இணையச் சிறையின் பணயக் கைதிகள் 10: தொழில்நுட்பத்தால் தொலையும் மகிழ்ச்சி

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 10: தொழில்நுட்பத்தால் தொலையும் மகிழ்ச்சி

காலை நேர நடைப்பயிற்சியின்போது டிகிரி காபி ஒன்று குடிக்கலாம் என்று கடைக்குச் சென்றேன். என்னைத் தள்ளிக்கொண்டு அவசரமாகச் சென்றார் அந்த வாடகைக்கார் டிரைவர்.

“எங்க பாத்தாலும் எப்போ பாத்தாலும் போன்ல பேசிக்கிட்டு… ஒரே இம்சையாப் போச்சி, ஏம்மா ஒரு காபி போடுவியா எப்படி? என்னால ரொம்ப நேரம் நிக்கல்லாம் முடியாது” என்றபடியே கடுப்பாகக் கடைக்குள் நுழைந்தார். அவர் சொன்னது மாதிரியே கல்லாவில் நின்றுகொண்டிருந்த அந்த அம்மா கைபேசியில் யாருடனோ பிஸியாக இருந்தார். இதைக் கேட்டதும் அவருக்கு வந்ததே கோபம். “இப்பதானே வந்தீங்க! அதுக்குள்ளே என்ன அதிகாரம் வேண்டிக்கிடக்கு. என் போன் நான் பேசுவேன். நீங்க யாரு கேக்க? காபி கொடுக்க லேட் ஆனா மட்டும் கேளுங்க” என அந்த அம்மா எகிற, வந்தவர் பதிலுக்கு ஏதோ சொல்ல… இனி நாம் விஷயத்துக்கு வருவோம்.

காலையிலேயே அந்த டாக்ஸி டிரைவர் ஏன் அவ்வளவு எரிச்சல் அடைகிறார்? கைபேசிப் பேச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பாரோ?!

நானுமே எந்தக் கடைக்குப் போனாலும் அவர்கள் மொபைலில் பிஸியாக இருந்தால் எதுவும் கேட்க மாட்டேன். அது அவர்கள் கவனத்தில் ஏறுவதில்லை. ஏறவும் ஏறாது.

“ரெண்டு கிலோ கோதுமை மாவு குடுங்களேன்.”

கடைக்காரர் போனில் பேசிக்கொண்டே “என்ன கேட்டீங்க?” என்பார்.

“ரெண்டு கிலோ கோ…”

நாம் சொல்வதைக் கவனிக்காமல் போனில் “சரி ராசா நாளைக்குக் கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டு மீண்டும் நம்மிடம் திரும்பி, “ஸாரி என்ன கேட்டீங்க?” என்று வழிய மீண்டும் நாம் “ரெண்டு கிலோ கோதுமை மாவு” என்று முடிக்க அவரும் கட்டிக்கொடுப்பார். வீட்டுக்கு வந்து பாருங்கள். ரெண்டு கிலோ மைதா மாவுதான் கட்டிக்கொடுத்திருப்பார். பார்ப்பதற்கு சாதாரண நிகழ்வுபோல் தெரிந்தாலும் ஆழமான உளவியல் அடங்கியிருக்கும் விஷயம் இது.

கைபேசிகள் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவைதான். ஆனால், நம் உறவுகளுடனான நமது நேரத்தை அதிகம் விழுங்குவதால் நமக்கு மெல்ல மெல்ல நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளைச் சரிவர கவனிக்க முடியாமை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் எனப் பலவிதங்களிலும் நமக்கு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. கைபேசிகள் என்றில்லை. மடிக்கணினிகள், டாப்லெட்கள், கணினி என எல்லா விதத் தொழில்நுட்பக் கருவிகளாலும் நமக்கு ஏற்படும் இடையூறுகளுக்குத்தான் ‘டெக்னோஃபெரன்ஸ்’ (Technoference) என்று பெயர். ‘புதுசு புதுசாக் கிளப்பறாய்ங்கப்பா பீதியை’ என்கிறீர்களா? வாஸ்தவம்தான்.

