கண்ணான கண்ணே..! - 11: உங்கள் குழந்தைகள் ஃபிட்டாக இருக்க 5 ஆலோசனைகள்!

கண்ணான கண்ணே..! - 11: உங்கள் குழந்தைகள் ஃபிட்டாக இருக்க 5 ஆலோசனைகள்!

துறுதுறுப்பாக சுழன்றுகொண்டிருப்பதும் கவனச்சிதறல் இல்லாமல், விளையாட்டாக இருந்தாலும்கூட அதில் முழு மனதோடு ஈடுபடுவதுமே குழந்தைகளின் குணாதிசயம். புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம்தான் அவர்களின் அறிவுத்திறனின் திறவுகோல். ஆனால், உண்மையில் நாம் குழந்தைகளை இந்த இயல்பில் இருக்க அனுமதிக்கிறோமா?

இல்லை என்பதுதான் வேதனையான பதில். குழந்தைகளின் வேகத்துக்குத் தடை போடுகிறோம்; அவர்களின் கேள்விகளை ‘டக் அவுட்' ஆக்குவதுபோல் எடுத்த எடுப்பிலேயே அசட்டை செய்கிறோம். அவர்களின் இயல்பான குணங்களை வளர்ப்பதற்கு உதவியாக இருப்பதுதான் பெற்றோரின் கடமை. ஆனால், நம் பார்வையில் கடமை என்பது வேறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் பிள்ளை வளர்ப்பதற்குப் பதிலாக பிள்ளையைப் பயிற்சி செய்கிறோம். சர்க்கஸ் கூடாரத்தில் ஒரு ரிங் மாஸ்டரைப் போல்.

பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காரிடாரில் ஓடும் குழந்தைகளை எந்தப் பள்ளிக்கூடமாவது கொண்டாடுமா? முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தையின் சலசலப்புக்கு ஆசிரியர்கள் முதலில் பிறப்பிக்கும் ஆணை ‘கையைக் கட்டி வாயில் கை வை' என்பதாகத்தானே இருக்கிறது.

இதுவல்ல குழந்தை வளர்த்தல். குழந்தைகள் அவர்களின் இயல்பான சுறுசுறுப்பை, துறுதுறுப்பை எந்தச் சூழலிலும் இழந்துவிடவே கூடாது. அதன் மீதான ஆலோசனைகளை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

உங்கள் குழந்தைகள் ஃபிட்டாக இருக்க 5 ஆலோசனைகளைப் பட்டியலிடுகிறேன், கேளுங்கள்.

1.சமநிலையைப் பழக்கும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கற்றுக்கொடுங்கள்.

2.யோகாசனம் சொல்லித்தாருங்கள்.

3.எல்லா நாளும் விளையாட அனுமதியுங்கள்.

4.ஏதாவது ஒரு பாரம்பரியக் கலையைக் கற்றுக்கொடுங்கள்.

5.ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்களாவது விளையாட நேரம் தாருங்கள்.

சைக்கிளிங், ஸ்கேட்டிங் போகலாமே

எனது பரிந்துரைகளில் முதலில் சமநிலையைக் (பேலன்ஸிங்) கற்றுக்கொடுக்கும் விளையாட்டைப் பட்டியலிட்டுள்ளேன். இது நமக்குப் புதிதல்ல. கைக்குழந்தையாகத் தரையில் நம் உடலைக் கிடத்தியபடியே இருந்த நாம் ஒரு கட்டத்தில் தலையைத் தூக்கிக் கால்களை மடக்கி உயர்ந்து தவழ்ந்தோம். பின்னர் மெதுவாக எட்டு  எடுத்து  வைத்து நடந்தோம். நம் ஒட்டுமொத்த உடலின் எடையைக் கால்களில் சுமக்கப் பழகினோம். அதன் பின்னர் நடை, சற்றே வேகமான தள்ளாட்டத்துடனான நடை, நிதானமான நடை, ஓட்டம் என நம் முதுகுத்தண்டை பலப்படுத்தி நாம் வளர்ந்தோம்.

ஆனால், வளர்ந்த பின்னர் இத்தகைய சமநிலையைக் கற்றுக்கொள்ள அவசியமே இல்லை என்றதுபோல் மாறிவிடுகிறோம். தேவையின் அடிப்படையில் ஒரு சிலர் மட்டும் சைக்கிளிங் கற்றுக்கொள்கிறார்கள்.

சைக்கிளிங், ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற ஏதாவது ஓர் இயக்கச் செயலில் உங்கள்  குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது குழந்தைகளுக்கு அவர்களின் சக்தியை, புத்திக்கூர்மையை, சுதந்திரத்தை உணரச் செய்யும். இத்தகைய பேலன்ஸிங் ஆக்ட் எனப்படும் சமநிலை பேணும் பயிற்சியை வாரத்தில் குறைந்தது 4 மணி நேரம் கடைபிடிக்கலாம்.

