கண்ணான கண்ணே..! 13

கண்ணான கண்ணே..!  13

ஒரு பெண் கருவுற்ற நாள் தொடங்கி குழந்தை பிறந்த முதல் 1,000 நாட்கள் வரை சேயின் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். முதல் 1,000 நாட்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்துதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான அடித்தளம் என்பதை இளம் தாய்மார்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். குழந்தைக்கு ஆரோக்கியமான உணவைப் புகட்டுங்கள். குழந்தைப் பராமரிப்பில் ஆலோசனைகள் தேவைப்பட்டால் கூகுளை அல்ல; வீட்டிலிருக்கும் பாட்டியோ இல்லை வேறு பெரியவரையோ கேளுங்கள். அனுபவ அறிவு விசாலமானது.

இந்த அத்தியாயத்தில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் சார்ந்த ஆலோசனைகளை அறிவோம்.

அற்புதமான ஆண்டுகள்

குழந்தைப் பருவத்தில் 2 முதல் 5 வரையிலான காலகட்டத்தை மிக அற்புதமான காலகட்டம் என்றே சொல்வேன். இந்தப் பருவத்தில்தான் குழந்தைகள் இயற்கையாகவே உணவின் மீது ஈடுபாடு காட்டத் தொடங்குவார்கள். இது எனக்கு விருப்பமான உணவு; இது எனக்குப் பிடிக்காத உணவு என்று தங்களுக்கான ருசியை வரையறுப்பார்கள். இந்தக் காலகட்டத்திலேயே எது நல்ல உணவு, எந்த உணவு எந்தப் பருவத்தில் கிடைக்கும், எது அந்தக் குழந்தை வாழும் பகுதிக்கே உரித்தான சிறப்பு உணவு என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைப்பது நலம்.

குழந்தைகளுக்கு இதைப் புரியவைப்பது எப்படி என்று தடுமாறுகிறீர்களா? அது மிகவும் சுலபம். எந்த உணவு உள்ளூரில் விளைவிக்கப்படுகிறதோ, அந்த உணவு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டதாக இருக்காது, எந்த உணவு ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறதோ, அதுவே சிறந்த உணவு. அது மட்டுமல்ல; உடலுக்கு வலு சேர்ப்பதாகவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் விளைவிக்கப்பட்டதாகவும் அந்த உணவு இருத்தல் வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தைகள் சுற்றிலும் நடப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். அந்த வகையில் வீட்டில் பெரியோர் என்ன மாதிரி சாப்பிடுகிறார்கள் என்பதையும் கவனிப்பார்கள். ஆரோக்கியமான

உணவுப் பழக்கவழக்கம் ஆயுள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியது. எனவே,

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் அளவுக்கு உங்கள் உணவுப் பழக்கவழக்கம் அமையட்டும்.

2 முதல் 5 வயது குழந்தைகளுக்கான டாப் 3 உணவு வகைகள்:

1. வெல்லம், நெய், ரொட்டி2 முதல் 5 வயதுதான் மேற்கூறிய உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு சிறந்த காலகட்டமாகும். வீட்டில் தயாரிக்கப்படும் கோதுமை அல்லது தினை ரொட்டியைச் சிறிய துண்டுகளாக்கிக் குழந்தைக்குக் கொடுங்கள்.

சிறு கைகளில் ஒவ்வொன்றாக எடுத்து வெல்லத்தையும் நெய்யையும் தொட்டு குழந்தை சாப்பிடுமேயானால் உன்னதமான போஷாக்கு உடலுக்குக் கிடைக்கும். கோதுமை, தினை இயற்கையாக விளைவிக்கப்படுவதால் அவற்றின் தரம் பற்றி அதிகம் மெனக்கிட அவசியமில்லை. ஆனால், சந்தையில் நீங்கள் வாங்கும் நெய்யும், வெல்லமும் தரமானதாக இருப்பதை நீங்கள்தான் உறுதிசெய்ய வேண்டும். வெல்லம் குழந்தையின் உடலுக்கு இரும்புச் சத்தையும் ஃபோலேட் என்ற தாதுப்பொருளையும் சேர்க்கும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க இந்த உணவு மிகவும் சிறந்த பரிந்துரை.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு. அப்போது, நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை எல்லோரும் பரிந்துரைப்பார்கள். நார்ச்சத்து நிறைந்த உணவை நிச்சயமாகக் கொடுக்கலாம். ஆனால், உணவை முற்றிலுமாக நார்ச்சத்து உணவாக மாற்றிப் புகட்டுவது குழந்தைக்குத் தேவையான மினரல்கள் கிடைக்காமல் செய்துவிடும். குழந்தைகள் ரத்த சோகைக்கு ஆளாகலாம். ஆதலால், இந்தப் பருவத்திற்கான உணவை கவனமாகக் கையாள வேண்டும்.