உறவுச்சிக்கல்களுக்குக் காரணம்

“எங்களுக்குக் கிடைக்கற கொஞ்ச நேரத்திலயும் போன், கம்ப்யூட்டர்னு உட்கார்ந்துவிடுகிறார். கடுப்பா இருக்கு... மெசேஜ் வந்தா போதும் அப்படியே பேச்சை நிறுத்திட்டு போன்ல மூழ்கிடறார். என்னை விட அந்த போனும் மெசேஜும்தான் முக்கியமா போச்சு…” இது சமீபத்தில் கல்யாணமான ஒரு பெண்ணின் புலம்பல். தங்களுக்கிடையே இதனால்தான் பிரச்சினை வருகிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மெதுவாக மிக மெதுவாக இந்தத் தொழில்நுட்ப இடையூறுகள் காலூன்றுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“ஸ்கூல்லதான் படிப்பு படிப்புன்னு வீட்டுக்கு வந்தா, ஆளுக்கு ஒரு பக்கம் போன்ல மூழ்கிடறாங்க. மிச்சம் இருக்கற தாத்தா பாட்டியும் டிவி முன்னாடியே கதியா இருக்காங்க. எங்ககிட்டே யாருதான் பேசுவாங்க? எங்ககூட எப்போதான் நேரம் செலவிடுவாங்க?” எட்டாவது படிக்கும் மாணவி ஏக்கத்துடன் கேட்கிறார் இப்படி.

கிடைக்கிற ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகள் கெஞ்சிக் கூத்தாடி பூங்காவுக்குப் பெற்றோரைக் கூட்டிக்கொண்டு வந்தால்(!?) அங்கேயும் போன்தான். “அப்பா வாங்க விளையாடலாம். இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடுங்களேன்” என்று குழந்தைகள் அழைக்கின்றன. “நீ வேற விளையாட்டு விளையாடுடா… அம்மா இதோ வந்துடறேன்” என்று சொல்லி வேகமாகக் கைபேசியில் ‘சாட்டிங்’கில் இருக்கும் பெற்றோர்களை இப்போது நீங்கள் எல்லாப் பூங்காக்களிலும் பார்க்கலாம்.

குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது நாம் அவர்களுடன் செலவிடும் நேரமே. எல்லா விதத்திலும் அவர்களுடன் இருந்து உடல், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களைக் கடந்துவர ஒரு பெற்றோர் கணிசமான அளவு நேரத்தைச் செலவிட வேண்டும். கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி பெற்றோர் எப்போதும் தொழில்நுட்பத்தில் மூழ்கிப்போகும்போது கணிசமான அளவு உளவியல் பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன என்று சொல்கின்றன பல ஆய்வுகள்.

கோபம், ஆற்றாமை, அடம்பிடித்தல், கவனத்தைக் கவர்வதற்காக வேறு மாதிரி நடந்துகொள்ளுதல் எனக் குழந்தைகள் தடுமாறுகின்றன. பரிதவிக்கின்றன. கடைசியில் ஒன்று, மனம் உடைந்துபோய் மனச்சோர்வுக்கு ஆளாகின்றன. இல்லையென்றால் தங்கள் பெற்றோரைப் போலவே தாங்களும் ஒரு கைபேசியை எடுத்து வீடியோ கேமில் மூழ்கிக் கடைசியில் அதற்கு அடிமையாகும். எப்பேர்ப்பட்ட அவலம் இது! நான் கூறுவதில் மிகை இல்லை என்பதை நம் வீடுகளில் கவனித்தாலே நமக்குப் புலப்படும்.

“குழந்தையோட இம்சை தாங்காமதான் கொஞ்ச நேரம் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் பாக்கலாம்னு உட்கார்ந்தேன். ஆபீஸ் வேலையோட அழுத்தம், அன்றாடப் பயணங்களின் அலுப்பு இதெல்லாம் குறையட்டுமேன்னுதான் போன்ல கொஞ்சம் மேயறோம்” என்று நாம் சொல்லலாம். ஆனால், இப்படி நீங்கள் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓட... நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்று குழந்தை மேலும் மேலும் அடம்பிடிக்க... அவர் அடம்பிடிப்பதைச் சமாளித்து அந்த அழுத்தம் குறைய வேண்டி மீண்டும் நீங்கள் கைபேசிக்குள் அடைக்கலம் தேட… இதைத்தான் ஒரு வித ‘தீய சுழற்சி’ (vicious cycle) என்பார்கள்.

