காதல் ஸ்கொயர் - 11

காதல் ஸ்கொயர் - 11

திரும்பிய வேகத்தில் கௌதமின் மேல் மோதிய நந்தினி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தாள். “ஏய்…. நந்தினி…” என்று கௌதம் வேகமாக நடந்தான். அவளுக்கு முன்னால் சென்று, வழியை மறித்தாற்போல் நின்றான். நந்தினி, “உனக்கு இப்ப என்ன வேணும்?” என்றாள் முறைப்பாக.

“நீ என்கிட்ட பேசணும்.”

“என்ன பேசணும்?” என்ற நந்தினி ஸ்வெட்டர் போடவில்லை. திடீரென்று குளிர் அதிகரிக்க, நந்தினி கையை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“எது வேணும்னாலும் பேசு. இன்னைக்கி தேதி 12. நாளைக்கி காலைல சூரியன் கிழக்குல உதிக்கும். இந்தியாவோட தலைநகரம் டெல்லி… ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு எது வேணும்னாலும் பேசு. ஆனா பேசு.”

“உனக்குத்தான் பேச, ஆடல்லாம் நிறைய பேரு இருக்காங்களே… போய் கன்யாகிட்ட பேசு”

என்று கோபத்தில் முகம் சிவக்க கூறிய நந்தினியை ரசித்தபடி, “கன்யாவா? யாரது?” என்றான்.

“நடிக்காத.”

“சத்தியமா தெரியாது. கன்யான்னா லெஃப்ட்டு கன்னத்துல லைட்டா இங்க்கு தெளிச்ச மாதிரி மச்சத்தோட, கழுத்துல ஃபிஷ் டாட்டூ வரைஞ்சுகிட்டு, தலைமுடியால பாதி காத மூடிட்டு, ரைட் ஹேண்ட்ல மஞ்ச கலர் பேண்ட் கட்டிட்டு வருமே… அதானே… சத்தியமா அந்தப் பொண்ண நான் பாத்ததே இல்ல நந்தினி” என்றான் கௌதம் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு. சட்டென்று நந்தினிக்கு சிரிப்பு வர… அவள் வேகமாக வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கிக்கொண்டு பக்கத்து கல்பெஞ்சில் உட்கார்ந்தாள்.

‘பாப்பா இளகிடுச்சு’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட கௌதம், நந்தினியின் அருகில் உட்கார்ந்து, “ஏய்… திடீர்னு அவங்களே வந்து டான்ஸ் ஆடுனா நான் என்ன பண்றது?” என்றதற்கு அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் தனது மொபலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தாள். தொடர்ந்து கௌதம், “ஸாரி நந்தினி. நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் ஸாரி” என்றபோது அவள் குளிர் தாங்க முடியாமல், தோளைக் கைகளால் இறுக்கிக்கொண்டாள். பற்கள் வெடவென்று அடித்துக்கொண்டன.

“ஏய்… பயங்கரமா குளிருது. ஸ்வெட்டர் போடலையா?” என்றபடி வேகமாகத் தனது ஜெர்கினைக் கழற்றி அவளிடம் நீட்டி “போட்டுக்கோ” என்றான். முகத்தைத் திருப்பிக்கொண்ட நந்தினியின் உடல் குளிரில் நடுங்கியது.

“ஏய்… பேசலன்னா பரவால்ல… ஜெர்கின போட்டுக்கோ” என்று அவள் கையில் ஜெர்கினைத் திணித்தான். குளிர் மேலும் அதிகரிக்க, தாங்க முடியாமல் நந்தினி ஜெர்கினை மாட்டிக்கொண்டாள். கௌதம், “குட் கேர்ள்” என்றபோது ஃபுட்கோர்ட்டில் டீஜே நைட் முடிந்து, அனைவரும் வெளியே வந்தனர். அதைப் பார்த்த நந்தினி எழுந்து வேகமாகத் தனது பிளாக்கை நோக்கி நடந்தாள். “ஏய்… நந்தினி…” என்று இரண்டடி நடந்த கௌதம், அருண் வெளியே வருவதைப் பார்த்து நின்றுவிட்டான்.