நான் பரிந்துரைத்துள்ள வெல்லம், நெய், ரொட்டியே மலச்சிக்கலைத் தடுப்பதில் சிறப்பாகச் செயலாற்றும். இவற்றில் குழந்தைக்குத் தேவையான நார்ச்சத்துடன் மற்ற வைட்டமின், புரதம், மினரல் ஆகியன நிறைந்திருக்கின்றன.

எப்படிப் புகட்டுவது?

ஆரம்ப நாட்களில் குழந்தைகள் தாமாகவே தட்டிலிருந்து எடுத்து சாப்பிட மாட்டார்கள். அப்போது தாய்மார்கள்தான் உணவைப் புகட்ட வேண்டும். ஒருதட்டில் ரொட்டியை வைத்து அதைச் சிறு துண்டுகளாக்கி, பின்னர் நெய்யையும் வெல்லத்தையும் சரியான பதத்தில் பிசைந்து ரொட்டித்துண்டை இந்தக் கலவையில் தோய்த்து ஊட்ட வேண்டும்.

சில நாட்களுக்குப் பின்னர், குழந்தை தானாகவே ரொட்டித் துண்டுகளை நீங்கள் ஊட்டியதைப் போல் சாப்பிட விரும்பும். அப்போது தட்டில் உணவை வைத்து அவர்களாகவே சாப்பிட ஊக்குவிக்கவும். ஆனால், வேகமாகச் சாப்பிடுமாறு அவசரப்படுத்தாதீர்கள். குழந்தைகள் தானாகச் சாப்பிட்டுப் பழகுவதன் மூலம், நியூரோ மஸ்குலர் கோஆர்டினேஷன் எனப்படும் நரம்பு மண்டலத்துக்கும் தசைகளுக்குமான இடையேயான ஒருங்கிணைப்பு தூண்டப்படும்.

2. மேட்குட் பொடி சிறந்தது...

நம்மூர் பருப்புப் பொடிக்கு நிகரானது இந்த மேட்குட் (Metkut). பலவகைப் பருப்புகளுடன், மஞ்சள் உள்ளிட்ட அஞ்சறைப் பெட்டியிலுள்ள பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் பொடி இது. அரிசி சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து கொஞ்சம் நெய் சேர்த்துக் கைகளால் மசித்துக் குழந்தைகளுக்கு ஊட்டலாம். பொதுவாகப் பருப்பு சாதத்தை குழந்தைகள் வெறுத்து ஒதுக்குவது ஏன் என்பது குறித்து கடந்த சில அத்தியாயங்களுக்கு முன்னர் பேசியிருந்தோம். பருப்பு வகைகளில் உள்ள ஆன்டி  நியூட்ரியன்ட்ஸ் புரதச்சத்து கிரகிக்கப்படுவதை மட்டுப்படுத்தும் என்பதால், பருப்பு வகைகளைச் சமைப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி சமைக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

பருப்புப் பொடி தயாரிக்கும்போது பல்வேறு பருப்புகளையும் அளந்து சேர்ப்பதால், இந்த ஆன்டி நியூட்ரியன்ட்ஸ் அடிபட்டுப் போகும். அதுதான் பாட்டியின் சமையல் மந்திரம். தயங்காமல் கற்றுக்கொள்ளுங்கள்.

மேட்குட் செய்முறை:

2 குவளை கடலைப் பருப்பு

1 குவளை பச்சரிசி

1/2 குவளை அவல்

2 தேக்கரண்டி மல்லி விதை

1 தேக்கரண்டி ஜீரகம்

கொஞ்சம் சிவப்பு மிளகாய்

கட்டிப் பெருங்காயம் தேவையான அளவு

இவற்றையெல்லாம் வாணலியில் வறுத்தெடுத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். இதுதான் மேட்குட் செய்முறை. இதைக் கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்யும் மேட்குட் பொடி தேவையான அளவும் சேர்த்துப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டிவிடலாம். குழந்தை வளர வளர தட்டில் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து அவர்களே அதைக் கையால் எடுத்துச் சாப்பிட பழக்கலாம். வலது கையில் சாப்பிட ஊக்குகுவிப்பதுடன், உணவை மென்று உண்ணவும் சொல்லிக் கொடுங்கள். வாயில் இருக்கும் உணவு முழுவதுமாக மென்று உள்ளே சென்ற பின்னர் அடுத்த பிடி சாதத்தை எடுத்து உண்ணச் சொல்லுங்கள். இது வாழ்நாளுக்குமான பாடம். அலுவலகம் சென்ற பின்னர் பலரும் உணவை விழுங்கும் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள். சிறு வயதிலிருந்தே உணவை மென்று  உண்ணும் பழக்கத்தை ஊக்குவிப்பது வாழ்நாள் முழுவதும் நன்மை பயக்கும்.

3. பருவத்துக்கு ஏற்ற பழவகைகள்...

