கண்ணான கண்ணே..! - 12: பசும்பாலின் மகத்துவம் அறிவோம்...

கண்ணான கண்ணே..! - 12: பசும்பாலின் மகத்துவம் அறிவோம்...

கடந்த சில அத்தியாயங்களில், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதில் பெற்றோருக்கு இருக்கும் உணவுக் குழப்பம் தொடங்கி, எது சரியான உணவு, எப்படி சரியாக சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் அவசியம், உடற்பயிற்சியை ஏன் இயல்பாக அவர்களுக்குப் புகட்ட வேண்டும், செல்போன், டிவி போன்ற மின்னணு சாதனங்கள் உணவுப் பழக்கங்களில் ஏற்படுத்தும் கேடு ஆகியன குறித்து விரிவாகப் பார்த்தோம். இந்த அத்தியாயம் தொடங்கி இன்னும் சில பாகங்கள் வரை குழந்தைகளின் வயதுக்கு ஏற்றாற் போன்ற உணவுப் பழக்கவழக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசுவோம்.

முக்கியமான முதல் 1,000 நாட்கள்...

ஒரு பெண் தன் கருவைச் சுமக்கத் தொடங்கிய நாள் முதல், குழந்தை பிறந்து அது தன் இரண்டாவது வயதில் அடி எடுத்து வைப்பது வரையிலான முதல் 1,000 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அந்த  நாட்களில் குழந்தைக்கான பராமரிப்பு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

ஏனெனில், இந்தக் காலகட்டத்தில்தான் மூளை வளர்ச்சியடைகிறது, ஊட்டச்சத்துக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது, ஆரோக்கியமான எதிர்காலம் வித்திடப்படுகிறது. ஒருவேளை கருவாக உருவான நாள் முதல் 2 வயது வரையில் ஒரு குழந்தைக்குப் போதிய போஷாக்கு கிடைக்காமல் போகுமாயின் அந்தக் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதுடன், தலைமுறைகளுக்கும் நோய்கள் கடத்தப்படும் என்பது வேதனையான உண்மை. உங்கள் குழந்தையின் வாழ்நாளுக்குமான ஆரோக்கியத்தை உறுதிசெய்வதில் இந்த 1,000 நாட்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. இந்த நாட்களில் குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது நாட்டின் ஜிடிபியை 12% வரை அதிகரிக்க உதவும். எப்படி என்கிறீர்களா? அரசாங்கம் மக்களின் சுகாதாரத்துக்காகச் செலவு செய்யும் தொகை குறையும், அந்தத் தொகையைக் கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடாக மடைமாற்ற இயலும். கல்வியறிவு மூலம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். பொருளாதாரம் ஏறுமுகத்தில் செல்லும்.

ஆனால், இந்திய குழந்தைகள் விநோதமான ஒரு அடைப்புக்குறிக்குள் உள்ளனர். இங்குதான் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமான குழந்தைகளும் உள்ளனர், இங்குதான் உலகிலேயே இரண்டாவது பெரிய அளவிளான உடற்பருமனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் உள்ளனர். முரண்கள் நிறைந்த சவால் இது. எப்போது பேபி ஃபுட்ஸ் எனப்படும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களின் தொழிற்சாலைகள் அதிகரிக் கின்றனவோ, அப்போது இந்தச் சவால் இன்னும் ஆழமாக, அசைக்க முடியாத அளவுக்கு வேரூன்றுகிறது என்றே அர்த்தம்.

தாய்ப்பாலில் தொடங்கட்டும் ஆரோக்கியம்...

குழந்தைகளுக்கான ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் முதல் படிநிலை தாய்ப்பால் புகட்டுவது. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கும் அவசியமில்லை. தாய்ப்பாலே போதுமானது. தாய்ப்பாலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெஃப் (UNICEF) போன்ற அமைப்புகள் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தைப் பட்டியலிட்டுள்ளன.

 குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்டிவிட  வேண்டும்.

 முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவுமே கொடுக்கக் கூடாது. தண்ணீர்கூட அவசியமில்லை.

 குழந்தை எப்போதெல்லாம் பால் வேண்டி அழுகிறதோ, அப்போதெல்லாம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும். இரவு, பகல் என கால நேரக் கணக்கு கிடையாது.