கௌதம், அருண் அருகில் சென்றபோது அவன் கௌதமைப் பொருட்படுத்தாமல், பெங்காலி பெண்ணான அபர்ணாவிடம், “ஐ லைக் ரவீந்திர நாத் தாகூர், ஐ லைக் மம்தா பானர்ஜி… புத்ததேவ் பட்டாச்சார்யா… சத்யஜித் ரே… கொங்கனா சென்…” என்று சும்மா வங்காளப் பெயர்களாக அடித்துவிட்டுக்கொண்டு வந்தான். தொடர்ந்து அபர்ணாவிடம், “ஐ ஆல்ஸோ லைக் சூரத் சிட்டி இன் பெங்கால்…” என்றான். உடனே அபர்ணா கடுப்புடன், “சூரத் இஸ் நாட் இன் பெங்கால்” என்று கூற… அருண் பரிதாபமாக விழித்தான். தொடர்ந்து அபர்ணா, “வாட் டு யூ வான்ட்?” என்றாள் விறைப்பாக. அருண் தடுமாறிப்போய், “நத்திங்… நத்திங்…” என்று கூற அவள் விறுவிறுவென்று நடந்தாள். அபர்ணாவைத் தொடர்வதை நிறுத்திய அருண், “சுமாராத்தான் இருக்கா... இதுக்கே இந்த ஃபிலிம் காட்டுறா. சூரத் எங்கடா இருக்கு?” என்றான் கௌதமிடம்.

கௌதம் தூரத்தில் செல்லும் நந்தினியைப் பார்த்தபடி, “சூரத்…. தஞ்சாவூருக்கும் அரியலூருக்கும் நடுவுல திருமானூர் பக்கத்துல இருக்கு” என்று கூற, அவனை முறைத்த அருண், “உனக்கு இனிமே அமெரிக்காகூட தஞ்சாவூர் பக்கத்துலதான்டா இருக்கும். என்ன… சமாதானமாயிட்டாளா?”

“பழம் கனிந்தது. பாலில் விழுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் கலைஞர்

போல் கரகர குரலில்.

“எப்ப விழும்?”

“நாளைக்கி” என்றான் கௌதம்.

அறைக்கு வந்து கௌதம் தொப்பென்று கட்டிலில் விழுந்தபோது அவன் மொபைல் போன் அடித்தது. “நந்தினியாதான் இருக்கும்” என்று போனை எடுத்துப் பார்த்த கௌதமின் முகம் மாறி, “பூஜா…” என்றான் அருணிடம்.

“ஹ்ம்… நமக்கு ஒண்ணுக்கே வழியில்ல. நீ ஒரே டைம்ல ரெண்டு ஸ்க்ரீன்ல சினிமா பாத்துட்டிருக்க” என்றான். “அசிங்கமா பேசாதடா” என்ற கௌதம் போனை ஆன் செய்தான். “ஹாய் கௌதம்…” என்ற பூஜாவின் குரலில் உற்சாகம்.

“ஹாய் பூஜா… ஹௌ ஆர் யூ?”

“ஃபைன். வாட்ஸ்-அப்ல மெசேஜ் அனுப்பினா ஒரு ஸ்மைலிகூட அனுப்ப மாட்டேங்கிற.”

“ஸாரி… நான் வாட்ஸ்-அப்ல ரொம்ப ஆக்டிவா இருக்கிறதுல்ல. அதுவுமில்லாம இங்க தினம் க்ளாஸஸ், அஸைன்மென்ட்… அது இதுன்னு பிஸி…”

“அப்ப ஃபோன வச்சிடட்டுமா?”

