காதல் ஸ்கொயர் - 10

காதல் ஸ்கொயர் - 10

அறையில் அருண் ஸ்வெட்டர் மேல் டீசர்ட்டை அணிந்தபடி கௌதமிடம், “நீ கிளம்பல?” என்றான். “எங்க?” என்றான் கௌதம்.

“நீ மெயில் பாக்கலையா? இன்னைக்கி ஃபுட்கோர்ட் ஃபோர்ல டிஜே நைட். போயி எல்லா பேட்ச் பொண்ணுங்களையும் ஒருசேர பாத்துட்டு வந்தா இம்மையில் மறுமை அடைஞ்சுடலாம் வா.”

“நான் வரல. எனக்கு மனசே சரியில்ல. நீ சொன்னன்னு நந்தினிகிட்ட ‘உன் கதைல்லாம் நல்லால்ல’ன்னு சொன்னேன். ரெண்டு நாளா அவ பேசறதே இல்ல.”

“மச்சி… எப்பவும் காதல் பொங்கி வெடிக்கிறதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு சண்டை வரும். நீ வா. டிஜே நைட்டுக்கு நந்தினி வந்தாலும் வருவா” என்றவுடன் பிரகாசமான கௌதம் எழுந்தான்.

வெளியே மிதமான குளிர். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில், அணி அணியாகப் பயிற்சியாளர்கள் ஃபுட்கோர்ட் ஃபோரை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கௌதமின் மொபைலில் பீப் ஒலி கேட்க, எடுத்துப் பார்த்தான். பூஜா மெசேஜ் அனுப்பியிருந்தாள். பூஜா வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது ஏதாவது ஃபார்வேர்டு மெசேஜ்கள் அனுப்புவாள். கௌதம் கண்டுகொள்வதில்லை.

“பூஜா அப்பப்ப மெசேஜ் அனுப்பிக்கிட்டேயிருக்கா?”

“பூஜான்னா… அன்னைக்கி உங்கம்மாப்பாவோட வந்துச்சே... அந்த ஒல்லி ஃபிகரு?”

“ஆமாம்.”

“என்னடா... ஒரு பக்கம் இங்க நந்தினிக்கு நூல் விட்டுகிட்டே பூஜாவ ஆர்ஏசில போட்டு வச்சிருக்கியா?”

“சீ கருமம் பிடிச்சவனே… இது சும்மா ஃப்ரெண்ட்ஷிப்” என்றபோது அவர்கள் ஃபுட்கோர்ட்டினுள் நுழைந்திருந்தனர்.

டிஜே நைட்டுக்காக ஃபுட்கோர்ட் உணவகங்கள் அடைக்கப்பட்டு, பயிற்சியாளர்கள் கோர்ட்டின் மையப் பகுதியில் குழுமியிருந்தனர். மேலே எரிந்த டிஸ்கோ லைட்டுகளின் வெளிச்சத்தில், ஒரு இந்திப் பாட்டுக்கு இளைஞர்கள் குதூகலமாக ஆடிக்கொண்டிருந்தனர். அருண் சலிப்புடன், “மல்லு கேர்ள்ஸ்லாம் எங்கன்னு பாரு? பக்கத்துல ஒரு சேரப் போட்டு உக்காந்துகிட்டா நேரம் போறதே தெரியாது” என்றான்.

“அது எப்படிரா? மல்லு கேர்ள்ஸ கரெக்டா கண்டுபிடிக்கிற?”