 தாய்ப்பாலை பாட்டிலில் நிரப்பிக் குழந்தைக்குக் கொடுப்பதோ அல்லது காம்பில் வேறு  உபகரணங்களை மாட்டி அதன் வழியாகப் புகட்டுவதோ கூடாது.

முதல் 6 மாதங்களுக்குக் குழந்தைக்குத் தேவையான அத்தனை நுண்ணூட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் முழுமையாகக் கிடைத்துவிடும். அடுத்த 6 மாதங்களில் குழந்தைக்குத் தேவையான பாதி அளவிலான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் கிடைக்கும். அதன் பின்னர் 2 வயது வரை கால்வாசி ஊட்டச்சத்து தாய்ப்பால் மூலம் கிடைத்துவிடும்.

குழந்தைக்கு மட்டுமல்ல; பாலூட்டும் அன்னைக்கும் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. இரண்டு  குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளியை இயற்கையாக அதிகரிக்க இயலும். எதிர்காலத்தில் கர்ப்பப்பை  மற்றும்  மார்பகப்புற்றுநோய்க்கான  சாத்தியக்

கூறு குறையும். தாய்ப்பால் புகட்டுவதால், குழந்தையின் உணவுக்கென்று தனிச் செலவு தேவையில்லை.

ஆதலால், தாய்ப்பாலிலிருந்து ஆரோக்கிய உணவைத் தொடங்குவோம்.

பசும்பாலின் மகத்துவம் அறிவோம்...

ஒருவேளை குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உடனே கடைகளில் கிடைக்கும் பால் பவுடரை நாடாதீர்கள். நாட்டு மாட்டின் பாலைக் குழந்தைக்குக் கொடுக்கலாம். நாட்டு மாட்டின் பால் எளிதில் செரிமானமாகக் கூடியது. தவிர அதில் குடலுக்கு உகந்த பாக்டீரியாக்கள் உள்ளன. தேவையான தாதுக்களும், வைட்டமின் சத்துகளும் உள்ளன. புரதச்சத்தும் உண்டு. ஆயினும், மாட்டுப் பாலைக் குழந்தைக்குப் புகட்டுவதற்கு முன்னர் அதில் தண்ணீர் கலக்க வேண்டும். அத்துடன் வாய்விலங்கம் என்ற மூலிகையைச் சேர்க்கலாம். நம் வீட்டுப் பாட்டியிடம் கேட்டால் அதன் அளவைச் சொல்வார். இது சில குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத்தொல்லையைச் சரி செய்யும்.

இந்தியாவில்தான் இதுபோன்ற மூலிகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால், நம் துரதிர்ஷ்டம், பாட்டி சொல்வதைவிட கூகுளும் இன்ஸ்டாகிராமும் சொல்வதையும், குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்வதையுமே நாம் அதிகம் நம்புகிறோம். கடைகளில் கிடைக்கும் பால் பவுடர்களில் சர்க்கரையின் அளவு அதிகம், சத்துகளின் விகிதம் குறைவு, மேலும், குழந்தையின் குடலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் கிடைப்பதில்லை. தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எந்த உணவானாலும் அது குழந்தைக்குக் கேடு விளைவிப்பதே.

நாட்டுப்பாலின் மகத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் ஏன் நாட்டு மாடுகளை வீட்டிலேயே வளர்க்கக் கூடாது. நகைச்சுவையாக அல்ல; உண்மையாகக் கேட்கிறேன். 2 டயர், 3 டயர் எனப்படும் 2-ம் தர 3-ம் தர நகரங்களில் மாடுகளை வளர்க்க அனுமதி உள்ளதே. ஒரு நாட்டு மாட்டை வாங்கி நாமே வளர்க்கலாம். ஆனால், மாட்டைப் பராமரிக்க ஒரு நல்ல நபரைப் பணியமர்த்த வேண்டும். அவருக்குச் சம்பளம் தருவதில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். காரணம், மாட்டைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பால் தொழிற்சாலைகளுக்காகப் பராமரிக்கப்படும் மாடுகளைப் போல் அல்ல நாட்டு மாடுகளின் பராமரிப்பு. பால் பீய்ச்சுவதேகூட ஒரு கலை. நாட்டு மாடுகளின் இரண்டு காம்புகளில் மட்டுமே மாட்டுக்காரர் பால் பீய்ச்சுவார். கன்றுக்குட்டி பால் அருந்திய பின்னரே பால் பீய்ச்சப்படும். நாட்டு மாட்டை வீட்டில் வளர்ப்பது சொகுசு காரை வைத்திருப்பதைவிட பெருமித அடையாளம்  என்றே கூறுவேன். அதுவும் புல்வெளியில் மேய்ச்சலுக்கு விடப்படும்  அளவுக்கு வளமான இடத்தில் நாட்டு மாட்டை வளர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.

