துக் காட்டுவார்.

படர்ந்திருக்கும் முன்னங்கையில் நெளிந்தோடும் பாம்புகள் போல நரம்புகள் விரிய, அதை பயந்தெழுந்து பார்க்கும் முற்றிய தவளை போல அவரது ஆர்ம்ஸ் மஸில்ஸ் விடைத்தெழுந்து நிற்க, அதில் தாவிப் பற்றித் தொங்கியபடி நாங்கள் உல்லாசமாக ‘டென் ஊஞ்சல்’ ஆடுவோம். பத்து எண்ணும்வரை சிரித்தபடியே நிற்பார் நாய்க்கர் தாத்தா.

நாய்க்கர் தாத்தா ஃபில்டர் இல்லாத சிஸர்ஸ்தான் பிடிப்பார். அவர் சிஸர்ஸ் பிடிக்கும் விதமே அலாதி யானது.

காப்புக் காய்த்து நறநறவென்று இருக்கும் வலது கை விரல்களில் சிஸர்ஸைப் பற்றியபடி பட்டையாக பழுப்பேறி அகன்றிருக்கும் தன் இடது கை கட்டை விரல் நகத்தில் ஓங்கியும் மெல்லவுமாக மோதியபடியே இருப்பார்.

சைக்கிள் ஓட்டும்போது ஹாண்டில் பாரை பிடித்திருப்

போமே... அப்படிப்பட்டதொரு  ‘ஃபிர்ம்’ அதிலிருக்கும். அந்த நேரம் ரமணி லாண்டரி ரேடியோவை எதிர்பார்க்காமல் தனக்குத்தானே “பொன் மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்...” பாடி லயித்திருப்பார்.

வேட்டி மடிப்பிலிருந்து சீட்டாப் பெட்டியை வெளியெடுத்து அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி சரெக்கென்று உரசி சிஸர்ஸைப் பற்றியிழுத்து ஆழமாக உள்ளிழுப்பார்.

அந்த நேரத்தில் மட்டும் டென் ஊஞ்சல் கேட்டால் “வேணாங்கடா செல்லம்... வாடை வீசும்டா... அது தப்புடா...” என்று குற்ற உணர்வோடு முகம் திருப்பிக் கொள்வார் .

தாத்தாவின் ஆரம்ப காலம் ஆக்ரோஷமானது. பிரிட்டிஷ் காலத்தில் கோட்டை துரைகளோடு பழகி சரிக்கு சமமாக இங்கிலீஷில் பொளந்து கட்டி மல்லுக்கு நின்றவர்.

சுதந்திர போராட்ட காலத்தில் அடையாத்தங்கரையில் இரண்டு வெள்ளைக்காரர்களை வெட்டிவிட்டுத் தப்பியவர் நாய்க்கர் தாத்தா. தெலுங்கு, மலையாளம், கொஞ்சம் இந்தியும் கூட பேசுவார்.

அப்படிப்பட்டவருக்கு அருமையான மனைவி அமைந்தும் வாழ்க்கை அமையவில்லை என்பார்கள்.

கல்யாணமான புதிதில் மயிலை அறுபத்து மூவர் பார்க்க வந்த அவரது மாமனார் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்ட அவசரத்தில் அவரை “மாப்பிள்ளை” என்று அழைக்காமல் “ஏம்ப்பா பாசாதி...” என்று பேரிட்டுக் கூப்பிட்டு விட்டாராம்.

சுருக்கென்று வந்த கோபத்தில் அதே இடத்தில் வைத்து மாமனாரை ஓங்கி அறைந்து விட்டாராம் நாய்க்கர் தாத்தா.

மானம் கெட்டுப் போச்சென்று மாமனார் ஓடிப்போய் கூவத்தில் குதித்துவிட, தகப்பனுக்கு ஏற்பட்ட அவலத்தை தாங்க முடியாத அவர் மனைவி கோவிந்தம்மா, “தேடி வந்த எங்கப்பனுக்கு செஞ்சனுப்புற சீர் இதுதானா...?” என்று மனம் வெதும்பி அம்மிக்கல்லை ஓங்கி மண்டையில் போட்டுக்கொண்டு செத்தே விட்டாளாம்.

லாண்டரிக்குள்ளிருந்து கேட்கும் ரேடியோ பாடலுக்கு கூடவே பாடிக்கொண்டிருக்கும் நாய்க்கர் தாத்தா சில நேரங்களில் உள்ளே முகம் திருப்பிக் கேட்பார்.

“ஏங்க செட்டியாரே... நான் செஞ்சதுல அப்படி என்ன தப்பு உண்டுங்கறீங்க ?”

“ம்ம்ம்...”

“இல்ல, அவ்ளோ அசால்ட்டா பேரிட்டுக் கூப்புட்டு றலாமா...சொல்லுங்க..?”

“விடுங்க நாய்க்கரே... முடிஞ்சு போன கதையில மூணு புள்ளி வெச்சி என்னத்த காணப் போறோம்?” என்றபடி நமுட்டுச் சிரிப்போடு பெட்டி ஓட்டிக்கொண்டிருப்பார் ரெண்டு பொண்டாட்டிக்கார செட்டியார்.

நாய்க்கர் தாத்தா சாதாரணப்பட்டவரில்லை.

அந்தக் காலத்தில் சென்னையில் மூர் மார்கெட் என்று ஒன்று இருந்தது. ஊசி முதல் ஒட்டகம் வரைக்கும் அங்கே கிடைக்கும் என்பார்கள். சல்லிசான விலையிலும் கிடைக்கும் என்பதால் எங்கெங்கோ இருந்து வரும் மக்கள் அங்கே கூடுவார்களாம்.