“அது ரொம்ப சிம்பிள். அஞ்சடி தூரத்துல மல்லு கேர்ள்ஸ் இருந்தாங்கன்னா என் ஹார்ட்டு படபடன்னு துடிக்க ஆரம்பிச்சிடும். அவங்கள நெருங்க நெருங்க… ஹார்ட் பீட் குறையும். கிட்டக்க வந்துட்டா ஹார்ட் நார்மலாயிடும். இப்ப என் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்துல எங்கயோ இருக்காங்க” என்றபோது சற்று தள்ளி அந்தக் குளிரிலும் மிடியும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்த ஒரு பெண், “மோனே தினேஷா… நீ எவிடயானு?” என்றாள் சத்தமாக. எதிரேயிருந்த கும்பலிலிருந்து ஒருவன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கை ஆட்டினான். அருண், “நான் சொல்லல?” என்றபோதுதான் கௌதம் கவனித்தான். சற்று தள்ளி நந்தினி தனது மலையாளி ரூம் மேட்டான மஹிமாவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். கௌதம், “டேய்…. நந்தினி” என்றான் சத்தமாக.

“இதுக்குதான் வரச்சொன்னேன். நீ போய் நந்தினிகிட்ட பேசு. நான் நம்ம மலையாளப் பொண்ணுங்ககிட்ட பேசி, முல்லைப் பெரியாறு பிரச்சனைய சுமுகமா தீர்த்துட்டு வரேன்” என்ற அருண் அவர்கள் அருகில் உட்கார்ந்தான். கௌதம் தயக்கத்துடன் அங்கேயே நின்றான். அருண் வேண்டுமென்றே சத்தமாக ஒரு மலையாளப் பாடலைப் பாடினான்.

‘‘உயிரில் தொடும் தளிர்….

விரலாவணே நீ…’’

“என்னடா பாட்டு இது?”

“கும்பளங்கி நைட்ஸ்… கேட்ட

தில்ல?” என்ற அருண் மலையாளப் பெண்களைப் பார்த்தபடி, தொடர்ந்து, “ஆரும் காணா… ஹ்ருதய தாரமதில் உருகி…” என்று தொடர்ந்து பாட, மலையாளப் பெண்கள் அருணைப் பார்த்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டார்கள்.

கௌதம் நந்தினியை நோக்கிச் சென்றான். இவனைப் பார்த்தவுடன் நந்தினி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மஹிமா சிரிக்க, “ஹாய் மஹி” என்றான். “ஹாய்” என்று சிரித்த மஹி எழுந்துகொண்டாள். கௌதம், நந்தினியின் அருகில் உட்கார்ந்தபடி, “இன்னும் கோபமா இருக்கியா?” என்றான்.

“எனக்கென்ன கோபம்? அறிவாளிங்களுக்குத்தானே கோபம் வரும். நான் முட்டாள்தானே…” என்று எழுந்த நந்தினி “மஹி…” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். அப்போது அவனருகில் வந்த அருணின் முகம் மாறியிருந்தது.

“என்னடா?” என்றான் கௌதம்

“ஏதோ மலையாளத்துல பேசிக் கலாய்க்கிறாங்க மாப்ள. நம்ம தமிழ்ப் பசங்கள்லாம் எங்கடா?” என்று கேட்டபோது, “தமிழ் ஸாங்… தமிழ் ஸாங்…” என்று ஒரு மூலையிலிருந்து தமிழ்ப் பயிற்சியாளர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர். “அப்பாடா…” என்ற அருண், கௌதமிடம், “டேய்… ரவுடி பேபி போடச் சொல்லுவோம். நீயும் நானும் ஆடுவோமா?”

“இல்லடா… எனக்கு மூடேயில்ல.”

“நீ சூப்பரா ஆடுவடா. அதைப் பாத்து இம்ப்ரஸாயி நந்தினி பேசினாலும் பேசுவா” என்றவுடன் கௌதம் தலையை ஆட்டினான். அருண் பேன்ட் பாக்கெட்டிலிருந்து பென் டிரைவை எடுத்தபடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த டிஜேயிடம் சென்றான். பென் டிரைவைக் கொடுத்து ரவுடி பேபி பாடலைப் போடச் சொன்னான். மைக்கில் டிஜே, “சென்னை பாய்ஸ் வான்ட் டு டான்ஸ் ஃபார் ரவுடி பேபி…” என்ற கூற, தமிழ்ப் பயிற்சியாளர்கள் உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.