பசும் பாலை எப்படிப் புகட்டுவது?

தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைக்குப் பசுமாட்டுப் பால் புகட்டுவதே சிறந்தது என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆனால், அந்தப் பாலை பிளாஸ்டிக் பாட்டிலில் தயவு செய்து புகட்டாதீர்கள். சங்கு, பாலேடு என்ற நாம் வழிவழியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அல்லவா, அதிலேயே பாலை புகட்டுங்கள். வெள்ளிச்

சங்கு பரிசளிக்கும் தாய்மாமன் இந்தியச் சமூகத்தில் கொண்டாடப்படுகிறார். வெள்ளி, கிருமிகளை அழிக்கும்தன்மை கொண்டது.  சங்கின் மகத்துவமே சிறப்பானது.

அதில் பாலைக் கொஞ்சமாக ஊற்றி  சிறிய வாய்  வழியாகக் கொஞ்சம்  கொஞ்சமாகக்  குழந்தைக்குப்  புகட்ட வேண்டும்.

அந்தக் கலையையும் உங்கள் பாட்டியிடம் கற்றுக்கொள்ளுங்கள். பாலேடுகளுக்கு ஆன்லைன் விற்பனை தளங்களில் மவுசு இல்லை, கூகுள் பரிந்துரைக்கவில்லை என்பதாலேயே நாம் அதைவிடுத்து ஹைகிரேடு பிளாஸ்டிக் ஃபீடிங் பாட்டில் என்று தேடித்தேடிப் பார்த்து

வாங்குகிறோம். பழமையை மறவாமல் வாழ்வோமே. வெள்ளிச் சங்கில் மட்டுமேதான் பால் புகட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. வெள்ளி இல்லாவிட்டால் வெண்கலம் போன்ற உலோகங்களிலான சங்கைக் கூடபயன்படுத்தலாம்.

அரிசிக் கஞ்சி அற்புதமானது...

அரிசிக் கஞ்சி என்பது வெறும் ஸ்டார்ச் என்றும், கலோரிகளே இல்லாத கூழ் என்றும் நினைத்துக்

கொண்டிருப்பவர்களுக்கு அதன் அற்புதத்தை விளக்க விரும்புகிறேன். அரிசி, மனிதன் தொன்றுதொட்டு புழங்கும் உணவு. காலம்காலமாக ஓர் உணவுப் பொருள் நம்முடன் பயணிக்கிறது என்றால், அது மகத்துவானது என்றே அர்த்தமே தவிர பழமையானது என்று அர்த்தமல்ல. திட உணவை ஆரம்பிக்கும்போது அரிசிக் கஞ்சியிலிருந்து ஆரம்பிக்கலாம். அரிசி எளிதில் செரிமானமாகக் கூடியது. அதில் ப்ரீபயாடிக் எனப்படும் நுண்ணுயிரிகள் உள்ளன. இவை குடலுக்கு ஆதரவான புரோ பயாடிக் நுண்ணுயிரிகளை வளர்க்க உதவியாக இருக்கும். ஒரு துளி பசும் நெய் சேர்த்து கஞ்சியைப் புகட்டலாம். அரிசிக் கஞ்சியில் குழந்தைக்குத் தேவையான புரதமும், அமினோ அமிலங்களும் நிறைவாக உள்ளன. அரிசிக் கஞ்சி உட்கொண்ட குழந்தை, வயிறு நிறைந்து நிம்மதியாக உறங்கும். முதலில் வெறும் அரிசிக் கஞ்சி என ஆரம்பித்து பின்னர் அதில் சிறிதளவு பருப்பு சேர்க்கலாம். சிலர் பருப்புத் தண்ணீரில் அரிசிக் கஞ்சி செய்வார்கள். அதையும் குழந்தை விருப்பமாக உண்ணும்.