மக்களைக் கவர்வதற்காக அங்கே குஸ்தி மேடை கட்டுவார்களாம். வட நாட்டில் இருந்தெல்லாம் ஆஜானு பாகுவான பயில்வான்களை வரவழைப்பார்களாம்.  ‘மரண பொறுப்பு பத்திரம்’ எழுதிக் கொடுத்தபின்தான் குஸ்தி மேடையில் ஏற விடுவார்களாம்.

அப்படிப்பட்ட மேடையில் “உனக்கு ஒரு மண்ணுனா...எனக்கு ஒரு மண்ணுடா...” என்று தொடை தட்டிக் கொண்டு ஏறுவாராம் நாய்க்கர் தாத்தா. பார்த்தசாரதி நாய்க்கர் குஸ்தி மேடை ஏறுகிறார் என்றால் அன்று பெருங்கூட்டம் கூடுமாம்.

போட்டியில் வென்ற பரிசாக ரெண்டு ப்ளேடர் சாராயமும் பத்துக் கட்டு சுருட்டும் வாங்கி வருவாராம். சாராயத்தை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் குஸ்தி மேடை வர்ணிப்பை ரசித்தபடியே சுருட்டு பிடிப்பாராம்.

பச்சை பெயின்ட் அடித்த ஓட்டை சைக்கிள் ஒன்றை வைத்திருப்பார் நாய்க்கர் தாத்தா. அதை தட்டி ஏறிக் கொண்டு தவறாமல் இரண்டு வேளை பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் வருவார் .

சந்நிதிக்கு எதிரே குறைந்தது அரைமணி நேரமாவது மூலவரை உற்றுப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். எத்தனை ஆரத்தி ஆனாலும் அசையாமல் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அமைதியாக இருப்பார்.

திடீரென்று உடல் சிலிர்க்கும். என்ன நினைப்பாரோ தெரியாது... படபடவென்று பறவை சிறகைப் போல கன்னத்தில் அடித்துக்கொண்டபடியே திரும்பி வந்து விடுவார் நாய்க்கர் தாத்தா. அவர் நினைத்ததுதான் அவருக்குச் சட்டம்.

காலம் உருண்டோட வாழ்க்கை சூழலில் நாய்க்கர் தாத்தாவை விட்டு வெகு தூரம் விலகி விட்டேன்.

ஒரு கட்டத்தில் தூர்தர்ஷனுக்காக திருவல்லிக்கேணி தனசேகர் செட்டியார் அவர்களால் தயாரிக்கப்பட்ட  ‘ஜரிகை’ என்னும் சீரியலை டைரக்ட் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. கான்செப்ட்  ‘சீனியர் சிட்டிசன்ஸ்’.

திறமை இருந்தும் வாழ்க்கைச் சூழலால் மறைந்திருப் பவர்களை வெளிக்கொணரும் அற்புதமான தொடர் அது. புல்லாங்குழல் கலைஞர் விஜய் இசையில் திரை இசைத்திலகம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் அதன் டைட்டில் சாங்கை பாடிக் கொடுத்தார்.

அதன் முடிவில் சீனியர் சிட்டிசன்ஸ் சிலரை சந்தித்து அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்கத் திட்டமிட்டோம். என் மனதில் முதலில் வந்து நின்றவர் நாய்க்கர் தாத்தா.

சென்று தேடினால் அங்கே ரமணி லாண்டரியும் இல்லை. அருகே இருந்த எல்.எஸ். ராவ் கடையும் இல்லை.

அப்படி இப்படி விசாரித்து ஒரு வழியாக நாய்க்கர் தாத்தாவைப் பிடித்தேவிட்டேன்.

“என்ன தாத்தா...என்னைத் தெரியுதா ?”

“வாடா பேராண்டி...” என்று பொக்கை வாயில் சிரித்தார் தாத்தா.

அவரது ஒரே ஆசை பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டு திருவல்லிக்கேணியைச் சுற்ற வேண்டுமாம். அவர் அதுவரை பைக்கில் ஏறியதே இல்லையாம்.

“அட, வாங்க தாத்தா...” என்று எனது ஹோண்டாவில் அவரை ஏற்றிக்கொண்டுபோய் ரத்னா கேஃபில் டிபன் முடித்து பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் அரை டஜன் வேட்டிகளும் துண்டுகளும் வாங்கித் தந்து வீழ்ந்து நமஸ்காரம் செய்தேன்.

பொக்கை வாயில் “ஹக்...ஹக்...” என்று சிரித்துக் கொண்டே வாங்கியவர் சட்டென்று சீரியசானார்.

“பேராண்டி, அப்படியே இன்னொரு வேல செய்...நேரா நம்ம வெலிங்க்டன் பிரிட்ஜுக்குப் போடா...”

அவர் சொன்னது திருவல்லிக்கேணி கடற்கரைக்கு முன்னால் இருக்கும் கூவம் பிரிட்ஜ்.

அழைத்துச் சென்றேன்.

நடு பிரிட்ஜில் நிறுத்தச் சொல்லி கீழே இறங்கியவர் தடதடவென்று நடந்தோடி கூவம் காம்பவுண்டுக்கு அருகில் போய் நின்றுகொண்டார்.

அரை டஜன் வேட்டிகளையும் துண்டுகளையும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டவர்...

“ஐயா நான் பாசாதி... அடியேன் நான் பாசாதீ...” என்று கத்திக்கொண்டே கூவம் ஆற்றுக்குள் வீசி எறிந்தார்.

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in