குழந்தைகளை ஜிம்முக்கு அனுப்பலாமா?

நிறைய பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளை ஜிம்முக்கு அனுப்பலாமா, அப்படி அனுப்பினால் எந்த வயதிலிருந்து அனுப்ப வேண்டும் என்று தொடங்கி பலநூறு கேள்விகள் எழுகின்றன. நிச்சயமாக ஜிம்முக்கு அனுப்பலாம். 8 வயது நிரம்பிய குழந்தைகளை ஜிம்முக்கு அனுப்பலாம். ஆனால் அங்குள்ள பயிற்சியாளருக்கு குழந்தைகளுக்கான உடற்பயிற்சி எது, இளைஞர்களுக்கான பயிற்சி எது, பதின்பருவப் பிள்ளைகளின் உடல்நலனுக்கு ஏற்ற பயிற்சி எதுவென்பது சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் 30 முதல் 40 நிமிடம் வரை குழந்தைகள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யலாம். ஜிம் போவதால் குழந்தைகள் குள்ளமாகிவிடுவார்கள் போன்ற சில மாயைகள் கற்பிதங்களாக உலா வருகின்றன. அது உண்மையல்ல. குள்ளமானவர்கள் பளு தூக்குதல் போன்ற விளையாட்டைத் தேர்வு செய்வதாலும், உயரமாக வளர்ந்தவர்கள் கூடைப்பந்து போன்ற விளையாட்டைத் தேர்வு செய்வதாலும் உடற்பயிற்சி செய்பவர்கள் குள்ளமாகிவிடுவார்கள் என்ற மாயை நிலவுகிறது. உண்மையில் இருவரும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே, ஆரோக்கியமான உடலமைப்பைத் தரும். காயங்களிலிருந்து காப்பாற்றும்.

யோகாசனம் கற்றுக்கொடுப்போம்

குழந்தைகளுக்கு யோகாசனம் கற்றுக்கொடுப்பது அவசியம். அதே வேளையில் அவர்களை பிராணாயாமம், தவம் போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது. யோகம் என்பது இயற்கையிலிருந்து உருவானது. யோகம் என்பது மனதை லகுவாக, திறந்த நிலையில், ஆர்வ மிகுதியோடு வைத்திருப்பது. இதுதான் குழந்தைகளின் இயல்பு. அவர்களுக்கு யோகாசனம் கற்றுத்தருவது என்பது ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்யச் சொல்வதும் மூச்சுப் பயிற்சி செய்யச் சொல்வதும் அல்ல. மாறாக, உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் ஆசனங்களைச் சொல்லித்தருவது. பதஞ்சலி கட்டமைத்ததுபோல் யோகக் கலையைப் பயில வேண்டும். பதஞ்சலி என்றவுடன் பாபா ராம்தேவின் பொருட்களுடன் தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பதஞ்சலி என்பவர் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முனிவர். அவர் யோகக் கலையை எட்டு அத்தியாயங்களாக வடிவமைத்திருக்கிறார். முதல் படி யமா. அப்படியென்றால் சுய கட்டுப்பாடு. ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பியும் செய்யாமல் கட்டுப்படுத்துவதே யமா. அடுத்தது நியமா. நியமா என்பது விதிமுறைகளைப் பின்பற்றுவது. அதாவது பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்வது, பாடங்களை உரிய நேரத்தில் படித்து முடிப்பது போன்ற ஒழுங்கைக் கடை பிடிப்பது. மூன்றாவது படிநிலை ஆசனம் பழகுவது, யமா, நியமா, ஆசனா என்ற மூன்றையும் பழகும்போது பிராணாயாமம், பிரத்யாஹாரம், தியானம், தாரணா, சமாதி ஆகிய நிலைகள் தாமே நமக்கு வசப்படும்.

தனிப்பட்ட முறையில் நான் குழந்தைகளுக்கு சூரிய நமஸ்காரத்தைப் பரிந்துரைக்கிறேன். 7 வயது முதல் இதனைப் பழக்கப்படுத்தலாம். தினமும் 5 முறை சூர்ய நமஸ்காரம் செய்தால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் 8 ஆசனங்களைச் செய்துவிடலாம்.