மாதங்கள் அதிகரிக்க அரிசிக் கஞ்சிக்குப் பதிலாக கேழ்வரகுக் கஞ்சி கொடுக்கலாம். ஆனால், அதைத் தயாரிக்கும் பதம் மிகவும் முக்கியமானது. கெட்டியாகவும் இருக்கக் கூடாது;  தண்ணீர் பதத்திலும் இருக்கக் கூடாது. எளிதில் விளங்குமாறு சொல்ல வேண்டுமானால் பெயின்ட் என்னவொரு பதத்தில் இருக்குமோ அந்தப் பதத்தில் இருந்தால் சரியானதாக இருக்கும்.

பாலை பாலேட்டில் புகட்டினீர்கள் அல்லவா... அதேபோல் கஞ்சி வகையறாக்களை வெள்ளிக் குவளையிலோ அல்லது வேறு ஏதோஉலோகத்திலான குவளையிலோ ஊற்றி கரண்டியில் புகட்டுங்கள். பிளாஸ்டிக் பவுல் வேண்டாம்.

வாழைக்கு நிகரேது...

பால், கஞ்சி எனக் கொஞ்சம் கொஞ்சமாகக்  குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் உணவைச் சேர்த்துக்கொண்டே வாருங்கள். அந்த வரிசையில் மூன்றாவதாக இடம்பெறக்கூடியது வாழைப்பழம். மனிதனுக்கு ஏற்ற முதல்பழம். வாழைப்பழம் பல்வேறு வைட்டமின் சத்துகளையும் ஒன்றாக உள்ளடக்கியது. சுருக்கமாக அதை மல்டி வைட்டமின் சிரப் என்றுகூடஅழைக்கலாம். வாழைப்பழத்தையும்கூட குழந்தைக்கான ஒருவேளை உணவாகக் கொடுக்

கலாம். எல்லா நாளும் அல்ல, என்றாவது வீட்டிலிருந்து வெளியிடத்துக்குச் செல்கிறோம் குழந்தைக்கு வேறுஏதும் கொடுப்பதற்கு இல்லை என்றால், வாழைப்பழத்தைக் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது வாழை.

குழந்தைகளுக்கு பாலேட்டில் பால் புகட்டுவதுபோல் வாழைப்பழத்தைப் புகட்டுவதிலும் சில விதிகள் இருக்கின்றன. வாழைப்பழத்தை முழுதாகத் தோலை நீக்கிவிட்டுப் புகட்டாதீர்கள். குழந்தை சாப்பிடும் வேகத்துக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாகத் தோலை நீக்குங்கள். இதனால், வாழைப்பழம் ஆக்ஸிடைஸ் ஆகாமல் இருக்கும். இதுவும் ஒரு கைவண்ணம்தான். அப்புறம் இறக்குமதி வாழைப்பழங்கள் அல்லாமல் உள்ளூரில் கிடைக்கும் வாழைப்பழங்களையே குழந்தைகளுக்குப் புகட்டுங்கள்.

நாட்டு மாடுகளின் பால், வெள்ளிச் சங்குகளின் மகத்துவம், அரிசிக் கஞ்சி செய்யும் அற்புதம், வாழைப்பழத்தின் நன்மைகள் எல்லாவற்றையும் எந்த ஒரு தொழில் நிறுவனமும் தனக்கானது என உரிமை கோராததாலும், எந்த ஒரு பிரபலமும் அதற்கான விளம்பரத் தூதுவராக இல்லாததாலும் வழிவழியாக வந்த அறிவை நாம் புறந்தள்ளுகிறோம்.

முதல் ஆயிரம் நாட்களுக்கு குழந்தைகளுக்கு இத்தகைய உணவைக் கொடுத்து வந்தாலே போதும்; அவர்களுக்கான ஆரோக்கியத்தைப் பெற்றோராக நாம் சிறப்பாக உறுதிப்படுத்திவிட்டோம் என்று அர்த்தம்!

(வளர்வோம்... வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in