எப்போது தீரும் இது? யார் விட்டுக்கொடுக்க வேண்டும்? யார் முதலில் மாற வேண்டும்? நாமா அல்லது குழந்தைகளா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. குழந்தைகளை மீறிய சொத்து எதுவும் நமக்குப் பெரிதல்ல.

அப்படி இந்தச் சமூக வலைதளங்களில் மூழ்கி முத்தெடுக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஃபேஸ்புக் மனச்சோர்வு (Facebook depression) என்கிறோம். வாட்ஸ்-அப்பினால் வரும் மனப்பதற்றம் (Whatsapp group chat anxiety) என்கிறோம். விளையாட்டுகளுக்கு அடிமைத்தனம் தொடங்கி பாலியல் திக்குமுக்காடல் வரை எல்லாமே தொழில்நுட்பத்தின் கிருபையில் அமோகமாகப் பரவும்போது அவரவரின் அடிப்படை மனநிலையைப் பொறுத்து உளவியல் பாதிப்பு ஏற்படுவது தீர்மானிக்கப்படுகிறது.

என்னென்ன செய்ய வேண்டும்?

இவ்வளவு நேரம்தான் தொடுதிரைகளுக்கு என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் இம்மியளவுகூட அந்தப் பக்கம் போகக் கூடாது. குழந்தைகளுக்கும் அவர்கள் கைபேசியில் செலவிடும் நேரம் இப்போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். நாம் செய்வதைத்தானே நம் குழந்தைகள் செய்வார்கள். அவர்கள் கைபேசியை தியாகம் செய்ய வேண்டுமென்றால், நாம் முதலில் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதுதானே நியாயம்.

கைபேசியில் ஒவ்வொரு தகவலுக்கும் வந்து விழும் சத்தங்களை ‘மியூட்’ செய்துவிடுங்கள். குழந்தைகளுக்கான நேரத்தில் உங்கள் மடிக்கணினியோ கைபேசியோ உங்கள் கண் முன்னே இல்லாமல் இருந்தால் கூட சரிதான். வெறுமனே பள்ளிக்கூடத்துக்குப் பணம் கட்டிவிட்டு, டியூஷனுக்கு அனுப்பிவிட்டால் நம் கடமை முடிந்தது என்று தயவுசெய்து இருந்துவிட வேண்டாம். குழந்தைகளின் உலகமே நாம்தான். ஒவ்வொரு நாளும் அவர்கள் வளர்வதை நாம் கவனிக்கத் தவறினாலும் நம்மை அணுஅணுவாய் உள்வாங்குவதில் நம் குழந்தைகள் தவறுவதில்லை. கைபேசிக் காலத்துக்கு முன்பாக நமக்கெல்லாம் இருந்த பெரிய வரமே பெற்றோர்களின் நேரடி அன்பும் அரவணைப்பும்தான். பழையனவற்றில் இருந்த வலுவும் உறுதியும் புதியனவற்றில் இல்லை.

‘காலத்துக்கு ஏற்ப நவீனத்துக்கு மாறாமல் இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று நீங்கள் நினைக்கலாம். தொழில்நுட்பம் என்பது தேவைதான். கடை முழுக்கச் சாப்பாடு இருக்கிறது என்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்க முடியாது. வயிறு முட்டச் சாப்பிட்டு ஜீரணமாகாமல் விழுந்து புரளக் கூடாது. வகைதொகை தெரியாமல் இணையத்தில் சிக்கிக்கொண்டு ஏராளமான நேரத்தை அதிலேயே தொலைத்துவிடுகிறோம். இதனால் நமது தொழில் இன்னபிற வேலைக்கான நேரம் குறையும்போது நமது உற்பத்தித்திறன் (Productivity) குறைகிறது.

தொழில்நுட்பத்தினால் உற்பத்தித்திறன் பெருகத்தான் வேண்டும். குறையக் கூடாது. நம்மையெல்லாம் இணைப்பதற்குத்தான் ‘இணையம்’. மாறாக, உறவுகளைக் கசக்க வைத்துப் பிரிப்பதற்கு அல்ல என்பதை மறந்துவிட வேண்டாம் நண்பர்களே!

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in