எல்லா நாளும் விளையாடட்டும்

ஆம், உங்கள் குழந்தை எல்லா நாளுமே விளையாடட்டும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும். அதைக் காரணம் சொல்லி அவர்களை விளையாட விடாமல் தடுக்காதீர்கள். வகுப்பில் முதல் மாணவியாக வருவதைக் காட்டிலும் தினமும் விளையாடுவது மிகவும் முக்கியம். விளையாட்டுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கான உந்துசக்தி. அவர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் பாய்ச்சும் ஆதாரம். விளையாட்டால் உடல் மட்டுமல்ல; மூளையும் உற்சாகமடையும். ஆதலால், உங்கள் குழந்தைகள் எல்லா நாளுமே விளையாட அனுமதிக்கும் பெற்றோராக இருங்கள்.

ஏதாவது ஒரு கலை பழகலாம்

உங்கள் குழந்தை ஏதாவது ஒரு பாரம்பரிய இசைக் கருவியை வாசிக்கவோ அல்லது ஏதாவது ஒரு பாரம்பரிய நடனத்தை ஆடவோ கற்றுக்கொள்வது அவசியம். வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் என அவர்களின் ஆரம்ப காலத்தில் 5 ஆண்டுகள் வரை படிப்பிக்கலாம். இது குழந்தையின் மூளையை வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும். ஆடும்போதுகூட அவர்களிடம் நிதானம் இருக்கும். பாட்டில் தாளத்தின் இடைவெளியில் அவர்களால் ஒருவித அமைதியை உணர முடியும். பாரம்பரிய இசை, நடனம்போல் பாரம்பரிய தற்காப்புக் கலையையும்கூட கற்றுக்கொள்ளலாம். இவற்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது மனதளவில் முதிர்ச்சியும் தோற்றத்தில் எப்போதுமே ஒரு இளமையும் ததும்பும்.

தினமும் 90 நிமிடங்கள் விளையாட்டு

நாள் தவறாமல் விளையாடட்டும் என்று பரிந்துரைத்தேன் அல்லவா? இந்தப் பரிந்துரையை அதன் நீட்சியாகக்கூடப் பார்க்கலாம். நாள்தோறும் விளையாட்டு என்பதை ஒவ்வோர் நாளும் 90 நிமிடங்கள் விளையாட்டு எனக் குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள். 90 நிமிட விளையாட்டு என்பதால் எதை வேண்டுமானால் விளையாட விடுங்கள். பேட்மின்டன். கூடைப்பந்து, கபடி, கோகோ என ஏதாவது விளையாட விடுங்கள். ஆனால், ஷாப்பிங் மாலில் உள்ள ப்ளே ஏரியாவில் அல்ல, உங்கள் வீட்டருகே இருக்கும் மைதானத்தில் விளையாட விடுங்கள். மணலில் விளையாட விடுங்கள். வியர்க்க வியர்க்க விளையாட விடுங்கள். 90 நிமிடங்களுக்குப் பின் கொஞ்சம் அழுக்காகத் தெரியும் அளவுக்கு விளையாட விடுங்கள். ஒரு முக்கியக் குறிப்பு. ஞாயிற்றுக்கிழமை என்றால் இன்னும் கூடுதல் நேரம் விளையாட  விடுங்கள். நிச்சயமாக வீடியோ கேம் கூடவே கூடாது.

எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கட்டும்

உங்கள் குழந்தைகள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கட்டும். சுறுசுறுப்பு என்பது வேறு, உடற்பயிற்சி, விளையாட்டு என்பது வேறு. சுறுசுறுப்பு என்பதை விவரிக்க வேண்டுமானால் வீடு, பள்ளியில் எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது. பள்ளிக்கு நடந்து செல்வது ஒரு சுறுசுறுப்பான வேலை. வீட்டின் அறையை சுத்தம் செய்வதும்கூட சுறுசுறுப்பாக இயங்குவதே. அதேபோல் பள்ளியில் விழா ஏற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வது, வகுப்பறையில் சிற்சில பணிகளை ஒருங்கிணைப்பது எல்லாமே சுறுசுறுப்பின் அம்சங்கள்தான்.

குழந்தைப் பருவம் அதிகாரமற்றது. உணவு, உடை, உறைவிடம், பணம் என எல்லாவற்றுக்கும் பெரியோரைச் சார்ந்திருக்கும் பருவம். அப்படியொரு பருவத்தில் வீட்டில், பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது அதிகாரத்தோடு இருப்பதற்குச் சமம். என் தாத்தா என்னிடம் அடிக்கடி சொல்வார், நீ உபயோகமாக இருப்பது உனது இருப்பை உணர்த்தும் என்பார். ஆதலால், குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் இயன்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளட்டும். இது குழந்தைகளுக்கு தற்சார்பு, சுதந்திரம், வலிமை ஆகிய பண்புகளைக் கற்றுக்கொடுக்கும். இதுவரை உங்கள் குழந்தைகள் இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும்கூட பரவாயில்லை; இனியாவது பழகட்டும்.

  (வளர்வோம்… வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in