“ஏய்… இப்ப ஃப்ரீதான். சொல்லு”

“இன்னைக்கி ஓபி டே. மஃப்ஸல் ஜிஹெச்ன்னா பெருசா கும்பல் இருக்காது. இங்க சென்னைல… ஓபில ஜனங்க வந்து குவிஞ்சுகிட்டேயிருப்பாங்க. அப்புறம் இன்னைக்கி நைட் ட்யூட்டி வேற. ஒரே திகிலா இருந்துச்சு. அதான் ரிலாக்ஸ் பண்ணலாம்னு உனக்கு போன் பண்ணேன்.”

“என்ன திகில்?”

“நைட் ட்யூட்டின்னா சீனியர் டாக்டர்ஸ் இருக்க மாட்டாங்க. திடீர்னு எதாச்சும் ஹார்ட் அட்டாக், ஆக்ஸிடென்ட் கேஸ்னு வந்துருச்சுன்னா ஒழுங்கா ட்ரீட்மென்ட் கொடுக்கணுமேன்னு பயமா இருக்கும். அதான் இன்னைக்கி ராத்திரி சென்னைல, ஒருத்தருக்கும் ஒரு ஆபத்தும் வரக் கூடாதுன்னு பிரே பண்ணிட்டிருக்கேன்” என்று பூஜா கூற, கௌதம் சிரித்தான்.

“உனக்கு அங்க எப்படிப் போகுது? உனக்கென்னப்பா... திரும்புற பக்கமெல்லாம் அழகழகா பொண்ணுங்க.”

“உன்ன சுத்தி?”

“என்னைச் சுத்தி வயசான டாக்டர்ங்க, நர்ஸ்ங்க, பேஷன்ட்டுங்க, ஸலைன், பினாயில் வாசனை, பேஷன்ட்டுங்க வலி தாங்காம கத்துற சத்தம், குழந்தைங்க அழுகை, மரணம், இட்ஸ் ஹாரிபிள்.”

“நீ மரணத்தை கிட்ட பாத்துருக்கியா?”

“ம்… நேத்துகூட ஒரு கேஸ். ஒரு வயசான அம்மா. மல்டிபிள் ஆர்கன் ஃபெயிலியர். 24 மணி நேரத்துக்குள்ள இறந்துடுவாங்க. அப்ப அவங்க மகன் வந்து, ‘அடுத்த வாரம் என் தங்கச்சிக்கு வளைகாப்பு இருக்கு. அதுக்குள்ள எங்கம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா’ன்னு கேக்குறான். எனக்கு ஓன்னு அழணும் போல இருந்துச்சு.”

“மை காட்… அப்புறம்?”

“நேத்து நைட் இறந்துட்டாங்க.”

“ச்… ச்… ச்…”

“எல்லாம் கொஞ்ச நாள்ல பழக்கமாயிடும். சரி… நம்ம கதைய விடு. உனக்கு ட்ரெய்னிங் முடியற வரைக்கும் சென்னைக்கு வர்ற ஐடியாவே இல்லையா?”

“வரேன். அடுத்த வாரம் சனி, ஞாயிறு வரேன்.”

“அப்படியா?” என்று உற்சாகமாகக் கேட்ட பூஜா, “ஐயம் வெயிட்டிங் ஃபார் யூ. ஆம்புலன்ஸ் சத்தம் கேக்குது. ஏதாச்சும் எமர்ஜென்ஸியா இருக்கும். பை…” என்று போனை வைத்தாள். ஆம்புலன்ஸ் சத்தம் அருகில் கேட்க,எழுந்தாள். ஓரடி நடந்தவள் சட்டென்று நின்று, மொபைலில் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தாள். கௌதம் நம்பரை செலக்ட் செய்து, ப்ரொஃபைல் பிக்சரில் இருந்த கௌதமின் புகைப்படத்தைப் பெரிதாக்கி, புன்னகையுடன் கௌதமின் முகத்தைப் பார்த்தாள்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in