மூன்றாவதாக, குழந்தைகளுக்கு அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழவகைகளை அறிமுகப்படுத்துவது ஆரோக்கியத்துக்கு உகந்தது. வாழை, மாம்பழம், சப்போட்டா, பழாப்பழம், கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள், பேரிக்கா என அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களை விட்டுவிடாதீர்கள். ஆனால், அவை உள்ளூரில் விளைந்ததாக இருக்கட்டும். இவை தவிர நாவல் பழம், சீத்தாப்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடப் பழக்குங்கள்.

நீங்கள் வாழும் பகுதியை ஒட்டியிருக்கும் வனப் பகுதியில் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு மட்டும் விளையும் பழவகைகள் உண்டு. அவற்றைப் பழங்குடிகள் வாயிலாகப் பெற்று உண்ணுங்கள். குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்துங்கள். இப்படியான வித்தியாசமான பழங்களில் ஃப்ளேவனாய்ட், ஆந்தோசையனின், ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ் என ஊட்டச்சத்து நிறைவாக இருக்கும். மேலும், பழங்குடி சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறு உதவி செய்தது போலவும் இருக்கும். குழந்தைகள் தங்கள் பகுதியில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக உணவுப்பொருட்களின் மகிமையை அறிந்து கொள்வார்கள்.  இது ஒரு வகையில் உணவுக் கலாச்சாரம் சார்ந்த பாடமாகும்.

எப்படிப் புகட்டுவது?

2 முதல் 5 வயதிலான குழந்தைகளுக்கு, பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள். கொட்டைகளை நீக்கிக் கொடுங்கள். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு கொட்டைகளை நீக்கிவிட்டு சாப்பிடுவது எப்படி என்பதைச் சொல்லிக்கொடுங்கள். அவர்களே அதை ருசித்துச் சாப்பிடுவார்கள். பழங்களை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிட்டு  சாப்பிடவும் சொல்லித்தாருங்கள். முடிந்தால் குழந்தைகளைப் பழத்தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் ஒரு மரத்தில் அல்லது கொடியில் எப்படிப் பழங்கள் காய்க்கின்றன, எப்படி அங்கேயே பழுத்து மனிதருக்கும், பறவைகளுக்கும், புழுக்களுக்கும் உணவாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு உணவு மீது பெருமித உணர்வு ஏற்படும். அதன் பின்னால் இருக்கும் உழைப்புத் தெரியவரும்போது அவற்றை வீணடிக்க மாட்டார்கள். குழந்தைகள் போதனைகளைக் கேட்பதைவிட பார்த்து உணர்ந்து கற்பதையே அதிகம் விரும்புவார்கள். அவர்கள் ஏதோ ஒன்றை நின்று ஆற அமர வெறித்துப்பார்க்கவும் அவர்களுக்கு நேரம் கொடுங்கள். அவர்களுக்கும் அப்படி உற்றுநோக்கிக்கொண்டிருக்க ஏதோ காரணமிருக்கும்.

உணவைத் திணிக்காதீர்கள்

ஒரு முறை திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். உணவு பரிமாறும் இடத்தில் என்னருகே ஒரு இளம் தாய் அவரது 3 வயது குழந்தையுடன் வந்தமர்ந்தார். குழந்தையின் கையில் ஐபேட் எடுத்துக் கொடுத்தார். பின்னர், இலையில் பரிமாறப்பட்ட அனைத்தையும் தானும் உண்டதோடு குழந்தைக்கும் புகட்டினார். குழந்தையும் மறுப்பேதும் சொல்லாமல்  ஐபேட் பார்த்துக் கொண்டே விழுங்கியது. அந்தப் பெண் சாப்பிட்டு முடித்ததும் ஐபேடை வாங்கிக்கொண்டு எழுந்தார். அவ்வளவுதான். அந்தக் குழந்தை வாந்தி எடுக்கத் தொடங்கியது. கடைசியாக கொடுக்கப்பட்ட தயிர் சாதம் வரை எல்லாம்  வெளியேறியது. அங்கிருந்தவர்கள் முகம் சுளிக்க, தர்ம சங்கடமான சூழலில் அப்பெண் அங்கிருந்து வெளியேறினார்.

குழந்தைகளுக்கு உணவைத் திணிக்காதீர்கள். ஆரோக்கியமாக சாப்பிடுவது என்றால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது  என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிடுவதே ஆரோக்கியம் காக்கும் உணவுப் பழக்கம்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே பெற்றோரின் தலையாய கடமை. 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு உணவுப் பழக்கவழக்கத்தை அறிமுகப்படுத்துவது ஒழுக்கத்தை கற்பித்தலுக்குச் சமம். இந்த உலகில் மனிதன் தன்னுடையது என மார் தட்டி  உரிமை கொண்டாடக்கூடிய  ஒரே சொத்து என நான் கருதுவது நேரத்தை மட்டும். நேரம் உங்கள் கைகளில். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதும் உங்கள் கைகளில்தான்  இருக்கிறது. நேரத்தை குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணத் திட்டமிட்டுப் பயன்படுத்துதல் பெற்றோரின் கடமை.

(வளர்வோம்… வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in