 ‘ஹேய்… என் கோலி சோடாவே…

என் கறிக்குழம்பே…’

என்று பாடல் ஆரம்பித்தது. இரண்டு ஸ்டெப்கள் போட்ட அருண் ஓரத்தில் நின்றிருந்த கௌதமைப் பிடித்து மையத்துக்கு இழுத்தான். தொடர்ந்து   ‘உன் குட்டி பப்பி நான்… டேக் மீ… டேக் மீ…’ என்று ஒலித்தபோது கௌதமும் ஆட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் பாட்டினுள் ஆழ்ந்து வெறித்தனமாக ஆட… மற்ற மொழிப் பயிற்சியாளர்களின் கேலிச்சத்தம் குறைந்து அனைவரும் ஆர்வத்துடன் கௌதமின் நடனத்தில் ஆழ்ந்தனர். ஆனால், கௌதம், நந்தினியையே பார்த்து ஆடினான். நந்தினி முதலில் அலட்சியமாகப் பார்க்க ஆரம்பித்தாள். பின்னர் பார்வையில் இருந்த அலட்சியம் ஆச்சரியமாக மாறி, பின்னர் கனிவாக மாற ஆரம்பித்தபோது வந்தது வினை. அருண் சற்றுத் தள்ளி நின்றிருந்த சென்னைப் பெண்களான எமிலியையும் கன்யாவையும் பார்த்துக் கையைக் காட்டினான். அந்த ரவுடி பேபிகள் ரிப்பனை நெற்றியில் சுற்றிக் கட்டியபடி ஆடுவதற்காக கௌதமின் அருகில் வந்தனர். பசங்கள் விசில் சத்தம் காதைப் பிளந்தது. சட்டென்று எமிலி, கௌதமின் கையைப் பிடிக்க, கௌதம் அவள் கையைப் பிடித்துச் சுழற்றியபடி நந்தினியைப் பார்த்தான். கனிவுக்கு மாறியிருந்த நந்தினியின் முகம் இப்போது கோபத்துக்கு மாறியிருந்தது.

கன்யா, “மை ஹார்மோன் பேலன்ஸ் டேமேஜ்” என்ற தமிழ்(?) வார்த்தைகளைப் பாடியபடி கௌதமை லேசாக அணைக்க, நந்தினியின் முகம் மாறியது. அவள் வேகமாக எழுந்து ஃபுட்கோர்ட்டை விட்டு வெளியேறுவதைப் பார்த்த கௌதம் பதற்றமானான். பாதியில் ஆட்டத்தை விட்டுவிட்டுச் செல்ல முடியாது. வேறு வழியின்றி பாடல் முடிவதும் ஆடி முடிக்க, செம கைதட்டல். பலரும் அவன் அருகில் நெருங்கி, “சூப்பர் டூட்…” “பின்னிட்டீங்க ப்ரோ…” என்று கையைக் குலுக்கினார்கள். கௌதம் செயற்கையான புன்னகையுடன் அவர்களை விலக்கிக்கொண்டு வேகமாக ஃபுட்கோர்ட்டை விட்டு வெளியே வந்தான்.

சுற்றிலும் பார்த்தான். சற்றுத் தள்ளியிருந்த கல்பெஞ்சில் நந்தினி அமர்ந்திருந்தாள். கௌதம் சத்தமின்றி அவளுக்குப் பின்பக்கமாகச் சென்றான். நந்தினி தலையை ஆட்டியபடி ஏதோ முணுமுணுப்பது காதில் கேட்டது. அவளுக்குப் பின்னால் ஏறத்தாழ உரசுவதுபோல் நின்றபடி கௌதம் அவள் முணுமுணுப்பதைக் கேட்டான். நந்தினி மெதுவாக, “நீ வேற பொம்பள கூட ஆடுனா, பயந்துபோய் பேசிடுவனா? யாருகிட்ட?” என்று கூறியபடி தலையை ஆட்ட, சட்டென்று கௌதம் மீது அவள் தலை மோத, திரும்பி கௌதமைப் பார்த்தாள் நந்தினி.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in